ஸ்ரீ மங்களகிரி பெருமாள் திருக்கோவில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய வைணவத்திருத்தலங்களில் ஒன்றாகும்.
ஸ்ரீ மங்களகிரி பெருமாள் திருக்கோவில் மலைமேல் அமர்ந்த அழகிய ஸ்தலமாகும்
மூலவர் : ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீமங்களகிரி பெருமாள்
செல்லும் வழி :
ஈரோட்டிலிருந்து பவானி செல்லும் (அக்ரஹாரம் வழி) வழியாக சுமார் 8 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. பெருமாள் மலை பஸ் நிறுத்ததில் அமைந்துள்ளது.
அமைவிடம் :
ஈரோடு வட்டம் சூரியம் பாளையம் கிராமத்தில் இறைவன் பெயரான "பெருமாள் மலை" என்னுமிடத்தில் அமைந்துள்ளது. கொங்கு நாட்டின் வற்றாத ஜீவநதியாம் காவேரி நதிக்கு தென்பக்கமாக அமைத்துள்ள மிகப்பெரிய பாறையால் அமர்ந்த அற்புதத் திருத்தலமாகும்.
புரட்டாசி மாதத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளிலும் பெரும் திருவிழாவாக ஸ்ரீ மங்களகிரி பெருமாளை கொண்டாடுகின்றனர் .
விஷேச நாட்கள் :
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை ஸ்ரீமங்களகிரி பெருமாள் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பெளர்ணமி பூஜைகள் நடைபெறும் .
புரட்டாசி மாதத்தில் ஸ்ரீமங்களகிரி பெருமாளை தரிசனம் செய்ய மலை ஏறி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.
700 வருட சரித்திரம் கொண்டவர் ஸ்ரீ மங்களகிரி பெருமாள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக இந்து அறநிலைய துறையால் அழகாக பராமரிக்கப்பட்டு வரும் திருக்கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.
கடந்த 9 ஆண்டுகளாக சிறப்பாக இறைவழிபாடு செய்யவும் அன்னதானம் ,போன்ற பல உதவிகள் செய்யும் விழாக்குழுவினர் மற்றும் பூசாரிகளை பாராட்டியாக வேண்டும்.
மலை என்று சொன்னாலும் மங்களகிரி என்பது சிறிய பாறை அமைப்பால் ஆன மலைக்குன்றுதான். அழகாக படி அமைத்துள்ளார்கள். எல்லா வயதினரும் தரிசிக்க ஏற்ற மலை .
ஏதேனும் ஓர் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் குடும்பத்துடன் வந்து ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீ மங்களகிரி பெருமானை வணங்கி
உங்கள் வாழ்வில் பல மங்களங்கள் உண்டாகவேண்டுமென விரும்பும்
மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகான மலைத்தொடரில் அமைந்துள்ள வனப்பகுதிகளில் அந்தியூர் வனப்பகுதியாக ஒன்றாகும். வரட்டுப்பள்ளம் அணை ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் வழியில் 10 கி.மீட்டரில் இடப்பக்கம் ஒரு கி.மீட்டர் சென்றால் அணையை பார்வையிடலாம்.
சாப்பிடவோ,தண்ணீரோ அணையில் கிடைக்காதென்பதால் வரும் போது வாங்கிக்கொண்டு வருவது நல்லது. வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கம் 28.1 .1980 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
அழகிய முகப்பில் சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க பெரிய நீர்பரப்பையும் , தூரத்தில் நீண்டு வளர்ந்து நிற்கின்ற மூங்கில் மரங்கள்,தூரத்தில் தெரியும் அணையின் ஒரங்களில் வளரும் புற்களை சாப்பிட வரும் பசுமாடுகள்,என பல அழகு காட்சிகள் அருமையானது.
அணையின் மேல் முகப்பு இரும்பு கம்பியால் தடுக்கப்பட்டுள்ளது. அணையின் மேல் இருக்கும் தார்சாலையில் நடந்துதான் செல்ல அனுமதிக்கப்படுகிறது. சுமார் 2 கி.மீட்டர் தூரமுள்ள அணையின் மேற்பரப்பில் இயற்கை சூழலில் நடக்க அழகாக இருக்கிறது.
வரட்டுப்பள்ளம் அணையின் மத்திய பகுதியில் பாசனத்திற்காக திறக்கப்படும் மதகு உள்ளது . அதைத்தாண்டி நடக்கலாம் யானைகள் அடிக்கடி பயணிக்கும் பாதை என்பதால் எச்சரிக்கை அவசியம்.நாங்கள் செல்லும் போது சிறிய மழை பெய்து வரவேற்றது.
அணையின் உயரம் மொத்தம் 46 அடி என்றும் தண்ணீரின் கொள்ளவு 33 அடி என்றும் கேள்விப்பட்டேன் . அணையின் பரப்பளவாக சுமார் 3000 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கின்றது.
அணையின் மேல் பகுதியில் ஸ்ரீகோட்டை மலை திருக்கோவில் இருக்கிறது. இங்கு பழங்காலத்து சுவடுகள் இருப்பதாக சொல்கிறார்கள் .மாலை நேரமானதால் செல்லமுடியவில்லை. யானைகள் நடமாட்டமுள்ள பகுதிகளாதலால் கோட்டை மலை ஆண்டவர் கோவிலுக்கு இந்த வழியாக செல்வது பாதகாப்பாக இருக்காது.
அணையின் முகப்பில் வீரப்பன் வாழ்ந்த காலத்தில் அதிரடிப்படை முகாம் இருந்துள்ளது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை யினர் கவனமாக வரட்டுப்பள்ளம் அணையை பாதுகாத்து வருகின்றனர். இங்கு சிறிய அளவில் ஸ்ரீ கருங்காளி அம்மன் திருக்கோவில் உள்ளது.
வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் ,நீர்காகம் ,சில வெளிநாட்டுப்பறவைகள் உடும்பு,மான்கள் இவைகளை மட்டுமே நாங்கள் செல்லும் போது காண முடிந்தது. ஆனால் இங்கு யானைகள் ,சிறுத்தைகள் போன்ற விலங்குகள் பார்த்துள்ளதாக சொல்கிறார்கள் .
அணையின் மேற்பகுதியில் இருந்து பார்த்தால் ஓர் கோடு போட்டதைப் போல ஒரே நேர் சாலையாக பல மலைகளில் செல்கிற பர்கூர் சாலை அழகான ஒன்றாகும். ஒருநாள் சுற்றுலாவுக்கு தகுந்த இடமாக தேர்வு செய்யலாம்.
பெரிய எதிர்பார்ப்புடன் வராமல் இயற்கையை ரசிக்கும் எண்ணமிருந்தால் வந்து ரசிக்க அழகான இடமாகும். மனதை இதமாக்கும் அற்புத இடம்,
சேலம் மாவட்டம் கொளத்தூர்க்கு அருகில் பாலமலை உள்ளது. புகழ்பெற்ற பாலமலை ஸ்ரீ சித்தேஷ்வரர் இங்குதான் அமைந்துள்ளது. பாலமலையில் வாழும் மக்கள் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள் .
பல கிராமங்களில் பாலமலையில் மக்கள் வாழ்கிறார்கள்.மின்சார வசதி இல்லாமல் வாழும் இவர்களுக்கு சோலார் மின் விளக்கு வசதியில்தான் வாழ்க்கை நகருகிறது.
பாலமலை என அழைக்கப்படும் சித்தேஸ்வரமலையில் காணப்படும் ஊர்கள் தும்மம்பதி.,அணைக்காடு,பெரியகுளம்,ஈச்சங்காடு,நத்தக்காடு,நாகம்பதி, துவரங்காடு,கெம்மம்பட்டி,ராமன்பட்டி ,புள்ளம்பட்டி, நமன்காடு,கருகாமரத்தூக்காடு,தலைக்காடு,சாத்தன மடுவு,
எருக்களாங்காடு, சிங்காரதோப்பு, சோத்தாங்காடு,இடைமலைக்காடூ.பத்திரமடுவு, பெரியணக்காடு. ஆகிய ஊர்களில் மக்கள் அடிப்படை வசதிகளுக்கு சிரமப்பட்டு வாழ்ந்து வருகின்றனர் .
கல்விக்காக பள்ளிக்கூடம் பெரியகுளம் பகுதியில் இருந்தாலும் பாலமலை வாழ் மக்கள் குழந்தைகள் கல்வி தேடி குருவரெட்டியூர், சென்னம்பட்டி,கொளத்தூர், சேலம் பகுதிகளுக்கு படிக்கச்செல்கிறார்கள். பாலமலை வாழ் மக்களின் ஒரே நம்பிக்கை தற்போது அரசு அனுமதியுடன் சாலை உருவாக்கி கொண்டிருப்பதுதான் .
100 நாள் வேலைத்திட்டத்தில் தங்களுக்காக தாங்களே சாலை அமைத்து வருகிறார்கள் .சாலை உருவானால் பாலமலை சித்தேஸ்வரர் திருக்கோவில் செல்ல new சாலை உருவாகிவிடும் . பல மூலிகைகளும் உயர்ந்து வளர்ந்த மரங்களும், சுனைகளும் அழகானதாகும் .பாலமலையின் அடர்ந்த வனப்பகுதியாக சிங்காரத்தோப்பு அமைந்துள்ளத
ஸ்ரீ சித்தேஸ்வரமலை கீழ் பகுதியில் அமைந்த வனமாகும் .இங்கு கரடி. குரங்கு,மான்கள்,காட்டுப்பூனைகள் ,முயல்,காட்டுப்பன்றிகள் வாழ்கின்றன. பயப்படும்படியான விலங்குகள் எதுவும் இல்லை.
உரிக்கொடி போன்ற அபூர்வ மூலிகைகள் இருப்பிடமாக திகழ்கிறது.இயற்கை அழகு சூழ்ந்த பாலமலையை இரண்டுநாள் சுற்றுப்பயணமாக தேர்வு செய்யலாம்
. இயற்கையான பாலமலையில் கொய்யா,மாதுளை, பாலாபழம் ,சீதாப்பழம்,நகப்பழம் ,என பலவகையான பழங்கள் கிடைக்கிறது.
ஒரு முறை வந்து சுற்றிப்பார்த்து விட்டு எழுதுங்கள்..
இயற்கையின் அழகில் நம்மை மயக்கும் ஓர் அற்புத மலைக்கோவிலாகும் .
மூலவர் :- ஸ்ரீ சித்தேஷ்வரர்
அமைப்பு :-
சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் கொளத்தூரில் இருந்து தொடங்கும்
பாலமலை ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர்
30கி.மீட்டர் வரையிலும் குருவரெட்டியூரில் இருந்து ஊமாரெட்டியூர்
நெரிஞ்சிப்பேட்டை வழியாக சென்று மேட்டூர் வரை 30கி.மீட்டர்
என பாலமலையின் எல்லைப்பகுதியாக அடந்த வனப்பகுதியாகவும்,
மேற்குத்தொடர்ச்சி மலையின் தனித்து விடப்பட்ட
7 மலைகள் அமைந்த தனிமலையாகவும் அமைந்துள்ளது.
மலையின் சுற்றளவு சுமாராக 80கி.மீட்டர் இருக்கும் .
உயரம் சுமார் 4000அடி முதல் 5000 அடி இருக்கும் ,
பாலமலை சித்தேஸ்வர மலை சேலம்.ஈரோடுமாவட்ட எல்லையில்
இருக்கின்ற ஒர் அழகிய மலையாகும்.
பாலமலை யின் 7 வது மலையின் உச்சியில்
ஸ்ரீ சித்தேஷ்வரர்க்கு அழகான திருக்கோவிலை உருவாக்கி இருக்கிறார்கள்.
திருக்கோவில் உட்பிரகாரத்தில் மூலராக சித்தேஸ்வரரும் உடன் ஸ்ரீவிஷ்ணுவும் ,ஸ்ரீமாதேஷ்வரர் அமர்ந்து வரும் பக்தர்கள் துபர் தீர்க்கின்றனர். திருக்கோவில் பிரசாதமாக திருநீரும் அழகிய மலைப்பூக்களையும் தருகிறார்கள் .
ஏழாவது மலையின் உச்சியில் சதுர வடிவில் திருக்கோவிலை
தரிசனம் செய்ய பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக
பாதுகாப்பாக திருக்கோவில் அமைந்திருக்கிறது.
திருக்கோவில் ஒருநிலைக் கோபுரமாகவும் வடக்கு நோக்கி அமைந்துள்ளது.
ஸ்ரீ சித்தேஷ்வரர் எதிரே நந்தீஸ்வரர் சிலை அழகானது.
ஸ்ரீசித்தேஸ்வரர் எதிரே உள்ள ஸ்ரீதிருக்கொடி அம்மன் ,
தேள்சாமி, ஸ்ரீஆஞ்சநேயர் சிலை, சிறு நந்திகளின் சிலைகள்
பக்தர்களால் வழங்கப்பெற்ற வேல்களும் அழகானதாகும்.
திருக்கோவில் தோன்றிய வரலாறு :-
பழங்காலத்தில் உணவுக்காக கிழங்கு பறிக்க சென்ற மலைவாழ் மக்கள் தற்போது ஸ்ரீசித்தேஸ்வரர் அமைந்துள்ள இடத்தில் கடப்பாறையால் குத்தும்போது
அங்கிருந்த சித்தேஷ்வரர் சுயம்பு மூர்த்தியின்
சிறிய லிங்க வடிவத்தின் மேல் பட்டு பால் வந்ததாகவும் பதற்றப்பட்டு ,
பின்னர் அந்த இடத்தை சுத்தம் செய்து பார்த்த போது அங்கே
தற்போதுள்ள ஸ்ரீ சித்தேஷ்வரர் சிலை இருந்ததாகவும் அன்றிலிருந்து
பாலமலைவாழ் மக்களால் விரும்பி வணங்கப்படும் தெய்வமாக
ஸ்ரீசித்தேஸ்வரர் உருவானதாக செவி வழிச்செய்திகள் இயம்புகின்றன.
திருக்கோவிலுக்கு செல்லும் வழிகள் :
1. மேட்டூரில் இருந்து அம்மாபேட்டை செல்லும் வழியில் நெரிஞ்சிப்பேட்டையில் இறங்கி (15 கி.மீட்டர் ) செல்வது
2. மேட்டூரில் இருந்து அம்மாபேட்டையில் இறங்கி (20கி.மீட்டர்) அங்கிருந்து ஊமாரெட்டியூர் வந்து அங்கிருந்து மலைப்பாதையை அடைந்து செல்வது.
3.பாலமலையின் மறுபக்கமான மேட்டூரில் இருந்நு கொளத்தூர் கண்ணாமூச்சியை அடைந்து அங்கிருந்து மலையேறுவது.
4.எளிமையான பாதுகாப்பான வழியாக அடிவாரம் வரை பஸ் வசதி உடைய வழியான பவானி வட்டம் குருவரெட்டியூர்- 638504வழியைப்பற்றி பார்ப்போம் .
பவானியில் இருந்து 30கி.மீட்டர் தூரத்திலுள்ள குருவரெட்டியூர் என்ற ஊரில் இருந்து சுமார் 1 கி.மீட்டர் தூரத்தில் பாலமலை சித்தேஷ்வரமலை அமைந்துள்ளது.அந்தியூரில் இருந்து 25 கி.மீட்டர் பயணித்தாலும் குருவரெட்டியூரை அடையலாம்.
பவானி யில் இருந்து B10,B5,ஜெயகிருஷ்ணா பஸ்களில் வரலாம்.அந்தியூரிலிருந்து A5,மாதேஷ்வரா. பஸ்களில் குருவரெட்டியூரை அடைந்து மலைப்பாதையை அடையலாம். குருவரெட்டியூர் பாலமலை அடிவாரத்தில் இருந்து ஸ்ரீசித்தேஸ்வரர் திருக்கோவிலை அடைய சுமார் 15 கி.மீட்டர் கரடு முரடான மலைப்பாதையில் நடந்து பயணிக்கவேண்டும்.
ஏழு மலைகள் அடங்கிய மலை தொகுதியான பாலமலையின் கடைசி முடிவில் ஸ்ரீசித்தேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது .
முதல் மலையின் முடிவில் வெற்றிலைப்பாறை எனும் ஒய்வெடுக்கும் இடமும், இரண்டாவது மலை யில் தும்மம்பொதி என்ற மலைவாழ் மக்கள் வாழும் ஊரும் உள்ளது. இங்கு புரட்டாசி மாதத்தில் வரும்போது டீக்கடைகள் அமைத்து வரும் பக்தர்களுக்கு கொடுக்கப்படும் . மலையில் விளைந்த கொய்யா,விளாம்பழம் இங்கு கிடைக்கும்.
அடுத்ததாகாக நாம் வருவது பெரியகுளம் முக்கியமான இடமாகும் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மொட்டை அடித்து இங்குள்ள பெரிய குளத்தில் நீரில் குளித்தும் ,சுடுதண்ணீரில் குளிக்கும் இடமாகவும். மலைவாழ் மக்களின் கடைகளும்,கொய்யா, மாதுளை ,நெல்லி விற்பனைக்கடைகள் உள்ளன.
வறடிக்கல் :
பெரிய குளத்தில் உள்ள இந்த கல்லை தூக்கி போட்டால் திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம் நடக்கும் என்கிறாகர்கள்.வீரமாக பல இளைஞர்கள் வறடிக்கல்கல்லை தூக்கிப்போட்டு விளையாடுகிறார்கள்.
தேரோடு வீதி :
அடுத்த மலையில் நாம் காண்பது பூசாரியூர், அடிமலை விநாயகர் கோவில்வீதி என அழைக்கப்படுகிறது. இங்கு விநாயகப்பெருமான் அழகிய உருவில் அமர்ந்துள்ளார் . கடைசி மலையின் துவக்கத்தில் உள்ள விநாயகப்பெருமானை வணங்கிவிட்டு அமரலாம்.சுற்றிலும் நீண்ட பெரிய மரங்கள்,நகப்பழ மரங்கள் என அடர்தியாக இருக்க 200மீட்டர் சுற்றளவில் பக்தர்களுக்காக இளைப்பாற நல்ல அமைதியான இடம். இதில் இருந்து ஒரு மலை செங்குத்தாக சென்றால் ஸ்ரீ சித்தேஷ்வரர் திருக்கோவிலை அடையலாம்.
திருக்கோவில் திறப்பது :
சனிக்கிழமை மட்டும் வார பூஜை
வருட பூஜையாக : புரட்டாசி மாதத்தின் எல்லா சனிக்கிழமைகளிலும் விஷேசமாக திறக்கப்படும். குருவரெட்டியூர் வழியாக பக்தர்கள் கூட்டம் புரட்டாசி 3,4வது வாரங்களில் அதிகளவில் இருக்கும்.லட்சக்கணக்காண பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் தரிசனம் செய்வார்கள்.
அடுத்து சித்திரை மாதத்தில் ஊமாரெட்டியூர் வழியாக பக்தர்கள் ஸ்ரீசித்தேஷ்வரரை தரிசிக்க செல்வபலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியன :
திருக்கோவில் வரும்பக்தர்கள் கம்பளி ,டார்ச்லைட், 3 வேளை உணவு ,தண்ணீர் அவசியம் கொண்டு வரவும். மலைப்பாதைக்கு பஸ்வசதி கிடையாது ஏழு மலைகளும் கரடுமுரடானவை. புரட்டாசி மாதம் தவிர மற்ற நாட்களில் சென்றால் நீங்கள் மட்டும் தான் தனியாக செல்லவேண்டி இருக்கும்.
புரட்டாசி மாதத்தில் ஏதேனும் ஓர் சனிக்கிழமை நாளில்
பாலமலை சித்தேஷ்வரரை வந்து வணங்கி விட்டு நலம் பெறுங்கள்.
அஞ்சிலே ஒன்றைப்பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி அஞ்சிலே ஒன்றா றாக ஆரியர்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு அயலூரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக்காப்பான்..
தமிழகத்தின் வைணவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகும். பெரிய ஆஞ்சநேயர் சிலையும் அதன் நேர்த்தியான வடிவமைப்பும்,காணற்கரிய ஒன்றாகும். திருக்கோவில் கும்பாபிஷேகம் 22.11.09 ல் அழகாய் செதுக்கியிருக்கிறார்கள் .சலவைக்கற்களால் உட்பிரகாரத்தை அழகு செய்துள்ளார்கள் . மூலவர் ஆஞ்சநேயர் உயரமும் அழகும் பிரமிக்க வைக்கின்றன. மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர்க்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
அன்றைய தினம் நாமக்கல் நகரத்தில் மற்றுமல்லாது பல மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் ஏராளம்.ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் திறந்திருக்கும் நேரம் 06. 30 முதல் 0100 வரை 04.30 மணி 0900 வரை. ஸ்ரீ ஆஞ்சநேயர்க்கு துளசிமாலைகள் அணிவிக்கப்பட்டு அதை பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படுகிறது. திருக்கோவிலுக்காக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நன்கொடை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலுக்கு எதிரே மிக அருகே உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயரால் ஸ்தாபிக்கப்பட்ட "சாலக் ராம பர்வதம்" என்னும் மலை உள்ளது .மிகப் பெரிய பாறையாக உள்ள இந்த மலையின் இருபுறங்களிலும் ஸ்ரீநாமகிரி தாயார் உடனமர் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயமும் , ஸ்ரீ ரங்க நாயகி உடனமர் அரங்கநாதரும் அருள் பாலிக்கிறார்கள். ஸ்ரீநரசிம்ம சாமி திருக்கோவில் "குடைவரைக்கோவில்" கள் வகையை சார்ந்ததாகும் .கி.பி 8 ஆம் நூற்றாண்டில் உருவான ஸ்ரீநரசிம்மாசாமி திருக்கோவில்கள் கலைச்சிற்பங்கள் அழகானவை. பழங்காலத்தில் பல பாறைகளை மட்டும் வைத்து அழகான கோவிலை உருவாக்கிய உழைப்பும் மிக
நேர்த்தியானது அருள்மிகு நாமகிரித்தாயார் உடனமர் ஸ்ரீநரசிம்மசாமி திருக்கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 0630 முதல் 0100 வரையிலும் மாலை 0430 முதல் இரவு 0900 மணி வரையிலும் காலை பூஜை 08.00மணிமுதல் 0930 மணிவரை இரவு பூஜை 0700 மணிக்கு தொடங்கி 0800 மணிக்கு முடியும் உச்சிகாலப்பூஜை காலை 1100 மணிக்கு துவங்கி 1230 மணிக்குமுடியும் திருமஞ்சன நேரம் காலை 1000 மணி முதல் 1130 வரை நடைபெறுகிறது.
தரிசன முறை :- முதலில் அருள்மிகு நாமகிரி தாயாரையும் வணங்கவேண்டும் ,இரண்டாவதாக அருள்மிகு லட்சுமி நரசிம்மரை வணங்கவேண்டும் மூன்றவதாக ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கவேண்டும் நான்காவதாக மலையின் மறுபக்கம் உள்ள ஸ்ரீ ரங்கநாயகி உடனமர் ஸ்ரீ அரங்கநாதர் (கார்கோட சயனம் ) வணங்க வேண்டும். முறையான தரிசனம் செய்ய விரும்புபவர்கள் மேற்கண்ட முறைப்படி தரிசனம் செய்வதே சாலச்சிறந்தது .
ஸ்ரீ நாமகிரி தாயாரை வணங்குவதால் கலை,கல்வி,ஞானம், செல்வங்கள் கிடைக்கப்பெறும். உலகம் போற்றும் கணித மேதை ராமனுஜரின் கனவில் தோன்றி கணக்குகளுக்கு விடை தந்தருளிய தெய்வமாக இறைவி போற்றப்படுகிறது."அனந்தசாயி" ஆலயமென அழைக்கப்பெறும் அருள்மிகு அரங்கநாதர் ஆலயம் மலையின் பின்பக்கமாக உள்ளது. இதுவும் ஓர் அற்புதக் குடவரைக்கோவிலாகும்.
ஸ்ரீ அரங்கநாதர் ஆலயம் திறந்திருக்கும் நேரங்கள் காலை 0900மணி முதல் 1100 வரையிலும் மாலை 0500 மணி முதல்0700 வரையிலும் திறந்திருக்கும் . எல்லா ஆலயங்களிலும் பழங்கால சிற்பங்கள் பாதுகாக்கும் பொருட்டு நெய் தீபம் மட்டுமே ஏற்றப்படுகிறது. இறைவனை துளசி மாலைகளால் அலங்கரியுத்து வாழ்வில் செல்வச்செழிப்புடன் எல்லா வளமும் நலமும் பெறுங்கள். பழங்கால சிற்பங்களையும் திருக்கோவில்களை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துங்கள். முடிந்தால் சிறப்பாக திருக்கோவிலை அலங்கரிக்கும் அறங்காலவர் குழுக்களிடம் நன்கொடைகளை அளித்து நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை கலைகளை உதவி செய்வோம் . ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் பற்றிய இந்த இடுகை மேலும் விரிவாக்கி 2வது பாகமாக்கி சமர்பிக்கிறேன் .நன்றிகளுடன் குரு.பழ.மாதேசு. குருவரெட்டியூர்
நீங்கள் பங்குச்சந்தைக்கு புதியவரா? கண்டிப்பாக இந்த இடுகை உங்களுக்காத்தான். பங்குச்சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க என் நன்பர் அழைத்தார் ,என் முக்கியமான தேவைக்காக வைத்திருந்த பணம் ரூ 20,000 எடுத்துக்கொண்டு நாமும் அம்பானி மாதிரி பெரிய ஆளா வரணும்னு கனவோடு பான்கார்டு எடுத்து செக்புக் உடன் கிளம்பி ஓர் ஷேர் புரோக்கரிடம் தஞ்சம் ஆனேன்.
அவரும் எனக்காக ஓர் மிண்ணணு கணக்கு வங்கியை ஆரம்பித்துக்கொடுத்தார்,அப்போது சென்செக்ஸ் 21000 புள்ளிகளை தொட்டுக்கொண்டிருந்தகாலம் அது. 2007 ஆம் வருடத்தின் இறுதியில் என நினைக்கிறேன்.கேள்வி ஞானமும் சிறிதளவு பங்குச்சந்தை பற்றிய புத்தகங்கள் படித்ததின் ஞானத்தை (?) வைத்துக்கொண்டு எல்லா பணத்தையும் (20,000) ஒரே நேரத்தில் முதலீடு செய்து விட்டு ஐந்து மாதம் கழித்து அது 40,000 ரூபாய்க்கும் பக்கமாய் வளர்ந்திருந்தது. அட நம்ம டேலண்ட் தான் போலிருக்கு ! என சந்தோஷப்பட்டு நான் வேறு வேளைகளில் கவனத்தில் இருந்த நேரம் திடிரென உலகப்பொருளாதார மந்தம் என பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டது. நான் சுதாரித்து பங்கை விற்றுவிடலாம் என நினைக்கையில் ஒரே வாரத்தில் சென்செக்ஸ் 6000 புள்ளிகளை இழந்து எனது பணம் ரூ10,000மட்டுமே இருந்தது. பணம் எனக்கு மட்டுமல்ல உலகம் முழுதும் பலகோடிகள் அந்த நாட்களில் காணமல் போனது.
சரி இழந்த பணத்தை எப்படி மீட்பதென தனியாய் உட்கார்ந்து யோசித்து இருந்த மொத்த பங்குகளையும் விற்று விட்டு ஒரே பங்கு மட்டும் தேர்வு செய்து 200 வாங்கி என் கணக்கில் வைத்து விட்டு 2 வருடம் காத்திருந்து என் அசல் 20,000ஐ எடுத்து விட்டு வந்துவிட்டேன்.! முழுவதுமாக வந்துவிடவில்லை.என் அனுபவம் உங்களுக்கு உதவும் என்பதால் பங்குச்சந்தையில் உள் நுழைய சில டிப்ஸ்களை தருகிறேன்.
பங்குச்சந்தையில் ஜெயிக்க இது உதவும் 1.பங்குச்சந்தை என்றால் என்ன என்று தெரியாமல் பங்குச் சந்தை பக்கம் போகக்கூடாது 2. அவசரத்தேவைக்கு என்று வைத்திருக்கும் பணத்தை கண்டிப்பாக முதலீடு செய்யக்கூடாது, 3.ஒரே நேரத்தில் அதிகளவு பணத்தை முதலிடு செய்யக்கூடாது. அதிகளவு பணம் என்பது தனிநபர்க்கு எவ்வளவு பணம் ரிஸ்க் என்பதை பொறுத்தது. 4.முழுக்க முழுக்க புரோக்கர்கள் டிப்ஸ்ஐ நம்பக்கூடாது .5.கடன் வாங்கி முதலீடு செய்யக்கூடாது. 6.இன்ராடே எனச்சொல்லுகின்ற தினசரி வர்த்தகத்தை டெக்னிக்ல் அனாலைஸ் தெரியாமல் அன்றே வாங்கி விற்க கூடாது.
சரி எப்படித்தான் பணத்தை பெருக்குவது ,பங்குச்சந்தையில் சம்பாதிப்பது ?1. தரமான பங்குச்சந்தை தொடர்பான புத்தகங்கள் படியுங்கள், திரு சோம வள்ளியப்பன் எழுதி கிழக்கு பதிப்பகத்தால் வெளிவந்துள்ள "அள்ள அள்ள பணம்" 5 தொகுதிகள் வாங்கிப் படியுங்கள். விகடன் குழுமத்தால் வெளிவரும் "நாணயம் விகடன் " படியுங்கள் . பங்குச்சந்தை ஆலோசகர்கள் திரு நாகப்பன்- புகழேந்தியின் கட்டுரைகள் கவனியுங்கள். மாதம் உங்கள் சேமிப்பாக ரூ 1000 ரூபாய்க்கு(ரிஸ்க் எடுக்கும் திறன் பொறுத்து )வாங்கி சேர்க்கலாம். அதிக லாபத்திற்கு ஆசைப்படாமல் 30% வளர்ந்தால் விற்று விட்டு நல்ல ஷேர்களை தேர்ந்தெடுக்கலாம்.
சென்செக்ஸ் குறைந்துள்ள போது உள்ளே சென்று பங்குச் சந்தை உயரும் போதும் தங்கள் பணம் உயரும் போதும் லாபத்துடன் வெளியே வரும் வித்தைகளை கற்றுக்கொள்ளுங்கள்.எம் அனுபவங்கள் உங்களுக்கு பயன் தந்ததா என கருத்துரையிடுங்கள். இந்த இடுகையின் நோக்கம் பங்குச்சந்தைக்கு வரக்கூடாது என பயமுறுத்த வேண்டும் என்பதல்ல. நன்றாக தெரிந்து,தெளிந்து ,படித்து, அறிந்து பங்குசந்தையில் பணத்தை இழக்கக்கூடாது என்ற நல்லெண்ணமே அன்றி வேறொன்றும் இல்லை. பங்குச்சந்தையும் ஒர் கடல் போலத்தான் நன்கு கற்று கொண்டு உள்ளே குதியுங்கள். பங்குச்சந்தை ஜாம்பவான் "வாரன் பெபட்" போல நீங்களும் வெற்றி பெற வாழ்த்துக்களுடன் குரு.பழ.மாதேசு.
திருக்கோவில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருச்செங்கோடு என்பதன் விளக்கம் : திரு என்றால் அழகு ,செங்கோடு என்றால் சிவந்த மலை . அழகு நிறைந்த சிவப்பான மலை திருச்செங்கோடு என பொருள் கொள்ளலாம். கொங்கு நாட்டில் மலை மீது அமைந்திருக்கும் சிவத்தலம் ,சிவன் அமைவிடமே ஊரின் பெயராக கொண்ட திருத்தலம்.பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட திருத்தலம் என பலவாறும் புகழ்பெற்ற மலைமேல் உயர்ந்த இடத்தில் உள்ள திருச்செங்கோடு அர்த்த நாரிஸ்வரரை ஸ்தல வரலாற்றையும், நான் பார்த்த திருக்கோவில் மகிமைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.கடல் மட்டத்திலிருத்து 2000அடி உயரத்தில் அமைந்திருக்கும் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் சுமார் 1200 படிக்கட்டுகளை உடையது.
படிக்கட்டில் ஏறத்தொடங்கும் முன் கிழுவன் மரத்தடியில் அமர்ந்துள்ள கஜமுக விநாயகரை வணங்குவோம். சைவத்திருத்தலமான இங்கு சிவபெருமான் " அர்த்தநாரீஷ்சுரர் " "மங்கை பங்கன் " "மாதிருக்கும் பாதியான்" என்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். அர்த்த நாரீஷ்வரர் என்பதற்கு விளக்கம் அர்த்தம் என்றால் பாதி என்றும். நாரி என்றால் பெண் (சக்தி அல்லது பார்வதி) ஈச்ஷரர் என்றால் சிவபெருமான யும் குறிக்கிறது. சிவன் பார்வதி இணைந்த திருவுருவம் எனவும் அறியலாம்.
திருச்செங்கோட்டிற்கு " கொடிமாடச்செங்குன்றூர்" என்ற பெயரில் சங்க காலத்தில் அழைக்கப்பட்டதாம். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் "செங்கோடு" என அழைத்துள்ளார். முருகர் ஸ்தலமும் சிவஸ்தலமும் ஒன்றாக அமைந்த திருக்கோவிலாக காணப்படுவது மிகச்சிறப்பான ஒன்றாகும்.சிவனும் சக்தியும் ஓரே வடிவில் திருவுருவம் கொண்டு ஒன்றாக நின்ற நிலையில் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் அற்புதக்காட்சி வேறு சிவாலயங்களில் காணமுடியாத ஒன்றாகும்.இடப்பக்கம் பெண் உருவமும் வலப்பக்கம் ஆண் உருவமும் கொண்ட சிலையாகும்,
மூலவரான அர்த்தநாரீஸ்வரரை வேண்டுவோர்க்கு திருமணத்தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற ஆவன செய்கிறார். நீங்கள் ஆலயத்தில் செல்லும்போது கூட மாலையும் கழுத்துமாக திருமணஜோடிகள் நேர்த்திக்கடன் செலுத்துவதைக் காணலாம். அருகே அருகிரிநாதரால் பாடப்பெற்ற "செங்கோட்டு வெற்பன்" முருகப்பெருமான் தனிச்சன்னதில் வீற்றிருக்கின்றார்.
திருச்செங்கோடு மலை நாககிரி,அரவாகிரி,நாகமலை ,என பல சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறது. நாகசர்பத்திற்கும் இந்த மலைக்கும் தொடர்பு உள்ளதற்கு எடுத்துக்காட்டாக படிக்கட்டில் வரும் வழியில் பெரிய பாம்புகள் உருவத்தை செதுக்கி வழிபடுகிறார்கள். திருக்கோவில் உட்பிரகாத்தில் நாகர் சிலை அமைந்துள்ளது. திருச்செங்கோட்டு மலையை தூரத்திலிருந்து பார்த்தால் சிவலிங்கம் திரு உருவம் போல ,ஓர் பெரிய நாக சர்ப்பம் படம் விரித்துள்ளது போல காட்சி அளிப்பது வியக்கும் ஒன்றாகும். திருசெங்கோட்டு மலையில் பல தீர்த்தச்சுனைகள் உள்ளது. அதில் முக்கியமானவை கணபதி தீர்த்தம் ,பாபநாசதீர்த்தம்,தேவதீர்த்தம் , சிவதீர்த்தம்,வைரவதீர்த்தம் ஆகியன முக்கிய மானவையாகும்.
சேலம் ரயில் நிலையத்திற்கும் ஈரோடு ரயில் நிலையத்திற்கும் இடையில் உள்ள சங்ககிரி ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சுமார் 10 கி.மீட்டர் தூரத்தில் திருச்செங்கோடு உள்ளது. எல்லா நாட்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எல்லா நாட்களும் திருக்கோவில் திறந்திருக்கும். படிக்கட்டு அல்லாமல் ,இருசக்கர வாகனங்கள் ,திருக்கோவில் பேருந்துகள் செல்லும் வகையில் போக்குவரத்து வசதி உள்ளது.மலையில் பயணம் என்பதால் கவனமாக செல்வது நலம். சுற்றிலும் பாறையாக உள்ள மலையில் வாகனத்தில் செல்வது வித்தியாசமானது . இந்தப்பாதையை அமைக்க எவ்வளவு சிரமப்பட்டு அழகாய் முடித்திருக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தால் புரியும்.
பல்வேறு சூட்சம சக்திகள் கொண்ட திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் பற்றி நான் எழுதியது சிறிதளவே. அர்த்தநாரீஸ்வரை ஆய்வு செய்ய நிறைய முறை செல்ல வேண்டியுள்ளதால் அடுத்தமுறை படிக்கட்டு வழியாக சென்று விரிவுபடுத்தலாம் என எண்ணி இடுகையை நிறைவு செய்கிறேன். 1500 வருடம் முன்பாக உருவான பழங்கால சிவத்தலங்களில் ஒன்றான திருசெங்கோட்டு மலையில் அர்த்தநாரிஷ்வரரை தரிசனம் செய்து தடைகளை தாண்டி முன்னேற வாழ்த்துக்கள் கூறி இடுகையை முடிக்கிறேன் .
சொக்கநாத மலையூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ள மலைக்கோவிலாகும், ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் வழியில் சொக்கநாத மலையூர் என்னும் ஊரில் அமைந்திருக்கும் அழகிய திருக்கோவிலாகும் .சொக்கநாத மலையூரில் இருந்து சுமார் 1 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இத்திருக்கோவில் நந்தவனம் போல அழகிய தோற்றத்தில் அமைந்திருக்கிறது.
பழங்கால அரசமரங்கள் புளிய மரங்கள் என மரங்களின் வயதை யோசித்துப்பார்த்தாலே சுமார் 200 வருட பாரம்பரியம் புரியும் . சொக்கநாதர் மலையின் அடிவாரத்தில் உள்ள அரசமரத்தினடி விநாயகர் தரிசனம் செய்து மலையின் படிகள் ஏற ஆரம்பித்தால் அடிவார லிங்கத்தை தரிசனம் செய்யலாம். பழங்காலத்தில் அழகாய் செதுக்கிய படிக்கட்டுகள் இதமானவை. 50வது படிக்கட்டு அருகில் பெரிய தாமரைக்குளம் அமைந்துள்ளது. அதன் மேலே நடந்து சென்றால் அழகிய கற்களால் ஆன கொடிமரத்தை வணங்கி திருக்கோவிலை அடையலாம். சுமார் 200படிக்கட்டுகள் இருக்கும் .
திருக்கோவில் மலையே ஓர் பெரிய பாறையின் உச்சியில் அமைந்துள்ளது போன்ற உணர்வு நமக்கு . திருக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. திருக்கோவில் உள்ளே நுழையும் முன் பிரமாண்ட நந்தியும் உள்முகப்பில் சிறிய நந்தியும் கடந்து சென்றால் இடப்புறம் உள்ள கணபதியாரை வணங்கி மூலரான சொக்கநாதரை லிங்க வடிவில் தரிசனம் செய்யலாம்.அருகில் மீனாட்சி அம்மன் அழகுடன் காட்சி அளிக்க அருகே உள்ள பிரகாரத்தில் அமைந்திருக்கும் முருகர் சன்னதி பார்க்க தூண்டுவதாக அமைந்துள்ளது.
பழங்காலத்தில் சந்தனம் அரைக்கும் கட்டையில் சந்தனம் தருகிறார்கள் இதமான குளிர்ச்சியுடன் திருக்கோவிலில் பிரசாதமாக தரப்படும் சந்தனமும்,திருநீரும் "சிவாய நமஹ " எனச்சொல்லி இட்டுக்கொள்ளலாம். திருக்கோவில் வெளிப்பிரகாரத்தில் ஆஞ்சனேயர் சன்னதி,ஜயப்பர் சன்னதி, சூரிய மூர்த்தி,பின்புறம் விநாயகப்பெருமான் , குருபகவான், அண்ணாமலையார், சண்டிகேஸ்வரர் , நவகிரகங்கள் ,மஹீஸ்வர வர்த்தினி, விஷ்ணுதுர்க்கை ,கஜலட்சுமி சிலைகள் என திருக்கோவில் சுற்றி அமைந்துள்ள சிலைகள் அழகானவையாகும். மூன்று நிலைக்கோபுரங்களுடன் அமைதியான இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ள சொக்கநாதர் மலை பல சூட்சமங்களுடன் அமைந்துள்ளது,
திருக்கோவிலின் பழங்காலத்தை அறிய முடியவில்லை எனினும் முதல் திருப்பணி கி.பி 1920 ஆம் ஆண்டில் நடைபெற்றுள்ளதாகவும் ,சொக்கநாத மலையை அமைத்த பெரியவர் இங்கேயே வாழ்ந்து ஜீவசமாதி அடைந்ததாகவும் செவிவழிச்செய்திகள் தெரிவிக்கின்றன. பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகிறது. இயற்கை சூழலில் அமைந்த மீனாட்சி உடனமர் சொக்கநாதர் ஆலயம் பார்க்கவேண்டிய ஆலமாகும்.
பழங்காலத்தில் உருவான சிவத்தலமான சொக்கநாதரை வணங்கி வாழ்வில் நலங்கள் பெற்றிடுங்கள் .வாழ்க வளமுடன் .கருத்துரைகள் எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் ஓர் கைரேகை ஜோதிடம் பார்க்கும் ஓர் நிபுணரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சாலமன் ரேகை என்ற ஒன்றைப்பற்றி சில விளக்கங்களை சொன்னார். அதைப்பகிரவே இந்தப்பதிவு.
கைரேகை சாஸ்திரத்தில் ஒர் மனிதனின் கைகேகையில் சாலமன் ரேகை என்ற ஒன்று இருந்தால் எதிர்காலத்தை முன் உணரும் சக்தி உடையவராக இருப்பார் என்றும். 26 உயிர்களின் உணர்வுகளை அறிந்தவராக அவர் இருப்பார் என்றும் ,புலனாய்வு துறையிலும் துப்பறியும் துறையிலும் சிறந்து விளங்குவார் என்றும், மனிதர்களை உற்று கவனித்து அவர்களுக்கு சில விஷயங்களை நடப்பதற்கு முன்பே கூறும் சக்தி உடையவராக இருப்பார் என்றும் கைரேகை ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதாம் சரி உங்களுக்கு சாலமன் ரேகை உள்ளதா என அறிய அருகில் உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
ஆண்கள் வலது கையையும் பெண்கள் இடது கையையும் பாருங்கள் .அதில் குருமேடு என்பது பெருவிரல் அருகிலுள்ள ஆள்காட்டி விரலில் கீழ்பகுதியில் உள்ள மேடாகும். (படத்தில் பேனாவில் குறித்துள்ள படி இருப்பது குருமேடு.அதில் கீழ் நோக்கியவாறு கோடுகள் இருப்பதே சாலமன் ரேகையாகும்) சாலமன் எனும் ஓர் அரசருக்கு முன் உணரும் சக்தி இருந்ததாகவும் அவர் பெயராலேயே சாலமன் ரேகை என அழைக்கப்பட்டதாம்.
சுவாரஷ்யத்திற்காக உங்கள் கையை சோதித்துப்பாருங்கள் , நீங்களும் சாலமனாக இருக்கலாம். சாலமன் ரேகைக்கு "சக்திரேகை" எற்று மற்றொரு பெயரும் உள்ளது. கருத்துரைகளில் குட்டலாம்.
சீதேவி,பூதேவி உடனமர் பருவாச்சி பெருமாள் திருக்கோவில்
ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் மைலம்பாடி அருகில் கொண்ரெட்டிபாளையம் அருகில் கோம்புக்காடு எனும் ஊரில் அமைந்துள்ள திருக்கோவிலாகும். அழகிய வைணவத்திருத்தலமான பருவாச்சி பெருமாள் திருக்கோவில் 400 வருடங்களுங்களுக்கு முந்தைய ஆலயமாகும். அதற்கு திருக்கோவில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள கோவில் கல்வெட்டே எடுத்துக்காட்டாகும்.
சுற்றிலும் பசுமையாக விவசாயம் நடைபெற ஒலகடத்திலிருந்து தொட்டிய பாளையம் செல்லும் வழியில் அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோவில் அருகில் பருவாச்சி பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.
கிழக்கு நோக்கி அமைந்த திருக்கோவில் கொடிமரத்தை வணங்கி விட்டு உட்பிரகாரத்திலிருந்து இடப்புரம் ஆஞ்சநேயர் சிலையை வணங்கலாம்.
திருக்கோவில் மூலவராக சீதேவி,பூதேவி உடனமர் பருவாச்சி பெருமாள் திருக்கோவில் காண்பதற்கு அழகான கற்சிலையாக நின்று அருள்பாலிக்கின்றார். உட்பிரகாரத்தை உற்று நோக்கினால் திருக்கோவில் பழங்கால கல்வெட்டு அழகு புரியும்.திருக்கோவில் பிரகாரத்தை சுற்றி வருகையில் வில்வ மரத்தடியில் நாகர் சிலை வணங்கத்தக்கது.
தினமும்பூஜைகள் நடைபெறுகிறது. சனிக்கிழமை ,புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
பழமையான வைணவத் திருக்கோவிலை தரிசித்த திருப்தியுடன் விடைபெறுகிறேன், நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் காக்கும் கடவுளாம் பருவாச்சி பெருமாளின் அருள் பெற்று உய்ய வேண்டுகிறேன்.
பழங்காலத்தில் பல்வேறு யோகிகளும் சித்தர்களும் இந்து மதத்தை பின்பற்றி மக்களுக்கும் ஆன்மிகத்திற்கும் பல வகையான நன்மைகளைச் செய்தார்கள் .பெரும்பாலான சித்தர்கள் சிவ வழிபாடு செய்பவர்களாகவும், சிவன் வழித்தோன்றவாகவும் ,சிவாலயங்களில் இருக்கும் பகுதிகளில் இருந்து வந்தவர்களே அதிகம் இருக்கிறார்கள்.
திருவண்ணாமலையில் பகவான் ரமணர், யோகி ராம் சுரத்குமார் ,சதுரகிரியில் இன்றும் சித்தர்கள் வாழ்வதாக பெளர்ணமி நாட்களில் வலம் வருவதாக உணரப்படுகிறது. குறிப்பாக சைவத்தை பின்பற்றியவர்களாகவே சித்தர்கள் இருக்கிறார்கள். சிற்றின்பத்தை விட பேரின்பமே உயர்ந்ததெனக் கருதி யோக வாழ்வு மேற்கொண்டவர்கள் சித்தர்கள்.
யாம் கேள்விப்பட்ட வகையில் சித்தர்கள் ஒரு வேளை உணவோ ,தேங்காய்,பழங்களோ அல்லது தண்ணீர் ,சாப்பிட்டு மட்டும் உயிர் வாழ்ந்து வந்ததாகவும் பல படிப்பினைகளில் அறிகின்றோம்.ஆனால் இன்று இந்து மதத்தை தவறாக பயன்படுத்தி சித்தர்கள் உருவில் போலியாக நடித்து பணம் பறித்தும்,தாங்கள் யோகிகள் என்று நம்ப வைத்து பல தவறுகளை ஏற்க முடியவில்லை .சரி இதற்கு என்னதான் தீர்வு.
சித்தர்களை எப்படி அடையாளம் காண்பது? இதற்கு பதில் தேடல் தான்.ஆர்வமிருந்தால் தேடுங்கள் கண்டிப்பாக காட்சி தருவார்கள் எப்படி தேடுவது அனுதினமும் சிவ வழிபாடு மேற்கொண்டால் கண்டிப்பாக காணலாம்.
ஆனால் யாரெல்லாம் சித்தர் யோகியாக இருக்க முடியாது என எனக்கு தெரிந்தவற்றை முன் வைக்கின்றேன் 1. காவி உடையில் நான் பல வித்தைகளை செய்வேன் என்று சொல்பவர் 2. மாடமாளிகை பட்டு மெத்தையில் உறங்குபவர் 3. மூன்று வேளையும் நன்றாக உண்பவர் 4.பெண் சீடர்களை அருகில் வைத்துக்கொள்பவர் 5. ஆசிரம நிதிக்காக வெளிநாடுகளில் பணம் திரட்டுபவர் 6.பாத அபிஷேகம் செய்யச் சொல்பவர் 7.வாயிலிருந்து லிங்கம் எடுப்பவர் 8. பல வகையான நவின கார்களில் வலம் வருபவர் என இந்த 8 வகையான ஆட்களுக்கும் சித்தராகும் தகுதி இல்லை. இறைவன் அருகில் உட்கார்ந்திருப்பதால் மட்டும் சித்தர் ஆகும் ஞானம் கிட்டாது. எனவே சித்தர்கள் யோகிகள் பெயரில் போலிகளை மக்கள் தங்கள் அறியாமையில் இருந்து விலகி இனம் கண்டு கொள்ள வேண்டும் .
எல்லோரும் கூட்டமாக ஓர் ஆன்மீக வாதியை தேடிச் செல்கிறார்கள் .அவர்கள் பின்னே நாமும் செல்லாமல் அவரைப்பற்றி உணர்ந்து அறிந்து தெளிந்து ,சாக்கடையா சந்தனமா எனப் புரிந்து ஆசிர்வாதம் பெறுவது நமக்கும் குடும்பத்திற்கும் நல்லது. இன்றும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். காடுகளில், மலைகளில்,சூட்சம உருவங்களில் எளிமையாக ஒரு துளி திருநீற்றில் பலர் வாழ்வில் ஒளி ஏற்றுகிறார்கள். உண்மையான கடவுள் வழிபாடு செய்பவர்களுக்கு ஆபத்து, உதவிகள் தேவைப்படும்போது அருகே வந்து பல நன்மைகளைச் செய்கிறார்கள்.மனித வாழ்வில் சாதாரண மனிதனாய் உலக வாழ்வைக்கண்டு மெளனமாய் புன்னகைத்து வலம் வருகிறார்கள்.
சித்தர்களை நீங்கள் பார்த்தே ஆக வேண்டுமெனில் சிவ வழிபாடு அனு தினமும் மேற்கொள்ளுங்கள். முதல் சித்தர் சிவபெருமான் என்பதை உணருங்கள் . எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவபெருமானை வணங்குங்கள். சித்தர்கள் பற்றியும் சித்தர்கள் வாழ்வு பற்றியும் உங்களுக்கு புலப்படும். ஓம் நமச்சிவாயம். இந்த இடுகை சித்தர்கள் பற்றி யோகிகள் பற்றி அலசலே தவிர யாரையும் புண்படுத்தும் எண்ணமில்லை.மக்களை ஆன்மீகம் எனும் போர்வையில் ஏமாற்றக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட இடுகையாகும். கருத்துரைகளில் உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து