Sunday, September 25, 2011

அருள்மிகு அர்த்தநாரீஷ்வரர் திருக்கோவில். திருசெங்கோடு



அருள்மிகு அர்த்தநாரிஸ்வரர் ஆலயம் திருச்செங்கோடு




திருக்கோவில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருச்செங்கோடு என்பதன் விளக்கம் : திரு என்றால் அழகு ,செங்கோடு என்றால் சிவந்த மலை . அழகு நிறைந்த சிவப்பான மலை திருச்செங்கோடு என பொருள் கொள்ளலாம். கொங்கு நாட்டில் மலை மீது அமைந்திருக்கும் சிவத்தலம் ,சிவன் அமைவிடமே ஊரின் பெயராக கொண்ட திருத்தலம்.பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட திருத்தலம் என பலவாறும் புகழ்பெற்ற மலைமேல் உயர்ந்த இடத்தில் உள்ள திருச்செங்கோடு அர்த்த நாரிஸ்வரரை ஸ்தல வரலாற்றையும், நான் பார்த்த திருக்கோவில் மகிமைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.கடல் மட்டத்திலிருத்து 2000அடி உயரத்தில் அமைந்திருக்கும் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் சுமார் 1200 படிக்கட்டுகளை உடையது.


படிக்கட்டில் ஏறத்தொடங்கும் முன் கிழுவன் மரத்தடியில் அமர்ந்துள்ள கஜமுக விநாயகரை வணங்குவோம். சைவத்திருத்தலமான இங்கு சிவபெருமான் " அர்த்தநாரீஷ்சுரர் " "மங்கை பங்கன் " "மாதிருக்கும் பாதியான்" என்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். அர்த்த நாரீஷ்வரர் என்பதற்கு விளக்கம் அர்த்தம் என்றால் பாதி என்றும். நாரி என்றால் பெண் (சக்தி அல்லது பார்வதி) ஈச்ஷரர் என்றால் சிவபெருமான யும் குறிக்கிறது. சிவன் பார்வதி இணைந்த திருவுருவம் எனவும் அறியலாம்.


திருச்செங்கோட்டிற்கு " கொடிமாடச்செங்குன்றூர்" என்ற பெயரில் சங்க காலத்தில் அழைக்கப்பட்டதாம். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் "செங்கோடு" என அழைத்துள்ளார். முருகர் ஸ்தலமும் சிவஸ்தலமும் ஒன்றாக அமைந்த திருக்கோவிலாக காணப்படுவது மிகச்சிறப்பான ஒன்றாகும்.சிவனும் சக்தியும் ஓரே வடிவில் திருவுருவம் கொண்டு ஒன்றாக நின்ற நிலையில் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் அற்புதக்காட்சி வேறு சிவாலயங்களில் காணமுடியாத ஒன்றாகும்.இடப்பக்கம் பெண் உருவமும் வலப்பக்கம் ஆண் உருவமும் கொண்ட சிலையாகும்,


மூலவரான அர்த்தநாரீஸ்வரரை வேண்டுவோர்க்கு திருமணத்தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற ஆவன செய்கிறார். நீங்கள் ஆலயத்தில் செல்லும்போது கூட மாலையும் கழுத்துமாக திருமணஜோடிகள் நேர்த்திக்கடன் செலுத்துவதைக் காணலாம். அருகே அருகிரிநாதரால் பாடப்பெற்ற "செங்கோட்டு வெற்பன்" முருகப்பெருமான் தனிச்சன்னதில் வீற்றிருக்கின்றார்.


திருச்செங்கோடு மலை நாககிரி,அரவாகிரி,நாகமலை ,என பல சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறது. நாகசர்பத்திற்கும் இந்த மலைக்கும் தொடர்பு உள்ளதற்கு எடுத்துக்காட்டாக படிக்கட்டில் வரும் வழியில் பெரிய பாம்புகள் உருவத்தை செதுக்கி வழிபடுகிறார்கள். திருக்கோவில் உட்பிரகாத்தில் நாகர் சிலை அமைந்துள்ளது. திருச்செங்கோட்டு மலையை தூரத்திலிருந்து பார்த்தால் சிவலிங்கம் திரு உருவம் போல ,ஓர் பெரிய நாக சர்ப்பம் படம் விரித்துள்ளது போல காட்சி அளிப்பது வியக்கும் ஒன்றாகும். திருசெங்கோட்டு மலையில் பல தீர்த்தச்சுனைகள் உள்ளது. அதில் முக்கியமானவை கணபதி தீர்த்தம் ,பாபநாசதீர்த்தம்,தேவதீர்த்தம் , சிவதீர்த்தம்,வைரவதீர்த்தம் ஆகியன முக்கிய மானவையாகும்.


சேலம் ரயில் நிலையத்திற்கும் ஈரோடு ரயில் நிலையத்திற்கும் இடையில் உள்ள சங்ககிரி ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சுமார் 10 கி.மீட்டர் தூரத்தில் திருச்செங்கோடு உள்ளது. எல்லா நாட்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
எல்லா நாட்களும் திருக்கோவில் திறந்திருக்கும். படிக்கட்டு அல்லாமல் ,இருசக்கர வாகனங்கள் ,திருக்கோவில் பேருந்துகள் செல்லும் வகையில் போக்குவரத்து வசதி உள்ளது.மலையில் பயணம் என்பதால் கவனமாக செல்வது நலம். சுற்றிலும் பாறையாக உள்ள மலையில் வாகனத்தில் செல்வது வித்தியாசமானது . இந்தப்பாதையை அமைக்க எவ்வளவு சிரமப்பட்டு அழகாய் முடித்திருக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தால் புரியும்.


பல்வேறு சூட்சம சக்திகள் கொண்ட திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் பற்றி நான் எழுதியது சிறிதளவே. அர்த்தநாரீஸ்வரை ஆய்வு செய்ய நிறைய முறை செல்ல வேண்டியுள்ளதால் அடுத்தமுறை படிக்கட்டு வழியாக சென்று விரிவுபடுத்தலாம் என எண்ணி இடுகையை நிறைவு செய்கிறேன்.
1500 வருடம் முன்பாக உருவான பழங்கால சிவத்தலங்களில் ஒன்றான திருசெங்கோட்டு மலையில் அர்த்தநாரிஷ்வரரை தரிசனம் செய்து தடைகளை தாண்டி முன்னேற வாழ்த்துக்கள் கூறி இடுகையை முடிக்கிறேன் .


நட்புடன் குரு.பழ.மாதேசு

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...