Sunday, October 9, 2011

இயற்கையின் அழகில் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை




மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகான மலைத்தொடரில் அமைந்துள்ள வனப்பகுதிகளில் அந்தியூர் வனப்பகுதியாக ஒன்றாகும். வரட்டுப்பள்ளம் அணை ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் வழியில் 10 கி.மீட்டரில் இடப்பக்கம் ஒரு கி.மீட்டர் சென்றால் அணையை பார்வையிடலாம்.


சாப்பிடவோ,தண்ணீரோ அணையில் கிடைக்காதென்பதால் வரும் போது வாங்கிக்கொண்டு வருவது நல்லது. வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கம் 28.1 .1980 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.


அழகிய முகப்பில் சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க பெரிய நீர்பரப்பையும் , தூரத்தில் நீண்டு வளர்ந்து நிற்கின்ற மூங்கில் மரங்கள்,தூரத்தில் தெரியும் அணையின் ஒரங்களில் வளரும் புற்களை சாப்பிட வரும் பசுமாடுகள்,என பல அழகு காட்சிகள் அருமையானது.

அணையின் மேல் முகப்பு இரும்பு கம்பியால் தடுக்கப்பட்டுள்ளது. அணையின் மேல் இருக்கும் தார்சாலையில் நடந்துதான் செல்ல அனுமதிக்கப்படுகிறது. சுமார் 2 கி.மீட்டர் தூரமுள்ள அணையின் மேற்பரப்பில் இயற்கை சூழலில் நடக்க அழகாக இருக்கிறது.


வரட்டுப்பள்ளம் அணையின் மத்திய பகுதியில் பாசனத்திற்காக திறக்கப்படும் மதகு உள்ளது . அதைத்தாண்டி நடக்கலாம் யானைகள் அடிக்கடி பயணிக்கும் பாதை என்பதால் எச்சரிக்கை அவசியம்.நாங்கள் செல்லும் போது சிறிய மழை பெய்து வரவேற்றது.


அணையின் உயரம் மொத்தம் 46 அடி என்றும் தண்ணீரின் கொள்ளவு 33 அடி என்றும் கேள்விப்பட்டேன் . அணையின் பரப்பளவாக சுமார் 3000 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கின்றது.

அணையின் மேல் பகுதியில் ஸ்ரீகோட்டை மலை திருக்கோவில் இருக்கிறது. இங்கு பழங்காலத்து சுவடுகள் இருப்பதாக சொல்கிறார்கள் .மாலை நேரமானதால் செல்லமுடியவில்லை. யானைகள் நடமாட்டமுள்ள பகுதிகளாதலால் கோட்டை மலை ஆண்டவர் கோவிலுக்கு இந்த வழியாக செல்வது பாதகாப்பாக இருக்காது.


அணையின் முகப்பில் வீரப்பன் வாழ்ந்த காலத்தில் அதிரடிப்படை முகாம் இருந்துள்ளது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை யினர் கவனமாக வரட்டுப்பள்ளம் அணையை பாதுகாத்து வருகின்றனர். இங்கு சிறிய அளவில் ஸ்ரீ கருங்காளி அம்மன் திருக்கோவில் உள்ளது.


வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் ,நீர்காகம் ,சில வெளிநாட்டுப்பறவைகள் உடும்பு,மான்கள் இவைகளை மட்டுமே நாங்கள் செல்லும் போது காண முடிந்தது. ஆனால் இங்கு யானைகள் ,சிறுத்தைகள் போன்ற விலங்குகள் பார்த்துள்ளதாக சொல்கிறார்கள் .

அணையின் மேற்பகுதியில் இருந்து பார்த்தால் ஓர் கோடு போட்டதைப் போல ஒரே நேர் சாலையாக பல மலைகளில் செல்கிற பர்கூர் சாலை அழகான ஒன்றாகும். ஒருநாள் சுற்றுலாவுக்கு தகுந்த இடமாக தேர்வு செய்யலாம்.


பெரிய எதிர்பார்ப்புடன் வராமல் இயற்கையை ரசிக்கும் எண்ணமிருந்தால் வந்து ரசிக்க அழகான இடமாகும். மனதை இதமாக்கும் அற்புத இடம்,


வந்து பார்த்துவிட்டு எழுதுங்கள் .

நட்புடன்

குரு.பழ.மாதேசு

1 comment:

Rajkumar said...

இங்கு செல்ல பேருந்து வசதி உண்டா??
முன் அனுமதி எதாவது வனத்துறையிடம் பெற வேண்டுமா?

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...