Wednesday, November 23, 2011

மறக்காமல் இரு


அன்பே... !
உனக்காக கொடுத்த பரிசை
நீ தொலைத்து விட்டு நின்றபோது
உன்னை திட்ட தோன்றவில்லை..!
அப்படியாவது மறக்காமலிருப்பாய் ..!

நான் கொடுத்த பரிசையும் என்னையும் !

Thursday, November 17, 2011

வியப்பில் ஆழ்த்தும் தஞ்சை பிரகதீஷ்வரர் திருக்கோவில்






TANJAI PRAGATHESWARA TEMPLE VISIT :

அண்மையில் முதன் முதலில் தஞ்சாவூர் பெரிய கோவில் என அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை தரிசிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. தஞ்சை பெரிய கோவிலை பார்த்தவுடன் இவ்வளவு நாளாக இப்படி ஓர் அழகான திருக்கோவிலை தரிசிக்காமல் ,பார்க்காமல் விட்டு விட்டோமே என வருந்தும் அளவுக்கு கட்டிடக்கலேயில் ,சிற்பங்கள் ,திருக்கோவில் விமானம் என மன்னர் முதலாம் இராசராசனால் சிற்பக்கலையில் சாதனை செய்துள்ளார் என்றே கூறவேண்டும் .


தமிழ்நாட்டில் இப்படி அழகான ஸ்தலத்தை உருவாக்கி 1000 ஆண்டுகளாகியும் அதன் தன்மை கெடாமல் அப்படியே இருப்பது ஆச்சர்யமே. திருக்கோவில் வெளிப்பிரகாரத்தில் இருந்து கிளம்பினால் முதலில் நாம் காண்பது மராட்டா நுழைவாயில் அது சிறிய கோபுரமே ஆனாலும் சிற்பங்கள் அழகானது.

அதன் பின்பு கேரளாந்தகன் திருவாசல் கோபுரம் அதை பார்த்து விட்டு அடுத்து நாம் சந்திப்பது இராசராசன் திருவாசல் அதையும் கடந்து சென்றால் நந்திமண்டபம் தமிழகத்தின் மிகப்பெரிய நந்தி இதுதானோ என வியக்குமளவுக்கு மிகப்பெரிய நந்தி ஒன்றை ஒரே கருங்கல்லால் அழகாக செதுக்கி இருப்பது வியப்பான ஒன்று. நந்தீஷ்வரரை சுற்றி வந்து வணங்க பெரிய சுற்றுப்பாதையும் உள்ளது.

அதன் பின் அழகிய கொடிமரம் வணங்கி வராஹி சன்னதியை தொழுத்து மூலவர் சன்னிதானத்தை அடையலாம் . மிகப்பெரிய லிங்கம் திருக்கோவில் பிரமாண்டத்திற்கு ஏற்றார் போல அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் லிங்க வடிவில் அழகாக அமைத்திருப்பது சிறப்பான ஒன்றாகும் .

பல கோடி பேர் வந்து வணங்கிய சிவஸ்தலம் .சிவபெருமானை வணங்கி விட்டு வெளியே வந்தால் தட்சிணாமூர்த்தி சன்னதி ,விநாயகர் சன்னதி, நவகிரகங்கள் லிங்க வடிவில் சன்னதி,பிரகதீஷ்வரர் திருக்கோவில் பின்புறம் வேம்புடன் இணைந்த கருவூரார் சன்னதி அருள்மிகு சுப்பிரமணியர் சன்னதி,சண்டிகேஷ்வரர் சன்னதி ,அம்பாள் சன்னதி என பார்க்க பார்க்க மலைப்பாகவும் வியப்பாகவும் இருக்கும் அற்புத திருக்கோவிலாகும் .

தஞ்சை பெரிய கோவில் தொடங்கப்பட்ட காலமும் விளக்கமும் :

முதலாம் இராச இராசனால் கி.பி 1003 ல் துவங்கப்பட்டு 7 வருடங்கள் திருப்பணிகள் செய்து பல ஊர்களில் இருந்தும் சலவைக்கருங்கற்கள் கொண்டு வந்து கி.பி 1010 ஆண்டு திருப்பணி நிறைவு பெற்றதாக வரலாறு. தஞ்சைப்பெரிய கோவிலின் லிங்கம் 3.66 அடி உயர லிங்கமாகும் .

எட்டு துண்டுகளான 81.284 டன் எடையுள்ள சிகரத்தை கொண்டதாக அமைந்துள்ளது. திருக்கோவில் விமானம் 60.96 மீட்டர் உயரமுடையதாகும் . திருக்கோவில் சிற்பங்களில் விநாயகர் ,சீதேவி,பூதேவி உடன் திருமால் ,துவாரபாலகர்கள் ,பிட்சாடனார் ,வீரபத்திரர் நடராஜர் ,ஹரிஹரர் ,சந்திர ஆகிய சிலைகளும் , 81 வகையான சிவனின் பல்வேறு நடனங்கள் அழகாக இடம் பெற்றுள்ளன.

கி.பி 985ல் ராஜராஜீஷ்வரம் பெருவுடையார் கோவில் உருவாக முயற்சி தொடங்க அடிகோலப்பட்டு பின்பு முதலாம் ராசராசனால் கி.பி 1003 ல் முழு முயற்சியை துவங்கி கி.பி 1010ல் முடிக்கப்பட்டதாக வரலாறு.

நாம் எழுதிய இந்த ஸ்தல வரலாறு என்பது யானைக்கு எறும்பு கொண்டு சென்று உணவிட்டதைப்போல சிறிய முயற்சியே .தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோவில் மிகப்பெரிய ஆய்ந்து கற்றுத்தெளிய வேண்டிய அற்புதம் .ஏனெனில் ஒவ்வொரு பிரகாரத்திற்கும் ,சன்னதிக்கும் தனித்தனி புராணக் கதைகளுண்டு. திருக்கோவில் நீளமும் அகலமும் பிரமிக்க வைக்கும் ஒன்றாகும் .

கண்டிப்பாக வாழ்நாளில் தரிசிக்க வேண்டிய சிவாலயமாகும் . வெளிநாட்டுப் பயணிகள் வந்து ஆர்வமுடன் பார்க்குமிடமாக தஞ்சைப்பெரிய கோவில் உள்ளது. திருக்கோவில் பற்றி எழுத நிறைய விஷயங்கள் உள்ளது.

நம்மால் முடிந்தவற்றை எழுதாயுள்ளோம் .எல்லாம் எழுதினால் பக்ககளால் நம் வலைப்பூ நிரம்பி விடும் . நேரில் வந்து பார்த்து ,
ரசித்து விட்டு எழுதுங்கள்

நட்புன் குரு.பழ மாதேசு

Tuesday, November 15, 2011

அரசு அருங்காட்சியம் , ஈரோடு





ஈரோட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் பல இருந்தாலும் பல ஆவணங்களின் கலைக்கூடமாக திகழ்வது அரசு அருங்காட்சியகங்கள் ஆகும் . அருங்காட்சியங்கள் பழங்காலத்தில் வாழ்ந்த மனிதன் உபயோகப்படுத்திய பொருட்கள் புதைபொருள் ஆய்வுகள் மூலமாக கிடைக்கும் பொருட்களை சேகரித்து நிகழ்கால மக்களின் பார்வைக்காக வைக்கப்படுவது,


ஈரோடு மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அகழ்வராய்ச்சிகளால் ,தொல்பொருள் ஆய்வுகளில் கிடைக்கப்பெற்ற பழங்கால ஆவணங்கள் இங்கு உள்ளது. ஈரோட்டில் வ.உ.சி பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ஈரோடு அரசு அருங்காட்சியகம் அழகாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

பராமரிப்புக்காகவும் ,அனுமதிக்கட்டணமாகவும் ரூ 5 பெற்றுக்கொள்கிறார்கள் . நுழைவாயிலில் பல ஆய்வுகளில் கிடைக்கப்பெற்ற திருக்கோவில் கல்லால் ஆன சிற்பங்கள் உள்ளன.

அருங்காட்சியகத்தில் காணப்படுபவை :

புவியியல் கற்கள், விலங்கியல் மாதிரிகள் , கல்லாகிய எலும்புகள் , வலம்புரி இடம்புரி சங்குகள் ,பவளம்,கடற்பஞ்சு,மரவகைகள் ,செடிகள் ,தொல்லியல் ,நாணயவியல் , பழங்கால ஆவணங்கள் , ஓவியங்கள் ,பாணைகள் , ஜோதிட சுவடிகள் , மரச்சிற்பங்கள் ,குந்தாணி,ஈமத்தாளி. தோல் பதுமைகள் அருங்காட்சியக நூல்கள் ,துகிலியல் படைப்புகள் ,அரிய பழங்கால புகைப்படங்கள்,தமிழ் எழுத்து வளர்ந்த விதங்கள் .போன்ற அரிய ஆவணங்கள் உள்ளன.


பெரிய எதிர்பார்புடன் செல்லாதீர்கள் . ஒரு மணி நேரம் செலவழிக்க பழங்கால ஆவணங்களை அறியலாம் . குழந்தைகளை கூட்டிச்சென்று காண்பிக்க ஏற்ற இடம் . வெளியில் இருக்கும் சுவாமி சிலைகள் மழையால் பாதிக்காமல் பாதுகாத்தால் நன்றாக இருக்கும் .

ஈரோடு பக்கம் வந்தால் பஸ் நிலையம் அருகில் உள்ள வ.உ.சி.பூங்கா நுழைவாயில் எதிரே உள்ள அழகாக பராமரித்து வரும் ஈரோடு அரசு அருங்காட்சியகத்தை பார்த்து விட்டு எழுதுங்கள்.


நட்புடன் குரு.பழ.மாதேசு

Monday, November 14, 2011

ஈரோட்டுக்கு வந்த திருப்பதி ஸ்ரீ சீனிவாசப்பெருமான்



ஈரோட்டுக்கு வந்த திருப்பதி ஸ்ரீசீனிவாசப் பெருமாள்

திருப்பதி திருமலை தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீ வாரி சேவா டிரஷ்ட் இணைந்து நடத்திய சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாண உற்சவவிழா 14.11.2011 அன்று ஈரோடு வ.உ.சி விளையாட்டு அரங்கில் இலட்சக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பாக நடத்தப்பட்டது.

திருப்பதி திருமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட திருப்பதியில் உற்சவர் சிலைகளான ஸ்ரீதேவி,பூதேவி ,சீனிவாசப்பெருமாள் பெரிய வாகனங்களில் ஈரோட்டுக்கு கொண்டு வரப்பெற்று சிறப்பு செய்தனர் .திருப்பதியில் பெருமாளுக்காக பூஜை செய்யும் பெரியோர்கள் அனைவரும் இறைவனுக்கு பூஜை செய்தார்கள் .

முதலில் கருங்கல்பாளையம் வந்த சீனிவாசப்பெருமாளின் உற்சவ சிலைகளுக்கு காவிரி ஆற்றங்கரையில் ஸ்ரீ வாரி டிரஸ்ட் மூலம் கேரளா சென்டை மேளம் முழங்க வரவேற்று பெருந்துறை ரோட்டில் உள்ள யு.ஆர்.சி பள்ளியில் பக்தர்கள் தரிசனம் செய்ம வைக்கப்பட்டது. பின்பு ஈரோட்டின் பஸ் நிலையம் அருகிலுள்ள வ.உ.சி மைதானத்தில் அமைந்திருந்த பிரமாண்ட மேடைக்கு சீனிவாசப்பெருமாள் அழைத்து வரப்பெற்றார் .


சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மாலை 06.00 மணிக்கு பக்தர்கள் வெள்ளத்தில் சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாணம் துவங்கியது. உள்ளே வந்த பக்தர்களுக்கு ஸ்ரீ வாரி டிரஸ்ட் மூலமாக திருப்பதியில் வழங்கப்படும் லட்டுகள்,பிரசாதங்கள் ,துளசி தீர்த்தம் கொடுத்து நாமங்கள் இடப்பட்டன. ஸ்ரீசீனிவாசப்பெருமாளின் பதிகங்கள் தரப்பட்டன.

ஈரோடு தினமலர் குழுமத்தால் இறைவன் புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு பதிப்பு அழகாக வெளியிடப்பட்டது.

திருக்கல்யாண விழாவில் தேவர்களை வரவேற்று பின் சீனிவாசப்பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவிக்கு கங்கணம் கட்டி ,திருமண ஆடை சமர்பித்து ஸ்ரீ பெருமாளிடம் இருந்த ஆடைகள் ஸ்ரீதேவி ,பூதேவிகளுக்கு அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண சிறப்பாக நடைபெற்றது.

திருப்பதியில் இருந்து வந்திருந்த சுந்தர வரத பட்டாச்சரியர் குழுவினர் சிறப்பாக பக்தர்கள் கண்டு களிக்குமாறு திருக்கல்யாணத்தை நடத்தி முடித்தார்கள் . இரண்டு டிஜிட்டல் திரைகள் மூலம் அனைத்து பக்தர்களும் இறைவன் திருக்கல்யாணம் தெளிவாக ரசிக்கும்படி அமைந்திருந்தது பாராட்டுக்குரியது. விழாவின் கடைசியாக கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது.


"கோவிந்தா கோவிந்தா" என பக்தர்கள் கோஷம் முழங்க வழிபட்டனர் ,மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்த வ.உ.சி மைதானம் பார்க்கையில் திருப்பதியில் இருந்ததைப்போல உணர்வு .

வறுமையின் காரணமாகவும் ,வேலப்பளுவின் காரணமாகவும் திருப்பதி சென்று ஸ்ரீசீனிவாசப் பெருமானை வணங்க முடியாதவர்களுக்கு ஓர் பெரிய வரப்பிரசாதமாக ஸ்ரீசீனிவாசப்பெருமானின் திருக்கல்யாணத்தையே பிரமாண்டமாக நடத்தி எல்லோர்க்கும் இலவச அனுமதி அளித்து அனைவரும் கண்டுகளிக்கும் வரையில் விழாவை ஏற்பாடு செய்த ஸ்ரீ வாரிடிரஸ்ட்க்கும்,திருப்பதி திருமலை தேவஸ்தான சபாவுக்கு நம் வலைத்தளத்தின் மூலம் வாழ்த்துக்கள் .

உப செய்தி : கடந்த 2006 ஆம் ஆண்டு ஸ்ரீ வாரி டிரஸ்டால் ஸ்ரீசீனிவாசப்பெருமாளுக்கு திருக்கல்யாணம் செய்விக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தரிசனம் செய்ய முடியாதவர்கள் வருந்த வேண்டாம் .அடுத்த முறை திருக்கல்யாணம் நம் வலைப்பூவில் முன்பே அறிவிக்கப்படும்

நட்புடன் குரு.பழ.மாதேசு.

Saturday, November 12, 2011

sri malligeswarar tirukkovil,kothapalayam (karattupalayam) ,edapadi taluk






ஸ்ரீ மல்லிகேஷ்வரர் திருக்கோவில்

அண்மையில் திருக்கோவில் விபரங்கள் சேகரிக்க காவேரி ஆற்றங்கரையின் படுக்கையில் அமைந்துள்ள பூலாம்பட்டி என்னும் அழகிய ஊரைக்கடந்து சித்தூர் வந்தடைந்தோம் , சித்தூரில் அமைந்த ஸ்ரீ பசுபதீஷ்வரர் திருக்கோவில் வணங்கிவிட்டு, அருகே உள்ள சிவாலயங்களைப் பற்றி விசாரித்தபோது அங்கே ஸ்ரீ மல்லிகேஸ் வரர் திருக்கோவில் இருக்கிறது.

எடப்பாடி சித்தூரில் இருந்து 7 கி.மீட்டர் என்க சரி பார்த்து விட்டு வரலாம் எனக்கிளம்பினோம் ..

இடையே மிகப்பெரிய முனிஸ்வரர் சிலையை பார்த்து வியந்துவிட்டு சித்தூரில் இருந்து நாச்சிபாளையம் செல்லும் வழியில் கொத்தா பாளையம் என்னும் ஊரில் கரட்டுப்பாறை என்னுமிடத்தில் ஸ்ரீ மல்லிகேஷ்வரர் திருக்கோவில் அடிவாரம் வந்தடைந்தோம் .

பழங்கால கோவிலை சுத்தம் செய்து தயார் செய்துள்ளார்கள் .தற்போது மண் சாலை அமைத்துள்ளார்கள் . இருசக்கர வாகனம் மட்டும் மலை மேல் செல்கிறது. குன்று இருக்குமிடத்தில் குமரன் தானே இருக்கவேண்டும் . ஆனால் இங்கே சிவபெருமான் மல்லிகேஷ்வரராக அமைந்துள்ளார் .

சிறிய குன்று போன்ற அமைப்பில் உள்ள சிறிய மலையில் சிவன் அமைந்திருப்பது சிறப்பாகும் . ஒரு சிவனடியார் குன்றின் மேல் அமர்ந்த சிவாலயம் சேலம் மாவட்டத்தில் அமைந்து இருப்பது இங்குதான் எனசொன்னார் . பழைய திருக்கோவிலாக இருந்த ஸ்ரீ மல்லிகேஷ்வரர் திருக்கோவில் பார்க்க அழகாக தயராகி வருகிறது. ஓரு வருட காலத்தில் திருப்பணி நிறைவடையும் .

ஆன்மீக அன்பர்கள் நேரில் சென்று ஸ்ரீ மல்லிகேஷ்வரரை தரிசித்து திருப்பணிக்கு உதவலாம் . அண்மையில் நடந்த அன்னாபிஷேக விழாவில் பங்கு கொண்டுவிட்டு லிங்க உருவில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மல்லிகேஸ்வரரை வணங்கி விட்டு வந்தோம் .

பஸ் வசதி அதிகம் இல்லாத கிராமம் என்பதால் இருசக்கர வாகனத்தில் செல்வது சிறப்பு . சிறிய மலைக்கோவில் தான் சிவாலயம் தேடிச் செல்பவர்களுக்கு நிறைவளிக்கும் .


சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்தில் சித்தூரில் இருந்து நாச்சி பாளையம் வழியில் கொத்தாபாளையம் (கரட்டுப்பாளையம் )என்னும் ஊரில் இருக்கும் ஸ்ரீ மல்லிகேஷ்வரரை நேரில் சென்று பார்த்து வணங்கி விட்டு எழுதுங்கள் .

Arulmigu sri pasupatheswarar &mangalanayagi tirukkovil ;sittur,edapadi taluk






ஆனந்த வாழ்வளிக்கும்


ஸ்ரீ மங்களநாயகி உடனமர் ஸ்ரீ பசுபதீஷ்வரர் திருக்கோவில்

அமைவிடம் :

சேலம்மாவட்டம் எடப்பாடி வட்டம் ,சித்தூர் கிராமம் மேல் சித்தூர் என்னும் குக்கிராமத்தில் அமைந்துள்ள பழங்கால சிவாலயங்களில் ஒன்றாகும் .பழங்காலமாக சிதிலமடைந்து இருந்த சிவாலயம் பல சிவனடியார்கள் முயற்சியால் பழங்கால கோவில் அமைப்பை மாற்றாமல் சுத்தம் செய்து அழகாய் வடிவமைத்துள்ளார்கள் .


மூலவர் :


ஸ்ரீ பசுபதீஸ்வரர் (லிங்க உருவில் அமைந்துள்ளார்)

அம்பாள் :ஸ்ரீ மங்களநாயகி

திருச்சிற்றம்பலம் :


குற்றம் அறுத்தார் குணத்தின் உள்ளார் கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார்
ஒற்றை விடையினர் நெற்றிக் கண்ணார் உறைபதியாகும் செறிகொள் மாடம்
சுற்றிய வாசலின் மாதர் விழாச் சொற்கவிபாட நிதானம் நல்க
பற்றிய கையினர் வாழும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே.

பழங்கால திருக்கோவில் பல சிவனடியார்களால் புதுப்பிக்கப்பட்டு ஆவணி மாதம் 25 ஆம் நாள் 11.09.2011 அன்று புதுப்பிக்கப்பட்டு அழகாய் வடிவமைத்துள்ளனர். எடப்பாடி வட்டத்தில் அமைந்த திருக்கோவில் காவேரி ஆற்றிக்கும் (பூலாம்பட்டி) 7 கி.மீட்டர் தொலைவில் அருகே உள்ளது.

ஸ்ரீ பசுபதீஷ்வரர் திருக்கோவில் கொங்கு சோழர் காலத்தை சேர்ந்த திருக்கோவிலாகும் . திருக்கோவில் பழமை தெரிந்தாலும் ஆண்டுகள் அறியப்பட முடியவில்லை.

கிழக்கு நோக்கி இருக்கிறது திருக்கோவில் அமைப்பு. திருக்கோவில் கருவறை ,விமானம் ,மகா மண்டபங்கள் அழகானது. திருக்கோவில் அம்பாள் ஸ்ரீமங்களநாயகி சிலைகள் அழகானது. விநாயகர் ,முருகன் வள்ளி தெய்வானை ,நந்தீஸ்வரர் ,சண்டிகேஷ்வரர் ,தட்சிணாமூர்த்தி ,லிங்கேத்பவர் ,துர்க்கை,பைரவர் மற்றும் நவகிரககங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் முகப்பில் பழங்கால தெப்பகுளம் ஒன்று உள்ளது. திருக்கோவில் ஸ்தலமரமாக வில்வம் அமைந்துள்ளது.பிரதோஷம் ,மாசி மகா சிவராத்திரி ,சோமவாரப்பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது.

பேருந்தில் செல்ல வழித்தடம் :

சேலம் மாவட்டம் எடப்பாடி வந்து அங்கிருந்து சித்தூர் என்ற ஊருக்கு வந்து மேல் சித்தூர் எனக்கேட்டால் விபரம் சொல்வார்கள் .
பேருந்து எண் :

6,3A, நாகநாதன் ,தண்டபாணி போன்ற பேருந்துகள் உள்ளன, பழங்கால சிவாலயங்களில் தரிசிக்கும் எண்ணம் கொண்டவர்கள் பார்க்க வேண்டிய ஸ்தலமாகும் . பார்த்துவிட்டு கருத்துரையிடுங்கள் .நன்றி.

Friday, November 4, 2011

sri velayuthasamy thirukkovil , thindal,erode






திருமுருகர் துதி:

அஞ்சுமுகந் தோன்றின் ஆறுமுகந் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்
நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும்
தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்


அருள்மிகு திண்டல் ஸ்ரீ வேலாயுதசாமி திருக்கோவில் . ஈரோட்டில் இருந்து கோவை செல்லும் செல்லும் சாலையில் 5 கி.மீட்டரில் உள்ளது.எதிரே அருகே திண்டல் வேளாளர் மகளீர் கல்லூரி (thindal vellar womens college) அமைந்துள்ளது .

அடிவாரத்திலுள்ள அரசமர விநாயகரை வணங்கி அருகே மற்றொருவிநாயகரை வணங்கி சில படிக்கட்டுகள் ஏறினால் இடும்பர் சன்னதி வருகிறது. அடிவாரத்தில் இருந்து சுமார் 100 படிக்கட்டுகள் ஏறிச்சென்றால் நாம் அடைவது கொடிமரம் வணங்கி, பின்பு ராஜ கோபுர அழகை தரிசனம் செய்து உள்ளே பிரமாண்ட மண்டபத்தில் மூலவர் ஸ்ரீ வேலாயுதசாமியை (ஸ்ரீ முருகர் )தரிசிக்கலாம்.

ஈரோட்டு நகரின் அருகில் அமைந்த ஒரே அழகான மலைக்குன்று அதில் முருகப்பெருமான் ஆட்சி செய்து வருகிறார் . அழகாக வடிவமைக்கப்பட்ட திருக்கோவில் வலப்புற விநாயகர் என சிறப்பான அமைப்புடன் திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கோவில் தங்கத்தேர் பார்ப்பதற்கு அழகான ஒன்றாகும் .

திண்டல் ஸ்ரீ வேலாயுதசாமி திருக்கோவில் மலையை சுற்றிலும் அழகான புல்வெளிகள் ,கலைநயத்துடன் அமைக்கப்பட்ட சிறு குளங்கள் ,அழகான பூங்கா போன்ற அமைப்பை மலையை சுற்றிலும் அமைத்துள்ளார்கள் .


பிரதிவார செவ்வாய் கிழமைகளில் சிறப்பு வழிபாடுகளும் ,கிருத்திகை ,சஷ்டி,அம்மாவசை,பெளர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது . ஈரோடு நகர மக்கள் வணங்கும் முக்கிய திருக்கோவில்களில் திண்டல் வேலாயுதசாமி திருக்கோவிலும் ஒன்று. பார்க்கவேண்டிய முருகர் ஆலயங்களுள் இதுவும் ஒன்று.

திண்டல் முருகரை வணங்க திருமணத்தடை , காரிய வெற்றி,நன்மக்கட்பேறு , கிடைக்கும்மென்பது பெரியோர்களின் கூற்று.

திண்டல் ஸ்ரீ வேலயுதசாமியின் வலைப்பக்கம் : www.thindalmurugan.tinfo.in

ஈமெயில் முகவரி: thindalmurugantemple@gmail.com

ஈரோட்டுப்பக்கம் வந்தால் இறைவனை தரிசித்து விட்டு எழுதுங்கள் .

நட்புடன் குரு.பழ.மாதேசு

தமிழனின் ஓர் அற்புதமுயற்சி காலிங்கராயன் அணைக்கட்டு




காளிங்கராயன் அணைக்கட்டு

ஈரோடு மாவட்டம் பவானிக்கு அருகிலுள்ள ஓர் சிறிய அணைக்கட்டாகும் .பவானி ஆறு காவிரியில் கூடும் முன்பாக கடலில் வீணே கலக்கக்கூடாது என யோசித்து பவானி ஆற்றின் ஓர் பகுதி நீரைத்தடுத்து உருவானதுதான் காலிங்கராயன் அணைக்கட்டாகும் .

காலிங்கராயன் அணைக்கட்டையும் ,வாய்க்காலையும் ஏற்படுத்தியவர் காலிங்கராயன் என்பவராவார் .கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நஞ்சையன் என்பவர்க்கு மகனாக பிறந்த லிங்கையன் என்பவர் பாண்டிய மன்னரால் " காலிங்கராயன்" என கவுரவிக்கப்பட்டவர் .இவர் வெள்ளோட்டை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தபோது கட்டப்பட்ட பணியாகும்


காலிங்கராயன் வாய்க்கால் செல்லும் தூரம் :

பவானி காலிங்காராயன் அணைக்கட்டில் இருந்து சுமார் 57 மைல்கள் பாசன வசதிக்காக பயன்பட்டு நொய்யல் ஆற்றில் ஆயுடயார் பாறை என்னுமிடத்தில் கலக்கிறது. அணை 12 ஆண்டுகாலமாக கட்டப்பட்டு கி.பி 1283ல் முடிக்கப்பட்டு பாசன வசதிக்காக திறக்கப்பட்டது. காலிங்கராயன் வாய்க்காலின் சிறப்பம்சமே இடப்புற மதகுகளை மட்டுமே கொண்டது. கோணவாய்க்கால் என்றும்,ஈரோட்டை கடந்து செல்லும்போது காரை வாய்க்கால் என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது.


700ஆண்டுகளுக்கு முன்னால் தமிழன் ஒருவனால் பாசனத்திற்காக யோசித்து உருவாக்கப்பட்ட அருமையான முயற்சி. காலிங்கராயன் எனும் அந்த நல்ல உள்ளத்தின் பெயராலே அந்த ஊர் இன்றும் காளிங்கராயன் பாளையம் என்று அழைக்கபட்டு சிறப்பு பெற்று வருகிறது. சித்தோடு லட்சுமி நகரில் இருந்து பவானி செல்லும் வழியில் உள்ளது.

தற்போது அழகிய முறையில் நம் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் காலிங்கராயன் அணைக்கட்டில் பூங்கா தயராகி வருகிறது. திறக்க சற்று காலம் ஆகும். இந்த அணையில் இருந்து வெளியாகும் பவானி ஆற்றின் உபரி நீர் காவிரியாக மாறி கூடுதுறையில் கலந்து விடுகிறது. காலிங்கராயன் அணைக்கட்டை பார்வையிட பொதுப்பணித்துறையினர் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் .

பெரிய எதிர்பார்ப்புடன் வந்தால் ஏமாற்றமே மிஞ்சும் .பவானி பகுதிக்கு வந்தால் பார்த்துவிட்டுச்செல்லலாம் . இங்கு அழகிய தீம் பார்க் அமைத்தால் நன்றாக இருக்கும் . தைப்பண்டிகை கருநாள் அன்று குடும்பத்துடன் வந்து இப்பகுதிமக்கள் காலிங்காராயன் அணைக்கட்டை பார்வையிட்டு அழகை ரசித்துச்செல்வது வழக்கம் .

தமிழனின் ஓர் அற்புத படைப்பான காலிங்கரான் அணைக்கட்டு வரலாற்றில் முத்திரையிடப்பட்ட ஆவணம் . பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நீர்பாசன வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட காலிங்கராயன் அணைக்கட்டு வாய்க்கால்களை உருவாக்கிய திரு.லிங்கையன் எனப்படும் காலிங்கராயனை வணங்குகிறேன்.

பார்த்துவிட்டு எழுதுங்கள் .

நட்புடன் குரு.பழ.மாதேசு.

அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோவில் பவளமலை ,கோபி





" விழிக்குத் துணை திருமென்மலர்பாதங்கள்
மெய்மை குன்றா மொழிக்குத்துணை முருகா என்னும்
நாமங்கள் முன்பு செய்த பழிக்குத் துணை அவன்
பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத்துணை
வடிவேலும் செங்கோடன் மயூரமுமே."


அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசாமி திருக்கோவில் ;
(Arulmigu sri muthukumarasamy tirukkovil ,PAVALAMALAI,cobichettypalayam ) :


ஈரோடு மாவட்டம் கோபிவட்டம் கோபிசெட்டியபாளையத்தில் (GOBI) பவளமலை எனும் அழகிய குன்றில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முருகர் ஆலயமாகும் .

எப்படிச்செல்வது :
கோபியில் இருந்து அத்தாணி செல்லும் வழியில் பி.கே .ஆர் மகளீர் கல்லூரி (P.K.R ARTS COLLEGE FOR WOMENS) பஸ் ஸ்டாபில் இறங்கி சுமார் ஒரு கி.மீட்டர் கிழக்கு நோக்கி சென்றால் பவளமலை அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோவில் வருகின்றது. அடிவாரத்தில் பெரிய அரசமரமும் விநாயகரை தரிசனம் செய்து பயணிக்கலாம் .

மூலவர் :

அருள்மிகு முத்துக்குமாரசாமி (முருகர் ) அழகிய குன்றில் சுமார் 60படிகள் ஏறிச்சென்றால் திருக்கோவில் மூலவரை தரிசனம் செய்யலாம் . "அழகன் முருகன் " என்ற சொல்லிற்கு ஏற்ப மூலவர் ஸ்ரீ முத்துக்குமாரசாமியின் அழகு முகம் காண்போர்க்கு பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் .

பிரதி செவ்வாய் கிழமைகளில் காலை 06.00மணிக்கு திரிசதை அர்ச்சனை நடைபெறுகிறது. கிருத்திகை,சஷ்டி,காலங்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.திருக்கோவில் கொடிமரமும் நவகிரக சன்னதிகளும் காண வேண்டிய ஒன்று .திருக்கோவில் வளாகத்தில் அருள்மிகு கைலாசநாதர் சன்னதி தரிசிக்க வேண்டிய ஒன்றாகும் .

திருக்கோவில் படி அல்லாது கார்,பைக் போன்ற வாகனங்களும் செல்ல தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கந்தசஷ்டித்திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. பாடல் பெற்ற ஸ்தலம் .பார்க்கவேண்டிய ஆலயம் .

கோபி பக்கம் வந்தால் கண்டிப்பாக ஸ்ரீ முத்துக்குமாரசாமி திருக்கோவிலை
தரிசித்து விட்டு எழுதுங்கள் .

Tuesday, November 1, 2011

அருள்மிகு மீனாட்சி உடனமர் சொக்கநாதர் ஆலயம் ,அம்மாபேட்டை பவானி வட்டம்






அருள்மிகு மீனாட்சி உடனமர் ஸ்ரீ சொக்கநாத சுவாமி திருக்கோவில் (Arulmigu sokkanathar and meenatshi amman temple, ammapet post,bhavani taluk erode district);

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அம்மாபேட்டையில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகான சிவாலயமாகும்.அம்மாபேட்டை எனும் ஊர் பவானியிருந்து மேட்டூர் செல்லும் வழியில் 20 வது கி.மீட்டரில் அமைந்துள்ளது.

சேலம்மாவட்டம் மேட்டூரில் இருந்தும் 20கி.மீட்டர் தொலைவில் அம்மாபேட்டை உள்ளது.அந்தியூரில் இருந்தும் சுமார் 20கி.மீ தொலைவில் அம்மாபேட்டை உள்ளது. காவிரி ஆறு துவங்கி ஈரோடு மாவட்டத்தில் பயணித்து வருகையில் காவிரி படித்துறையில் உள்ள முதல் சிவாலயமாகும் .

திருக்கோவில் அமைப்பு :

திருக்கோவில் கிழக்கு நோக்கியும் , காவிரி வடக்கிருந்து தெற்காக ஓடுகிறது. பிரமாண்ட அரசமரத்தடி விநாயகர் தரிசனம் செய்து திருக்கோவில் முகப்பில் உள்ள ஆதிமூல கணபதியையும் ,வீரபத்தரர் சன்னதியும் வணங்கி ராஜ கோபுரம் தரிசித்து உள்ளே சென்றால் நந்திதேவர் தரிசனம் செய்து மூலவரான அருள்மிகு சொக்கநாதசாமியை லிங்க உருவில் தரிசனம் செய்யலாம் .

உயிர்புடன் உள்ள சிவனை தரிசனம் செய்ய நல்லதோர் ஸ்தலமாக அமைந்துள்ளது.திருக்கோவில் நல்ல அகலமாக தரிசனம் செய்ய ஏதுவாக உள்ளது. தட்சிணாமூர்த்த சன்னதி கன்னிமூலகணபதி ,மகாலட்சுமி சன்னதி, சூரிய சந்திரர்கள்,நவகிரகங்களென திருக்கோவில் எல்லா சிவாலயங்கள் போன்ற அமைப்பிலுள்ளது. மீனாட்சி அம்மன் சன்னதி அருள்மிகு சொக்கநாதர் சன்னதியின் இடப்புறம் அழகாக அமைந்துள்ளது.

மீனாட்சி அம்மனின் உருவம் அழகாக அமைந்துள்ளது. ஸ்தலமரமாக பழங்கால வன்னி மரம் அமைந்துள்ளது. சிவாலயத்தில் வில்வமரம் வேண்டுமென்பதால் வன்னி மரமருகில் வில்வமரம் அமைந்துள்ளது.

பூஜைநேரங்கள் :

காலை 0600மணி முதல் மதியம் 0100மணிவரையிலும் ,மாலை 04.00மணிமுதல் 08.00மணி வரை திருக்கோவில் திறக்கப்பட்டிருக்கும் .விஷேச காலங்களில் முழுநேரமும் திறக்கப்பட்டிருக்கும் . வள்ளி,தெய்வானை உடனமர் சுப்பிரமணியர் ,பிரம்மா,துர்க்கை,சண்டிகேஸ்வரர் ,காலபைரவர் சிலைகள் பார்த்து தொழ வேண்டிய சன்னதிகளாகும் . அருகே திருக்கோவில் திருமண மண்டபமும் உள்ளது.

புது சிவாயலயங்கள் தேடி வழிபடும் சிவனடியார்கள் ,பக்தர்களுக்கு நிறைவு செய்யும் ஆலயமாக அருள்மிகு மீனாட்சி உடனமர் சொக்கநாதர் ஆலயம் இருக்கும் .முடிந்தால் ஓர் பிரதோஷ வேளையில் கலந்துவிட்டு எழுதுங்கள் ,

நட்புடன் குரு.பழ.மாதேசு

கோபி பச்சைமலையில் அருளும் அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோவில்




முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே யீசன் மகனே-யொருகைமுகன்
nம்பியே நின்னுடைய தண்டைக்கால்
எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான் .

முருகப்பெருமானின் ஆலயங்கள் ஈரோடு மாவட்டத்தில் பல உண்டு . அதில் குறிப்பிடத்தக்க ஓர் அழகிய குன்றில் அமைந்த பச்சை மலை எனும் அழகிய ஓர் மலை கோபி வட்டம் மொடச்சூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

கோபி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பச்சைமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அழகான ஓன்று.பாடல் பெற்ற ஸ்தலமும் ஆகும் .

சுமார் 100படிக்கட்டுகள் ஏறினால் அழகிய அழகன் முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம் . அழகிய கொடிமரமும்,முகப்பில் ஏழு கலசம் கொண்ட பிரமாண்ட இராஜ கோபுரமும் அழகானது.

முன்பாக உள்ள வித்யா கணபதியாரை தரிசித்து அங்கிருந்து சென்றால் உள்ளே பெரிய மண்டபமும் நேரே சென்றால் முன்பாக காக்கும் கடவுளாக வீரபாகு ,வீரமகேந்திர் நிற்க உள்ளே மூலவராக நேர்த்தியாக அழகே உருவான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்யலாம் . சுற்றிலும் கருப்பு பளிங்குகற்களால் கட்டப்பெற்றுள்ளது.

பளபளக்கும் திருக்கோவிலை பார்க்கும் போதே மதிப்புமிகுந்த ஒன்றாக உள்ளது. கோபிசெட்டிய பாளையத்தின் பசுமை மிகுந்த அழகிய அமைப்பை திருக்கோவிலில் இருந்து ரசிக்கலாம் . திருக்கோவில் வளாகத்தில் சீதேவி,பூதேவி உடனமர் ஸ்ரீ மரகத வெங்கடேசப்பெருமாள் சன்னதியும் ,ஆதிவிநாயகர்,ஆதி ஸ்ரீமரகதீஸ்வரர்,மரகதவள்ளி சன்னதிகளும், தரிசித்து அருள்பெறவேண்டிய ஒன்றாகும் .

வள்ளி ,தெய்வானை உடனமர் கல்யாணசுப்பிரமணியர் சன்னதியை வணங்க திருமணத்தடைகள் அகலும்.சுபகாரியங்கள் கைகூடும் . அருணகிரிநாதர் சன்னதிகளும் ,இடும்பன் சன்னதிகளும் பார்த்து தரிசிக்கலாம் . பிரமாண்ட மகா மண்டபத்தில் குருபகவான், நவகிரக சன்னதிகளும் உள்ளன. நவகிரக சன்னதிகளில் சற்றே வித்தியாசமாக நடுவே சூரியபகவானுக்கு பெரிய சிலையும் ,சுற்றிலும் மற்ற நவகிரகங்களும் மற்ற கோவில்களில் உள்ளதைப்போல அல்லாமல் அழகாய் அமைத்திருப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும் .


கிருத்திகை,சஷ்டி,பெளர்ணமி,அம்மாவசை, நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் .செவ்வாய் கிழமைகளில் விஷேச பூஜை நடைபெறும் .சூரசம்ஹாரம் ,திருக்கல்யாணம் சிறப்பாக செய்யப்படுகிறது. மலைக்கோவில் வாகனங்கள் மேலே செல்ல ஏதுவாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. பச்சை மலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்ய வாழ்வில் தடைகள் நீங்கி உயர்வு பெறுவது கண்கூடு.


அழகிய முருகர் ஆலயங்களில் ஒன்றான பார்க்க வேண்டி ஸ்தலங்களில் ஒன்றான பச்சை மலை முருகரை வணங்கி வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற அழைக்கும் அன்பன்


குரு .பழ மாதேசு. குருவரெட்டியூர் .

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...