Tuesday, January 25, 2011

பசு ,மாடு,கோமாதா


பசு : இடுகையின் தலைப்பை பார்த்தவர்களுக்கு பசுவிற்கு ஓர் இடுகையா ..? என ஆச்சர்யர்யம் அளிக்கலாம் ஆனால் நம் புராணங்களும் இந்து மதங்களின் நூல்களும் மிக மேன்மையாக சொல்லுகின்ற விஷயமாக பசு இருப்பது நிஜமே. அப்படி என்ன தான் இருக்கிறது பசு மாட்டில் என நம் ஆன்மிக அறிவை (?) வைத்து ஆராய்ததின் பலன் எமக்கு தெரிந்த சில விஷயங்களை உங்கள் முன் வைக்கிறேன் .

புராணத்தில் எல்லா தெய்வங்களும் பசு மாட்டின் உடலில் வந்து இடம்புகுந்ததாகவும் மகா லட்சுமி கடைசியாக வந்த போது உலகின் முப்பத்து முக்கோடி தெய்வங்களும் பசுவின் உடலில் இடம் கொடுத்து விட்டதாக பசு எனப்படுகிற கோமாதா சொல்ல சரி எனது சாணம் இடும் இடம் தான் உள்ளது எனச்சொல்ல மகா லட்சுமியும் கிடைத்த இடம் போதும் என அங்கே தங்கி விட்டதாகவும் புராணக்கதைகள் சொல்கின்றன.


ஆகவே தரித்திர நிலையில் உள்ளவர்கள் செல்வ வளம் இல்லாதவர்கள் அதிக பாவங்களை செய்து விட்டதாக எண்ணுபவர்கள் கன்றுடன் கூடிய பசு மாட்டை நம்பிக்கையுடன் ஒருமுறை சுற்றி வந்து பழம் அல்லது அகத்திக்கீரை கொடுத்து வணங்க எல்லா வளமும் நலமும் கிட்டுமெனவும் உலகின் அனைத்து தெய்வங்களையும் வலம் வந்த புண்ணியம் கிட்டுமென ஆன்மீகப்பெரியோர்கள் சொல்கிறார்கள்.

பசுவின் பால்,தயிர்,நெய், கோமியம்,பசுஞ்சாணம் ஆகியவை சேர்த்துதான் பஞ்ச காவ்யம் தயாரிக்கப்படுகிறது. திருநீரு பசு சாணத்தில் தயாரிக்கப்படும் வெண் திரு நீரு உயர்வாக கருதப்படுகிறது. பசு மாட்டின் நிறத்தை பொறுத்து பாலின் பண்பு அமைவதாக பெரியோர்கள் சொல்கிறார்கள் . வெண்மை நிறம் கொண்ட பசுவின் பால் பித்த ரோகத்தை தீர்க்கும் . சிவப்பு நிறம் கொண்ட பசுவின்பால் வாத நோயை போக்கும் . வெண்புள்ளியும் கருஞ்சிவப்பு நிறமும் (கபிலை நிறம் ) கொண்ட பசுவின் பால் மூன்று ரோகமான வாதம் பித்தம் ,சிலோத்தும ரோகங்களை நீக்குவதாக பழங்கால நூல்கள் இயம்புகின்றன. இந்துவாக பிறந்த ஒருவர் இது போன்ற உயர்வுகளை கொண்ட பசுக்களை வதை செய்யாமலும்,அடிமாடுகளை விற்காமாலும் மாட்டிறைச்சியை உணவாக உட்கொள்ளாமல் கண்டிப்பாக தவிர்த்து ,

அன்புடன் பராமரித்து பசுக்களின் அருமையை உணர்ந்து சிவன் அருள் மட்டுமன்றி உலகின் அனைத்து தெய்வங்களின் அருளும் தடையின்றி பெற வாழ்த்துகிறேன்.

Sunday, January 16, 2011

அருள்மிகு கொண்டத்துக் காளியம்மன் திருக்கோவில்,பாரியூர், கோபி , Arulmigu kondathu kaliamman thirukovil ,pariyur,gobi.




அருள்மிகு கொண்டத்துக்காளி அம்மன் திருக்கோவிIL


ARUL MIGU KONDATHU KALIAMMAN THIRUKOVIL :


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் என்றால் தமிழ் சினிமாவின் சில படங்கள் எடுக்கப்படும் பதிவுகள் இங்கே உள்ள இயற்கை காட்சிகளின் அழகில் அமைந்திருப்பது தான் அருள் மிகு கொண்டத்து காளி அம்மன் திருக்கோவிலாகும்.

கோபியில் இருந்து அந்தியூர் சாலையில் சுமார் 5 கி.மீட்டர் வயல் வெளிகளை பச்சையை ரசித்துச் சென்று பாரியூரில் இறங்கினால் திருக்கோவிலை அடையலாம்.பவானி ஆற்றின் வாய்க்கால்கால்கள் சுற்றிலும் ஒட தென்னை மரங்கள் மற்றும் இயற்கையின் குளுமை நம்மை ஆர்பரிக்கும் ஒர் அழகான கோவிலாகும்.

திருக்கோவில் உள் பிரகாரம் கருங்கற்களால் அழகாய் வடிவமைக்கப் பட்டுள்ளது.அங்கே மூலவராய் கொண்டத்து காளியம்மன் தம்மை காண வரும் பக்தர்களின் வரம் தரும் அம்பாளாக காட்சி தந்து பக்தர்களின் குறை நீக்கி அருள் புரிகிறார். இயற்கையின் எழிலுடன் அமைந்துள்ள இத்திருக்கோவிலுக்கு கோபி (cobi chettipalayam) பக்கம் வந்தால் வந்து விட்டு செல்லுங்கள்.

காரில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் அந்தியூர் செல்லும் சாலையில் மேலும் பயணித்து அத்தாணி (athani) வரை வந்தால் இயற்கையை நன்கு ரசிக்கலாம். கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழா தைமாதம் போகிப் பண்டிகையில் ஆரம்பித்து 5 நாள் வரை பொங்கல் திருவிழா காலங்களில் நடத்தப் படுவதால் கூட்டம் அலை மோதுகிறது.


பிரசித்தி பெற்ற முத்துப்பல்லாக்கில் கொண்டத்துக் காளியம்மன் பாரியூரில் இருந்து கோபி வரை வந்து பக்தர்களுக்கு காட்சி தருவது மிக அற்புதமான ஒன்று. ஈரோடு ரயில் நிலையத்தில் சுமார் 40 கி.மீட்டர். தங்கும் விடுதிகள் கோபி நகரில் உண்டு. கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய ஆலயம் .

மற்ற கோவில்களை போல் அல்லாமல் இங்கு ஒரு விதமான மண் திருநீரு தருகிறார்கள் இதுவும் விஷேசமான ஒன்று. இறைவியை தரிசித்து விட்டு எமக்கு எழுதுங்கள் .

ஸ்தல வரலாறு பின்னர் எழுதப்படும் .

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் .நன்றி

Thursday, January 6, 2011

ஸ்ரீ ரங்கம்மா கோயில் ஸ்தல வரலாறு ,மாடு கட்டி பாளையம், விஜய மங்கலம். sri Rangangammal kovil temple history, madukattipalayam, vijayamangalam

ஸ்ரீ ரங்கநாயகி அம்மன் கோவில் (வைணவம்) வரலாறு

அமைவிடம் :

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் விஜயமங்கலத்தில் இருந்து சென்னி மலை சாலையில் மாடுகட்டி பாளையம் - 638051 என்னும் ஊரில் உள்ளது. விஜயமங்கலம் ரயில் நிலையத்தில் இருந்து 3கி.மி , பெருந்துறையில் இருந்து 7கி.மி . ஈங்கூரில் இருந்து 4கி.மீ தொலைவிலும் மாடுகட்டிபாளையம் எனும் சிற்றூரில் உள்ளது.

திருக்கோவில் நிஜ வரலாறு :

சுமார் 300 ஆண்டுகளுக்கு கம்மாவர் மாடுகட்டி பாளையம் பகுதியில் வாழ்ந்து வந்தனர்.அக்காலத்தில் நம்பூரார் துக்கினார் குலத்தில் நடந்த நிஜ வரலாறு. ரங்கம்மா தந்தை கொண்டம நாயுடு ரங்கம்மா தீயில் பாய்ந்து இறந்த பிறகு ரங்கம்மா பேர நாயுடு நினைவாக அவர்களுக்கு சிலை செதுக்கி கோவில் கட்டி வைத்தார். அந்தக்கோவில் இன்னமும் மாடுகட்டிபாளையத்தில் உள்ளது.


பூசாரியோ மற்றவர்களோ உள்ள செல்ல வேண்டுமானால் பக்கவாட்டாக உட்கார்ந்துதான் செல்ல வேண்டும். கோவில் உற்சவ விக்கிரகங்கள் வைக்க சிறிய மண்டபம் உள்ளது. அழகான கருட கம்பம் முன்புறம் உள்ளது. ரங்கம்மா கோவில் வடகிழக்கு மூலையில் கம்மவார் குல தெய்வமான எல்லம்மா ஸ்ரீ ரேணுகா தேவி சன்னதி உள்ளது. மற்றும் ஸ்ரீ ரங்கம்மாளின் வழிபாட்டு தெய்வமான ஸ்ரீ அங்காளம்மன் கம்பீரமாக காட்சி தருகிறது..

பிரமோற்சவம் :

கார்த்திகை மாதத்தில் , மற்றும் பிரதி மாத பெளர்ணமி பூஜை .. மிகச்சிறப்பாக அறங்காவலர் குழுவால் பூஜை ,விசேஷங்கள் நடைபெற்று வருகிறது.மற்ற நாட்களிலும் கோவில் திறக்கப்பட்டே இருக்கும்,

பூஜை விபரங்கள் :

பால் பூஜை காலை 06.00 மணிக்கு மேல் , உச்சி கால பூஜை பகல் 12.00 மணிக்கு மேல், சாயங்காலபூஜை : மாலை 0600 மணிக்கு மேல் .. ஓவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று திருமஞ்சன பூஜை காலை 10.00 மணிமுதல் 11.00 மணி வரை..

பஸ் வசதி :

விஜய மங்கலம் மெயின் ரோடு TO மாடுகட்டி பாளையம் ரங்கம்மா கோவில் பஸ் நெம்பர் C4 காலை 7.15, பகல் 1.45, மாலை 6.00 மணி.

எம் அனுபவம் : தெய்வீக பெண்ணாக வாழ்ந்து இறந்த ரங்கம்மா கணவருக்காக தீ மூட்டிய சிதையில் இறங்கிய வரலாறு கேட்க சிலிர்க்கிறது. இங்கு நிஜமாக வாழ்ந்த மனிதமும் கடவுள் ஆகலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் தம்மை நாடி வருபவர்களுக்கு மக்கட்பேறு,திருமணம். நல்வாழ்வு இந்த அன்னை நிகழ்திய அற்புதங்கள் பலர் சொல்லக்கேட்டேன்.

உங்கள் குறைகளை ஸ்ரீரங்கம்மாளிடம் எடுத்து வைத்து நிறைவேற பெளர்ணமி அன்று வந்து தரிசித்து விட்டு நல்லது நடக்கும் பின் எனக்கு எழுதுங்கள்.. கோவில் பற்றி மேலும் தகவல்களை சேகரித்து எழுதுகிறேன் .

மேலும் விபரங்களை துக்கினார் நம்பூரார் சேம நல சொசைட்டியின் போன் தொடர்புகொள்ள நெம்பர் 04294-292124, .மற்றும் 9791571704.

திருக்கோவில் விபரங்கள், போட்டோக்கள், வீடியோக்கள் இணையத்தளத்தில் பார்க்க முகவரி www.srirangammal.com , ஸ்ரீரங்கம்மாவை நேரில் தரிசித்து விட்டு எழுதுங்கள் . நன்றி.

Wednesday, December 29, 2010

குப்பண்ணசாமி வருகை வரலாறு பாகம் 2


பழங்காலத்தில் கொங்கு நாடு பல குறுநில மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது தென்னிலை என்னும் ஊரினை தலைநகராக கொண்டு "கொக்கராயன்" என்னும் குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான்,

அவர் மைசூரை ஆண்டு வந்த திப்பு சூல்தானுக்கு கப்பங்கட்ட மறுத்தார். அதனால் கோபம் கொண்ட திப்பு கொங்கு நாட்டில் இருந்து வந்து தம்மிடம் படைத்தளபதியாக இருக்கும் "குப்பண்ணக்கோ " என்பவரை அழைத்து நீர் சென்று கொங்கு நாட்டில் இருக்கும் கொக்கராயன் மீது படையெடுத்து அவன் செல்வங்களை கவர்ந்து வா என திப்பு சூல்தான் ஆணையிட குப்பண்ணக்கோ கலங்கிப் போனார் .

தன் தாய் நாட்டின் மீதே படையெடுப்பதா ? என நினைத்து மனம் வருந்தி மன்னன் கட்டளைக்காக மனதை திடப்படுத்தி பெரும்படையுடன் கிளம்பினார்..கொங்கு நாடு வந்ததும் குப்பண்ணசாமி என்னும் தளபதியாருக்கு சக்கரசுவாசம் என்னும் விஷக்காய்ச்சல் தாக்கியது.

கனககிரி மலைச்சாரலில் தங்கிய அப்படை பிரிவு வீரர்களுக்கு தன் தளபதி குப்பியண்ணர் நோய்கொடுமை தாங்காமல் துன்படுவதை நீக்க வழி தெரியாமல் மருத்துவரை தேட அப்போது தம்பிரான் சுவாமிகள் என அழைக்கப்படும் செல்வக்குமார சாமிகள் துக்காச்சி ஊரில் விஷக்கடிக்கு வைத்தியம் பார்த்து குணப்படுத்துவார் எனச்சொல்ல , படை வீ ரர்களும் நோயால் துன்பப்படும் தம்பிரான் சுவாமிகளிடம் அழைத்துச்சென்றனர்.

சுவாமிகளை கண்ட குப்பண்ணக்கோ அவரை நெடுசாண் கிடையாக விழுந்து வணங்க அவரை தம்பிரான் சுவாமிகள் தம் திருக்கரங்களால் எழச்செய்து அவர் நோயை தொட்டார். அவர் தொடவிக் கொடுத்தவுடன் குப்பண்ணர் உடல் குணமானது. அவர் அருட்பார்வையால் குணமான குப்பண்ணர் செல்வக்குமரன் என்கிற தம்பிரான் சுவாமிகளிடம் தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டினார்.

அதன் படியே சிஷ்யனாக குப்பணசாமியை ஏற்றுக்கொண்டார். குருவும் சிஷ்யனும் சேர்ந்து கிணறு வெட்டினர். இது தற்போதும் திருக்கோவிலில் உள்ளது. சர்வரோக நிவாரண தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.


குப்பண்ணர் தன் குருநாதரின் கட்டளைப்படி கொல்லிமலை.குடமலை. சிவமலை,சென்னிமலை, வெள்ளிமலை, ஆகிய மலைகளுக்கு சென்று அமிர்தகரணி, சந்தானகரணி,சங்கரகரணி, வெண்சாரை, கருநொச்சி, ஆகிய மூலிகைகளை கொண்டு தம்மிடத்தில் பயிராக்கினார்.

இச்சூழ்நிலையில் தம்பிரான்சுவாமிகள் வயதாகிவிட தன் சிஷ்யர் குப்பண்ண சாமியை அழைத்து "தம்மால் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ செல்வமுத்து குமாரசுவாமிக்கும் சுயம்பு மூர்த்திக்கும் பங்கம் ஏற்படாத வகையில் பாதுகாப்புடனிருந்து வருக"! என கட்டளை இட்டு இறையடி சேர்ந்தார்.

அதன்படியே கோவிலை பாதுகாத்த குப்பண்ணர் தான் வயதாகி இறையடி சேரும் முன் ஊர்மக்களை அழைத்து " எம் குருநாதரையும் எம்மையும் தூய அன்புடன் நினைத்து இத்தீர்த்தத்தில் நீராடி இத்தீர்த்தத்தை உட்கொண்டும் வருவோர் கொடிய ரோகங்களிலும்,விஷக்கொடுமைகளிலிருந்தும் நீங்கி நலம் பெறுவார்கள் என்று கூறி இயற்கை எய்தினார்.

செல்வக் குமாரத் தம்பிரான் சாமிகள் உடல் அடக்கம் செய்த கால மாறுதல்களால் தற்போது அழிந்து விட்டன. தற்காலத்தில் குப்பண்ணசாமி இளம்பிள்ளை ஜமீன் கனவில் தோன்றி "நான் காவிரி ஆற்றில் வருவேன் என்னை எடுத்து வைத்திரு "என கட்டளை இட்டார். அடுத்த நாள் காவிரியில் நீராடும்போது வேங்கை கட்டையொன்று மிதந்து அவர் பக்கத்தில் வர அவர் அதனை விலக்கினார்.பலமுறை அக்கட்டை பக்கத்தில் வரவும் விலக்கவும் இருந்தார்.

அப்போது வீரன் போல் கையில் தண்டு ஓச்சி நின்ற நாம் காவிரியாற்றில் வருவோம் எடுத்து வைத்திரு என்ற கனவு நினைவில் வர அக்கட்டயை எடுத்துச்சென்று தூய்மையான இடத்தில் வைத்தனர். அந்த வேங்கை மரம் இரவு நேரங்களில் பல அற்புதம் நிகழ்த்தியது, அந்த ஜமின் கலங்கிப்போய் நிற்க கனவு நிலையில் வீரனாக காட்சியளித்த குப்பண்ணர் அன்பனே! செல்வமுத்துக் குமாரசாமி தம் கோவில் இருக்குமிடம் தெரிவித்தார்.

ஜமீன் தாரும் இறைவன் குப்பண்ணர் கட்டளைப்படி வேங்கை கட்டையில் குப்பண்ணசாமியின் திருவுருவம் அமைத்து எடுத்து வந்து பீடத்தில் நிறுத்தினார. அஷ்ட பந்தன விழா அமைத்த நேரத்தில் நாகப்பாம்பு அங்கு வந்து வேங்கை திருவுருவில் இருந்த குப்பண்ணரின் பீடத்தில் மூன்று முறை சுற்றி படுத்துக்கொண்டது. அதனை விரட்டியும் போகவில்லை.

தைரியத்துடன் ஆன்மீக அன்பர்கள் அதை தொட்டுப்பார்க்க அது அஷ்டபந்தன மருந்து போல் இருக்கமாயிருக்க கண்டு,நாக பந்தனமாக அதிசயம் கொண்டு திருவருள் நிலையை எண்ணி வியந்தனர்.அன்று முதல் இன்று வரை குப்பண்ணசாமி காக்கும் கடவுளின் திர உருவமாக காட்சி அளித்து அருள் செய்பவர் அவரே.

ஸ்ரீ செல்வக் குமாரத்தம்பிரான் சுவாமிகள் ஆத்மார்த்மாக வழிபட்டு வந்த மூர்த்தியே தற்பொழுது ஸ்ரீ செல்வக்குமார் சுவாமி என்னும் திரு நாமமுடன் விளங்கி வருகிறார். இளம்பிள்ளை ஜமீன்தாரால் அமைக்கப்பட்ட தாருபிம்பமே ஸ்ரீகுப்பண்ணசாமியாக விளங்கி மக்களின் தீராத பிணிகளை தீர்த்து அருள் புரிந்து வருகிறார்.

முனிவரான செல்வக்குமாரத் தம்பிரான் சுவாமிகளால் மூர்த்தி கீர்த்தி உடையதாக அமைத்துள்ளது. குப்பண்ணரும் தம்பிரானும் சேர்ந்து தொட்டபெருமையால் அமைந்த "சர்வரோக நிவாரண தீர்த்தக் கூவல்" தீர்த்தப்பெருமை கொண்டதாக அமைந்துள்ளது. மக்கள் எல்லாக்காலங்களிலும் வந்து வழிபட்டு செல்வதால் தலப்பெருமை கொண்டுள்ளது.

ஆகவே ஸ்தலம் மூர்த்தி ,தலம், தீர்த்தம் என்னும்படுயான உயர்ந்த ஸ்தலமாகும்.இத்தலத்தை வந்து வழிபட்டுச் செல்வோர் இகபர சாதனங்களை அடைந்து இன்புற்றி நோய் நீக்கம் பெற்று இன்புற்று வாழ்கின்றனர்.

ஸ்தலம் இருக்குமிடம் :

ஈரோடுமாவட்டம் 60வேலம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது. ஈரோட்டிலிருந்து 10,29 நெ பஸ் கோவிலுக்கு வந்தடைகிறது.

கோவிலில் உள்ள மூர்த்திகள்:

ஸ்ரீ செல்வக்குமாரசாமி, ஸ்ரீவள்ளி,தெய்வானை, ஸ்ரீ குப்பண்ணசாமி, ஸ்ரீகருப்பராயர் ஸ்ரீ செல்வக்குமாரசாமித் தம்பிரான் கண்ட
சுயம்பு மூர்த்தி தீர்த்தம் :
கோவில் அக்னி பாகத்தில் உள்ள சர்வரோக நிவாரண தீர்த்தம்

திருவிழா :

ஆண்டு தோறும் மார்கழிப்பெளர்ணமி உள்ளிட்ட பத்து நாட்கள் திருவிழா நடைபெறும்.

வாரபூஜை:

ஞாயிறு தோறும். வந்து தரிசனம் செய்து இறையருள் பெருக. நன்றி

அருள்மிகு குப்பியண்ணசாமி கோவில் ஸ்தல வரலாறு ,துக்காச்சி,அறச்சலூர். ஈரோடு மாவட்டம் ARULMIGU KUPPIYANNA SAMY TEMPLE HISTORY,TUKKATSI, ARASALUR ,ERODE DISTRICT.


குப்பியண்ணசாமி செல்வக்குமார சாமி தோன்றிய வரலாறு:



சுமார் 400ஆண்டுகளுக்கு முன்பு பூந்துறை நாட்டில் மேல் கரைப்பிரிவைச் சார்ந்த சென்னிமலை முருகனுக்கு தேரோட்டும் காணியாளர் நால்வரில் ஒருவரான எழுமாத்தூர் வோளாண் குடிமக்கள் வாழ்ந்து வருகின்ற பகுதியில் வேளாண் குடும்பத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லாமல் மனம் வருந்தி சென்னிமலை, நாகமலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை வேண்டி விரதமிருக்கையில் அம்முருகப்பெருமான் ஒர் குழந்தை வரத்தை கொடுக்க அக்குடும்பம் அக்குழந்தையை "செல்வக்குமரன்" எனப் பெயரிட்டு திருமுருகன் பெயராலேயே அழைக்பட்டது.


அக்குழந்தையை செல்வக்குமரன் குருகுலத்தில் பயிற்றுவித்து அசுவசாஷ்திரங்களும் மூலிகைகளால் நோய் தீர்க்கும் மருத்துவ முறைகளையும் கற்றுணர்ந்தார். திருமண வயது அடைந்த செல்வக்குமாரசாமிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முயற்சிக்க அதற்கு செல்வக்குமரனோ "என்னைப் பெற்றோர்களே , என்னுடம்பு எடுத்ததின் பயனே பாசங்களை விட்டொழித்து இறைவனை அடைவதற்கே ஆகும் ."


எனச்சொல்லி மக்களுக்கு தொண்டு செய்யவும் மகேஸ்வரனுக்கு (இறைவன்)தொண்டு செய்யவும் விரும்பி முருகர் இருக்கும் குன்றுகளான சிரகிரி (சென்னிமலை) நாகமலை ,கனகாசலக்குன்றுகளில் தங்கி தவம் செய்தார். தற்போது கோவில் இருக்கும் இடமான துக்காச்சி என்னும் இடத்தில் வந்தவுடன் இவ்வூரில் பல தொன்மையான மரங்கள் இருக்குமிடத்தை பார்த்தவுடன் ஓர் நுட்பமான மன மாற்றம் மனதில் ஏற்பட நாம் இறைவனை அடைய இதுவே சிறந்த இடம் எனக்கருதி குடில் அமைத்து தங்கினார்.

அவ்விடத்தின் அருகில் காராம் பசு ஒன்று தினமும் காலை மாலையில் பால் செரியும் அற்புதம் கண்டு பசு மேய்பன் , அப்பசுவின் சொந்தகாரருடன் அவ்விடம் சுத்தம் செய்ய அங்கே லிங்கம் அற்புதமாய் வீற்றிருப்பதை கண்டு வணங்கினர். செல்வக்குமர சாமி அன்றிலிருந்து அந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வரலானார்.

இவ்விடம் தற்போதும் கோவில் வளாகத்தில் உள்ளது செல்வக் குமாரரிடம் பாம்பு,தேள், செய்யான்,பூரான், போன்றவகளால் கடிபட்டு வைத்தியம் பார்க்க நிறைய மக்கள் வர வேம்பாலும்,திருநீராலும் போக்கி வந்தார்.

அவரை மக்கள் தம்பிரான் செல்வக்குமார பூசாரியார் என அழைக்க அவரோ தம்மை வணங்குவதைக் காட்டிலும் இறைவனை வணங்குவதே சிறப்பு எனச்சொல்லி சுயம்பு மூர்த்திக்கு அருகில் யந்ரஸ்தாபனம் செய்து முத்தலைச் சூலமொன்றை நிறுவினார் அதுவும் தற்போது உள்ளது.

தாம் நிறுவிய மூர்த்திக்கு " செல்வ முத்துக்குமாரசாமி" எனப்பெயரிட்டு தானும் தம்மை நாடி வருபவர்களையும் வழிபடச்செய்தார். மறுபடியும் பெற்றோர்கள் அழைக்க செல்ல மறுத்து காவியுடை தரித்து தம்பிரான் சுவாமிகள் சிவனடியார் கோலத்தில் துறவியாக வாழ்ந்தார் பெற்றோர்கள் இறந்த பின் பல்லாண்டுகள் கழிந்தன , அவரால் நிறுவப்பட்ட ஆலயம் தான் இன்றும் தம்பிரான் கோவில், செல்வக்குமாரர் கோவில்,வினை தீர்த்தான் மடம் என பலவாறு அழைக்கப்படுகிறது.

இவவிடுகையின் தொடர்ச்சி "குப்பண்ணசாமி வருகை " எனும் இடுகையில் காணவும்.

ஆன்மீகத்தை அறிய வந்த உங்களுக்கு எம் சிவனருள் பெறுக. நன்றி.

Thursday, December 23, 2010

அருள்மிகு மலைமாதேஸ்வர மலையின் சிறப்புகள்


"கன்னட நாட்டின் காவிரிக் கரையின், பொன்னாச்சி மலைச்சாரலிலே, உயர்ந்ததாய நடுமலை யொன்றதை யென்னென நான் சொல்வேன் "..... குரு சித்த கவி .
நூல் "மாதேஸ்வர சாங்கத்யம்" (கி.பி 1750).....


அருள்மிகு மாதேஸ்வரர்(MATHESWARAR) பற்றி பல சிவனடியார்களும், சித்தர் களும் பாடியிருக்க அவர்களில் ஒருவர் தான் குரு சித்தகவி இவர் மாதேஸ்வர மலைய(MATHESWARAN MALAI) வியந்து பாடியவர்.

மேலும் மாதேஸ்வர மலையின்(matheswaran malai hills) புகழை " காசி(kasi) கேதாரம்(KOTHARAM) ஸ்ரீசைலம்(SRI SAILAM) ராமேஸ்வரம்(RAMEASWARAM) வி ஷேச குடும்ப தீர்த்தமதில் , ஆயிரமுறை மூழ்குவதினும் பலவி , சேடமிதனைக் கேட்பவருக்கு" இதன் பொருள்: காசி.கேதாரம்,ஸ்ரீசைலம்.ராமேஸ்வரம் முதலிய இடங்களின் தீர்த்தங்களில் ஆயிரம்முறை ஸ்நானம் செய்த பலன் இதனைக்கேட்கும் பக்தர்களுக்கு கிட்டும் என்பதாகும்.


மாதேஸ்வர சுவாமி கோவில் பிரசாதங்கள் உங்களுக்கு வேண்டுமா?

நிர்வாக அதிகாரி, ஸ்ரீமலை மாதேஸ்வரசுவாமி தேவஸ்தானம்,மாதேஸ்வரன் மலை- 571490 கொள்ளேகாலம் தாலுக்கா முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள். நன்றி . உபசெய்தி: இக்கோவில் பற்றி மட்டும் அதிக இடுகைகள் எழுதக் காரணம் இக் கோவில் வேண்டுதலால் நான் பிறந்ததாக எனது தந்தையார் கூறுவார் .எனது பெயரையும் சுவாமியின் பெயரே வைத்து விட்டதால் ஒர் ஈர்ப்பு .

எம் கருத்துகள்: மேலான சிவத்தலங்களுள் இதுவும் ஒன்று. நமக்கருகில் இருக்கும் ஓர் அற்புத பார்க்க வேண்டிய ஸ்தலம். இறைவழிபாடும் இயற்கையும்,அமைதியும் ஒருங்கே அமைந்துள்ள நம் வாழ் நாளில் பார்க்க வேண்டிய ஸ்தலம். கண்டிப்பாக பக்தியுடன் வாருங்கள்.

ஸ்ரீமாதேஸ்வரர் அருள் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்தும் .

அடியேன் குரு.பழ.மாதேசு .
உங்கள் கருத்துரகள் எதிர்பார்க்கும் ஆருயிர் நட்பு.

சிவ சிவ

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை







நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனது பிறந்த நாளை கொண்டாட எங்கே செல்லலாம் என யோசித்த போது ஏற்கனவே பல முறை சென்றிருந்த்தாலும் நினைத்தாலே உற்சாகம் தரும் மாதேஸ்வர மலை (matheswaran temple) சென்று வரலாம் என முடிவு செய்து இருவரும் எங்கள் கிராமத்திலிருந்து பயணித்தால் 70கி.மீட்டர் தொலைவில் இருக்கும் மலை மாதேஸ்வர மலைக்கு (matheswaran hills) கிளம்பினோம்.

25 கி.மீட்டர் பயணித்து கொளத்தூர் வந்தடைந்து பயணத்தை தொடர்ந்தோம். அங்கிருத்து 2வது கி.மீட்டரில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு தான் சின்னத்தண்டா (chinna than;da) எனும் ஊர்க்கு செல்ல பிரிவு உள்ளது. அங்கு நம் வாகனத்திற்கு தேவையான பெட்ரோல் நிரப்பிக் கொண்டு கிளம்பினொம்.

சேலம்(SALEM) மேட்டூர் (METTUR)கொளத்தூர்(KOLATHUR) வழியாக மாதேஸ்வர மலைக்கு வாகனத்தில் வருகிற பக்தர்கள் இவ்விடத்தில் தங்கள் வாகனத்திற்கு தேவையான எரிபொருளை நிரப்பிக் கொள்வது சிறப்பு . அடுத்த 40கி.மீட்டருக்கு அதாவது மாதேஷ்வர மலை வரை பெட்ரோல் பங்க் கிடையாது. அங்கிருத்து கருங்கல்லூர்(KARUNKALLUR) ,வெடிக்காரனூர்,(VEDIKARANUR) காவேரிபுரம் (KAVERI PURAM),என கிராமங்களின் அழகு நம்மை வரவேற்கின்றன.

நாங்கள் செல்கிற இவ்வழி மேட்டூரில் இருந்து மாதேஷ்வர மலை செல்கிற வழிதான் என்பதை அறியவும். நாம் செல்கிற வலது புறம் காவிரியின் தொடர்ச்சியாக சென்று மேட்டூர் அணைக்கு செல்கிறது.காவேரிபுரம் தாண்டிச்சென்றால் வலதுபுறம் கோட்டையூர் (KOTTAYUR)பரிசல் துறை 5கி.மீட்டர் சென்றால் காவிரியில் பரிசலில் பயணம் செய்து வரலாம். செல்லும் வழிகள் எல்லாம் வாழைத்தோட்டங்களும் மிளகாய் தோட்டங்களும் நம்மை கடந்து செல்ல கொளத்தூர் மிளகாய்க்கு பெயர் பெற்றது.

அடுத்ததாக நாம் வந்தடந்தது கோவிந்தப்பாடி மேட்டூரில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் இங்கு சற்றே 5 நிமிடமாவது இளைப்பாறி செல்வது வழக்கம். நாமும் சற்றே இளைப்பாறியவாறு நம் பயணத்திற்கு தேவையான முருக்கு .பண்,(குரங்களுக்கு உணவாக கொடுக்க ) குடிநீர் ஆகியவை வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனப்பயணத்தை தொடர்ந்தோம். அடுத்து நாம் மலைப்பாதையில் பயணிக்க வேண்டியதாகிவிட்டது.

இடையில் காவிரியின் சிற்றோடகள்கள் அழகாய் குறுக்கிட பயணித்தால் சில கி.மீட்டர் தூரத்தில் பாலாறு சோதனைச்சாவடி வருகிறது.அங்கு புகைப்படம் எடுக்கும் அளவு காவிரியின் குறுக்கே பெரிய பாலமும் அழகிய பாலாறு நம்ம வியக்கவைக்கிறது. இவ்விடத்தில் இருந்து கர்நாடக எல்லைப்பகுதிக்கு நாம் வந்து விடுவதால் சோதனை சாவடியில் நம் வாகனத்தை தணிக்கை செய்து அனுப்புகிறார்கள் .


அடுத்து எங்கள் பயணம் தொடர்ந்தது . சற்று தூரத்திலியே வலது புரம் ஒகேனக்கல் 29 கி.மி,ஆலம்பாடி 34 கி.மீ கோபிநத்தம் 16 கி.மீட்டர் என பிரிகிறது. இவ்வழியே ஒகேனக்கல் செல்லலாம். ஆனால் முக்கிய நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடியாது என அங்கிருந்த பெரியவர் சொல்ல நேராக நம் பயணித்தை தொடர்ந்தோம்.

ஆங்காங்கே இலந்தை மரங்கள் ,குரங்கள் பசியால் ரோட்டின் ஒரங்களில் மக்கள் வரவுக்காக நாங்கள் வாங்கிச் சென்ற பண், பொரிகளை உணவாக கொடுத்து விட்டு கிளம்பினோம். அடர்ந்த மலைப்பகுதியில் ஆட்கள் நடமாட்டமில்லாத அமைதி 18 குறுகிய கொண்டை ஊசி வளைவுகள் தாண்டி செல்ல வேண்டி இருப்பதால் கார். இரு சக்கர வாகனத்தில் கவனமாக செல்வது சிறப்பு.

அங்காங்கே மலைப் பசுக்கள் ,குரங்குகள் இவைகளை தான் காண முடிந்தது. வெயில் காலங்களில் யானைகள்,மான்களை பார்க்கலாம். கடைசியாக நாம் மலை உச்சிக்கு சென்றது போல் ஒரு பிரமிப்பு. அதே அளவில் பக்கத்தில் அழகான மலைகள்,அதன் மேல் மலைவாழ் மக்களின் குடியிருப்பு என தொடர்ந்த நம்பயணத்தை மற்றொரு சோதனைச்சாவடியில் நிறுத்தி வாகனத்திற்கேற்றவாறு வாகனக்கட்டணம் செலுத்தி அனுப்ப நாம் வந்தைடைந்தது மலை மாதேஸ்வர மலையின் முகப்பை அடைந்தோம்.

அட! இங்கு இருந்து பார்த்தால் சுற்றிலும் அழகான மலை நடுவில் மாதேஸ்வரர் திருக்கோவில் பிரமாண்டமாக அமைந்து நம்மை ஆச்சரியப்பட வைத்தது.

கோவில் முன்பாக நெய் தீபம் என குச்சியால் சுற்றி வித்தியாசமாய் விற்கிறார்கள். பூக்கள் சிறுமிகள் ஒடி வந்து விற்கிறார்கள். விலை குறைவே. சற்றே நடந்தால் நம் காலணிகளை பாதுகாக்க விட்டு திருக்கோவில் புத்தக நிலையம், குழந்தை வரம் வேண்டி தொட்டிகள், ஆகியவற்றை ரசித்து போனால் சிவப்பு கலர் உடையணிந்து நம்மூரில் மயிலிரகால் ஆசிர்வாதம் கொடுத்து காசு கேட்கிறார்களே அதைப்போல ஆசிர்வதிக்கிறார். விருப்பமிருந்தால் காசு கொடுக்கலாம்.

சற்று தூரத்தில் அங்கப்பிரதட்சனம் செய்து கடவுளை வழிபடுகிறார்கள். சற்று தூரத்தில் ஸ்ரீ மகா கணபதி சன்னதியை வணங்கி விட்டு அருகில் வாழைப்பழங்கள்,தேங்காய்,பூக்கள் அபிஷேகப்பொருட்கள் கடைகளில் வாங்கி கொண்டு மிகப் பெரிதான கோமாதாவை (நந்தி) வணங்க படிக்கட்டில் ஏறி தரிசனம் செய்து விட்டு கோமாதவிற்க்கு நேர்த்திக் கடனாய் நெய்,பால்., தானியங்கள் கொண்டு வந்து தந்து பூஜிக்கிறார்கள். இந்த நந்தியை சுற்றிலும் பணம்,காசுகளை ஒட்டி அழகு பார்க்கின்றனர்.

கோமாதாவின் தரிசனம் முடித்து கோவிலுக்குள் கிளம்பினோம்.உள்ளே கோவில் அறங்காவலர் குழுவால் பக்தர்கள் பாதுகாப்பாகவும் வரிசையாகவும் செல்ல கம்பித்தடுப்புகள் அமைத்து அருமையாக செய்திருக்கிறார்கள்.தேங்காய், பழங்கள் மாற்றி உள்ளே சென்றால் மலை மாதேஸ்வரர் தரிசனம் நிம்மதி தரிசனம் கிடைக்கிறது. சிவ தரிசனம் செய்ய வில்வம் கொண்டு செல்வது சிறப்பு. கூட்டமில்லாத நாட்களில் சென்றால் நன்றாக தரிசனம் செய்து வரலாம். திருநீரும் வில்வமும் மாதேஸ்வரர் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

முதல் கால பூஜை காலை 6.00 மணிமுதல் 8.00 மணிவரை இரண்டாம் கால பூஜை காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை, மூன்றாம் கால பூஜை மாலை 6.45 மணி முதல் இரவு 8.30 மணி வரை. ஆயினும் பக்தர்களின் தரிசனத்திற்காக கோவில் காலை 5.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

மேட்டூர் வழியாக வரும் பக்தர்கள் இரவு நேரத்தில் பயணம் வன விலங்குகளால் ஆபத்து என அறிக. இரவு கோவில் தங்க தங்குமிட ஏற்பாடுகள் ,மற்றும் லாட்ஜ் வசதிகள் உள்ளன. இங்கே மதிய உணவு பக்தர்களுக்காக விஷேசமாக தயாரிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

அருள் மிகு மாதேஸ்வரர் தரிசனம் செய்து விட்டு எழுதுங்கள் .
நன்றி

Tuesday, December 21, 2010

ஆலய தரிசனம்: ஸ்ரீ மலை மாதேஸ்வர ஸ்வாமி திருக்கோவில் (sri malai matheswara swamy temple)



திருக்கோவில் பெயர்:

ஸ்ரீ மலை மாதேஸ்வர ஸ்வாமி திருக்கோவில்,


மாதேஸ்வர மலை, கொள்ளேகால் வட்டம், சாம்ராஜ் நகர் மாவட்டம், கர்நாடக மாநிலம்.


sri malai matheswara swamy temple,matheswara malai. kolleagal taluk,samraj nagar district, karnataka state.

எப்படி செல்வது:

சேலத்திலிருந்து 100 கி.மீ தொலைவிலும் மேட்டூரில் இருந்து 50கி.மீ தொலைவிலும் ,கர்நாடக மாநிலத்தின் தெற்கே உள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகளின் நடுவே கொள்ளேகாலத்திலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் இயற்கை எழில் பொங்கும் நடு மலையில் மாதேஷ்வரமலை உள்ளது.

இறைவன் (மூலவர் ):
மாதேஸ்வரர் சிவயோக சமாதியாக வீற்றிருந்த ஸ்தலமாகவும் ,அருள்மிகு மாதேஸ்வரர் சிவயோக சமாதி நிலையில் இருந்து மக்களுக்கு அருள் புரிவதாக ஐதீகம்.

விசேஷ நாட்கள் :

மஹா சிவராத்திரி,தீபாவளி, யுகாதி,கார்த்திகை சோம வாரங்கள்,அம்மாவசை,பௌர்ணமி, பிரதோஷம், மற்ற எல்லா விஷேச நாட்களும்,

இங்கு வழிபடவேண்டிய ஆலயங்கள்:

மஹா கணபதி ஆலயம், .ஸ்ரீ வீரபக்ரேஷ்வர் சன்னதி, மாதேஷ்வர் மூலஸ்தானம், நந்தீஷ்வரர் கோமாதவாக பெரியசிலை,

பார்க்க வேண்டிய ரதங்கள்:

தங்க ரதம்,ருதராக்ஷி மண்டப ரதம்,வெள்ளிப்புலி வாகனம்,வெள்ளிப்பசு வாகனம், வாகன உற்சவம் செய்ய விரும்பும் பக்கதர்களுக்கு 100 ரூபாய் மட்டும் டிக்கட்டாக செலுத்தி ஏதேனும் வாகனத்தை வடம் பிடிக்கலாம்.

அன்னதானம் :

மதிய உணவாக திருக்கோவில் நிர்வாகத்தால் சிறப்பாக உணவு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

கார் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கவனிக்க வேண்டியவை :

பாலாறில் இருந்து 18 கி.மீ பயணிப்பது கவனம் தேவை. மிக குறுகிய வளைவு. அடர்ந்த காட்டிப்பகுதி மெதுவாக செல்வது நல்லது.

மாதேஷ்வர மலைக்கு செல்வதால் நமக்கு கிடைப்பது :

1. சிவாலய தரிசனம் 2. காவிரியின் பாலற்று அழகு, 3. இயற்கை அழகு 4. உயர்ந்த மலைகள் 5. மன அமைதி.

பஸ் வசதி :

சேலத்தில் இருந்து தமிழக அரசு பஸ்களும், மேட்டூரில் இருந்து கர்நாடக மற்றும் தமிழக அரசு பஸ்கள் உள்ளன. தங்குமிடம் வசதிகள் உண்டு. ஒரு முறை சென்று தரிசித்து விட்டு எழுதுங்கள்.


மேலும் விபரங்களை பயணக்கட்டுரையில் நான் பார்த்த இடங்கள் ரசித்தவைகள் மற்றும் படங்கள் இடம்பெறும். நன்றி

Wednesday, December 15, 2010

அன்புள்ள உங்களுக்கு

எனது வலைப்பூவை காண வந்த உங்களுக்கு வணக்கம்.எனது கவிதைகள் தலைப்பில் உள்ள படைப்புகள் அனைத்தும் 2000 முதல் 2002 வரை எனது படைப்பாக.,துணுக்காக வெளிவந்து பரிசு சில பத்திரிக்கைகள் வார இதழ்களில் பரிசு பெற்றவை.ஆகவே இவைகளை மறுபதிப்பு செய்து வெளியிட்ட வேண்டாமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வழைப்பூ உங்கள் அன்றாட விரைவு வண்டியாய் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வில் இருந்து சற்றே விலக்கி சின்ன சின்ன சந்தோஷங்களையும் ,ஆன்மீகத்தளங்களை பற்றி அறியவும் உதவினால் மிகவும் மகிழ்வுறுவேன். தங்கள் மேலான கருத்துரைகளை எனக்கு அனுப்புங்கள். நன்றி

Monday, December 6, 2010

உங்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையவேண்டுமா?


மனித வாழ்வில் எவ்வளவு நாள் சந்தோஷமாக போகின்றது ?
எவ்வளவு நாள் மன வருத்ததுடன் உள்ளோம்
என பார்த்தால் பல நாட்கள் கஷ்டமாகவும்;
சில நாட்கள் மட்டும் சந்தோஷமாக போகின்றது.
அப்போது ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக செல்ல
என்ன வழி என தேடிய போது அருணகிரி நாதர் இயற்றிய


" நாள்என் செய்யும் வினைதான் என்செயும்
எனை நாடி வந்த கோள் என்செயும் கொடுங்கூற்று என்செயும்,
குமரேசர் இருதாளும் சிலம்பும்
சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும்
கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே."

என்கிற இப்பாடல் முருகப்பெருமான், முருகன்,சுப்பிரமணியர்,மயில் வாகனன், ஆறுமுகத்தோன் ,வள்ளிமணாளன் என்றெல்லாம் அழைக்கப்படுகின்
இறைவன் முருகருக்காக அருணகிரி நாதர் இயற்றிய இப் பதிகத்தை நாள் உடற்சுத்தம் செய்து ஒரு நினைப்போடு முருகப்பொருமானை நினைத்து
இப்பாடலை பாட , ( நம்பிக்கையடன் படிக்க )
உங்களின் இன்றைய நாள் நல்ல நாளாகவும் மகிழ்ச்கியாகவும்
துன்பம் இல்லாமலும் செல்வது கண்கூடு .இப்பாடலை பாராயணம் செய்த உங்களுக்கு
எல்லாம் வல்ல திருமுருகப்பெருமான் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.
உங்கள் அனுபவங்களை எனக்கு எழுதுங்கள், நன்றி.

Wednesday, December 1, 2010

திருவண்ணாமலையில் அஷ்டலிங்க தரிசனமும் ஜோதிடதில் நம் ராசிக்கு வழிபடவேண்டிய லிங்கங்கள்


திருவண்ணாமலை கிரி வலத்தில் காணப்படும் அஷ்டலிங்கங்களை தரிசித்தால் ஏற்படும் நன்மைகள் :

1 இந்திரலிங்கம் :


 (கிழக்கு) திருவண்ணாமலை ராஜகோபுரத்திலிருந்து கிழக்கே கிரிவலம் செல்லும்பாதையில் அமைந்த முதல் லிங்கம் கிழக்குத்திசையில் அமைந்த லிங்கம் .
 கிரக அதிபதி :
சூரியன் ,சுக்கிரன் வழிபாட்டின் பலன் : லட்சுமிகடாட்சம் நீண்ட ஆயுள் ,புகழ் ,செல்வம் கிட்டுமென்பது இறைஐதீகம்

 2 அக்னி லிங்கம் : 


(தென்கிழக்கு )கிரிவலப்பாதையில் செங்கம் ரோட்டில் தாமரை குளத்திற்கு அருகேயுள்ளது. கிரிவலப்பாதையின் வலப்பக்கத்தில் அமைந்த சிறப்பு பெற்ற லிங்கம் தென்கிழக்கு திசை கிரக அதிபதி :சந்திரன் வழிபாட்டு பலன் :நோய் ,பிணி,பயம் ,எதிரிகள் ஆகிய தொல்லைகள் விலகும்.

 3. எமலிங்கம் (தெற்கு )


 ராஜகோபுரத்தில் இருந்து சுற்றி வருகையில் தரிசிக்கும் 3 வது லிங்கமாகும் . சிம்ம தீர்த்தம் அருகே அமைந்துள்ளது. கிரக அதிபதி :செவ்வாய் பலன் : ரத்த சம்பந்த நோய்கள் தீரும் ,இடம் பூமிப்பிரச்சினைகள் தீரும் .பொருளாதார உயர்வு ஏற்படும் .

4 நிருதிலிங்கம் (தென்மேற்கு) : 


இவ்கு வழிபட்டு மலையை பார்த்தால் நந்தீஷ்வரர் தலையை உயர்த்தி பார்ப்பது போல தெரியும்.சனி தீர்த்தம் அருகேயுள்ளது . திசை அதிபதி: ராகு.வழிபாட்டுப்பலன் :
சுக வாழ்வு ,குழந்தைப்பேறு

 5.வருணலிங்கம் (மேற்கு )


 வருணதீர்த்தம் அருகே அமைந்துள்ளது. 8வது கிலோமீட்டரில் அமைந்த லிங்கம் மேற்கு திசாஅதிபதி :சனி வழிபாட்டு பலன் : நீண்ட ஆயுள் ,புகழ் 6. வாயுலிங்கம் (வடமேற்கு ) திசா அதிபதி :கேது வழிபாட்டுபலன் : பொறுமை ,அமைதி,

7 குபேரலிங்கம் (வடக்கு): 


திசா அதிபதி :குரு பலன் :தரித்திரம் நீங்கி பொருளாதாரம் உயரும்

8.ஈசான்ய லிங்கம் (வடகிழக்கு ) : 


எல்லா நிலைகளும் கடந்து ஈசனை தேடுமிடம் திசா அதிபதி :புதன் இறை நிலை அடைய வழிகாட்டுமிடம் எட்டு லிங்கமும் முக்கிய மானவையே . ஏதேனும் பெளர்ணமி இரவில் தரிசனம் செய்து விட்டு எழுதுங்கள்
கீழ் கண்ட ராசிகாரகள் வழிபடுவதன் மூலம் மேன்மை பெறலாம்


மேசம் - நிருதிலிங்கம்

ரிஷபம் -இந்திர லிங்கம்

மிதுனம்-ஈசான்ய லிங்கம்

கடகம் - வாயு லிங்கம்

சிம்மம் -அக்கினி லிங்கம்

கன்னி- ஈசான்ய லிங்கம்

துலாம் -இந்திர லிங்கம்

விருச்சிகம்-எமலிங்கம்

தனுசு -குபேர லிங்கம்

மகரம் -வருண லிங்கம்

கும்பம்-வருண லிங்கம்

மீனம் -குபேர லிங்கம்

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...