Thursday, October 13, 2011
பூலோகம் வந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (ஆன்மீகக் கதை )
ஒரு நாள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகம் வந்து மானிடர்களை பார்த்து விட்டு செல்லலாம் என எண்ணி நகர்வீதி உலா வந்தாராம்,
சாதாரண மனிதர் உருவில் வந்த ஸ்ரீ கிருஷ்ணரை அடையாளம் கண்டு கொண்ட பக்தர் ஒருவர் அப்பனே ! "பூலோகத்தில் வந்த உங்களை சந்தித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி "! என்றார் . அதற்கு பரவாயில்லை சாதாரண மனித உருவில் வந்தாலும் கண்டு கொண்டாய், சரி நான் பூலோகத்தில் சில மனிதர்களை சந்திக்க வேண்டி உள்ளது . என்னுடன் வாருங்கள் என அழைத்துச் சென்றார் .
பக்கதரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழைப்புக்காக உடன் சென்றார் . சிறிது தூரம் சென்றதும் " பக்தா, எனக்கு தண்ணீர் தாகமாக உள்ளது. இந்த செல்வந்தர் வீட்டில் தண்ணீர் வாங்கி வா என கட்டளையிட்டார் . பக்தரும் மறுப்பேதும் சொல்லாமல் அந்த செல்வந்தர் வீட்டு கதவை தட்டினார் .
வெளியே வந்த செல்வந்தரிடம் பக்தன் "பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வந்திருக்கிறார் உங்கள் வீட்டில் ஒரு சொம்பில் தண்ணீர் வாங்கி வரச்சொன்னார் எனச்சொல்ல அந்த செல்வந்தரோ " யாராக இருந்தாலும் தண்ணீர் தர முடியாது. அப்படி கொடுத்தால் எங்கள் வீட்டில் செல்வம் தங்காது . தண்ணீர் இல்லை என்று சொல்லி விடு என திருப்பி அனுப்பினார் .
பக்தன் ஏமாற்றத்தோடு திரும்பி வந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தண்ணீர் தர முடியாது என அலட்சியமாக சொல்லி விட்டார் எனச் சொல்ல பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சிரித்தாவாறு " இந்த செல்வந்தனுக்கு மேலும் பொன்னும் பொருளும் வந்து சேரட்டும் எனச் சொல்லி விட்டு, ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் நடக்க ஆரம்பித்தார் . பக்தரும் குழம்பியவாறு அவர் பின்னே நடக்கலானார் .
அடுத்து அவர்கள் சென்றது ஓர் தனிக்குடிசை வீடு . அங்கு வறுமைகுடி கொண்டிருந்தது. அங்கு குழந்தைகள்,கணவர் ,தாய், தந்தையர் இல்லாமல் அனாதையாக ஒர் வயதான பெண்மணி மட்டும் வசித்து வந்தார் .ஒரே வயதான மாடு வளர்த்து பால் விற்று அந்த பணத்தில் தம் சுய தேவைகளை பூர்த்தி செய்து வந்தார். ஆனால் ஸ்ரீகிருஷ்ணர் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர்.
அந்த பெண்மணி வீட்டின் முன்பு நின்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் "இந்த வயதான பெண்மணி வீட்டில் தண்ணீர் வாங்கி வா என பக்தரிடம் சொல்ல " சரி என்றவாறு வயதான பெண்மணியிடம் சென்ற பக்தர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உங்கள் வீட்டின் முன்பு வந்து நிற்கின்றார் . தண்ணீர் தாகமாக உள்ளதாம் , தண்ணீர் கொடுங்கள் என்றதும் .
அந்த வயதான பெண்மணி "நான் அனு தினமும் தொழும் எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணரே வந்து இருக்கிறாரா ? என மிக்க மகிழ்ச்சியுடன் ஒர் பாத்திரத்தை சுத்தம் செய்து அதில் சுத்தமான நீர் கொண்டு சென்று ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து வணங்கி நின்றார் . தண்ணீர் பருகியவுடன் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்த பிரமிப்பில் நிற்க பகவான் சிரித்தவாறு போய் வருகிறேன் எனச் சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தார் .
கொஞ்சம் தூரம் நடந்து சென்றதும் அந்த வயதான பெண்மணி வைத்திருந்த மாட்டை பார்த்து ஸ்ரீ கிருஷ்ணர் " இந்த பசுமாடு இறந்து போகட்டும் " எனச்சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் . ஸ்ரீ கிருஷ்ணருடன் வந்த பக்தனுக்கோ குழம்பிய வாறு கிருஷ்ணரிடம் ஓர் கேள்வி கேட்டான் " பகவானே நான் குழப்பமாக உள்ளேன் .
முதலில் ஓர் செல்வந்தர் வீட்டிற்கு சென்றோம் . அவர் தண்ணீர் இல்லை என்றார் . அவருக்கு மேலும் செல்வம் சேரட்டும் என்றீர்கள் , இரண்டாவதாக ஒர் வயதான பெண்மணி தண்ணீர் தந்து தாகம் தீர்க்க உதவினார் . அவருக்கு மாடு செத்துப்போகட்டும் என்கிறீர்கள் . கஷ்டப்படுகிறவர்களுக்கு சாபமும் , செல்வச் செழிப்போடு இருப்பவனுக்கு வரமும் தந்துள்ளீர்களே ? இதுதான் இறைவன் தீர்ப்பா? என கேட்க
பகவான் கிருஷ்ணர் சொன்னார்
(இனி உள்ள வரிகள் முக்கிய மானவை கவனமாக படியுங்கள் )
" பக்தா உனக்கு புரியம்படி சொல்கிறேன் கேள் என்றவாறு " எவன் ஒருவன் அளவுக்கதிகமாக பொன்னையும் பொருளையும் தேடி அலைகிறானோ அவன் நிம்மதியை இழக்கிறான் . அதனால்தான் அவனுக்கு மேலும் பொன்னும் பொருளும் சேரட்டும் என சாபமிட்டேன் . அதை நீ வரமென நினைத்துக்கொண்டாய் !
இரண்டாவதாக அனாதையாக இருந்த வயதான பெண்மணி என்னுடைய தீவிர பக்தை . அவளுக்கு இந்த பூலோகத்தில் இருக்கும் ஒரே பிடிப்பு இந்த வயதான பசு மாடுதான் . அதுவும் இறந்து விட்டாள் . இந்த பெண்மணியும் இறந்துவிடுவாள் . அவளுக்கு மேலோகத்தில் என்னை அனு தினமும் வழிபாடு செய்ததற்காவும் ,நல்ல உள்ளத்திற்காகவும் சொர்க்கத்தை தயார் செய்து வைத்திருக்கிறேன் . அவள் மேலோகத்தில் சந்தோஷமாய் காத்துக்கொள்வேன் என்றவாறு கூறி நான் வந்த வேளை முடிந்தது. சென்று வருகிறேன் எனச்சொல்லி அந்த பக்தனை ஆசிர்வதித்து மாயமாய் மறைந்து போனார் .
பக்தனும் பல வாழ்வியல் சூட்சமங்களை அறிந்தவனாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சென்ற திசையை நோக்கி கை கூப்பி தொழுதார் .
( இந்த ஆன்மீகக்கதை என் நன்பர் வெற்றி வேலின் தாத்தா சொன்னது ,
பிடிச்சிருந்தா .,குற்றம் குறை இருந்தா கருத்துரையிடலாம்)
நட்புடன் குரு.பழ.மாதேசு
Subscribe to:
Post Comments (Atom)
பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை
நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...
-
மனித வாழ்வில் எத்தனோயோ வரங்கள் கிடைக்கப்பெற்றாலும் குழந்தை வரம் முக்கியமானது. அதுவே நம் அடுத்த தலைமுறையின் சொத்தாகும் . குழந்தையில்லா பெண...
-
பாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில் palamalai sri sidheswara temple; kolathur, ...
No comments:
Post a Comment