Monday, April 8, 2013

"சிவ" லிங்கமாகிய இறைவனின் வகைகள்

                          Type of sivalingam's

சிவபெருமான் சைவ உலகின் நின்று உலகின் படைத்தல் ,காத்தல் , அழித்தல்
என்கிற முத்தொழிலையும் கொண்டு சைவர்களால் விரும்பி இறைஞ்சி வேண்டுகிறவர். சிவன் எங்கும் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார் . சிவ லிங்கத்தில்  இரண்டு வகையுண்டு.

 அது பரார்த்த லிங்கம் மற்றும் இட்டலிங்கமாகும் .
பரார்த்த லிங்கத்தில் ஐந்து வகையுண்டு . அவைகள் பின் வருமாறு
குறிப்பிடப்படுகிறது.

 சுயம்பு லிங்கம் ( இருக்கும் நிலை ) : தாமாக

தோன்றிய திருவுருவங்களே சுயம்பு லிங்கங்கள் என அழைக்கப்படுகிறது.
சுயம்பாக தோன்றுகிற லிங்கத்தை சுயம்பு லிங்கமென சிவனடியார்களால் தேடி விரும்பி வணங்கப்படுகிறது.

 பல ஸ்தல புராணங்கள் காராம் பசு குறிப்பிட்ட இடத்தில் பால் செரிய அங்கே தோண்டினால் சுயம்பு லிங்கம் இருக்கும் .அதுபோல லிங்கம் சுயமாக தோன்றி மக்களால் கண்டு வணங்கப்படுகிறது . சுயம்பு லிங்கங்கள் விசேசமானதாகும்


 கணலிங்கம் :


 சிவகணங்களான ஸ்ரீவிநாயகர் ,ஸ்ரீ முருகர், ஆகியோரால்
பூஜிக்கப்பட்டு வணங்கப்படுகிற லிங்கங்கமாகும் .

 தெய்வீகலிங்கம் : (நடக்கும் நிலை ) 


விஷ்ணு முதலிய தேவாதி தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு
வணங்கப்பட்ட லிங்களாகும் .

 ஆரிடலிங்கம் :

அசுரர்கள் ,இருடிகள்,ராட்ஷசர்களால உருவாக்கப்பட்டு வணங்கப் பெற்ற லிங்கமாகும் 

 .

மானிடலிங்கம் : 


சித்தர்களால் ,அடியார்களால் ,இறைநிலையில் வாழ்ந்த
பெரியோர்களால் உருவாக்கம் செய்யப்பட்டு வணங்கி வந்த லிங்கம்மாகும்..

விஷேசமாக

உயர்வான லிங்கம் : 


 மானிட லிங்கத்தை விட உயர்ந்தது ஆரிடலிங்கம் ,
அதனிலும் உயர்ந்தது தெய்வீக லிங்கம் அதனினும் உயர்ந்தது கணலிங்கம்
அதனினும் உயர்ந்தது சுயம்புலிங்கமாகும் .

 இட்டலிங்கங்கள் :


 வாணலிங்கம்
.படிகலிங்கம் ,
இரத்தினலிங்கம் ,
லோக்ஜலிங்கம் ,சைல லிங்கம்
ஆகிய
ஐந்தாகும் .

 முடிவுரை :

 சிவ லிங்கமாகிய சிவபெருமானின் இந்தபதிவு என்
அளவில் சேர்த்துள்ளேன் . குறைகள் இருப்பின் ஆன்மீகப் பெரியோர்கள்
சுட்டிக்காட்டலில் திருத்தப்படும் . மற்றபடி எம் பதிவை படிக்க வந்த
உங்களுக்கு சிவனருள் கிட்ட வேண்டுகிறேன் .

 நன்றிகளாயிரம் .

 ஓம் சிவசிவ
ஓம்

Saturday, April 6, 2013

பிறந்த தமிழ் வருடத்திற்கேற்ற விருட்ச பரிகாரம்

மழை இல்லாது நாடே வாடிக்கொண்டிருக்கையில் குடிதண்ணீர்க்கான நிலத்தடி நீர்மட்டம் 1000அடிக்கு கீழே போய் கொண்டிருக்கிறது. மரம் நடுங்கள் என எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்க ,விளம்பரப்படுத்திக் கொண்டிருக்க ஒரு சிலரே மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர் .

 ஆளுக்கொரு மரம் நட்டாலே 6 கோடி மரங்கள் நடப்படும் என்பது சாத்தியமே. பலவிதமான பரிகாரங்கள் மனிதன் செய்கிறபோது உருப்படியான சமுகத்திற்கும் நமக்கும் உதவுகின்ற  பரிகாரமாக இந்த மரம் வளர்ப்பு பரிகாரத்தை செய்யலாம் .

   பிறந்த தேதி வருடம் ராசி நட்சத்திரம் தெரியாதவர்கள் ,தமிழ் வருடம் மட்டும்
தெரிந்தவர்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றமடைய தான் பிறந்த தமிழ்
வருடத்திற்குண்டான மரத்தை குறைந்த பட்சம் 3,6,11 எண்ணிக்கையில்
நடவேண்டும் .

எங்கு நடுவது :

 அதிக இடமுள்ள ஆலயங்கள் ,பொது இடங்கள் ,
பள்ளி,கல்லூரிகள் ,ஆற்றங்கரை , தர்ம ஸ்தாபனங்கள் , மலைப்பாங்கான
இடங்களில் நடலாம் .

எப்படி நடுவது : 

இரண்டரை அடி ஆழம் ஒன்றரை அடி அகலம்
கொண்ட குழி வெட்டி அதனுள் காய்ந்த தழை தாம்புகளுடன் வேர் நன்கு இறங்க மணல் செம்மண் கலந்த கலவையை இறைத்து பசுசாணம் கலவை இணைத்து மரத்தை நடவு செய்யலாம் .

நல்லது செய்ய நாள் நட்சத்திரம் பார்க்க தேவையில்லை என்பது நம் தாழ்மையான கருத்து .சூரிய உதயமாகி அஸ்தமனத்திற்குள் நடவேண்டும் .
நவதானியங்களை ஊற வைத்து அந்த நீரினை நட்ட மரக்கன்றுக்கு விட்டு
நவதானியத்தை பசு மாட்டிற்கு தீனியாக்கவும் .

 இனி பிறந்த தமிழ்வருடங்களும் நடவேண்டிய மரங்களையும் பார்ப்போம் 


1 . பிரபவ -கருங்காலி
2.விபவ -அக்ரோட்
3. சுக்ல - அசோகமரம்
4.பிரமோ தூத -அத்தி
5.பிரஜோத்பத்தி-பேய் அத்தி
6. ஆங்கிரச-அரசு
7.ஸ்ரீமுக- அரைநெல்லி
8. பவ-அல்யாத்தி
9.யுவ-அழிஞ்சில்
10. தாது -ஆச்சாமரம்
11.ஈஸ்வர-ஆலமரம்
12. வெகுதான்ய-இலந்தை
13.பிரமாதி -தாளை பனைமரம்
14.விக்ரம - இலுப்பை
15.விஷு-ருத்ராட்ஷம்
16.சித்ரபானு-எட்டி
17.ஷ்வபானு-ஓதியம்
18.தாரண-கடுக்காய்
19.பார்த்திவ-கருங்காலி
20.விய-கருவேலம்
21.சர்வஜித்-பரம்பை
22. சர்வதாரி - குல்மோஹர்
23. விரோதி - கூந்தல் பனை
24.விக்ருதி- சரக்கொன்றை
25.சுர-வாகை
26. நந்தன -செண்பகம்
27.விஜய -சந்தனம்
28.ஜய-சிறுநாகப்பூ
29.மன்மத- தூங்கு மூஞ்சி
30.துர்மிகி - நஞ்சுண்டா
31.ஏவிம்பி-நந்தியாவட்டம்
32.விளம்பி-நாகலிங்கம்
33.விகாரி -நாவல்
34.சார்வரி-நுணா
35. பிலவ-நெல்லி
36. சுபகிருது-பலா
37. சோபகிருது -பவழமல்லி
38.குரோதி-புங்கம்
39. விசுவாசக- புத்திரசீவிமரம்
40. பராபவ-புரசு
41. பிலவங்க -புளியமரம்
42. கீலக -புன்னை
43.சவுமிய- பூவரசு
44.சாதாரண -மகிழம்
45.விரோதிகிருத்- மஞ்சகடம்பை
46.பரிதாபி -மராமரம்
47.பிரமாதீச-மருது
48. ஆனந்த -மலைவேம்பு
49.ராட்சஷ - மாமரம்
50. நள-முசுக்கொட்டை
51. பிங்கள - முந்திரி
52. காளயுக்தி -கொழுக்கொட்டை மந்தாரை
53. சித்தார்த்தி - தேவதாரு
54. ரவுத்ரி -பனைமரம்
55. துர்மதி - ராமன்சீதா
56. துன்துபி- மஞ்சள் கொன்றை
57. ருத்ரோத்காரி - சிம்சுபா
58 .ரக்தாட்சி - ஆலசி
59. குரோதன - சிவப்பு மந்தாரை
60 .அட்சய -வெண்தேக்கு


இறைவழிபாட்டுடன் இணைந்த மரங்கள் : 


 பஞ்சசமிதிகள் :

1.ஆலமரம் 
2.அரசமரம்
3.அத்தி மரம்
4. மாமரம்
 5. வன்னி மரம்

 ஆகிய மரங்களின் சுள்ளிகள்
பஞ்சசமிதை என அழைக்கப்படுகிறது.

 பஞ்சவடி :


1.ஆலமரம்
2. அரசமரம்
3.மாமரம்
4. நெல்லிமரம்
5.வில்வமரம்
ஆகிய ஐந்து மரங்களும் கூடியுள்ள
இடத்திற்கு பஞ்சவடி என்று பொருள்படும் .

பஞ்சவில்வங்கள் : 


1.மாவிலங்கம்
2.விளா
3.கிளுவை
4. நொச்சி
5. வில்வம்
 இவற்றில் ஒவ்வொன்றும் மூன்றிதல்கள்
கொண்டது பூஜைக்குரியதாக புராணங்கள் உரைக்கின்றன .

 முடிவுரை :

மரங்களுக்கும் உயிர் உண்டு . அதனை நாம் வளர்த்து அதன் மூலம்
கோடிக்கணக்கான மக்கள் சுவாசிப்பதால் உண்மையான புண்ணிய பலன் மரம்
நட்டவர்க்கு கிட்டி மரம் செழிக்க உங்கள் குடும்பமும் செழிக்குமென்று
நம்புங்கள்.

மேற்கண்ட மரங்களைத்தான் நடவேண்டுமென்பதில் உங்களுக்கு
மாற்றுக்கருத்து இருக்குமெனில் ஏதேனும் ஓர் மரம் நடுங்கள் .
நடுவீர்கள்.

ஏனெனில் உங்களால் முடியாதது உலகில் யாராலும் முடியாது. 

 நன்றி

Sunday, March 31, 2013

வாழ்வில் திருப்புமுனை வேண்டுமா ?

பல்வேறு பிரச்சினைகள் பல்வேறு வாழ்க்கை முறைகள் ,,சிலருக்கு பணகஷ்டம் சிலருக்கு திருமணம் நடைபெறாத நிலை சிலருக்கு நல்ல பணி கிடைக்காமல்  கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கக்கூடிய சூழ்நிலை '''

இப்படி பல தரப்பட்ட பிரச்சனைகளில் சிக்கி புலம்பி தவித்துக்கொண்டிருப்பவர்கள் பல பேர் இதற்கெல்லாம் என்னதான் தீர்வு என யோசிக்கையில் ஆன்மீக வழியில் சரியான தீர்வு ஒன்றை எனத சுய வாழ்வுடன் இணைத்து உங்களிடம் பகிரலாம் என்ற ஆவலில் இக்கட்டுரையை பகிர்கிறேன் .

எனது 22 வது வயதில் சரியான வேலை கிடைக்காமல் வறுமையுடன் சுற்றிக்கொண்டிருந்த காலத்தில் நன்பர்களுடன் திருப்பதி சென்று ஏழுமலையானை வணங்கி , பின் அங்கிருந்து திருவண்ணாமலை வந்து திருஅண்ணாமலையாரை தரிசித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தேன் .

கடன் வாங்கி இறைவழிபாடு செய்து திரும்பி அடுத்த நாள் வீட்டில் கிளம்புகையில் பாக்கெட்டில் 1 ரூபாய் கூட இல்லாத கால கட்டம் அது. திருப்பதியும் திருவண்ணாமலையும் ஏதோச்சையாக சென்று வந்த நிகழ்வுதான் .


அப்போது இறைவழிபாடு பற்றி அவ்வளவு ஈடுபாடில்லை. திருப்பதி,திருவண்ணாமலை சென்று வந்து அடுத்த நாள்
பாக்கெட்டில் பணம் இல்லாமல் சுற்றிக்கொண்டு இருக்க ,

என்னடா ...? திருப்பதி போன திருப்பம் வரும் பணம் வரும் சொன்னாங்க ! பணம் இல்லாம ஏழுமலையான் சுத்த விட்டுடாரேனு யோசிச்சு நடந்தப்ப வழியில் 100ரூபாய் கிடந்தது .

அப்போதுதான் தோன்றியது இறைவன் கண்டிப்பாக நம்முடன் இருக்கிறார் என்று உணர்ந்தேன் . அந்த காலகட்டங்களில் எழுத்துச்சித்தர் பாலகுமாரன்
புத்தகங்களை தேடி தேடி படித்துக்கொண்டிருந்தேன் .

அவரின் குருவான ஸ்ரீ
யோகிராம் சுரத்குமாரை பற்றி எழுதும் போது அவரைப்பார்க்கவேண்டும் என்ற
எண்ணம் ஆவலாகியது. இந்த திருப்பதியில் துவங்கிய பயணம் திருவண்ணாமலையில் முடித்த இந்த பயணம் சுவாரஷ்யமானது.

திருவண்ணாமலை திருக்கோவில் வளாகத்தில்
வன்னிமர விநாயகர் சன்னதியில் சாது போல சித்தர் போல ஒருவர்
உட்கார்ந்திருக்க விநாயகரை வணங்கிவிட்டு வருகிற எல்லோரும் அவரிடம்
திருநீரு வாங்கி கொண்டு இருந்தார்கள் .

நானும் வணங்கி அவர் முன் நிற்க அவர் எதிரே என்னை உட்காரச் சொன்னார் . நானும் உட்கார சித்தர் வைத்திருந்த ஒரு பையில் திருநீரை எடுத்து என் நெற்றியில் இட்டுவிட்டார் .

கண்களை உற்றுப்பார்க்க நானும் அவர் கண்களைப்பார்த்து அமைதியானேன் . சரி செல்லுங்கள் எனக்கூற நான் வணக்கமிட்டு கிளம்பி வந்தேன் . நான் திருப்பதியும் திருவண்ணாமலையும் சென்று வந்து சரியாக 3
வருடங்களில் அரசுப்பணியில் சேர்ந்து விட்டேன் .

இது என் வாழ்வில் நிகழ்ந்த உண்மை . அதன் பின் எங்கெங்கோ சென்ற என் வாழ்க்கைப்பயணம் சிவபக்திக்காக இழுத்துச்சென்றது. இப்போது பிரதோஷ வழிபாடுகளை முடிந்தவரை தொடர்கிறேன் . அவர் இட்டு விட்ட திருநீரு 4 வருடம் கழித்துஎன்னைப்பற்றிக் கொண்டது .

 சிவவழிபாடு ,திருநீரு, தாண்டி , அடுத்து புதுப்புது ஆலயங்கள் தரிசித்து பிளாக்கில் திருக்கோவில் வரலாறை எழுதுவதுஎன என் கடுமையான பணிகளுக்கிடையில் இறைவழிபாடும் தொடர்கிறது.

 இந்த பதிவின் நோக்கமே எவ்வளவு பெரிய மோசமான ஜாதகமாக மனிதருக்கு இருப்பினும்திருப்பதி சென்று திருமலைக்கு படியேறி ஸ்ரீ ஏழுமலையானை வழிபட்டு பின்  திருவண்ணாமலை வந்து ஸ்ரீ அருணாசலேஷ்வரரை வணங்கி வீட்டுக்கு வந்து
காத்திருங்கள் .

 நல்ல வேலை,மனைவி, என உங்கள் வாழ்க்கைக்கு தேவையான
ஏதேனும் ஓர் சுபகாரியம் உடனடியாக நடைபெறும் . கண்டிப்பாக சென்று வந்துவிட்டு நல்லவைகளை பகிருங்கள் . நன்றி

Monday, March 25, 2013

திருவிண்ணகர் ஸ்ரீ ஒப்பிலியப்பன் திருக்கோவில் தரிசனம்

             sri uppuliyappan temple ,kumpakonam 


தேவுநீ எனச்சார்ந்தேன் ஒப்பிலி யப்பா தெளிமனம் , மேவுசீர்
ஒளிவிளக்கே, விண்ணகர் விளங்கி,யோங்கும்  கோவேயென்
ஆவிக்கோர் கொழுகொம்பே, வினைமா சகல
 பூவேகொண் டேத்திப் புனிதம்பெற அருள்வாய் எந்தையே


 மூலவர் :ஸ்ரீ உப்பிலியப்பன் ( பெருமாள் )

 தாயார் :  பூமாதேவி

உப்பிலியப்பன் திருக்கோவில் மற்றும் ஊர் திருநாகேஷ்வரத்தின்
தென்பகுதியில் அமைந்துள்ளது. அருகே தெற்கில் காவிரியின் கிளைநதியாகிய நட்டாறு ,கீர்த்திமான் ஆகியவை ஓடுகின்றது.

108 வைணவத்திருத்தலங்களில்  ஒன்றான ஒப்பிலியப்பன் திருக்கோவில் தஞ்சைமாவட்டம் கும்பகோணத்திலிருந்து கிழக்கே 6 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. புராணகாலத்தில் இத்திருத்தலம் திருவிண்ணகர் என அழைக்கப்படுகிறது .

திருவிண்ணகர் என்றால் மார்க்கண்டேய சேத்திரம் என அழைக்கப்படுகிறது.

 திருக்கோவில் காலம்:

1000முதல் 2000ஆண்டுகால பழைமையான திருக்கோவிலாகும் .

 ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஸ்தலம் :

நம்மாழ்வார் ,
திருமங்கையாழ்வார் .
பொய்கையாழ்வார்
பெரியாழ்வார்
ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும் .

 ஸ்தல வரலாறு :

திருமாலின் திருவுளப்படி திருமகள் துளசிவனத்தில் பெண் குழந்தையாக
தோன்றினார் . மார்க்கண்டேய முனிவர் அந்த தெய்வீக குழந்தையை எடுத்து வந்து வளர்த்துக்கொண்டு இருந்தார் .

 பூமி தேவி என்ற பெயரோடு அக்குழந்தை முனிவர் வீட்டில் வளர்ந்து திருமண வயதை எட்டியது. அப்போது மார்க்கண்டேய முனிவரும் தம் குழந்தைக்காக வரன் தேடினார் .

 ஒருநாள்  ஸ்ரீநாராயாணப்பெருமான் அந்தணர் உருவத்தில் முதியவராக தோற்றம் மாற்றி மார்க்கண்டேய முனிவர் வீட்டுக்கு சென்று பெண் கேட்டார் . முனிவர் வயதான உங்களுக்கு எம் இளம்பெண்ணை எப்படி திருமணம் செய்து வைப்பேன் என்று கலங்கி வீட்டுனுள் சென்றார் . அங்கிருந்த பூமி தேவியிடம் பெண் கேட்டு முதியவர் வந்ந விபரம் சொன்னார் .

 பூமிதேவி தாம் முதியரை திருமணம் செய்ய முடியாது என மறுத்துவிட்டார் . வீட்டின் வாயிலில் காத்திருந்த அந்தணர் ஸ்ரீ நாராயணப் பெருமான் என அறிந்திராத மார்க்கண்டேய முனிவர் தமக்கும் தம் மகளுக்கும் உங்களை திருமணம் செய்ய விருப்பமில்லே எனக்கூறினார் .


அந்தணராக வயதானவராக இருந்த பெருமாளோ " தாங்கள் பெண் தரவில்லை எனில் இங்கேயே உயிர் துறப்பேன் " எனக்கூற மார்க்கண்டேய முனிவர் அதிர்ந்து வீட்டினுள் சென்று தியானத்தில் அமர்ந்தார் .

 "நாராயணா எமக்கு ஏன் இந்த சோதனை .. ! என்னை காத்திடுங்கள் என வேண்ட மார்க்கண்டேய முனிவர் முன்னே ஸ்ரீ நாராயணப்பெருமானே எழுந்தருளி காட்சி தந்தார் . அந்தணராக முதியவராக காட்சி கொடுத்தது தாமே எனக்கூறி பூமி தேவியை எமக்கு திருமணம் செய்து தருமாறு கூறினார் .

 அவ்வாறே திருமணமும் நடைபெற்றது . மார்க்கண்டேயர்
வேண்டிய வரத்தின் படி இத்தலத்திலேயே எழுந்தருளி இருக்குமாறு வேண்டினார்..

அவ்வாறே ஸ்ரீ நாராயணரும் இசைந்தார் . திருமால் விண்ணகரில் இருந்து
துளசி வனத்தில் எழுந்தருளியதால் இத்திருத்தலம் திரு விண்ணகர் எனப்புகழ்
பெற்றது. இங்கு வேண்டும் பக்தர்கள் திருமணம் உள்ளிட சுபகாரியங்கள் உடனே நடைபெறுமென்பது ஜதீகமாகம் .

 திருக்கோவில் திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .00 முதல் மதியம் 1.00 மணிவரை
மாலை 5 .00 மணிமுதல் இரவு 9.00 வரை ஆகும்

. முடிவுரை :

திருமாலுக்குரிய விஷேச நாட்கள் சிறப்புடன் பூஜை
நடைபெறுகிறது. 108 வைணவத்திருத்தலங்களில் உப்பிலியப்பன் திருக்கோவிலும்ஒன்றாகும் . 

பழங்கால புராணச்சிறப்புமிக்க ஒப்பிலிப்பன் திருக்கோவில்
தரிசனம் பார்த்து விட்டு கருத்துரையிடுங்கள் .
ஓம் நமோ நாராயண நமஹ. நன்றி

Saturday, March 23, 2013

ஸ்ரீ தோபா சுவாமிகள் ஸ்தல வரலாறு பாகம் 3

                             ஸ்ரீ தோபா சுவாமிகள் அதிஷ்டானம் 

தூயபுகழ் வேலைநகர் தோபாசுவாமிதனை,
நேயமுடன் போற்றினோர் நீடுலகில்- நோயகன்று,
எல்லா நலன்களும் எய்தியே இன்புறுவர் ,
பல்லாண்டு வாழ்வர் பணைந்து.

ஸ்ரீ கிருபானந்த
வாரியார்


 சென்னையில் இருந்து பல சித்துக்களை அரங்கேற்ற தோபா
சுவாமிகளை நீண்ட தூரம் அழைத்து சென்று அமைதியாக விட்டு விட உள்ளூர்
ஆங்கிலேய அதிகாரி முடிவு செய்தார்

 ஓர் மாட்டு வண்டியை அனுப்பினார்.அவ்வாறே சென்னையில் நம் பணி முடிந்ததென உணர்ந்த தோபா சுவாமிகள் அந்த
மாட்டு வண்டியில் காஞ்சி,வாலாஜாபேட்டை. ஆற்காடு பகுதிகள் வழியே பல
ஆலயங்களை தரிசித்தும் ஆசிர்வதித்தும் போய் கொண்டு இருந்தார் .

வேலூர் என்கிற அழகிய ஊர் வந்ததுமே தோபா சுவாமிகள் கீழே குதித்து என் ஊர் வந்து விட்டது எனக்கூறி கீழே குதித்து தாம் வந்த வண்டியையும் ஆசிர்வதித்து  அனுப்பி வைத்தார் .

ஓர் முறை வேளச்சேரி என்ற கிராமத்திற்கு வந்த தோபா
சுவாமிகள் நடு நிசியில் ஓர் குயவர் வீட்டு வாசலில் திண்ணையில்
உட்கார்து கொண்டு அருட்பெரும் சோதியாய ஆன்ம ஒளிபரப்பி நின்றார் .

நடு நிசியில் அவ்வீட்டு பெண்மணி வெளியே வர தோபா சுவாமிகள் ஜோதிப்பிழம்பாக நிற்க கண்டு ஆச்சர்யத்துடன் அச்சத்துடன் உள்ளே சென்று கணவரை அழைத்து காண்பிக்க அங்கு தோபா சுவாமிகளை காணவில்லை .


தமக்கு அப்பெரியோரை காண பாக்கியமில்லையே என்று எண்ணி தேட ஆரம்பித்து அத்தம்பதிகள் ஓர் வழியாக
தோபா சுவாமிகளை சந்தித்ததனர் .

 அப்போது தோபா சுவாமிகள் உங்களுக்கு என்ன
வேண்டுமென கேட்க குழந்தைப்பேறு வேண்டுமெனக்கேட்க அதைக்கேட்ட தோபா சுவாமிகள் தம் சட்டியில் இருந்த சோற்றை அத்தம்பதிகளுக்கு கொடுத்து ஆசிர்வதித்து உண்ணச்செய்தார் .

பின் உனக்கு ஓர் மகன் பிறப்பான் அவன் சித்தனாக வளருவான் என தோபா சுவாமிகள் சந்தோஷத்துடன் அத்தம்பதிகள்  சென்றனர் . பின் அப்பெண்மணி கருவுற்று ஓர் மகனைப்பெற்றார் .

அக்குழந்தை பின்னாளில் துறவறமடைந்து "ஏகாம்பரசிவயோகி" என்ற
திருநாமத்துடன் விளங்கி முக்கி அடைந்தாராம் . இப்படி பல அற்புதங்கள்
சித்துக்கள் வேலூரில் 12 ஆண்டுகளாக பல இடங்களில் சித்துக்கள் செய்து
கொண்டிருந்த சமயத்தில் தம் சீடராக சித்த நாத சுவாமிகளை
ஏற்றுக்கொண்டார் .

இவரே தற்போதுள்ள மடத்தின் முதல் மடாதிபதியாவார் . தம்
சீடர் சித்த நாத சுவாமிகளை அழைத்து தாம் ஜீவசமாதி அடையபோகிறேன் அதற்கான ஏற்பாடுகள் செய்ய கட்டளையிட்டு தம் சக்தியை இங்குள்ள சிவலிங்கத்தில்  ஏற்றிவிட்டேன் .

இனிமேல் இச்சிவலிங்கமே தோபா சுவாமியாகும் எனக்கூறி
தம் சீடர் சித்த நாத சுவாமிகள் அமைத்த ஜீவசமாதி குகைக்குள் சென்று
பத்மாசனத்தில் அமர்ந்து ஸ்ரீ தோபா சுவாமிகள் ஜீவ சமாதியானார் . ஏராளமான
அன்பர்கள் சிவனடியார்கள் புடை சூழ தேவார திருப்பதிகள் பாடி தோபா
சுவாமிகளை அபிஷேகித்து அக்குகைய மூடினர் .

ஸ்ரீதோபா சுவாமிகள் கூறியது  போல ஓர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து அத்திருக்கோவில் குட முழுக்கு
நன்னீராட்டு விழா நடந்தது .

கி.பி 1850ஆம் ஆண்டு பங்குனி திங்கள் 27 ஆம்
நாள் புதன்கிழமை பிரதமைதிதி ரேவதி நட்சத்திரத்தில் ஸ்ரீ தோபா சுவாமிகள்
ஜீவசமாதியானார் . இந்த ஜீவ சமாதி வேலூர் சைதாப்பேட்டை 209 மெயின்பஜார்  ரோட்டில் ஸ்ரீ தோபா சுவாமிகள் மடம் எனக்கேட்டால் கூறுவார்கள் .


குழந்தைப்பேறு இல்லாமை உள்ளிட்ட வாழ்வில் எண்ணற்ற கவலைகள் தீர்க்கும் அருமருந்து ஸ்ரீ தோபாசுவாமிகள் ஜீவசமாதியாகும் முடிவுரை: ஸ்ரீ தோபா சுவாமிகள் பற்றி எழுதிக்கொண்டே போகலாம் .

பல சித்துக்கள் மகிமைகள் கொண்டஅவரைப்பற்றி எழுத வாய்ப்பு மற்றும் புத்தகங்கள் படங்கள் அளித்த மலேசிய  நன்பர்

 திரு .இறைவனடி யுவராஜா அவர்களுக்கும்

இந்த அரிய அதிஷ்டானத்தை
பாதுகாக்கிற 8 வது மடாதிபதிகள் திருவாளர் தேவானந்த சுவாமிகள்

 ஸ்ரீதோபா சுவாமிகள் மடம் ஆகியோர்க்கும் நன்றியையூம் வணக்கத்தையும்
உரித்தாக்கி இடுகையை முடிக்கிறேன் .

நன்றி . ஓம் சிவாய நமஹ

Thursday, March 21, 2013

ஸ்ரீமத் தோபா சுவாமிகள் வரலாறு பாகம் 2

                           ஸ்ரீ தோபா சுவாமிகள் துறவறம் 





சிவனயும் தம் குரு திருஞானசம்பந்தரையும் நினைத்து துறவறம் பூண்டார். பல சிவத்தலங்கள் சுற்றினார் .ஸ்ரீ தோபா சுவாமிகள் நிர்வாண அவதார புருஷர் ஆவார் . ஒருமுறை பட்டினத்தார்  ஜீவசமாதியடைந்த திருத்தலமான திருவெற்றியூரில் தெரு ஓரமாக  அமர்ந்திருந்தார் .

 அந்த தெருவில் போவோர் வருவோர் பாவங்களை மணக்கண்ணால்
கண்டு " இதோ நாய் போகிறது " மற்றொருவர் கத்துவதை கண்டு பேய்,கழுதை
கத்துகிறது எனக்கூறிக்கொண்டு இருக்க , அங்கிருந்தவர்கள் தோபா சுவாமிகளை ஆச்சர்யர்த்துடன் பார்த்துக்கொண்டு இருக்க ,

அவ்வழியே ஸ்ரீ வடலூர்  இராமலிக்க அடிகள் வந்தார் . அப்போது தோபா சுவாமிகள் அவரைப்பார்த்து இதோ "மனிதர் வருகிறார் " எனக்கூற இதைக்கேட்டு அருகில் உள்ளவர்கள் திகைத்து விளக்கம் கேட்க மற்றோரெல்லாம் மனித உருவில் மிருகங்கள் இவர் மட்டுமே மனித
உருவில் மகான் எனக்கூறினார் ..

 தோபா சுவாமிகளை சித்தர் என்பதை தம் சக்தியால் அறிந்து அவரிடம் அருகே அமர்ந்த ஸ்ரீ வடலூர் இராமலிங்க  வள்ளலார் அவர்கள் சந்தோஸமாக தோபா சுவாமிகளிடம் பேசி கிளம்பினார் .


அப்போது தோபா சாமிகளை காட்டி ஒருவர் " இவர் யாரென வினவ " இவரும் நானும்  ஒன்றே என்னை வணங்குவது போல இவரையும் வணங்கலாம் , இவர் துணிகளை துறந்த  நிர்வாண அவதார புருஷர் ,நான் வெண்ணிற ஆடைகளை அணிகிறேன் . இது மட்டுமே  எங்களுக்குள்ள வித்தியாசம் எனக்கூறி பயணித்தார் . .

 ஸ்ரீதோபாசுவாமிகளின் சித்துக்கள் : 



ஒரு நாள் முகமதியர் வசிக்கும் வீதி வழியே  கோவணமற்று நிர்வாணமாய் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதைபார்த்த  முஸ்ஸீம் அன்பர் இவர் சித்தர் என அறியாமல் தன் வேலைக்காரனை அனுப்பி தோபா  சுவாமிகளை துரத்தச்சொன்னார் .

உடனே ஓர் கோணூசியை தோபா சுவாமிகளை மீது
வேலைக்காரன் விட்டெறிந்தான். அது தோபா சுவாமிகள் மீது படாமல் மீண்டும்  விட்டெறிந்த வேலைக்காரன் வயிற்றில் வந்து குத்தியது. ஊசியை
பிடுங்கமுடியாமல் அலற அப்பகுதி முகமதிய அன்பர்கள் கூடி விபரம் அறிய
எல்லோரும் இவர் தெய்வீகத்தன்மை கொண்ட சித்தர் என அறிந்தனர் .

பின் ஊசியை  விட்டெறியச்செய்த முகமதிய அன்பர் தோபா சுவாமிகள் மேல் பற்றுகொண்டு அவர்  பெயராலேயே "தோபா மசூதி " ஒன்றை நிறுவியதாக வரலாறு. சென்னையில் இன்றும்  தோபா மசூதி என காட்சியளிப்பதே இதற்கு சான்றாகும் .

இப்படி பல சித்துகள்  செய்த தோபா சுவாமிகளுக்காக பக்தர்கள் கூடி " தோபா சுவாமிகள் பரிபாலன சங்கம் "ஒன்றை சென்னை மயிலாப்பூரில் நிறுவினர் . வேளச்சேரி என்ற  ஊருக்கு சென்று சிதம்பரம் சுவாமிகளுக்கு ஞான திருஷ்டி வழங்கினார் .

ஓர் முறை காவாலாளி ஒருவன் தோபா சுவாமிகளை ஏளனம் செய்து கையை ஓங்கிட கை  கட்டையாகி செயல்படாமல் நின்று போனது. தான் அதிகாரபோதையால் செய்த  இழிசெயலை மன்னிக்குமாறு வேண்ட அந்த காவலாளிக்கு மன்னிப்பு அளித்து கைகளை
சரிசெய்தார் தோபா சாமிகள் .


 தோபா சுவாமிகளின் மகிமை சித்துக்கள் 3 ஆம்
பாகத்தில் தொடரும் நன்றி

Wednesday, March 20, 2013

ஞான சித்தர் ஸ்ரீ தோபா சுவாமிகள் வரலாறு பாகம் 1

                                                SRI THOBA SWAMY

                                            ஸ்ரீ தோபா சுவாமிகள்

 தொண்டை நாட்டில் வாழ்ந்த அற்புத ஞான சித்தராவார் .
வேலூரை அடுத்த சைதாப்பேட்டையில் கி.பி 1850ஆம் ஆண்டில் ஜீவசமாதியான மகானாவார் .

ஸ்ரீ தோபா சுவாமிகளின் இளமைக்காலம் :

திருச்சியில் வோளாளர் குலந்தில் சிவநாதப்பிள்ளைக்கும் ,சிவகாமி அம்மைக்கும் இராமேஷ்வரத்தில் அருள் புரியும் ஸ்ரீ இராமலிங்கநாதரை வேண்டி பிறந்த இராமலிங்கம் என்னும்  திருக்குழந்தையே தற்போது ஞான சித்தர் ஸ்ரீ தோபா சுவாமிகள் ஆவார் .


சிறு வயதில் ஆங்கிலேய காலாட்படையில் அரசுபணி செய்து வந்த தோபா
சுவாமிகளின் தாய் தகப்பனார் வயது மூப்பில் இறந்து விட தோபா சுவாமிகள்
எனப்படும் ராமலிங்கத்தின் நிலைகண்டு தமது காலாட்படையில் தோபா
சுவாமிகளையும் இணைத்துக்கொண்டனர் .

ஸ்ரீதோபா சுவாமிகள் திறமையை கண்டு வியந்த ஆங்கில அரசு அவரை சென்னைக்கு அனுப்பியது. இடையறாது சிவபக்தியும்,முருகரின் மேல் பற்று கொண்டவராய் இருந்தார் .

 ஸ்ரீ முருகப்பெருமானின் மேல் கொண்ட பக்தியினால் "அருட்பா" என்ற நூலைப்பாடியுள்ளார் . திருஞான சம்பந்தர் குருவாக ஏற்றல் : குருவருள் பெறாமல் யோக கலையிலும்,சிவபக்தியிலும் தெளிவ பெற முடியாதென உணர்ந்த தோபா சுவாமிகள் குருவை தேட அவர்க்கு எண்ணத்தில் தோன்றியது திருஞான சம்பந்தராவார் .

 தோபா சுவாமிகள்  திருஞான சம்பந்தரை நினைத்து தியானிக்கலானார் . ராமலிங்கம் எனப்படுகிற  ஸ்ரீ தோபா சுவாமிகளுக்கு திருஞான சம்பந்தர் காட்சியளித்து "உலகில்  உள்ளவற்றில் சிவம் மட்டுமே உண்மையானது அதைப்பின்தொடர்க" என அருளினார் .

 திருஞானசம்பந்தரின் குரு அருள் பெற்ற தோபா சுவாமிகள் ஆனந்தமடைந்தார் ..இந்நிலையில் ஆங்கில காலாட்படையிலிருந்து எதிரி நாட்டுடன் போர் புரிய  அழைப்பு வர, பணியில் இணைந்த இராமலிங்கம் என்கிற தோபா சுவாமிகள் எதிரி  நாட்டுடன் போர் புரிந்த பல அற்புதங்கள் செய்து போரில் தாம் இணைந்த ஆங்கில அரசுக்காக வெற்றி பெற்று தந்தார் .


 பல அற்புதங்களை செய்து  வெற்றி பெற வைத்த இராமலிங்கனாரை ஆங்கிலேய அதிகாரிகள் தேடினர் . அமைதியாய்  ஓர் இடத்தில் அமர்ந்து தியானத்தில் "தோ " "பா " "தோ" "பா" என்ற  வார்த்தைகளை மந்திரமாக உச்சரித்து வந்தார் . எதிரிப்படை வீழ்ந்ததை தளபதி   இராமலிங்கம் (தோபா சுவாமிகளிடம் ) விளக்கினார் .

 இங்கு நடந்தது இறைவனின்
திருவிளையாடல் இதைக்கண்டு வியந்த ஆங்கிலேய தளபதி இவர் சாதாரணமனிதர்  அல்ல தெய்வீகம் பொருந்திய சித்தர் எனக்கண்டு தளபதியார் வணங்க படைவீரர்கள் அனைவரும் விழுந்து வணங்கினார் .

அன்றுமுதல் இராமலிக்கம் எனப்படுகிற ஞான
சித்தர் ஸ்ரீதோபா சுவாமிகள் என அழைக்கபடுகிறார் .நாமும் ஸ்ரீ தோபா
சுவாமிகள்கள் என்றே பார்ப்போம் .

தோபா சுவாமிகள் விளக்கம் : "தோடுடைய"
என்ற வார்த்தை சிவபெருமான் திருஞான சம்பந்தருக்காக அருளியது. திருஞானசம்பந்தரைக் குருவாக கொண்ட தோபா சுவாமிகள் தோடுடைய என்ற பாடலையே ( or)பா வையே ஞான மந்திரமாக உச்சரித்துக் கொண்டதால் தோபா சுவாமிகள் என்று அழைக்கபடுகிறார் ..

தொடர்ச்சியை தோபா சுவாமிகள் வரலாறு பதிவு 2 காண்க

Saturday, March 16, 2013

பங்குனி உத்திரம் வழிபாடு

மகேசனால் உண்டான மாதங்கள் பல வந்தாலும் பங்குனியில் வரும்
உத்திரநட்சத்திரம் மகத்துவம் வாய்ந்த இந்துக்களுக்குரிய அற்புத
திருநாளாகும்.ஏனெனில் இந்த அற்புத நாளில்தான் சிவன் பார்வதி திருமண
கயிலாயத்தில் நடைபெற்றதாக புராணங்கள் உரைக்கின்றன.

 தமிழ் கடவுளாம் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக பங்குனி உத்திர திருநாள் தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

மங்கலகரமான பங்குனி உத்திர திருநாளில்தான்

முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருமணமும்,
 ரங்கநாதர் ஆண்டாள் திருமணம்,
தேவேந்திரன் இந்திராணி திருமணம் ,
பிரம்மா சரஸ்வதி திருமணம்
,தசரதபுதல்வர்கள் திருமணம்

ஆகிய திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

இறைவனுக்கே திருமணம் நடந்த பங்குனி உத்திர திருநாள் இந்த
வகையில் விஷேசமானது. மற்றொரு வகையில் சில தெய்வ அவதாரங்கள் இந்த இனியநாளில் அவதரிதிருக்கிறனர் .

அவர்கள் வள்ளி,ஐயப்பன்,அர்ஜுனர் ஆகியோராவர்  திருமுருகப்பெருமானின் திருக்கோவில்களில் பங்குனி உத்திரத்தன்று மிகுந்த விஷேசமான நாளாக கொண்டாடப்படுகிறது.

 திருச்செந்தூர் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் , மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் ஆகிய
திருத்தலங்களில் விஷேச நிகழ்வுகள் நடைபெறும் .

ரதியின் வேண்டுதலுக்காக சிவபெருமான் மன்மதனை உயிர்பித்த நாளாகவும் பங்குனி உத்திரத்தை புராணம் போற்றுகிறது ,இந்த அரிய நிகழ்வையே வடமாநிலத்தோர் ஹோலிப்பண்டிகையாக கொண்டாடப்படுகிறது..

 விஷேசபலன்கள் :

 திருமணமாகாத ஆண் பெண் இருபாலரும்
விரதமிருந்து ஏதேனும் முருகப்பெருமானின் திருத்தலங்கள் ,சிவாலயங்களில் வழிபட திருமணம் ,குழந்தைப்பேறு போன்ற மங்கலங்கள் உங்கள் வாழ்வில் நடைபெறும் .

முடிவுரை :

வருகிற 26.3.13 முருகருக்குரிய செவ்வாய்கிழமை
நாளில் பங்குனி உத்திர திருநாள் வருகிறது. அடுத்த நாள் பெளர்ணமி திதியும்
வருகிறது. தமிழ் கடவுளாம் முருப்பெருமானையும் சிவனையும் வணங்கி உங்கள் வீட்டில் மங்கலங்கள் உண்டாக வாழ்த்துக்கள் .

 மறவாமல் முருகபெருமானுக்கு  பிடித்த செவ்வரளி மாலை., நெய் தீபத்துடன் சென்று முருகப்பெருமான் அருள்
பெறுங்கள் .நன்றி

Tuesday, March 5, 2013

மங்கலங்கள் உண்டாக்கும் மகாசிவராத்திரி வழிபாடு 10.3.13

மாசிமாதம் என்றாலே சிவராத்திரி சைவ பெருமக்களால் விரும்பி
வணங்கப்படுகின்ற வழிபாடாகும் . சற்றே பின் நோக்கி புராணத்திற்கு
செல்வோம் .

 பார்வதி ஒரு முறை சிவனின் கண்களை விளையாட்டாக தம்
திருக்கரங்களால் மறைக்க உலகமே இருண்டு விட சிவன் தன் நெற்றிக் கண்ணை திறந்து உலகத்திற்கே ஒளி கொடுத்த இனிய நாளே மகா சிவராத்திரியாகும் .

ஒவ்வொரு மாதத்திலும் சிவராத்திரிகள் வந்தாலும் மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.

 அன்றைய தினம் சிவனை மனதில் வைத்து தியானித்தால் நம் துன்பங்கள் தூர ஓடிவிடுமென்பது உறுதி. அந்த வகையில் வருகிற 10.03.2013 ஆம் தேதி வருகிற ஞாயிற்றுக்கிழமை நாளில் வருகிறது.

 இந்த இனிய நாளில்  விரதமிருந்து அன்றைய இரவில் கண்விழித்து சிவாலயங்களில் இறைவனுக்காக நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்து கொள்வோர்க்கு தரித்திரம் நீங்கி செல்வவளம் மங்கலம் உண்டாகும்.

 மாசி மாதத்தில் வருகிற மகா சிவராத்திரியில் சிவனை வணங்குவது வருடம் முழுவதும் சிவ வழிபாடு செய்வதற்கு நிகரானதாக கருதப்படுகிறது.

 சிவராத்திரி விரதமென்பது மாலை 6.00மணிமுதல் அடுத்த நாள்
காலை 6.00மணி வரை சிவாலயத்தில் நடைபெறும் 4 கால பூஜையில் கலந்து கொண்டு "ஓம்நமச்சிவாய" எனும் பஞ்சாட்சர மந்திரத்தை தியானித்து விரதமிருப்பதே ஆகும் .,,,

 சிவராத்திரியில் மிக விஷேசமான நேரமாக இரவு 11.30 மணி முதல்
நள்ளிரவு 1.00 மணி வரை லிங்கோத்பவர் காலமாகும் . நம்மிடம் பணம்
இல்லையே அன்னதானம் செய்ய முடியவில்லையே என்றெல்லாம் கவலைப்படாதீர்கள் .


10 ரூபாயில் வாங்கி அன்றைய தினம் அளிக்கிற வில்வத்திலும் ,1 லிட்டர்
பசும்பால் அபிஷேகத்திலேயே சிவபெருமான் மிகுந்த திருப்தி கொள்வார் .அவர்  நம்மிடம் எதிர்பார்ப்பது பணத்தை அல்ல.

 ஆழ்ந்த பக்தியை மட்டுமே .

முடிவுரை :

 இன்றைய நாட்களில் மக்கள் பக்தியுடன் மட்டுமே கலிகாலத்தை
கடத்தியாக வேண்டுமென்பது வாரியார் பெருமானின் வாக்கு . ஆன்மீக வழிபாடுகள் எல்லோர்க்கும் வர எங்கும் அமைதி நீடிக்கும் .

 ஆதலால் ஆழ்ந்த சிவபக்தியை
மேற்கொள்வோம் . மறவாது 10.3.13 ஏதேனும் ஓர் சிவாலயத்தில்
சிவபெருமானுடன் கலந்திருப்போம் .
'' ஓம் நமச்சிவாய"

 பதிவின் நீளம் கருதி முடிக்கிறேன் நன்றி.

Monday, March 4, 2013

பர்வதமலை ஸ்ரீ மல்கார்ஜீனேஷ்வரர் தரிசனம் பாகம் 3

ஓர் வழியாக பர்வத மலையுச்சியை அடைந்தோம் . முகப்பில் ஸ்ரீ மகான் மௌனயோகி விட்டோபானந்தா சிவகுகை அன்னதானமடம் அமைந்துள்ளது. திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக திருக்கோவில் அருகே இடிதாங்கி அமைக்கப்பட்டுள்ளது.

 மூன்று சன்னதிகள் கொண்ட திருக்கோவிலின் முதல் சன்னதியில் ஸ்ரீ விநாயகர் ,ஸ்ரீவள்ளி தெய்வானை உடனமர் முருகப்பெருமான்  உள்ளனர் . இரண்டாவது சன்னதியில் ஸ்ரீமல்லிகார்ஜீனர் சிறிய லிங்க வடிவில் அழகே காட்சி அளிக்கிறார் .

பர்வதமலையின் சிறப்பே இங்கு வரும் பக்தர்கள் தாங்களே ஸ்ரீ மல்லிகார்ஜீனருக்கு அபிஷேகம் செய்யலாம் .பூஜை செய்யலாம்
என்பதால் பக்தர்கள் பெரும் மகிழ்வுடன் இங்கு வந்து இறைவனை தொட்டு
வணங்குகிறார்கள் .

கயிலாயத்தில் இருந்து சிவன் திருவண்ணாமலையில் இறங்க
முதல் அடியை பர்வத மலையில் வைக்க பர்வதமலை சிவனைத்தாங்காது கீழே இறங்க அடித்த அடியை திருவண்ணாமலையில் வைத்ததாக புராணம் இயம்புகிறது.

அதனால் இப்பதி தென் கயிலாயம் என போற்றப்படுகிறது. மூன்றாவதாக பிரம்மராம்பிகைஅம்பாள் சன்னதியாகும் . அம்பிகை அழகே உருக்கொண்டு காட்சி அளிக்கிறார் . இங்கு பூஜை செய்ய யாரும் இல்லை .

ஆதலால் நாமே பூஜிக்கலாம் . பர்வதமலை
செல்பவர்கள் செல்பவர்கள் கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள் : 2 வேளை உணவு பாக்கெட் ,போதிய அளவு தண்ணீர் .குளுக்கோஸ் , இரவு தங்க வேண்டி இருப்பின்போர்வை, பூஜைக்கு தேவையான பொருட்கள் போதுமானதாகும் .

 இங்கு கொடியவிலங்குகள் ஏதும் இல்லை .தூரத்தில் இருந்து பார்த்தால் நந்தி
படுத்திருப்பதை போலவும் அதன் கொம்புகளுக்கு இடையில் திருக்கோவில்
அமைந்திருப்பதைப் போல பர்வதமலை அமைந்துள்ளது.

 காஞ்சி மகான் ஒருமுறை பர்வத மலை தரிசிக்கவந்த மலையே சிவனாக இருப்பதால் பர்வதமலை ஏறாமல் மலையை
சுற்றி வந்து வணங்கியதாக வரலாறு.பூண்டிமகான் தரிசித்த இடம் பர்வதமலை


சித்தர்கள் :

பல சித்தர்கள் வாழ்ந்து வரும் அற்புத சிவதலமாக பர்வதமலை
விளங்குகிறது. மானிட உருவிலும் பல பக்தர்களுக்கு ஆசிகள்
வழங்கியுள்ளார்கள் .

 நமது நன்பர் தேன் பூச்சிகள் வடிவிலும் , பருந்து
வடிவிலும் , ஏதேனும் சிறிய மிருகங்கள் வடிவிலும் , பைரவர் வடிவிலும்
காட்சி அளிப்பதாக கூற ஆச்சர்யப்பட்டு மேலே செல்ல வண்டுகளின் ரீங்காரம் நம்மை தொடர்ந்து வருகிறது.

மலை உச்சியில் பைரவர் அம்சமான நாய் மற்றும்
பருந்து ரீங்காரத்தையும் தரிசித்தோம் . மதியம் 12 மணிக்கு உச்சிகால
பூஜைக்கு வில்வத்தால் அர்சித்து ஸ்ரீ மல்லிகார்ஜீனரை தரிசித்து வரும்
வழியெல்லாம் சித்தர்களை மேற்கண்ட உருவில் கண்ட திருப்தியுடன் கீழே
இறங்கினாம் .

எளிதான மலை காலை 9 மணிக்கு துவங்கி 12 மணிக்கு தரிசித்து
மாலை 4மணி அளவில் பர்வதமலை கடலாடி அடிவாரத்தை அடைந்தோம் . யாரோ வைத்த காட்டுத்தீ மெளன குரு ஆசிரமம் எதிரே உள்ள மலையின் துவக்கத்தில் எரிந்து கொண்டிருக்க பயணம் சற்றே வித்தியாசமாக முடிந்தது.

முடிவுரை:

சிவனையும் சித்தர்கள் பற்றிய தேடல் இருப்பவர்கள் பெளர்ணமி ,அமாவசை, பிரதோஷ நாட்களில் ஸ்ரீ மல்கார்ஜீனரை வந்து வணங்குங்கள் . தேடலுடன் செல்பவர்கள்  கூட்டமில்லாத நாட்களில் பகலில் செல்வது நலம் .

பிடிக்கொரு லிங்கமாக கருதப்படும் பர்வதமலை பல சூட்சமங்கள் கொண்டது. ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள் . திருவல்லிக்கேணி சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் பர்வதமலையில் திருப்பணிகள் நடைபெறுகிறது. வாழ்த்துக்கள்


அடிவாரத்தில் இருந்து 1 செங்கல் சுமந்து கோவில் திருப்பணிக்கு உதவலாம்
.திருக்கோவில் கமிட்டியிடம் நம்மால் இயன்ற பொருளுதவி செய்து இறையருள் செய்யுங்கள். உடலில் தெம்பு உள்ளபோதே பர்வதமலை செல்லுங்கள் .

திருவண்ணாமலை பேளூர் தென்மாதிமங்கலம் வழியாக சென்று பர்வதமலை ஸ்ரீபிரம்மராம்பிகை உடனமர் மல்லிகார்ஜீர்னர் வந்து தரிசித்து நலமும் வளமும் பெறுங்கள்.நன்றி

Sunday, March 3, 2013

பர்வதமலை தரிசனம் பாகம் 2

ஸ்ரீ பிரம்மராம்பிகை உடனமர் மல்லிகார்ஜீனர் திருக்கோவில் பருவதமலை
அமைப்பை முந்தைய பதிவில் பார்த்தோம் . சென்ற வாரம் பர்வதமலை செல்லாம் என நன்பர்களுடன் திருவண்ணாமலை சென்று ஸ்ரீ அருணாசலேஷ்வரரை தரிசனம் செய்ய,,

 சனிபிரதோஷமான 23.2.13 மாலையில் 5.30 மணிக்கு உள்ளே சென்று நந்தீசர் அபிஷேகம் பார்த்து வழிபட்டு அருணாசலேஷ்வரரை சிறப்பு தரிசனம் செய்ய சென்று சிவநாமம் சொல்லிய படியே 2 வருடம் கழித்து சிவபெருமானை தரிசிக்க ஆசைப்பட்டு மூலஷ்தானத்தை அடைந்து நிற்க,,

 எதிரே யாரோ முக்கியஸ்தர்  வர நான் என் நண்பர் குழுவுடன் நேராக அருணாசலீஷ்வரர் முன்பு சில நிமிடங்கள் நிற்க வைத்து தரிசனம் காட்டினார் .நீண்ட நாட்களுக்கு பின் பெரும் மனநிறைவுடன்விடுதி வந்து சேர்ந்தோம்.


இரவு பர்வதமலை பற்றி அறியாத மூவரும் எப்படி
செல்வதென யோசித்துக்கொண்டிருக்க அங்கே நன்பர் வாங்கி வந்த ஆன்மீக இதழில்  பர்வதமலை பற்றி கட்டுரையை படிக்க அடுத்த நாள் காலை திருவண்ணாமலையில்  இருந்து பர்வதமலை பயணத்தை கிளப்பினோம்

 சரியான வழிகாட்டுதல் அறியாததால் செங்கம் பஸ் ஏறி ஓர் வழியாக கடலாடி வந்து சேர்ந்தோம். இந்த வழியாக நடந்து பர்வதமலை அடிவாரத்தை அடைந்தோம் . இங்கே மெளன குரு  ஆசிரமம் அமைந்துள்ளது.

இங்கே குளிக்க சிறிய அளவில் குளியறை ஒன்று
உண்டு.நாங்கள் சென்றபோது மலை ஏற உதவியாக கஞ்சி ஊற்றினார்கள். அடுத்து பயணத்தை தொடர்ந்தோம் . மலையின் தொடக்கத்தில் இந்த வழியாக சென்றால் 7  கி.மீ பயணித்தால் உச்சியில் மல்லிகார்ஜீனரை தரிசிக்கலாம் என ஒரு பெண்மணி  சொன்னார் .

 பர்வதமலையில் புற்றுமண் அதிகமாக உள்ளது. கடலாடி வழியாக   சென்றால் பல பாம்பு புற்றுகளை காணலாம் . தூரத்தில் மலையுச்சியை   பார்த்தவாறே சென்றோம் . ஆங்காங்கே மஞ்சள் நிறத்தில்
பூத்துக்குழுங்குகின்ற மலர்கள் நீலப்புல்கள் என காட்சி அளித்தன.

இங்கு
விஷேச மூலிகைகள் இருக்கிறதாக நன்பர் சொன்னார் . ஆங்காங்கே சிறிய கடைகள்பணியாரக்கடைகள் மட்டுமே உண்டு.சற்று தூரம் நடந்தால் தென் மாதிமங்கலம்  இணையும் வழி வருகிறது. இரு வழியில் செல்பவர்களும் இங்கே இணைந்து சென்றால்  கடைசிமலையை அடைந்துவிடலாம் .


 செங்குத்தான பர்வதமலையின் கடைசிமலையில்
கடப்பாறைப்படி இதில் கடப்பாறையை பாறையில் துளையிட்டு இறுக்கி

இருக்கிறார்கள் .

அதைத் தொடர்ந்து தண்டவாளப்படி ஏணிப்படி ஆகாயப்படி என  திரிலிங்கான மலைப்பாதையில் கீழே பார்த்தால் தலை சுற்றும் சற்றே
சிரமமானதே என்றாலும் மலைகள் ஏறி பழக்கமுள்ளதால் எளிதாகவே இருந்தது.அடிவாரத்திலிருந்து 3மணி நேரத்தில் திருக்கோவிலை அடைந்தோம் .

வயதானவர்கள்
பெண்கள் குழந்தைகளுடன் 4மணி நேரத்தில் கடக்கலாம் . பெளர்ணமி இரவுகளில் கூட்டமான நாட்களில் 5 மணி நேரம் கூட ஆகுமாம் . தென்கயிலாயம் ,திரிசூலகிரி நவிரமலை என பர்வதமலைக்கு வேறுபெயர்களுண்டு.

வழியில் கல்லால்ஆன குன்று, பாறை இடுக்கில் கிணறு, அண்ணாமலையார் பாதம் என பார்க்கவேண்டிய இடங்கள் நிறைய உள்ளன.

அடுத்த பாகம் 3 ஆம் பதிவில் பர்வதமலை தரிசனம் தொடரும்

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...