Saturday, March 17, 2012

திப்பு சூல்தான் பயன்படுத்திய ரகசிய வழி



ஸ்ரீ கருவண்ணராயர் ஸ்ரீ பொம்மா தேவியர் திருக்கோவில் ஈரோடுமாவட்டம் சத்தியமங்கலம் வனக்கோட்டம் தெங்குமரஹடா வனச்சாரலில் கெஜலெட்டி என்னுமிடத்தில் அருள்பாலிக்கும் வரலாற்றை இதற்கு முந்தைய பதிவில் விளக்கியிருந்தோம் .

இந்த திருக்கோவில் அருகே வரலாற்று ஆவணமாக கெஜலெட்டி கணவாயில் அமைந்த பாலம் 200ஆண்டுகள் முன்பு பழமை வாய்ந்து சிதிலமடைந்து பாதி நிலையில் உடைந்து காணப்படுகிறது.

ஆங்கிலேய ஆட்சிக்கு முன் திப்புசூல்தான் மாயாற்றைக் கடக்க கெஜலெட்டி கணவாய் பாலத்தை பயன்படுத்தி கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வந்து செல்ல ரகசிய பாதையாக குதிரை வழிப் பயணமாக பயன்பட்டது என செவி வழிச்செய்திகள் உணர்த்துகின்றன.

கர்நாடகா - தலமலை- தெங்குமரஹடா- பெஜிலெட்டி கணவாய் பாலம் - பவானிசாகர் வழியாக சத்தியமங்கலத்திற்கு வந்து செல்ல மலைவாழ் மக்கள் பழங்காலத்தில் வணிகம் மேற்கொள்ள சந்தைகளுக்கு வர பயன்பட்டதாம் . திப்பு சூல்தான் கட்டி வழிபட்டதாக கூறப்படும் சிதிலமடைந்த தர்க்கா ,பழங்கால குதிரைக்கொட்டகைகள் இங்கு பாலம் தாண்டி செல்லும் வழியில் உள்ளதாம் .

யானை புலிகள் உலாவும் வனப்பகுதி ஆதலால் சிதிலமடைந்த பாலத்தின் அழகைமட்டும் ரசித்து விட்டு வந்தோம் . மாயற்றுக்கு அருகே குறுக்க ஓடையில் அமைந்த இந்த பாலத்தின் போட்டோக்கள் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ கருவண்ணராயர் பொம்மா தேவியர் வருடாந்திர பண்டிகை அடுத்த மார்ச் முதல் வாரத்தில் அல்லது மாசி மகம் நட்சத்திரத்தில் நடைபெறும் .வனத்துறையின் 3நாள் அனுமதியுடன் நடைபெறும் இந்த நாட்களில் வந்தால் திருக்கோவிலில் இருந்து 100மீட்டர் தொலைவில் உள்ள இந்த கெஜலெட்டி கணவாய் பாலத்தை ரசிக்கலாம் . மற்ற நாட்களில் அனுமதி இல்லை.

பழங்கால வரலாற்று ஆவணமான இந்தப்பாலம் வித்தியாசமானது. அடுத்த வருடம் காத்திருந்து ஸ்ரீ கருவண்ணராயரை வணங்கி திப்புவின் ரகசிய பாதையாக சொல்லப்படுகிற கெஜலெட்டி கணவாய் பாலத்தையும் பார்த்து வாருங்கள் .

சிங்கம் தவிர அனைத்து மிருகங்களும் வாழும் பகுதி மற்றும் தெங்குமரஹடா வனப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படவும் உள்ளது. ஸ்ரீ கருவண்ணராயர் திருக்கோவில் செல்பவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும். அடுத்த வரும் மாசி மகத்திற்கு தயாராகி காத்திருங்கள் .

அழைப்பு வரும் .

நன்றி

Friday, March 9, 2012

உன் தரிசனம்


நித்தம் நித்தம்
வாழ்கைப் போராட்டத்தின்

கனவுகளில் தொலைந்து
போகிற நாட்களில்

அன்பே ...!
உன் தரிசனமே

விடியலாய் ...!

சத்தியமங்கலம் தெங்குமரஹடா கெஜலெட்டி வனப்பகுதியில் எழுந்தருளி காக்கும் ஸ்ரீபொம்மாதேவி உடனமர் ஸ்ரீ ஆதி கருவண்ணராயர் திருக்கோவில் தரிசனம்


அமைவிடம் :


தமிழகம் கர்நாடகாவில் வாழ்ந்து வரும் கற்பூர கோத்திரம் உப்பிலிநாயக்கர் குலதெய்வமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பவானி சாகர் தெங்குமரஹடா அடர்ந்த வனப்பகுதியில் கெஜலெட்டி கணவாயில் ஆதி கருவண்ணராயர் பொம்மாதேவியர் திருக்கோவில் அமைந்துள்ளது.

திருக்கோவில் அடர்ந்த வனப்பகுதியில் கரடுமுரடான மண் சாலையில் இரண்டு மணி நேரம் மெதுவாக வாகனங்கள் ஊர்ந்து சென்று திருக்கோவிலை அடையலாம் .

திருக்கோவில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே மாசி மாதம் மகம் நட்சத்திர நாளில் கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் மட்டும் லட்சக்கணக்கான மக்களின் குலதெய்வமான உப்பிலியநாயக்கர்கள் மற்றும் இப்பகுதி மக்களும் கலந்து கொண்டு ஆதிகருவண்ணராயர் ,பொம்மதேவியர் அருள்பெற்றுச்செல்கின்றனர் .

திருக்கோவில் அமைந்த விதம் பற்றிய சில புராணக்கதைகள்

( செவிவழிச்செய்திகள் ) :

பழங்காலத்தில் தமிழகத்திலும் கன்னட நாட்டில் உப்பாரா ,உப்பிலியா என்னும் நாயக்கர் சமுக மக்கள் உப்பு மற்றும் வாணிபத்தில் ஈடுபட்டு வந்தார் . திப்பு சூல்தான் படைப்பிரிவில் வீரர்களாக பணிபுரிந்து வந்ததாகவும் , அப்போது உப்பிலிய நாயக சமுக மக்கள் பெண் ஒருவரை மணம் முடிக்க மொகலாய மன்னர் ஆசைப்பட்டதாகவும் ,

மன்னரை எதிர்க்க முடியாமல் தவித்து அவர்களின் காவலர்களிடம் இருந்து இரவில் தப்பித்து தலமலை வழியாக வந்ததாகவும் வரும்போது தன் குலதெய்வமான ஆதிகருவண்ணராயர் பொம்மதேவியர் கொண்டு வந்து தெங்கு மரஹடா காட்டில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்ததாகவும்

ஓர் வரலாறு.பின் அங்குள்ள மாயாறு வழியாக கடும் ஆற்று வெள்ளத்தை கடக்கமுடியாமல் ஸ்ரீ கருவண்ணராயரை வணங்க மாயாறு உப்பிலிய நாயக்க மக்களுக்காக வழிவிட்டதாகவும் , அப்போது வந்த மொகலாய அரசர் இடையில் மாயாறு கடும் சீற்றத்தால் செல்ல வருத்தப்பட்டு பெண் கொடுக்கவில்லை எனினும் தங்களை மாமா மச்சினர்களாக அழைக்குமாறு கேட்டுக்கொண்டதாக வரலாறு ,

இரண்டவதாக

கர்நாடகாவில் இருந்து இடம்பெயர்ந்த உப்பிலிநாயக்கர் மக்கள் தமது குலதெய்வமான ஸ்ரீ கருவண்ணராயர் ,ஸ்ரீ பொம்மதேவியரை தமிழகத்திற்கு எடுத்து வர பூக்கூடையில் தலமலை வழியாக குறுகிய வழியில் கொண்டு வரும்போது தெங்குமரஹடா காட்டில் கெஜரெட்டி அருகில் வந்தபோது மாயாறு அருகில் பக்தர்கள் குளிக்க சென்று திரும்ப நேரமானதால்

பூக்கூடையில் ஸ்ரீ கருவண்ணராயர் பொம்மாதேவியரை வைத்திருந்த பக்தரும் குளிக்க ஆசைப்பட்டு பூப்பேழைய இறக்கி வைத்து விட்டு பின் அனைவரும் ஸ்ரீ கருவண்ணராயர் பொம்மாதேவியரை பூக்கூடையை தூக்க முற்படும் போது பூக்கூடையை தூக்க முடியவில்லை

அப்போது அருள் வந்த பக்தர்

"உங்கள் குலதெய்வமான நான் இங்கேயே அடர்ந்தகாட்டில் இருக்க ஆசைப்படுகிறேன் . என்னை வருடம் ஒருமுறை தமிழ் மாசிமாதம் மகம் நட்சத்திரத்தில் வந்து வணங்கி செல்லுங்கள் "

கூற இறைகட்டளைக்கு இணங்க பக்தர்கள் இறைவனை அங்கேயே சிறிய கோவில் கட்டி பூஜை செய்து வந்தனர் .

சான்றுகள் :

கர்நாடகாவில் இருந்து வாணிபத்திற்காக தலமலை தெங்குமரஹடா வழியாக நடந்து வந்துள்ளது. அதற்கு குறுக்கிடாக மாயாறு குறுக்கிட கிட்டத்தட்ட 500ஆண்டுகள் மேலாக பழமையான பாலம் ஒன்றை உருவாக்கி அதன் வழியே பாதை உள்ளது வியப்புக்குரியது.

ஸ்ரீ கருவண்ணராயர் திரிக்கோவில் அருகிலேயே இந்த பாலம் சிதிலமடைத்து கிடப்பதை புகைப்படத்தில் காணலாம் . மாயாற்றை கடக்க உதவுகின்ற இந்த பாலம் கடந்து பவானி சாகர், சத்தியமங்கலம் சந்தைகளில் வாணிபம் நடந்திருப்பதை காண்கூடாக உணரலாம் .

திப்பு சூல்தான் காலத்தில் ஆங்கிலேயர்கள் அறிய முடியாத ரகசியவழியாக இந்தபாலத்தை பயன்படுத்தி கர்நாடக .தமிழ்நாடு சென்று வந்ததாகவும் ,சிறிது தூரத்தில் குதிரைக்கொட்டகையும் உள்ளது.

தற்போது திருக்கோவில் அமைப்பு :

கெஜலெட்டி வனப்பகுதியில் அமைந்த மூலவர் கருவண்ணராயர்,பொம்மதேவியர் அமைந்துள்ளார்கள் .
பெருமாள் அம்சமாக
( வைணவம் ) விளங்கி வருகிறார் . திருக்கோவில் வெளி முகப்பில்காவல்தெய்வமானஸ்ரீ கருப்பண்ணசாமிக்கு பிரமாண்டகிடாவெட்டு இங்கு பிரபலமானது.

இரண்டுகுதிரைகள்மற்றும் உட்பகுதிமுகப்பில் விநாயகப்பெருமான், நவகிரகங்கள்அமைந்துள்ளன.அமைந்துள்ளார்கள் . அருகில் பவானிசாகரில் வந்துஇணைகின்ற நீலகிரிமலையில் உற்பத்தியாகும் மாயாறும்ஆறு ஓடுகின்றது.

திருக்கோவில் இடப்புறமாக சிவலிங்கம்அமைக்கபட்டுள்ளது.திருவிழா நடைபெறும்மாசிமகம் நட்சத்திரநாளில் மட்டும் தூக்கநாயக்கன் பாளையத்தில் புறப்பட்டு உற்சவர் கெஜரெட்டி கோவிலுக்கு வந்து பக்தர்கள் காட்சி கொடுப்பார்

.இறைதுதி :

தொல்லுலகில் மானிடரின் தோற்றமொரு தோன்றிவாளர் ,
நல்லதமிழ் நடைமாறிக் கன்னடமாம் எல்லையிலே ,
வல்லுருவ யானைவளர் கெஜஹட்டி பாங்காடே,
இல்லிடமாய் கொண்டாய் என் மாயவரே,


என காக்கும் கடவுளாய் விளங்குகின்ற பெருமாளின் அம்சமாய் அனைவரும் துதிக்க விரும்புகின்ற அனைவரும் திருக்கோவிலை வந்து வணங்கலாம்.

திருக்கோவில் குலதெய்வமாக வணங்குபவர்கள் :

ஸ்ரீ வடகாஞ்சி அயோத்தியாபுரியிலே ஸ்ரீ மகா விஷ்ணுவின் வலது வியர்வையில் பிறந்ததாக கருத்தப்படுகிற சத்திரிய வம்சத்தாருக்கும் ,

திருமூர்த்திகள் ,அகத்திய முனிவர் இவர்களால் சிங்கக்கொடியும் ,சீராமாலை தீர்க்காயுசு பெற்ற பெரியோர்களுக்கும் கண்ட நாடு கொண்டு கொண்டநாடு கெடாத பெரியோர்களுக்கும் கற்பூரகோத்திரம் உப்பிலியநாயக்கர்களுக்கும் 6 பட்டம் 24 நாட்டார்களுக்கும் குலதெய்வமாகும் .

மாசி மகம் பண்டிகையை விளக்கும் பாடல் :

ஓங்கு புகழ் உன்னால் உத்தமர்கள் எண்ணற்றோர்,
ஈங்கு வந்து இணைந்துந்தன் எழில் விழா கொண்டாடும்
வீங்கும் மதி மாசி மகம் நட்சத்திர நாளிலே
பாங்காடும் பட்டணம் போல் காட்சி கொள்ளுமே.

முடிவரை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் :

ஸ்ரீ ஆதிகருவண்ணராயர் திருக்கோவில் அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் சிங்கம் தவிர அனைத்து மிருகங்களும் புலி, யானை
உட்பட உள்ளதால்
இப்பதிவை படிக்கும்
நன்பர்கள் ஆர்வத்தில்செல்லமுற்படாதீர்கள்

மிகஆபத்தான இடம்செல்லவிரும்புவர்கள்
மாசிமாதம்மகம் நட்சத்திர நாளில்
பலபேருடன் பாதுகாப்புடன் சென்றுஇறையருள் பெருங்கள்
நன்றி

Thursday, March 8, 2012

இயற்கையின் அரவணைப்பில் பவானிசாகர் அணைக்கட்டும் பூங்காவின் அழகு


பவானி சாகர் அணைக்கட்டும் பூங்காவின் அழகும் அமைவிடம் :

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பவானி சாகர் கெத்தமங்கலம் என்னும் இடத்தில் பவானி சாகர் அணைக்கட்டு அமைந்துள்ளது . சத்தியமங்கலத்தில் இருந்து 16 கி.மீட்டர் தொலைவிலும் ,மேட்டுப்பாளையத்தில் இருந்து 35 கி.மீட்டர் தொலைவிலும் பவானிசாகர் அணைக்கட்டு அமைந்துள்ளது. பவானி சாகர் அணைக்கட்டில் மாயாறு இணைந்து கொள்கிறது.


பின்னர் 70 கி.மீட்டர் பவானி ஆறு காவிரியுடன் பவானியில் இணைந்து கொள்கிறது. நீலகிரி மாவட்டத்தில் துவங்கி பல மின்திட்டங்களில் பயன் தந்து மாயாற்றை இணைத்துக்கொண்டு மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரலில் மூலிகைகளை தழுவிக்கொண்டு பவானிசாகர் அணையில் இணைந்து ஈரோடு மாவட்டத்தில் இணைகிறது .

சுதந்திரத்திற்கு பின் கி.பி 1948ல் துவங்கப்பெற்ற 1955 ல் முடிக்கப்பெற்றதாக அணைக்கட்டின் வரலாறு அறிவிக்கிறது. சுமார் 7 கி.மீட்டர் மண்ணால் அணைக்கட்டை கட்டி சாதனை செய்துள்ளது வியப்பான ஒன்றாகும் .

நான் சிறிய வயதில் இருந்தபோது ஆடி 18 அன்று ஒருநாள் மட்டும் மக்களின் பார்வைக்காக அணையின் மேற்பகுதியில் பார்வையிட அனுமதிப்பார்கள் . கடலைப்போல தேங்கிகிடக்கும் நீரையும் அதன் அழகும் நடந்து பலதூரம் செல்ல ஆசையாக இருக்கும் .

நீலகிரி மலைத்தொடரில் துவங்கி பல பேர் இருளை மின்சாரத்தாலும் விவசாயத்தாலும் விலக்குகின்ற பவானி ஆறும் பவானிசாகர் அணைக்கட்டும் போற்றுதலுக்குரியது.

தமிழகத்தில் பெரிய மண்ணால் ஆன அணைக்கட்டு என்னும் பெருமை கொண்ட பவானிசாகர் அணை 9 மதகுகளுடன் உபரி நீரை வெளியேற்றியும் . வாய்கால் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டும் பயணித்து பவானி காவிரியில் அடையும் முன் காளிங்கராயன் என்பவரால் கட்டப்பெற்று காளிங்கராயன் வாய்கால் ஆக பிரிந்து கொடுமுடி வரை பாசனத்திற்காக கலக்கிறது.

பவானி சாகர் பூங்கா :

நீண்ட நெடிய அசோக மரங்கள் பவானி சாகர் அணையின் அழகைகாட்ட புல்வெளிகளின் அழகில் பவானி சாகர் அணைப்பூங்கா அழகில் மிதக்கிறது. தற்போது அழகிய ரோஜா செடிகளை பொதுப்பணித்துறையால் நடப்பட்டு அழகு செய்கிறது.

சிறிய அலங்கார நீர்த்தொட்டிகள் ,டைனேசர் உருவச்சிலைகள் . அமர்ந்து பேச அழகான குடில்கள் ,குழந்தைகள் விளையாடும் சறுக்குகள் என குடும்பத்துடன் ஒருநாள் பயணமாக சென்று ரசிக்கும் விதமாக பவானிசாகர் அணைக்கட்டின் பூங்கா அமைந்துள்ளது.

நீங்கள் இறை தேடலில் விருப்பமிகுந்தவாக இருந்தால் அருகில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஒருநாள் சுற்றுலா வர குடும்பத்துடன் வர ஏற்ற இடம் . பாதுகாப்பு காரணங்களுக்காக அணையின் மேற்பகுதி செல்ல அனுமதிப்பதில்லை என்றாலும் கூட அருகில் சென்று பார்க்கலாம் .

ஒரு முறை வாய்ப்பு கிடைத்தால் சென்று ரசித்து விட்டு வாருங்கள் .

Sunday, March 4, 2012

பாலமலையின் இயற்கை சாரலில் வெள்ளக்கரட்டூர் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் .ரெட்டியபாளையம் .குருவரெட்டியூர்


அருள்மிகு ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோவில் வெள்ளக்கரட்டூர்
ரெட்டியபாளையம் ,குருவரெட்டியூர்

SRI BALATHANDAYUDABANI THIRUKKOVIL, VELLAKKARADUR,
REDDIYAPALAYAM GURUVAREDDIYUR

மேற்குத்தொடர்ச்சி மலையின் பாலமலையின் இயற்கை அமைத்திச்சாரலிலே குன்றுகள் தோறும் குடியிருக்கும் குமரன் அழகில் மயக்கும் தமிழ் கடவுளாம் முருகப்பெருமான் ஆலயமாக ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர் கிராமத்தை சேர்த்த வெள்ளக்கரட்டூர் எனும் அழகிய ஊரில் குடிகொண்டு கடந்த நான்கு தலைமுறைகளாக அருள் பாலித்து வருகிறார் .

சிறிய அளவில் இருந்த திருக்கோவில் பல ஆன்மீக அன்பர்கள் முயற்சியால் பெரும் திருக்கோவிலாக தயாராகி வருகின்றது.

செல்லும் வழி :

பவானி வெள்ளித்திருப்பூரில் இருந்து முரளி சனிச்சந்தை செல்லும் வழியில் வெள்ளக்கரட்டுர் உள்ளது . சுமார் 500 வருடங்களுக்கு முன் சிறிய திருக்கோவிலாக ஆரம்பித்த ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் தைப்பூசம் நாட்களில் பிரமாண்ட பூஜை நடைபெறும் .பின்னர் திருக்கோவில் பழங்கால ஆலயமாக உள்ளதால் தற்போது மாற்றம் செய்து பெரும் திருக்கோவிலாக உருவாகி வருகிறது .

குருவரெட்டியூர் உட்பட 20 கிராமங்களுக்கு மலை மீதுள்ள முருகர் ஆலயம் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் என்னும் சிறப்பை பெறுகிறது. பாலாலயம் செய்து திருப்பணிகள் நடைபெற்று வருவதால் திருக்கோவிலும் எண்ணம் இருந்தால் நேரில் சென்று திருப்பணிகளை பார்வையிட்டு தரலாம் .

இன்னும் ஒரு வருட காலத்தில் அழகான முருகப்பெருமான் ஆலயம் தயாராகி விடும் . இதனால் ஏழ்மை நிலையால் பழனி சென்று ஸ்ரீ பாலதண்டாயுதபாணியை தரிசிக்க முடியாதவர்கள் வெள்ளக்கரட்டூர் வந்தே தரிசித்துக்கொள்ளலாம் .

முருகர் துதி:

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு
வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச்
செந்தமிழ்நூல் விரித்தோனை விளங்கு
வள்ளி காந்தனைக் கந்தக்கடம்பனைக்
கார்மயில் வாகனனைச் சாந்துணைப்
போதும் மறவா தவர்கொரு
தாழ்வில்லையே,


திருக்கோவில் சுற்றி அமைந்துள்ள ஊர்கள் :

ஜரத்தல் ,முரளி, சென்னம்பட்டி,ஜோதிபுரம் ,கோனார்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம் , கருங்கரடு, குருவரெட்டியூர்
பாலகுட்டைபட்டி பழையூர் ,புதூர் ,
பொரவி பாளையம் ,தொப்பபாளையம் ,
என இப்பகுதி மக்களுக்கு புதியதோர்
ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் உருவாகி வருகிறது.

சுமார் 500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி
ஆலய திருப்பணிகள்கள் முடிந்து மகா கும்பாபிஷேகம் நடைபெறும்போது நம் வலைப்பதிவில் தகவல் அளிக்கப்படும் .
நன்றி

Monday, February 27, 2012

சுபநிகழ்ச்சிகள் நடத்த நட்சத்திரங்களை தேர்ந்தெடுங்கள்


27 நட்சத்திரங்களில் 21 நட்சத்திரங்களும் விலக்கவேண்டிய 6 நட்சத்திரங்களையும் குறிப்பிட்டுள்ளேன் .சுப நிகழ்ச்சிகள் நடத்த நல்ல நட்சத்திர நாட்களை தேர்ந்தெடுத்து செய்தால் நன்மைகள் பலவும் நம்மை வந்து சேரும் .பழங்காலத்தில் எல்லா நல்ல விஷயங்கள் செய்யும் முன் ஜோதிடரிடம் கலந்து ஆலோசனை செய்தே ஆரம்பித்தார்கள் . அந்த வகையில் நல்ல காரியம் துவங்கும் போது நட்சத்திரங்கள் பார்த்து செய்து தடையில்லாமல் காரியங்கள் நிறைவேறிட இப்பதிவு உதவும்.

ரேவதி -திருமணம் சம்பந்தமான சுப நிகழ்ச்சி
சதயம் - திருமணம் மாங்கல்யம் செய்தல்
சுவாதி- திருமணம் செய்ய முடிகாணிக்கை ,பள்ளியில் சேர்க்க உகந்தது
அசுவனி - திருமணம் ,வளைகாப்பு,பூப்புனித நீராட்டு
ரோகிணி- திருமணம் கிரகப்பிரவேசம் ,வளைகாப்பு
புனர் பூசம் -மாங்கல்யம் செய்ய வளைகாப்பு நடத்த உகந்தது
மகம் -மாங்கல்யம் செய்ய ,போர்வெல் அமைக்க சிறந்தது
மிருகசீரிடம் - காதணிவிழா, முடிகாணிக்கை ,வெளியூர் பயணம் செல்ல உகந்தது
பூசம் -கிரகப்பிரவேசம் , வீடுகட்ட துவங்கலாம்
பூரம் , விசாகம்- ஆடுமாடு வாங்கலாம்
உத்திரம் - கிணறு வெட்ட உகந்தது
அஷ்தம்,மூலம் - வீடுகட்டிடப்பணி துவங்குதல் ,கிரகப்பிரவேஷம்
சித்திரை - பெயர் சூட்ட காது குத்த உகந்தது.
உத்திராடம் -ஆபரணம் வாங்க உகந்தது
அனுசம் -புதிய ஆபரணம் அணிய உகந்தது.
திருவோணம் - கிரகப்பிரவேசம்
அவிட்டம் - உபநயனம் செய்தல் கிணறு வெட்ட உகந்தது
பூரட்டாதி -விவசாயப் பணி துவங்க ஆடுமாடு வாங்க உகந்தவை
உத்திராட்டதி - சுவாமி பிரதிஷ்டை செய்யவும்
வளைகாப்பு நடத்தவும் உகந்த நட்சத்திரங்களாகும்

சுப நிகழ்ச்சிகள் தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள் :
பூராடம் ,கேட்டை, ஆயில்யம் ,
திருவாதிரை, கார்த்திகை ,பரணி ஆகிய நட்சத்திரங்களாகும்

Thursday, February 23, 2012

சுனாமியை விரட்டிய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் . திருச்செந்தூர்



திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
SRI SUBRAMANIAHA SWAMY TEMPLE THIRUCHENDUR

மூலவர் : ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி
அமைவிடம்:தூத்துக்குடியில் இருந்து 40 கி.மீ தெற்கில்கடற்கரையில் அமைந்துள்ளது.திருநெல்வேலியிலிருந்து 55கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

திருச்செந்தூர் விளக்கம் : திருச்செந்தூரின் நடுவில்அமைந்துள்ள சிவக்கொழுந்தீஷ்வரர் திருக்கோவில் கல்வெட்டில் "திருச்செந்திலூர்" என பழங்காலத்தில் அழைக்கப்பட்டது வரலாறு.
காலப்போக்கில் மருவி திருச்செந்தூர் ஆக அழைக்கப்பட்டு வருகிறது.அருணகிரி நாதரின்பாடல்களிலும் திருச்செந்திலூர் எனும் வார்த்தைகளை காணலாம்.ஆறுபடை வீடுகளில்ஒன்றாக திருச்செந்தூர் விளங்குவது சிறப்பாகும்

காலம் :

திருச்செந்தூர் கால வரலாறு அறிய இயலாவிட்டாலும் கி.பி 875ல் இரண்டாம் வரகுணபாண்டியன் திருக்கோவில் வழிபாட்டு பூஜைக்காக உதவி செய்ததாக வரலாறு.

திருக்கோவில் மூலவர் மற்றும் உள் அமைப்பு :

சிவபூஜை செய்யும் தவக்கோலத்தில் சடைமுடியுடன் கடற்கரையாண்டியாக ஸ்ரீசுப்பிரமணியர் காட்சி தருகிறார் . நான்கு கரங்களுடன் தவக்கோலத்தில் கிழக்குநோக்கிய நிலையில் நின்று நான்கடிச்சிலையாக நின்று அருள்புகிறார் .

பஞ்சலிங்கம் :

மூலவரை இடப்புறமாக சுற்றி செல்லும் வழியில் வலப்புறமூலையில் ஓர் குகையில் ஒரேபீடத்தில் 5 லிங்கங்கள் அமைந்துள்ளது. இச்சன்னதியில் சிவபெருமானுக்கு முருகப்பெருமான் பூஜை செய்வதாக ஐதீகம் . ஆதலால் மானிடப் பூஜை இச்சன்னதிக்கு இல்லை. திருக்கோவில் மூலவரை தரிசனம் செய்த பின் அங்குள்ள திருக்கோவில் அலுவலர்களிடம் கேட்டால் ரூ5 டிக்கட் பெற்று பஞ்சலிங்க தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள் .

திருக்கோவிலில் வணங்க வேண்டிய சன்னதிகள் :


ஸ்ரீ வள்ளி அம்மன சன்னதி
ஸ்ரீ தெய்வானை சன்னதி
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி
63மூவர்
ஸ்ரீ ஜெகந்நாதர்
வீரபாகு,
வீரமகேந்திரர் ,
ஸ்ரீ நந்தீசுவரர் ,
ஸ்ரீ பாலசுப்பிரமணியர்
,ஸ்ரீ மயூர நாதர்
ஸ்ரீ சண்டிகேஷ்வரர்
ஸ்ரீ சனிஷ்வரர்
ஸ்ரீ அருணகிரி நாதர் சன்னதி
ஆகிய சன்னதிகள் முக்கியமானதாகும் .


திருக்கோவில் திறந்திருக்கும் நேரமும் பூஜைகளும் :

எல்லா திருக்கோவில்களிலும் ஆறுகாலப்பூஜை நடைபெறுவது இயல்பு. ஆனால் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சாமிக்கு 9காலப்பூஜைகள் நடைபெறுவது சிறப்பு திருக்கோவில் காலை 5.00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிவரை திருக்கோவில் நடை திறந்தேஇருக்கிறது.

காலை 5.10 திருப்பள்ளி எழுச்சி
5.30 விஸ்வரூப தரிசனம்
5.45 கொடிமர நமஷ்ஹாரம்
6.15 உதயமார்த்தாண்ட அபிஷேகம்
7.00 தீபாராதனை
8.00காலசந்திபூஜை
10.00 கலசபூஜை
10.30 உச்சிகால அபிஷேகம்

12.00 உச்சிகால தீபாராதனை
மாலை 5.00 சாயரட்ஷை பூஜை
இரவு 7.15 அர்த்தசாம அபிஷேகம்
8.15 அர்த்தஜாம பூஜை
8.30 ஏகாத்த சேவை
8.45 பள்ளியறை பூஜை
9.00 நடை திருக்காப்பிடல்

விஸேச நாட்கள் :

ஆடி அமாவாசை ,வளர்பிறை சஷ்டி ,
திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ,
வைகாசி விசாகம் ஆகிய நாட்களாகும்

திருச்செந்தூர் முருகப்பெருமான் நிகழ்த்திய அற்புதங்கள் :

திருநெல்வேலி கலெக்டராக கி.பி 1803 லூசிங்டன் துரை இருந்தார் . அவர் திருசெந்தூர் திருவிழாவின் போது வந்திருந்தார் .ஸ்ரீ முருகப்பெருமான் அர்ச்சகர் விசிறி வீச திருவீதி உலா வருவதைக்கண்டு நக்கலாக " உங்கள் கடவுளின் சிலைக்கு வியக்கிறதோ? அதனால் விசிறி வீசுகிறீர்களா ? எனக்கேட்ட அர்ச்சகரும்" ஆமாம் " எனக்கூற "அப்படி எனில் நான் பார்க்க முடியுமா ".?என துரை கேட்க மாலைகள் அகற்றி காட்டிய போது ஸ்ரீ பாலசுப்பிரமணிய பெருமானின் உடல்கள் வேர்த்துள்ளதை கண்டு தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டார் முருகப்பெருமான் அருள்சக்தியை கண்டு வியந்தார்.

முருகப்பெருமானை வணங்கி தமது காணிக்கையாக பல வெள்ளிப்பாத்திரங்களை அளித்து விட்டுச்சென்றார் . அப்பாத்திரங்கள் இன்றும் உள்ளது.

டச்சுக்காரர்கள் பயந்து ஓடிய கதை :

டச்சுக்காரர்கள் திருக்கோவில் ஐம்பொன் சிலைகள், மூலவர் ஆகியோரின் சிலைகளை திருடிக்கொண்டு கடல் மார்க்கமாக பயணத்தை தொடர்ந்தனர் பயணம் தொடங்கிய துவங்கிய கொஞ்ச தூரத்திலேயே கடுமையான அலைகளுடன் புயல்காற்று வீச பயந்து நடுங்கினர்.படகில் உள்ள முருகர் சிலைகளை எடுத்து கடலில் போடுங்கள் இல்லையெனில் எல்லோரும் கடல் சாக வேண்டியதுதான் எனக்கூற பயந்து திருச்செந்தூரில்எடுத்து வந்தமுருகப்பெருமானின் சிலைகள் கடலில் தூக்கிபோட்டுவிட்டனர்

சற்றுநேரத்தில் அலைகள் அமைதியாகி விடடச்சுக்காரர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி விட்டனர்.அதன்பின் பக்தர் கனவில் வந்த முருகர் கடலில் ஓர் இடம் குறிப்பிட்டு அங்குதாம் இருப்பதாகவும் அவ்விடத்தில் எலுமிச்சை மிதப்பதாகவும் மேலே பெருமாள் கழுகு பறந்து அடையாளம் காட்டுமென கூற அதன்படி பக்தாதிகள் கடலில்சென்று முருகப்பெருமான் மீட்டதாக வரலாறு

Sunday, February 19, 2012

மாசி மகா சிவராத்திரி (மறந்து விடாதீர்கள் இன்று 20.2.12 மாசி மகாசிவராத்திரி )


சைவத்திருமார்களும் சிவனடியார்களும் சிவவழிபாடு செய்வது மரபு . அதில் மாதமாதம் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரியை மிகுந்த விஷேச நாளாக கொண்டாடி மகிழ்கின்றனர் .

மாசி மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் சிவன் நினைப்போடு மாலையில் நன்கு குளித்து சிவாய நமஹ எனச்சொல்லி சுத்த வெண் திருநீறு தரித்து
" ஓம் சிவாய நமஹ"

'' ஓம் நமச்சிவாய''

எனும் பஞ்சாட்சர மந்திரங்களை இடைவிடாது உச்சரித்து விரதமிருந்து ஏதேனும் ஓர் சிவாலயத்தில் கண்விழித்து வில்வ இலைகளால் சிவ பெருமானை அர்சனை செய்து தேவாரம்,திருவாசகம் , பாரயணம் செய்வது சிவபெருமானுக்கு அருகில் நாம் செல்ல வைக்கும் அரியதோர் வாய்ப்பு

மகா சிவராத்திரியில் சிவபெருமானை வணங்குவதன் பலன் :

நூறு அசுவமேதயாகம் செய்த பலன் .
அறிந்தும் அறியாமலும் செய்த பாவ நிவர்த்தி ,
அடுத்த பிறவியில் சிவலோக பதவி, ஆகியவை கிட்டும் .

சிவன் ஜோதி வடிவில் உருவமாகவும் அருவவடிவில் லிங்கமாகவும் அருள்புரிகிறார் . அப்படி சிவன் லிங்கத்தில் அருவமாகி காட்சி தரும் நாளே சிவராத்திரியாகும் . மாசிமாதத்தில் தேய்பிறை சதுர்தசி திதியில் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. வருடம்முழுவதும் சிவராத்திரி விரதமிருக்கமுடியாதவர்கள் மாசிமகா சிவராத்திரியன்று வணங்குவது வருடமுழுவதும் சிவனை வணங்கியதற்கு சமமாகும்.

கயிலாயத்தில் ஓர் நாள் பார்வதி தேவி சிவபெருமான் கண்களை மூட சிவனின் இரு கண்களான சூரிய சந்திரகளை மறைத்தது போலகிவிட உலகம் இருண்டு ஜீவராசிகளும் மக்களும் பயந்து நடுங்க அப்போது சிவன் தன் அக்னி வடிவான நெற்றிக்கண்ணைத்திறக்க அனைத்து உயிர்களும் மேலும் பயம் கொள்ள பார்வதி தேவியார் தான் செய்த தவறை உணர்ந்து அன்றிரவு சிவனுக்கு நான்கு காலபூஜைகள் செய்து சிவனை வழிபட்டார் .

பூஜையில் மகிழ்ந்த நெற்றிக்கண் அக்னி தளர்ந்து அருள் ஒளியாக்கினார் . பார்வதியை நோக்கி சிவன் என்ன வரம் வேண்டுமெனக்கேட்க தாம் செய்த பூஜை சிவனுக்குரிய பூஜைநாளாக சிவராத்திரி பூஜையாக அருள வேண்டுமெனவும் , இந்த சிவராத்திரியில் நான்கு காலபூஜை செய்து அபிஷேகித்து சிவ வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்வில் எல்லா ஐஷ்வர்யங்களும் கிட்ட வேண்டுமென அருள்புரியுங்கள் எனக்கேட்க அப்படியே ஆகட்டும் தேவி என ஆசிர்வதித்தார் சிவபெருமான் .

புராணங்கள் சிவராத்திரியில் நடந்த முக்கிய நிகழ்வுகள் :
அர்ஜீனன் தவமிருந்து பாசுபதம் என்ற அஸ்திரம் பெற்றது ஓர் சிவராத்திரியில்
பகிரத முனிவர் கடும் தவம் செய்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்தது. கண்ணப்பநாயானார் முக்தி பெற்றது சிவராத்திரி நாளில்தான் .
சிவன் பார்வதிக்கும் தம் இடப்பாகம் கொடுத்து மகாசிவராத்திரி நாளில்

இப்படி ஆயிரமாயிரம் புண்ணியங்கள் நிறைந்தது மகா சிவராத்திரி என சிவபுராணங்கள் இயம்புகின்றன. வயதானவர்கள் அருகிலுள்ள சிவாலயத்தில் சிவபுராணம் பாராயணம் செய்யுங்கள் .

இளம் வயதினர் தூங்கமலிருந்து அருகிலுள்ள சிவாலயங்கள் பலவற்றிக்கும் சென்று சிவதரிசனம் செய்யுங்கள் .கல்வி,வேலை ,திருமணம் போன்ற உயர்வுகள் கிட்ட சிவபெருமான் உங்களுடனிருப்பார் .

வெளியூர் வெளிநாடுகளில் வாழ்ந்தால் என்ன சிவாலயம் செல்ல முடியாவிட்டாலும் சிவனின் படங்களை பூஜையறையில் வைத்து வழிபடுங்கள் . யாருக்கேனும் இந்த இனிய நாளில் அன்னதானமிடுங்கள் . அல்லது அன்னதானத்திற்கு உதவுங்கள் .
அன்பே சிவம் .

எங்கும் நீங்கமற நிறைந்திருக்கும் சிவபெருமானை வணங்குங்கள் .சிவபெருமான் உங்கள் உடனிருந்து வழி நடத்துவார் . ஓம் சிவாய நமஹ

இராமேஸ்வரத்தின் 22 தீர்த்தங்களில் நீராடுவதின் பலன்


இராமேஸ்வரம் தீர்த்தங்களை ஸ்ரீ ராமர் உருவாக்கி ஸ்ரீஇராமேஸ்வரை பிரதிஷ்டை செய்து இராவணை வதம் செய்த பின் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றார் என்பது புராணகால கூற்று அப்படி பல விஷேசங்கள் பெற்ற ஸ்ரீ ராமலிங்கசாமி திருக்கோவில் உட்புறத்தில் 22 தீர்த்தங்களும் வெளிப்பகுதியில் 31 தீர்த்தங்களும் இராமேஷ்வரத்தை சுற்றியும் அமைந்துள்ளன.

22 தீர்த்தங்களில் குளிப்பதால் என்ன நன்மை கிட்டுமென பார்ப்போம். ஆனால் திருக்கோவில் எதிரே உள்ள கடலில் கலந்துள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி விட்டே 22 தீர்த்தங்களில் நீராட வேண்டுமென்பதை நினைவில் கொள்ளவும்

22 தீர்த்தங்களும் நீராடுவதின் பலனும்

1. மகாலட்சுமி தீர்த்தம் - ஐஸ்வர்யம்
2.சாவித்திரி தீர்த்தம் - சாப நீக்கம்
3.சந்ததியில்லாதவர் சாப நீக்கம்
4. சரசுவதி தீர்த்தம் - அறியாமையால் சடங்கு செய்தாது விட்ட பாவ சாப நீக்கம்
5. சேது மாதவ தீர்த்தம் - செல்வம் ,லட்சுமி கடாட்சம் சித்த சுத்தி
6.கந்தாமன தீர்த்தம் - தரித்திர நீக்கம் ,
7 சுவாட்ச தீர்த்தம் - சொர்க்கத்திற்கு செல்லலாம்
8. கவாய தீர்த்தம் - நீண்ட ஆரோக்கியம்
9. நளதீர்த்தம் - நல்ல சுகம் சொர்க்கம்
10. நீள தீர்த்தம் - பெரும் யாகம் செய்த பலன்
11. சங்கு தீர்த்தம் - செய்நன்றி மறந்த பாவம் போகும்
12. சக்கர தீர்த்தம் -அனைத்து நோய் நிவர்த்தி
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் - மகா பாவங்கள் ,பிரம்மஹத்தி தோஷநிவர்த்தி. பில்லி .சூன்யம் போன்ற அனுமானுஷ்ய தீவினைகளிலிருந்து விடுதலை
14. சூரிய தீர்த்தம்- ஞானம்
15.சந்திர தீர்த்தம் - அழகு அறிவு ஞான விருத்தி
16. கங்கா தீர்த்தம் - ஞானம்
17. யமுனா தீர்த்தம் - ஞானம்
18. சிவ தீர்த்தம் - சிவகடாட்சம் ஐஷ்வர்யம்
19. சாத்யமிர்த தீர்த்தம் - சாப நீக்கம்
20 கயா தீர்த்தம் -ஞானம்
21 சர்வ தீர்த்தம் - பிறவி நோய் அனைத்து சரிர நோய் நீக்கம்
22. கோடி தீர்த்தம் -
ஸ்ரீ ராமர் ஸ்ரீ ராமலிங்க சுவாமியை பிரதிஷ்டை செய்ய பயன் படுத்திய மகா தீர்த்தமே கோடி தீர்த்தமாகும் . இந்த தீர்த்தத்தில் நீராடித்தான் கம்சனை கொன்ற பாவம் கிருஷ்ணபகவானுக்கு நீங்கியதாக புராணவரலாறு .

மேற்கண்ட பலன்கள் யாவுமே திருக்கோவில் கேட்ட செவிவழிச்செய்திகள் . சுற்றிலும் ராமேஷ்வரத்தை கடல் சூழ்ந்து இருக்க 22 தீர்த்தங்களில் நீராடி கொஞ்சம் சுவைத்துப்பாருங்கள் .ஒவ்வொரு தீர்த்தமும் ஒவ்வொரு சுவை . இராமயணக்காலத்தில் ஸ்ரீராமரால் பூஜிக்கப்பட் இந்த ஸ்தலத்தின் பெருமையுணர்ந்து இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கூடுவது வழிபடுவதுமே ,
ராமேஸ்வரம் காலத்தால் அழியாத தமிழர்க்கு கிடைத்த மகா பொக்கிஷம் .

Saturday, February 18, 2012

ஸ்ரீ ராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஸ்ரீ ராமேஸ்வரர் திருக்கோவில்



ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட
ஸ்ரீ இராமநாதர் (சிவபெருமான் )திருக்கோவில் ராமேஸ்வரம்


மூலவர் :
ஸ்ரீ இராமேஷ்வரர் (ஸ்ரீ ராமலிங்கம், ஸ்ரீராமநாதர்) என்ற பெயராலும் அழைக்கப்படுவதுண்டு


முதலில் ராமாயண காலத்தில் நடைபெற்ற சிலவற்றை நினைவு கூர்வோம் . இராவணை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமேஷ்வரம் கரைக்கு வந்த ஸ்ரீ ராமர் மகரிஷிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்து 22 தீர்த்தக்கிணறுகளை உருவாக்கி குளித்து ஸ்ரீ ராமர் ,சீதை ,லட்சுமணன் மூவரும் தோஷம் நீங்க சிவாயலயம் பிரதிஷ்டை செய்து சிவலிங்கம் அபிஷேகம் செய்தால் தீருமென முடிவெடுத்தனர் .

அதன் படியே அனுமனை கயிலாயத்திற்கு அனுப்பி சிவலிங்கம் கொண்டு வருமாறு குறிப்பிட்ட தேதி மணி குறித்து இராமேஷ்வரத்திற்கு கொண்டு வருமாறு கூறினார் . அதன் படியே அனுமனும் கயிலாயம் சென்று சிவலிங்கம் கொண்டு வந்து கொண்டிருந்தார் .

குறிப்பிட்ட நாள் மணியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் நேரமும் வந்தது . அனுமனைக்காணாது தவித்த சீதை உடனே மண்ணால் ஓர் சிவலிங்கம் பிடித்து வழிபாட்டை ஆராம்பித்தனர் அதையே தற்போதுள்ள இராமலிங்கம் , இராமேஷ்வரர் என அழைக்கிறோம் .

ஐந்து நிமிடம் தாமதமாக வந்த அனுமன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை தொடங்கியதை அறிந்து கோபமுற்று மண்ணாலான இராமேஷ்வர லிங்கத்தை அகற்ற முயன்று முடியாததால் ஏமாற்றமடைந்தார் .

அனுமனின் கஷ்டமறிந்த ஸ்ரீராமர் மண்ணாலான இராமேஸ்வரர் அருகில் அனுமன் கொண்டு வந்த விசுவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அனுமன் கொண்டு வந்த விசுவ லிங்கத்திற்கு முதல் பூஜையும் இரண்டவதாக சீதா செய்த மண்ணாலான சிலைக்கும் பூஜிக்குமாறு கூறினார்

இராமேஷ்வரத்தின் சிறப்புகள் :

ஸ்ரீ இராமனால் உருவாக்கப்பட்ட ஸ்தலம் .
பிரம்மஹத்தி முதலான 22தோஷங்களை நீங்கும் ஸ்தலம் .
இந்தியாவில் உள்ள புண்ணியஸ்தலங்களில் தெற்கே அமைந்த ஒரே புகழ் பெற்ற சிவஸ்தலம்.
இராமேஷ்வரம் 12 ஜோதி விங்களில் ஒன்று.
மூர்த்தி,தீர்த்தம் ,ஸ்தலம் ஆகிய முப்பெருமைகளை கொண்ட ஷ்தலம் .
இராமேஸ்வரத்தின் சேதுவின் படுக்கையில் அமைந்த ஷ்தலம் .
ஸ்ரீ தாயுமானவர் , ஸ்ரீ அருணகிரிநாதர், ஸ்ரீதிருஞானசம்பந்தர் ,ஸ்ரீ திருநாவுகரசர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம் .
சைவம் ,வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான ஸ்தலம் .

கால வரலாறு :

இராமயணக்காலத்தில் தோன்றிய இராமேஷ்வரம் திருக்கோவில் ஓர் சித்தரின் பாதுகாப்பில் இருந்து வந்ததாகவும் 12 ஆம் நூற்றாண்டில் இலங்கை அரசர் பராக்கிரம பாகு என்பவரால் முதல் மூலஷ்தானம் துவங்கப்பட்டதாக கல்வெட்டுகள் இயம்புகின்றன.

மூலவர் ஸ்ரீ இராமநாத சுவாமி சன்னதி:

முதல் பிரகாரத்தில் ஸ்ரீ இராமநாதர் எழுந்தருளியுள்ளார் . மணலால் சீதையால் ஊருவாக்கப்பெற்று இராமரால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட முதல் லிங்கமாகும் .

ஸ்ரீ விசுவநாதர் சன்னதி:

அனுமனால் கயிலாயத்திலிருந்து கொண்டு வரப்பெற்ற லிங்கமாகும் . ராமநாதர் சன்னதிக்கு வடக்குபுறம் அமைந்துள்ளது. ஸ்ரீ ராமரின் கூற்றுப்படி இன்றும் முதலில் விசுவநாதர் சன்னதியில் முதல் பூஜை நடைபெறுவது கவனிக்கத்தக்கது.

ஸ்ரீவிசாலட்சி அம்பிகை சன்னதி:

விசுவநாதரின் தேவியாக விசாலாட்சி அம்பாள் இங்குள்ளார் .முதல் பூஜை ஸ்ரீ விசுவநாதருடன் இணைந்து விசாலாட்சிதேவிக்கும் நடைபெறும்.

பர்வதவர்த்தினி அம்பிகை சன்னதி :

ஸ்ரீஇராமநாத சுவாமிகளின் அம்பிகையான பர்வதவர்த்தினி அமைந்துள்ளது .சுவாமி சன்னதிக்கு வலப்புறம் அம்பிகை இருப்பது மிக விஷேசமாகும் . இங்கு அந்த அமைப்பு உள்ளது. இங்குள்ள ஸ்ரீ சக்கரம் கண்டு வழிபட வேண்டிய ஒன்றாகும் .

திருக்கோவில் உட்பகுதியில் மேலும் காணவேண்டிய சன்னதிகள் :
1.அருள்மிகு விக்னேஸ்வரர்
2.ஸ்ரீ சேதுமாதவர்
3.ஸ்ரீ ஜோதிர்லிங்கம்
4. ஸ்ரீ சஹஷ்கரலிங்கம்
5. ஸ்ரீ வஜ்ரேஷ்வரர்
6. ஸ்ரீ நடராஜர்
7பதஞ்சலி முனிவர் ஜீவசமாதி
8. ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள்
9.ஸ்ரீ ஆஞ்சநேயர்
10.ஸ்ரீ 63நாயன்மார்கள்
11. ஸ்ரீ சிவதுர்க்கை
12. ஸ்ரீ மகாலட்சுமி

நடராஜர் சன்னதி :
உலகப்புகழ் கொண்ட நடராஜர் சன்னதி மூன்றாம் பிரகாரத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. மிகப்பெரிய அளவில் உள்ள மூன்றாம் பிரகாரம் அதிசயிக்க தக்க ஒன்றாகும் . இது சபாபதி சன்னதி எனவும் அழைக்கப்படும் .18 சித்தர்களில் ஒருவரான பதஞ்சலி முனிவர் ஜீவசமாதி அருகே அமைந்துள்ளது. இவர் ஆதிஷேசன் அவதாரமென அழைக்கப்படுகிறார் .

ஜோதிர்லிங்கம் விபீஷணரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அழகாக உள்ளது. திருக்கோவிலினுள் 22 தீர்த்தங்களும் மற்ற 31 தீர்த்தங்களும் திருக்கோவிலுக்கு வெளியே இராமேஸ்வரத்தை சுற்றி அமைந்து உள்ளது. எல்லா விசேச திருக்கோவில்களையும் போல 6 காலபூஜை நடைபெறுகிறது .

மண்டபம் பாம்பனுக்கு இடையே கடலில் தரைப்பாலம் அமைக்கப்பட்டதால் போக்குவரத்து எளிது. ஈரோட்டிலிருந்து பஸ்பயணமாக 375 கி.மீட்டரும் மதுரையில் இருந்து 165 கி.மீ தொலைவிலும் சென்னையில் இருந்து 666கி.மீட்டர் தொலைவிலும் இராமேஷ்வரம் உள்ளது. இராமேஷ்வரம் புகை வண்டி பயணமும் ஏதுவானதே.

முடிவுரை :
நம் ஆன்மீக அன்பர்கள் காசியில் துவங்கும் பயணத்தை இராமேஷ்வரத்தில் முடிப்பார்கள் . காசி ,திருப்பதி, கயிலாயம் போல மிகச்சிறப்புகளை கொண்டது ராமேஸ்வரம் . மூர்த்தி,தீர்த்தம் ஷ்தலமென முப்பெருமைகளை உடையது.

நல்லதோர் வாழ்வினை தொடங்க விரும்பும் யாவரும் குடும்பத்துடன் சென்று கடலில் அக்னி தீர்த்ததில் நீராடி பின் 22 தீர்த்தங்களில் நீராடி ஸ்ரீ இராமநாத சுவாமிகளையும் ,
ஸ்ரீ விசுவநாதரையும் சிவபெருமானுக்குரிய நாளில் வந்து வணங்கி வாழ்வின் எல்லாதோஷங்களும் விலகி நலமும் வளமும் காண வாழ்த்துக்கள் . நட்புடன் குரு.பழ.மாதேசு

Monday, February 13, 2012

அருணகிரி நாதருக்கு படிச்காசு வழங்கி காட்சி தந்த ஸ்ரீ சென்னி மலை சுப்பிரமணிய சுவாமி



ஸ்ரீசென்னிமலை முருகரின் அற்புதங்கள்

sri chennimalai murgar special

மூலவர் : ஸ்ரீ சுப்பிரமணியர் (தண்டாயுதபாணி கோலம் )

அமைவிடம் : ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் ஊரின் பெயரும் ,மலையின் பெயரும் ஒருங்கே அமையப்பெற்ற சென்னிமலை சுமார் 1800 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்திலிருந்து 1750அடி உயரத்தில் அமைந்துள்ள பெரிய குன்று ஆகும் இது சென்னியங்கிரி,சிரகிரி, சென்னிமலை என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

ஸ்தலவரலாறு :

ஆதிஷேசனுக்கும் வாயு பகவானுக்கும் ஒரு முறை யார் பலசாலி என பலபரிட்சை நிகழ்ந்த போது வாயுபகவானால் தூக்கி வீசப்பட்ட ஆதிஸேசனின் சிரசு விழுந்த மலை சிரகிரி (சிரம் என்றால் தலை கிரி என்றால் மலை) என்றும் பீடம் விழுந்த இடம் திருப்பதி ஏழுமலை என்றும் ஷ்தலபுராணாங்கள் இயம்புகின்றன.

பழங்காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க கொடுமணல் பகுதியில் வேளாளர் இனத்தின் பசுமாடு குறிப்பிட்ட புற்று மணல் உள்ள இடத்தில் பால் செரிவதை ஆச்சர்யத்துடன் தோண்டிப்பார்க்க சுயம்பு மூர்த்தியாக ஸ்ரீ முருகப்பெருமான் இடுப்பு பகுதிவரை மட்டுமே செதுக்கப்பட்ட நிலையில் வெளிப்பட்டார் .

அழகிய முருகரின் சிலை அனைவரும் மெய் சிலிர்த்து கொண்டாட அங்கு வந்த முருகர் அடியார் முருகர் அருள் வந்து ஸ்ரீமுருகப்பெருமானை பிரதிஷ்டை செய்ய சிரகிரி குன்றில் வைத்து வழிபாடு செய்யுங்கள் எனச்சொல்ல ஆன்மீக அன்பர்கள் முருகப்பெருமானே நேரில் வந்து சொன்ன வாக்காக எண்ணி பாதி உருவமேயுள்ள முருகர் சிலையை அழகாக செதுக்கலாம் என சிற்பி செதுக்க முதல் வெட்டிலேயே ஏற்பட்ட காயம் காரணத்தால் இரத்தம் வர ஸ்ரீ முருகப்பெருமானை அப்படியே கொண்டு சென்று பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர் .

இன்றும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியாக காட்சி தரும் மூலவர்க்கு இடுப்பு பகுதிக்கு கீழ்பகுதி செதுக்கப்படாமல் அப்படியே உள்ளது. உளிபட்ட சிறுகாயமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி முருகப்பெருமான் இங்கு கிரக அதிபதியாக வீற்றிருக்கிறார்

சிறப்புகளும் அதிசயங்களும் :

ஸ்ரீகந்தர் சஷ்டி கவசம் பாடல் பாலன்தேவராயன் அவர்களால் அரங்கேற்றம் செய்யப்பட்ட ஸ்தலம் பின்நாக்கு சித்தர் உறையுமிடம் ,அருணகிரி நாதரால் பாடல் பெற்ற ஸ்தலம் முருகப்பெருமானை காண வேண்டி அருணகிரி நாதர் " உனை எனதுள் நினையும் அன்பைத்தருவாயே" எனப்பாடி மனமுருகி வேண்டியதால் சென்னிமலையில் காட்சி தந்து முருகப்பெருமான் அருணகிரி நாதருக்கு "படிக்காசு" வழங்கினார் என்பது ஸ்தலவரலாறு கூறும் உண்மை.

,9 நவக்கிரகங்களை தன் மூலவிமானத்தில் ஒருங்கே கொண்ட பரிகாரத்தலம் ( இங்கு வணங்கினால் நவகிரகங்களை வணங்கிய புண்ணியம் கிட்டும் ) , வள்ளி தெய்வானை தேவியர் அமுதவள்ளி சுந்தரவல்லியாக தவமிருந்த தலம் ,செங்கத்துறை பூசாரி அவர்களால் மாட்டு வண்டியை 1320படிகளை ஏற்றிய ஷ்தலம் , மாமாங்க தீர்த்தம் பொங்கும் சுணை, சரவணமுனிவர் ,தன்னாசியப்பர் அருளும் மலை, காளைகள் வாயிலாக முருகப்பெருமானுக்கு தீர்த்தம் கொண்டு வரும் அதிசயமென எண்ணிலடங்காக அதிசயங்களை கொண்ட மலையாக விளங்குகிறது சென்னிமலை .

திருக்கோவில் செல்ல வழி :

ஈரோடில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் 30கி.மீட்டரில் சென்னிமலை முருகர் திருக்கோவில் உள்ளது . சேலத்திலிருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 80கி.மீட்டர் தொலைவிலுள்ள பெருந்துறையில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் 10 கி.மீட்டர் தொலைவில் சென்னிமலை உள்ளது.

ஆறு காலபூஜை நேரங்கள் :

விழாகாலபூஜை காலை 7 மணி காலசந்தி காலைபூஜை 8 மணி உச்சிகால பகல் பூஜை பகல் 12 மணி சாயரட்சை மாலை பூஜை 5 மணிக்கும் இராக்காலம் பூஜை இரவு 7 மணிக்கும் அர்த்தசாம பூஜை இரவு 8 மணிக்கும் நடைபெறுகிறது.

திருவிழாக்கள்:

தைப்பூசம் ,பங்குனி உத்திரம் ,சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம் , ஆடி அமாவசை கிருத்திகை,கந்தர்சஷ்டி சூரசம்ஹாரம் , கார்த்திகை தீபம்,

மரத்தேர் :

ஸ்ரீமுருகப்பெருமான் வேங்கைமரமாக வந்து வள்ளியை மணம்புரிந்ததும் ,திருக்கோவில்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் ஆன்மீகமரமான வேங்கை மரத்தினால் செய்யப்பட்ட மரத்தேர் பக்தர்கள் விரும்பும் நாளில் நேர்த்திக்கடன் செய்யலாம் கட்டணம் ரூ700 ஆகும் . திருப்பணி செய்யவிரும்பும் பக்தர்கள் செயல் அலுவலர் தொலைபேசியில் அழைக்கலாம் .

அலுவலகம் : 04294- 250223

மலைக்கோவில் : 04294-250263 ,292595
இணையத்தள முகவரி : www.chennimalaitemple.org

மின்னஞ்சல் : chenkovil@sancharnet.in


திருக்கோவில் பற்றிய மேலும் விபரங்கள் எமது நன்பர் திரு பிரகாஷ் அவர்களின் பிளாக்கில் அறியலாம்

www.chennimalaimurugan.blogspot.com

இந்த வலைப்பூவில் சென்னிமலை முருகரின் முழு விபரத்தொகுப்பு உள்ளது . அல்லது இப்போது படித்துக்கொண்டிருக்கின்ற வலைப்பூவில் உள்ள முருகர் படத்தை கிளிக்கினால் மேற்கண்ட வலைப்பூவிற்கு (blog) செல்லும் . இங்கு வாழ்ந்த அடியார்கள் சித்தர்கள் பற்றி எழுதிக்கொண்டே போகலாம் .

சிறிய பகுதியில் அடைக்க முடியாத பெரும் புகழும் 2000வருடங்கள் பழமையான உலகலாவிய பெருமைகள் சிறப்புகள் கொண்ட ஸ்ரீசென்னிமலை சுப்பிரமணியசாமியை வந்து வணங்குங்கள் .

கலியுகத்தில் ஸ்ரீ தேவேந்திரனால் பூஜிக்கப்பட்ட 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழங்கால சரித்திரம் கொண்ட ஸ்ரீ சென்னிமலை பாலசுப்பிரமணியரை தரிசனம் செய்து வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று வாழுங்கள் .ஓம் முருகா சரணம் முருகா

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...