Monday, December 6, 2010

உங்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையவேண்டுமா?


மனித வாழ்வில் எவ்வளவு நாள் சந்தோஷமாக போகின்றது ?
எவ்வளவு நாள் மன வருத்ததுடன் உள்ளோம்
என பார்த்தால் பல நாட்கள் கஷ்டமாகவும்;
சில நாட்கள் மட்டும் சந்தோஷமாக போகின்றது.
அப்போது ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக செல்ல
என்ன வழி என தேடிய போது அருணகிரி நாதர் இயற்றிய


" நாள்என் செய்யும் வினைதான் என்செயும்
எனை நாடி வந்த கோள் என்செயும் கொடுங்கூற்று என்செயும்,
குமரேசர் இருதாளும் சிலம்பும்
சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும்
கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே."

என்கிற இப்பாடல் முருகப்பெருமான், முருகன்,சுப்பிரமணியர்,மயில் வாகனன், ஆறுமுகத்தோன் ,வள்ளிமணாளன் என்றெல்லாம் அழைக்கப்படுகின்
இறைவன் முருகருக்காக அருணகிரி நாதர் இயற்றிய இப் பதிகத்தை நாள் உடற்சுத்தம் செய்து ஒரு நினைப்போடு முருகப்பொருமானை நினைத்து
இப்பாடலை பாட , ( நம்பிக்கையடன் படிக்க )
உங்களின் இன்றைய நாள் நல்ல நாளாகவும் மகிழ்ச்கியாகவும்
துன்பம் இல்லாமலும் செல்வது கண்கூடு .இப்பாடலை பாராயணம் செய்த உங்களுக்கு
எல்லாம் வல்ல திருமுருகப்பெருமான் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.
உங்கள் அனுபவங்களை எனக்கு எழுதுங்கள், நன்றி.

Wednesday, December 1, 2010

திருவண்ணாமலையில் அஷ்டலிங்க தரிசனமும் ஜோதிடதில் நம் ராசிக்கு வழிபடவேண்டிய லிங்கங்கள்


திருவண்ணாமலை கிரி வலத்தில் காணப்படும் அஷ்டலிங்கங்களை தரிசித்தால் ஏற்படும் நன்மைகள் :

1 இந்திரலிங்கம் :


 (கிழக்கு) திருவண்ணாமலை ராஜகோபுரத்திலிருந்து கிழக்கே கிரிவலம் செல்லும்பாதையில் அமைந்த முதல் லிங்கம் கிழக்குத்திசையில் அமைந்த லிங்கம் .
 கிரக அதிபதி :
சூரியன் ,சுக்கிரன் வழிபாட்டின் பலன் : லட்சுமிகடாட்சம் நீண்ட ஆயுள் ,புகழ் ,செல்வம் கிட்டுமென்பது இறைஐதீகம்

 2 அக்னி லிங்கம் : 


(தென்கிழக்கு )கிரிவலப்பாதையில் செங்கம் ரோட்டில் தாமரை குளத்திற்கு அருகேயுள்ளது. கிரிவலப்பாதையின் வலப்பக்கத்தில் அமைந்த சிறப்பு பெற்ற லிங்கம் தென்கிழக்கு திசை கிரக அதிபதி :சந்திரன் வழிபாட்டு பலன் :நோய் ,பிணி,பயம் ,எதிரிகள் ஆகிய தொல்லைகள் விலகும்.

 3. எமலிங்கம் (தெற்கு )


 ராஜகோபுரத்தில் இருந்து சுற்றி வருகையில் தரிசிக்கும் 3 வது லிங்கமாகும் . சிம்ம தீர்த்தம் அருகே அமைந்துள்ளது. கிரக அதிபதி :செவ்வாய் பலன் : ரத்த சம்பந்த நோய்கள் தீரும் ,இடம் பூமிப்பிரச்சினைகள் தீரும் .பொருளாதார உயர்வு ஏற்படும் .

4 நிருதிலிங்கம் (தென்மேற்கு) : 


இவ்கு வழிபட்டு மலையை பார்த்தால் நந்தீஷ்வரர் தலையை உயர்த்தி பார்ப்பது போல தெரியும்.சனி தீர்த்தம் அருகேயுள்ளது . திசை அதிபதி: ராகு.வழிபாட்டுப்பலன் :
சுக வாழ்வு ,குழந்தைப்பேறு

 5.வருணலிங்கம் (மேற்கு )


 வருணதீர்த்தம் அருகே அமைந்துள்ளது. 8வது கிலோமீட்டரில் அமைந்த லிங்கம் மேற்கு திசாஅதிபதி :சனி வழிபாட்டு பலன் : நீண்ட ஆயுள் ,புகழ் 6. வாயுலிங்கம் (வடமேற்கு ) திசா அதிபதி :கேது வழிபாட்டுபலன் : பொறுமை ,அமைதி,

7 குபேரலிங்கம் (வடக்கு): 


திசா அதிபதி :குரு பலன் :தரித்திரம் நீங்கி பொருளாதாரம் உயரும்

8.ஈசான்ய லிங்கம் (வடகிழக்கு ) : 


எல்லா நிலைகளும் கடந்து ஈசனை தேடுமிடம் திசா அதிபதி :புதன் இறை நிலை அடைய வழிகாட்டுமிடம் எட்டு லிங்கமும் முக்கிய மானவையே . ஏதேனும் பெளர்ணமி இரவில் தரிசனம் செய்து விட்டு எழுதுங்கள்
கீழ் கண்ட ராசிகாரகள் வழிபடுவதன் மூலம் மேன்மை பெறலாம்


மேசம் - நிருதிலிங்கம்

ரிஷபம் -இந்திர லிங்கம்

மிதுனம்-ஈசான்ய லிங்கம்

கடகம் - வாயு லிங்கம்

சிம்மம் -அக்கினி லிங்கம்

கன்னி- ஈசான்ய லிங்கம்

துலாம் -இந்திர லிங்கம்

விருச்சிகம்-எமலிங்கம்

தனுசு -குபேர லிங்கம்

மகரம் -வருண லிங்கம்

கும்பம்-வருண லிங்கம்

மீனம் -குபேர லிங்கம்

Tuesday, November 30, 2010

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தரிசிக்க வேண்டிய இடங்களும்,காணப்படும் மடங்களும்


திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் காணப்படும் கோவில்கள் மடங்கள் :

1. இந்திர நந்தீஷ்வரர்
2 இந்திர லிங்கம் (முதல் லிங்கம்)
3.விநாயகர் சன்னதி
4.அக்னிலிங்க தீர்த்தம்
5.அக்னி லிங்கம் (2வது லிங்கம்)
6.சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம்
7.காளி அம்மன் கோவில்
8.தட்சிணாமூர்த்தி சன்னதி
9.ரமணர் ஆசிரமம்
10.யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம்
11.ஆதிபராசக்தி சித்தர் பீடம்
12. ஆறுமுகசாமி ஆலயம்
13.சிம்ம தீர்த்தம்
14.எமலிங்கம்(3வது லிங்கம்)
15.ஜய்வனேஸ்வரர் ஆலயம்
16.ஜோதி விநாயகர் ஆலயம்
17.சோனா நதி
18.மகாசக்தி மாரியம்மன் கோவில்
19.காளிங்க நந்தன கோபலசாமி
20. நிருதிலிங்கம் (4வது லிங்கம்)
21.நவலிங்கம் நவசக்தி
22.திரு நேர் அண்ணாமலையார் சன்னதி
23.வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்
24.ராகவேந்திரா பிருந்தாவனம்
25.பழனி ஆண்டவர் கோவில்
26. இராஜேஸ்வரி திருக்கோவில்
27.சூர்ய லிங்கம்
28.சூர்ய லிங்கம்
29.முக்தி முரளி கிருஷ்ணா
30.சுவாமி சிவானத்தா சேவா சங்கம்
31.உதவும் கரங்கள்
32.வருணலிங்கம் (5வது லிங்கம்)
இவரை தரிசிப்பதால் ஜலதோஷம், சிறுநீர் சக்கரை வியாதிகள் தீரும் என்பது உப செய்தி 33.ஆதி அருணாசலேஸ்வரர் கோவில்
34. மாணிக்க வாசகர் கோவில் (திருவெம்பாவை அருள் செய்த இடம் )
35.ரேணுகை மாரியம்மன் கோவில்
36.சுத்தானந்த ஆசிரமம்
37.சாய்பாபாயி இல்லம்
38.வாயுலிங்கம் (6வது லிங்கம்)
39.நமசிவாய ஆசிரமம்
40.சந்திரலிங்கம்
41.லோபா மாதா அகஸ்தியர் ஆசிரமம்
42.குபேர லிங்கம் (7வது லிங்கம்)
43.இடுக்கு பிள்ளையார் கோவில்
44. மகாலட்சுமி துர்காதேவி ஆலயம்
45.ஈசான்ய லிங்கம் ( 8வது லிங்கம்)
46. ஈசான்ய ஞான தேசிகர் ஜீவ சமாதி
47.அம்மை அப்பன் கோவில்
48. சுப்பிரமணிய சாமி திருக்கோவில்
49.துர்க்கை அம்மன் ஆலயம்
50.பெரிய ஆஞ்சனேயர் கோவில்
51.பவழக்குன்று
52.பூத நாரயணப்பெருமாள் திருக்கோவில்.

பின்குறிப்பு:

இவை நான் கிரிவலப் பாதையில் வரிசையாக பார்த்த இடங்கள்
ஆங்காங்கே சில இடங்கள் விடுபட்டிருக்கலாம்.
அடுத்த முறை கிரிவலம் செல்லும்போது திருத்தப்படும்.

நீங்களும் கிரிவலப்பாதயில் வலம் வந்து மேற்கண்ட
ஆலயங்களை தரிசித்து இறையருள் பெற வாழ்த்துக்கள்.

Thursday, November 25, 2010

திருவண்ணாமலையில் பார்க்க வேண்டிய கோவில்; பவழக்குன்று (pavala kundru)



நமக்கு எங்கு சென்றாலும் புதிதாய் ஒர் இடத்தை கண்டு பிடித்து தரிசனம் செய்வதில் தனி ஒர் ஆர்வம்.

அப்படி திருவண்ணாமலையில் அண்ணாமலையார் உண்ணாமலையாரை தரிசித்து விட்டு தேடுகையில் தான் பவழக்குன்று பற்றி ஒர் பெட்டிக்கடை நன்பர் சொல்ல அக்கோவில் எங்குள்ளது என விசாரிக்க அக்கோவில் கிரிவலப்பாதயில் கடைசி லிங்கமான ஈசான்ய லிங்கத்தை தரிசித்து விட்டு வரும் வழியில் சின்னக்கடை தெருவில் விசாரிக்க ஒரு சிறிய வீதியின் வழியே செல்ல பவழக்குன்று உள்ளது

. சுமார் 200 படிக்கட்டுகள் ஏறினால் அங்கே காவல் துறையினர் பயன்படுத்தும் வாக்கி டாக்கி ரிப்பீட்டர் உள்ளது. அதன் அருகே மிக அழகாகவும் ரம்மியமான குட்டிமலை அது. நான் அக்கோவிலை தீபத்திருநாள் அன்று மாலை 4.00 மணிக்கு சென்றடைந்தேன்.

அளவான கூட்டம் . பழங்குன்றின் மேல் இருந்து பார்த்தால் திருவண்ணாமலை கோவில் அமைப்பும் .தீபம் ஏற்றுவதையும் தெளிவாக காண முடிகிறது. சரி இனி இறைவனையும் இறைவியையும் தரிசனம் செய்து வருவோம் என்றெண்ணி கோவிலுக்குள் நுழைந்தோம்.

அங்கே வயதான அர்சகர் ஒருவர் நம்மை வரவேற்றார். அவ்விடத்தை பற்றி அறிந்த கொஞ்சமான பக்தர்கள் விநாயர் சன்னதி. வள்ளி தெய்வானையுடன் உடனமர் முருகப்பெருமான் வெளிப்புற வாசலில் தரிசனம் செய்து நந்தீஷ்வரர் தரிசித்து மூலவர்வர்களாக அருள்பாலிபவர்கள் இறைவன் :


பவழகிரிஷ்வரர் ,அர்த்தநாரீஷ்வரர்

இறைவி: முத்தாம்பிகையையும்

வணங்கி விட்டு சற்றே கோவிலில் இளைப்பாறி இவ்விடத்தின் சிறப்பை அர்ச்கரிடம் கேட்க அவர் கோவிலின் உட்பகுதியில் சிறிய அறை அதில் படுத்தவாறு தான் உள்நுழைய முடியும். அங்கு ரமணர் தியானம் செய்த இடத்தை காட்டினார்.

அட நமக்கு மட்டும் அதிஷ்டம் தான் உள்ளே நுழைந்த நான் அவ்விடத்தை பார்த்த நான் அசந்து தான் போனேன். அழகான அமைதியான இடம் .

எவ்வளவு பெரிய மகான் தியானம் செய்த இடம் நமக்கு பார்க்க வாய்ப்பு கிடைத்து அதில் 5 நிமிடம் உட்கார்ந்து வர வாய்ப்பு கிடைத்தில் பெருமிதம் அடைந்து அர்ச்சகருக்கு நன்றி சொல்லி வெளியில் வந்து திருவண்ணாமலையின் கோபுரங்கள் தரிசித்து விட்டு அக்கோவிலின் பின்புறமுள்ள பெரிய பாறையில் உட்கார்ந்து

மாலை 6.00 மணிக்கு ஏற்றிய தீபத்தை சிவநாமத்தை சொல்லி தரிசித்து விட்டு தெளிவாக தீபத்தை தரிசனம் திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பினேன்.

பவழக்குன்றின் மிக முக்கிய சிறப்பம்சங்கள் :
அன்னை பார்வதி தவம் புரிந்து அருணாசலேஷ்வருடன் ஐக்கியமானதும், கெளமர் பகவான் ரமணர் மற்றும் பல மகரிஷிகளும் வசித்த புனிதமான இடம் இப்பவழக்குன்று. இங்கு தான் ரமண மகரிஷிகள் தனது முதல் உபதேசத்தை அன்னை அழகம்மையாருக்கு இப்பவழக்குன்றில் 1899 ஆம் ஆண்டில் அருளியதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.


அவர் அருளிய குறிப்பு ;

" அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான், என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது ; 

 நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. 

இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாய் இருக்கை நன்று..



ரமணாஸிரமத்தின் மூலம் இப்பவழக்குன்று கோவில் 27. 8.2004 ல் கும்பாபிசேகம் செய்யப்பட்டது. அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.


PAVALAKUNDRU ,THIRUVANNAMALAI LORD:
pavalagiriswarar, arthanariswarar MOTHER: muthambikai. MOTHER parvathi did PENANCE in this PAVALAKUNDRU (coral rock ) and was obsorbed in to ARUNACHALALESWARA , gomthama maharshi.bagavan RAMANA and many other also sactified the place.

எமக்கு அறிந்த வகையில் தகவல்களை தேடியும் சேகரித்தும் உங்களுக்கு பவழக்குன்றினை பற்றி அளித்துள்ளேன்.

 ஓர் சிறிய புராணக்கதை :

திருக்கயிலாயத்தில் பார்வதி தேவி ஒருநாள் விளையாட்டாக சிவபெருமானின் கண்களை பொத்திக்கொள்ள உலகம் முழுவதும் இருண்டுபோனது. அதனால் உலகத்தில் உள்ள உயிர்கள் துன்பத்திற்கு உள்ளானது. அந்தப்பாவத்தை போக்கிக்கொள்ள அம்பிகை காஞ்சிபுரம் சென்று சிவபெருமானை நினைத்து தவம் இருந்தார் .அப்போது சிவபெருமான் தோன்றி திருவண்ணாமலை சென்று தவம் செய்யும்படி கூறினார் .

 அதன்படி பார்வதி தேவி திருவண்ணாமலை வந்து "பவழக்குன்று" மலையில் பர்ணசாலை அமைத்து கவுதம முனிவர் உதவியுடன் தவம் இருந்தார் 


.கார்த்திகை பரணி நாளில் பிரதோஷ நேரத்தில் மலைமேல் ஜோதி உருவாக தரிசனம் கண்டுமகிழ்ந்தார்.அப்போதுசிவபெருமான் பார்வதிக்குஇடப்பாகத்தைகொடுத்துஅருளாசி வழங்கினார்.

கோவில்சிறிய அளவுதான்எனினும் மிக்கஅமைதியையும் தெளிவையும்இப்பவழக் குன்று உங்களுக்கு தரும் என்றுநம்பி இப்பயண கட்டுரையை முடிக்கிறேன்.திருவண்ணாமலையில் தரிசிக்க வேண்டிய அற்புத ஸ்தலம் இது.

உங்களுக்கும் சிவனருள் கிட்ட பவழக்குன்றை தரிசித்து விட்டு எழுதுங்கள்.

நன்றி.

Friday, November 19, 2010

திருநீறின் மகிமைகள் THIRUNEERU


திருஞான சம்பந்தர் 2ஆம் திருமுறை

திரு ஆலவாய்

பண்: காந்தாரம்


'மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன் திரு ஆலவாயன் திருநீறே '..


என திருஞான சம்பந்தரால் திருநீறின் பெருமை விளக்கியுள்ளார்.

திருநீறு நெற்றியில் இடும் போது இப்பதிகத்தை பாடுதல் சிறப்பு.

திருக்கோவில்களில் நாம் திருநீறு வாங்கும் போது கவனிக்க வேண்டியது :

1. திருநீறு இடது கையை கீழே வைத்து வலது கையால் வாங்கப்பட வேண்டும்
2.அத் திருநீறு இடது கைக்கு மாற்றக் கூடாது
3.நல்ல சுத்தமான தாளில் மாற்றிக்கொள்ளலாம்
4. திருநீறை கீழே சிந்தக்கூடாது. அப்படி சிதறினால் அவ்விடம் சுத்தம் செய்ய வேண்டும் 5.திருக்கோவிலில் வாங்கிய திருநீறை கொட்டிவிட்டு வரக்கூடாது .

திருநீறு நெற்றியில் இடும்போது கவனிக்க வேண்டியது :

1.கிழக்கு ,வடக்கு திசைகளில் நின்றாவாறே திருநீறு இட வேண்டும்

2.சிவ நாமங்களான "சிவ சிவ" "ஓம் நமச்சிவாய"
"ஒம் சிவாய நமஹ" உச்சரித்தல் நல்லது.
உங்கள் இஷ்ட தெய்வங்களை நினைத்து இடுவதும் நல்லதே.
3. திருநீறு என்றால் ஐஸ்வர்யம் என்பது பொருள் .அப்படியெனில் ஐஸ்வர்யம் நம்முடனிருக்க திருநீறு இடுவோம்..
4.வலது கை சுண்டுவிரல், கட்டை விரல் தவிர்த்து ஏனைய விரல்கள்களால்

திருநீறை நெற்றியின் இடக் கண் புருவ ஆரம்பத்தில் இருந்து வலது கண் புருவ இறுதி வரை மூன்று கோடுகளாக இடுதல் வேண்டும்.

இரு புருவ மத்தியில் அம்பாளுக்கு உகந்த குங்குமம் வைத்துக்கொள்ளலாம் பயன்கள்:

1. சிவனருள்
2. மன அமைதி
3. நெற்றியின் புருவ மத்தியியை வைத்து தான் ஹிப்டானிசம் செய்வதாக சொல்லப்படுகிறது. தீருநீறு ,குங்குமம் வைக்கும் போது தவிர்க்கப்படுகிறது.

4. நம் நெற்றியில் தேவையற்ற நீர் உறிஞ்சும் சக்தி உடையது
5. நாம் திரு நீறு இட்டு வெளியே செல்லுதல் கண் திருகஷ்டியில் இருந்து விலக்கு.

மேற்கோள்:

பெணபாற் புலவரான அவ்வையார் தன் உரையில்
"நீறில்லாத நெற்றி பாழ்" என்கிறார் .
எப்போதெல்லாம் குளிக்கிறீர்களோ அப்போதெல்லாம் இடுங்கள் .
திருநீறு வாங்கும்போது நல்ல வெண் திருநீறு எங்கு கிடைக்குமென சிவனடியார்களை விசாரித்து வாங்குங்கள்.ஆன்மீகத்திற்கு சுத்தம் முக்கியம்.

இப்படி பல முன்னோர்களால் சுட்டிக்காட்டப்பட்ட "திரு" நீறை அணிவோம்

திவ்விய மான வாழ்வைப் பெறுவோம். ஐஸ்வர்யம் வந்தால் அனைத்தும் வந்த மாதிரி தானே.? திருநீற்றுப்பதிகம் பாடி பாண்டிய மன்னரின் வெப்பு நோயை திருஞான சம்பந்தர் நீக்கியதாக வரலாறு.

சுத்தமான வெண் திருநீறு வாதத்தினால் உண்டாகும் 81 நோய்களையும்.பித்தத்தினால் உண்டாகும் 64 நோய்களையும் கபத்தால் உண்டாகும் 215 நோய்களையும் தீர்க்கு வல்லமை உள்ளதாக சாஸ்திரங்கள் சொல்லுகிறது.


உங்களுக்கு இக்கட்டுரை திருநீறு அணியவும் சிவாலயம்

செல்லும் ஆர்வத்தை ஊட்டும் என நம்பி என் இடுகையை முடிக்கிறேன் .

தவறுகள் சுட்டிக்காட்டினால் திருத்தப்படும். நன்றி.

Wednesday, November 17, 2010

திருவண்ணாமலை உருவான கதை thiruvannamalai story


திருத்தலப் பெயர் :


திருவண்ணாமலை THIRUVANNAMALAI

இறைவன் : அண்ணாமலை (சிவன் sivan லிங்க உருவில்)
இறைவி: உண்ணாமலை அம்மன்

கோவில் உருவான கதை:

புராண காலத்தில் இருந்து இன்று வரை உலகை ஆட்சி செய்யும் கடவுள்களான பிரம்மா(படைத்தல்) விஷ்ணு என்னும் பெருமாள் (காத்தல் ) சிவன் (அழித்தல்) தன்னால் படைக்கப்பட்ட இவ்வுலகத்தை செவ்வனே வழி நடத்தி மக்களுக்கு பல இன்ப துன்பங்களை உணர்த்தி நல்வழிப்படுத்தி காத்து வந்தனர்.

ஒரு நாள் , மனிதனை படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும் காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் தங்களுக்குள் "யார் பெரியவர் " ..?என்ற கர்வம் ஏற்பட்டு கருத்து மோதல் ஏற்பட சிவபெருமானிடம் யார் பெரியவர் என தீர்ப்பு கேட்கலாம் என சிவனை தேடி வந்தனர். சிவன் என்ன விபரம்? எனக்கேட்க அதற்கு பிரம்மாவும் விஷ்ணுவும் தாங்கள் வந்த விஷயத்தை சொல்ல சிவபெருமான் சிரித்தவாறே உங்களுக்கு ஒரு போட்டி வைக்கிறேன் உங்களில் யார் ஜெயிக்கிறீர்களோ அவர்களே உயர்த்தவர்.! என அறிவிக்கிறேன்


என்றவாறு சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக வான் உயர்ந்து நின்று என் அடியும் (கால்அடி) முடியும் (தலைமுடி) தொட்டு விட்டு முதலாக வருபவர்களே பெரியவர் எனக்கூறி வான் உயர்ந்து நிற்க பிரம்மாவும் விஷ்ணுவும் பல நாட்கள் சிவனின் அடியும் முடியும் தேடி அலைந்து தன் தோல்வியை ஒப்புக்கொண்டு "சிவபெருமானே நீங்கள் தான் பெரியவர் " தயவு செய்து வாருங்கள் எனக் கூற இறைவன் ஜோதிப்பிழம்பாக காட்சி தந்தார் .

அந்த அற்புதத்தை நிகழ்த்திய இடம்தான் திருவண்ணாமலை THIRUVANNA MALAI வாருங்கள் அண்ணாமலை உண்ணாமலை அம்மனை தரிசித்து வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துக்கள் . 21 .11.2010 அன்று தீபத்திருநாள் நடைபெறுகிறது.
நான் சென்று பார்த்துவிட்டு மேலும் தகவல்களுடன் இக்கட்டுரையை விரிவு படுத்துகிறேன் .

விஷேச செய்தி : தீபத்திரு நாளில் அண்ணாமலை .உண்ணாமலை அம்மன் இருவரும் கிரிவலம் வந்து மக்களுக்கு காட்சி அளிப்பதாக வரலாறு.

இக்கட்டுரயில் தவறு இருப்பின் ஆன்மீகப்பெரியோர்கள் மன்னிகவும்.

சுட்டிக்காட்டவும். எதிர்கால சந்ததிக்கு எம்மால் ஆன சிறு முயற்சி .

Tuesday, November 9, 2010

என் குரு எழுத்துச்சித்தர் பாலகுமாரன்


புத்தகம் படிப்பது சிறு வயதிலிருந்தே எனக்கு பிடித்த ஒன்று.

எனக்கு சிறு வயதிலிருத்தே தினகரன் பேப்பரையும். தினமலர் சிறுவர் மலரையும் படித்துதான் தமிழ் கற்றுக்கொண்டேன் என்பதே உண்மை அதற்காக என் தகப்பனாருக்கும் என் ராஜா அண்ணாவுக்கும் நன்றி சொல்லவேண்டும் .

என் 16 வயதில் கடுமையான கஷ்டங்களிலும் மன உளைச்சலிலும் திரிந்த போது எனக்கு என் மூர்த்தி அண்ணா கொடுத்த உதவிய பாலகுமாரன் புத்தகங்கள் அகல்யா,எட்ட நின்று சுட்ட நிலா. திருப்பூந்துருத்தி, இனிது இனிது காதல் இனிது. இப்படி பல பாலகுமாரன் புத்தகங்கள் படித்து வாழ்க்கை சூட்சமங்களை நிறைய அறிந்த கொள்ள முடிந்தது.


ஆனால் இதுவரை அவருக்காக ஒரு கடிதம் கூட எழுத முடியவில்லை என்கிற ஆதங்கம் எனக்கு உண்டு பல கதைகளில் படிப்பினைகள் தெளிவாக தன் வீச்சில் எமக்கு உணர்த்திய ஆசான் அவர் .அவர் புத்தகங்கள் இன்றும் தேடி படிக்கிறேன். வாங்கி சேமிக்கிறேன். பலருக்கும் கொடுத்து அறிமுகப்படித்தி இருக்கிறேன்.

எழுத்துச்சித்தர் பாலகுமாரன் குருவாக ஏற்றுக்கொண்டது 18 வயதிலிந்து தான். அவருக்கு ஒரு குரு உண்டு என அவர் அடிக்கடி சொல்லும் யோகி ராம் சுரத்குமார் அவர் திருவண்ணாமலை வாழ்ந்த யோகி அவரையும் எனக்கு பிடிக்கும் .

எழுத்துச்சித்தர் பாலகுமாரன் பிடிக்கும் என்பதாலும் அவருக்கு குருவான யோகி ராம் சுரத்குமாரின் படம் என் வலைப்பக்கத்தின் முகப்பை அலங்கரிக்க விட்டுள்ளேன்.


நீங்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவராக இருப்பின் அல்லது மற்ற புத்தங்கள் வாசிப்பவராக இருப்பின் பாலகுமாரன் புத்தகங்களையும் தொட்டு விட்டுச் செல்லுங்கள்.


என்றாவது ஒரு நாள் எழுத்துச்சித்தர் பாலகுமாரனை பார்க்கவேண்டும் என விருப்பம்

.அப்படி ஒரு நாள் சந்தித்து விட்டு வரும்போது '
பின்னொரு நாளில் விரிவாய் எழுதுகிறேன்.
நன்றி.

கட்டுரை : என் மதிப்புமிக்க ஆசான்கள்

1988 வருடத்தில் நான் முருகேசன், ராஜ்குமார் மூன்று பேரும் மும் மூர்த்திகளாய் குருவரெட்டியூர் பள்ளியில் வலம் வந்த காலம் அது.

ஒரு கிராமத்து அரசு மேல் நிலைப்பள்ளி எப்படி அக்காலத்தில் இருந்திருக்கும் வறுமைக்கோட்டுக் கீழ் பல மாணவர்கள் படிக்க எங்கள் மூவருக்கு பள்ளி முருகேசன் ஆசிரியர் அவருக்கு சொந்த ஊர் ரெட்டிய பாளையம் அவர் தான் ஆங்கில வகுப்பு எடுப்பார்.

அவரின் ஆங்கில புலமை அபரிவிதமானது. எங்கள் டீம் பார்டர் மார்க்கை தாண்டாது. பையன் நன்றாக படிக்கட்டும் என எங்கள் மூவர் வீட்டிலும் முருகேசன் ஆசிரியரிடம் டியுசன் விட எங்கள் வீட்டிலும் முருகேசன் வீட்டிலும் டியூசன் காசு கொடுப்பது ரொம்ப சிரமப்பட்ட காலம் அது. பல மாதங்களுக்கு நானெல்லாம் டியூசன் பீஸ் கொடுத்ததே இல்லை.

ஆனால் ஒருநாள் கூட ஆசிரியர் என்னிடம் கேட்டதே இல்லை. ஆசிரியர் மனைவி கலா அக்கா பல நாள் கணக்கு பாடத்திற்காக குட்டு வாங்கியதுண்டு. அதற்கு மேல் கணக்கு பாடத்தை நன்றாக யாரேனும் சொல்லித்தர முடியுமா ? என தெரியாது. அவ்வளவு நன்றாக சொல்லி தருவார்கள் . நமக்கு தான் சுட்டு போட்டாலும் வராது.

ஒரு நாள் புது வீடு கட்டி ஆசிரியர் குடும்பத்துடன் சந்தைக்கு பக்கமா குடி போய்டார் எனக்கெல்லாம் கஷ்டாமா போய்டுச்சி. ஆனா டியூசன் அரசமரத்து வீதீலயே தான் இருந்துச்சி. 9வது 10 வதும் அவர்கிட்டயே தான் டியுசன் அப்புறம் நாங்க 3 பேரும் 60 சதவீதம் மார்க் எடுக்கிற அளவுக்கு தயாராய்டோம் எங்க டீம்ல சம்பத் மட்டும் சேரமாட்டான்.

எங்களுக்கு கொஞ்ச நாள்ல டியுசன் சென்டரை நைட் டியூசன் சென்டரா மாத்தி எங்க வீதி பசங்களுக்கு உதவி செஞ்சாரு அப்ப நானு, முருகேசன் , ராஜ்குமார் .நியோ சர்ச் தர்சீஸ் தெய்வம் சீனிவாசன் முருகேசன் ஆசிரியர் பொண்ணு கோமதி எல்லாம் படிப்போம் .10வது படிக்கிறப்ப அவர் செஞ்ச உதவி மகத்தானது, அந்த உதவிதான் என்னை 65 சதவீதம் எடுக்க கூடிய மாணவனா என்னை உயரத்திச்சு.

இப்ப 15 வருடம் கழிச்சு திரும்பி பாக்கிறப்ப நான் நல்ல அரசு வேலையில இருக்கேன். முருகேசன் எல்.ஐ.சி ஏஜென்டா நல்ல நிலைமயில இருக்கான் .சம்பத்தும் ராஜாவும் நல்ல நிலையில இருக்காங்க . தர்சீஸ் டாக்டராகி சேவை பண்ணிட்டு இருக்கான்.


போன வருடம் வரைக்கும் என் ஆசான் இருந்த திரு. முருகேசன் ஆசிரியர் சென்ற வருடத்தில் திடிரென உடல் நிலை மோசமாகி இறந்துவிட்டதை எல்.ஐ.சி முருகேசன் தான் போன் பண்ணி சொன்னான். எனக்கு மனதை உலுக்கி எடுத்த மறைவு அது.

உடலை பார்த்து அழ வாய்ப்பு இல்லாமல் 2ஆம் நாள் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வந்தேன் பல தீபங்கள் ஏற்றி வைத்த ஒரு அகல் விளக்கு அணைந்து விட்டது மிக்க வருத்தமே. அந்த உடல் மறைந்தாலும் அந்த ஆன்மா எங்களை விட்டு மறையாது.


ஒரு மாணவனாய் அவர்க்கு எந்த கைமாறும் நான் செய்ய வில்லை. ஒரு ஆசானாய் எங்கள் வாழ்வை உயர்த்திய முருகேசன் ஆசிரியருக்கும் ,
எனது அரசு மேல்நிலைப்பள்ளி. குருவைக்கும்(g.h.s.school,guruvareddiyur-638504) எனது வணக்கத்தை தெரிவித்து

என் மற்ற ஆசான்கள் திரு.மோகனகாந்தி,

திரு ஜெகதீசன் ,திரு தங்கவேலு, சீ.கே என அழைக்கப்படும் சிஃகுழந்தையப்பன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து இடுகையை முடிக்கிறேன். நன்றி

Saturday, November 6, 2010

Arulmigu gurunathaswamy temple,poravipalayam,velli tirupur near








ஈரோடு மாவட்ட கோவில்கள்:


ஆலய தரிசனம் ;


ஆலய பெயர், முகவரி:

பெரிய குருநாத சுவாமி கோவில் பொரவிபாளையம்
வெள்ளித்திருப்பூர் பவானி வட்டம் ஈரோடு மாவட்டம்

கோவில் அமைவிடம் ; அந்தியூர் வெள்ளித்திருப்பூரில் இருந்து
குருவரெட்டியூர் செல்லும் வழியில் 5 கி.மீ ல்


மூலவர்: குருநாதசாமி.

கோவில் விபரங்கள் :

குருநாதசாமி கோவில் குருவரெட்டியூரில் இருந்து 3 வது கி.மீட்டரில் உள்ளது. பலமுறை எனது நண்பர்களுடன் சென்று வந்ததுள்ளதாலும் அங்குள்ள இறை அனுபவத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் எனும் ஆர்வத்தின் விளைவே இக்கட்டுரை.

இக்கோவிலின் சிறப்பு அம்சமே மன நிலை சரியில்லாதவர்கள் பேய் பிசாசுகள் தொல்லையால் இரவு உறக்கம் இல்லாமல் தவிப்பவர்கள், ஏதேனும் தடைகளால் முன்னேற்றம் இன்றி தவிப்பவர்கள் என பலர் குறைகளை தீர்க்கும் தெய்வமாக குருநாதசுவாமிகள் விளங்குவது தனிச்சிறப்பு. சரி கோவிலுக்குள் செல்வோமா..?


ஒரு வெள்ளிக்கிழமை நாளில் மாலை நாம் சென்ற போது கோவிலின் முகப்பில் நம்மை வரவேற்பது ஊஞ்சல் மரங்களுக்களிடையில் பாம்பு புற்று அங்கே தரிசனம் செய்து சற்று தூரம் நடந்தால் அங்கே கோவிலின் முகப்பு நம்மை வரவேற்கிறது.


பெரிய குருநாதர் அழகாகவும் கம்பீரமாகவும் நமக்கு காட்சி தர பல பெண்கள் ஊதுபத்தியை கையில் பற்ற வைத்து இறைவனை கும்பிட்டவாறு நின்று கொண்டிருக்க அங்காங்கே உட்கார்ந்த படி தலை விரித்த படி சில பெண்கள் ஆடிக்கொண்டிருக்க நமக்கு கொஞ்சம் பயமாகதானிருக்கிறது சற்றே ஆசுவாசப்படுத்தி இறைவனை வணங்கி விட்டு உட்கார்ந்தோம் . இரவு எட்டு மணிக்கு குருநாதசாமிக்கு சிறப்பான பூஜை நடக்கிறது. அதைத்தொடர்ந்து 2 பூஜைகள் நடக்கின்றது.

குக்கிரத்தின் அருமையான மரங்களுக்கிடையில் அமைதியான சூழ்நிலை இறை வழிபாட்டை அமைதியாக்குகிறது. இக்கோவிலில் பல மன நோயளிகள் , பேய் பிசாசு பிடித்தவர்கள் குணமாகிச் செல்வதையும் பல பேரின் அனுபவங்களையும் சொல்லக்கேட்டிருக்கிறேன் நீங்களும் நேரில் சென்றால் கண்டிப்பாக உணரலாம்.


பஸ் வசதி:

அந்தியூரில் இருந்து கண்ணாமூச்சி செல்லக் கூடிய ஏ5 பஸ் மற்றொரு தனியார் பேருந்தும் உண்டு. பவானியில் இருந்து 30கி.மீ குருவரெட்டியூர்க்கு பி10, பி5, ஜெயகிருஷ்ணா.,முருகன் பஸ்களில் வந்து இறங்கி குருவரெட்டியூர் பஸ் நிலையத்தில் இருந்து 3கி.மீ செல்ல குருநாத சாமி கோவிலை வந்து அடையலாம். கோவிலுக்கு வருபவர்கள் பூஜை முடித்து செல்ல போதிய பஸ் வசதி இல்லை. வாகன ஏற்பாட்டுடனும் இரவு உணவு எடுத்து வருதல் சிறப்பு. கோவிலில் சிறிய கடை உண்டு.


விசேஷ பூஜை நாள் :

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 7 மணிக்கு மேல். உப செய்தி: அந்தியூர் புகழ் மாட்டுச்சந்தை சின்ன குருநாதசாமி கோவில் இக்குருநாத சாமிக்கு தம்பி முறை ஆவார். வருடாவருடம் ஆடி மாத குருநாதசாமி கோவிலுக்கு இக்கோவிலில் அழைப்பு விடுக்கப்பட்டு பெரிய குருநாதசாமி கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்லக் கேட்டுருக்கிறேன் .


எம் அனுபவம் :

இங்கு நல்லதொரு சக்தி இருப்பதாய் உணர்கிறேன்

நீங்களும் வந்து தரிசித்து விட்டு எழுதுங்கள் நன்றி.

Saturday, August 21, 2010

நன்றிகள்

எனது எழுத்துப் பணிக்கு முதல் படிக்கட்டாக இருந்த ஆருயிர் நன்பர் திரு.சோலோ செல்வா அவர்களுக்கும் ., கணிணிப்பொறியில் வடிவமைத்துக் கொடுத்த நன்பர் திரு. பிரகாஷ் ,சென்னிமலை அவர்களுக்கும் , வெளியிட்டு உதவுகின்ற கூகுள் இணைய தளத்திற்கும் என் மனமுவந்த நன்றிகள்.

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...