Saturday, September 24, 2011

அருள்மிகு மீனாட்சி உடனமர் சொக்கநாதர் ஆலயம் ,சொக்கநாத மலையூர் ,வெள்ளித்திருப்பூர், பவானி வட்டம்



அருள்மிகு மீனாட்சி உடனமர் சொக்கநாதர் ஆலயம்,


சொக்கநாத மலையூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ள மலைக்கோவிலாகும், ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் வழியில் சொக்கநாத மலையூர் என்னும் ஊரில் அமைந்திருக்கும் அழகிய திருக்கோவிலாகும் .சொக்கநாத மலையூரில் இருந்து சுமார் 1 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இத்திருக்கோவில் நந்தவனம் போல அழகிய தோற்றத்தில் அமைந்திருக்கிறது.

பழங்கால அரசமரங்கள் புளிய மரங்கள் என மரங்களின் வயதை யோசித்துப்பார்த்தாலே சுமார் 200 வருட பாரம்பரியம் புரியும் . சொக்கநாதர் மலையின் அடிவாரத்தில் உள்ள அரசமரத்தினடி விநாயகர் தரிசனம் செய்து மலையின் படிகள் ஏற ஆரம்பித்தால் அடிவார லிங்கத்தை தரிசனம் செய்யலாம். பழங்காலத்தில் அழகாய் செதுக்கிய படிக்கட்டுகள் இதமானவை. 50வது படிக்கட்டு அருகில் பெரிய தாமரைக்குளம் அமைந்துள்ளது. அதன் மேலே நடந்து சென்றால் அழகிய கற்களால் ஆன கொடிமரத்தை வணங்கி திருக்கோவிலை அடையலாம். சுமார் 200படிக்கட்டுகள் இருக்கும் .

திருக்கோவில் மலையே ஓர் பெரிய பாறையின் உச்சியில் அமைந்துள்ளது போன்ற உணர்வு நமக்கு . திருக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. திருக்கோவில் உள்ளே நுழையும் முன் பிரமாண்ட நந்தியும் உள்முகப்பில் சிறிய நந்தியும் கடந்து சென்றால் இடப்புறம் உள்ள கணபதியாரை வணங்கி மூலரான சொக்கநாதரை லிங்க வடிவில் தரிசனம் செய்யலாம்.அருகில் மீனாட்சி அம்மன் அழகுடன் காட்சி அளிக்க அருகே உள்ள பிரகாரத்தில் அமைந்திருக்கும் முருகர் சன்னதி பார்க்க தூண்டுவதாக அமைந்துள்ளது.



பழங்காலத்தில் சந்தனம் அரைக்கும் கட்டையில் சந்தனம் தருகிறார்கள் இதமான குளிர்ச்சியுடன் திருக்கோவிலில் பிரசாதமாக தரப்படும் சந்தனமும்,திருநீரும் "சிவாய நமஹ " எனச்சொல்லி இட்டுக்கொள்ளலாம். திருக்கோவில் வெளிப்பிரகாரத்தில் ஆஞ்சனேயர் சன்னதி,ஜயப்பர் சன்னதி, சூரிய மூர்த்தி,பின்புறம் விநாயகப்பெருமான் , குருபகவான், அண்ணாமலையார், சண்டிகேஸ்வரர் , நவகிரகங்கள் ,மஹீஸ்வர வர்த்தினி, விஷ்ணுதுர்க்கை ,கஜலட்சுமி சிலைகள் என திருக்கோவில் சுற்றி அமைந்துள்ள சிலைகள் அழகானவையாகும். மூன்று நிலைக்கோபுரங்களுடன் அமைதியான இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ள சொக்கநாதர் மலை பல சூட்சமங்களுடன் அமைந்துள்ளது,


திருக்கோவிலின் பழங்காலத்தை அறிய முடியவில்லை எனினும் முதல் திருப்பணி கி.பி 1920 ஆம் ஆண்டில் நடைபெற்றுள்ளதாகவும் ,சொக்கநாத மலையை அமைத்த பெரியவர் இங்கேயே வாழ்ந்து ஜீவசமாதி அடைந்ததாகவும் செவிவழிச்செய்திகள் தெரிவிக்கின்றன. பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகிறது. இயற்கை சூழலில் அமைந்த மீனாட்சி உடனமர் சொக்கநாதர் ஆலயம் பார்க்கவேண்டிய ஆலமாகும்.

பழங்காலத்தில் உருவான சிவத்தலமான சொக்கநாதரை வணங்கி வாழ்வில் நலங்கள் பெற்றிடுங்கள் .வாழ்க வளமுடன் .கருத்துரைகள் எதிர்பார்க்கப்படுகிறது.

நட்புடன் குரு.பழ.மாதேசு. குருவரெட்டியூர்

Sunday, September 18, 2011

கைரேகை ஜோதிடத்தில் சாலமன் ரேகையின் சிறப்பு


அண்மையில் ஓர் கைரேகை ஜோதிடம் பார்க்கும் ஓர் நிபுணரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சாலமன் ரேகை என்ற ஒன்றைப்பற்றி சில விளக்கங்களை சொன்னார். அதைப்பகிரவே இந்தப்பதிவு.

கைரேகை சாஸ்திரத்தில் ஒர் மனிதனின் கைகேகையில் சாலமன் ரேகை என்ற ஒன்று இருந்தால் எதிர்காலத்தை முன் உணரும் சக்தி உடையவராக இருப்பார் என்றும். 26 உயிர்களின் உணர்வுகளை அறிந்தவராக அவர் இருப்பார் என்றும் ,புலனாய்வு துறையிலும் துப்பறியும் துறையிலும் சிறந்து விளங்குவார் என்றும், மனிதர்களை உற்று கவனித்து அவர்களுக்கு சில விஷயங்களை நடப்பதற்கு முன்பே கூறும் சக்தி உடையவராக இருப்பார் என்றும் கைரேகை ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதாம் சரி உங்களுக்கு சாலமன் ரேகை உள்ளதா என அறிய அருகில் உள்ள புகைப்படத்தை பாருங்கள்.


ஆண்கள் வலது கையையும் பெண்கள் இடது கையையும் பாருங்கள் .அதில் குருமேடு என்பது பெருவிரல் அருகிலுள்ள ஆள்காட்டி விரலில் கீழ்பகுதியில் உள்ள மேடாகும். (படத்தில் பேனாவில் குறித்துள்ள படி இருப்பது குருமேடு.அதில் கீழ் நோக்கியவாறு கோடுகள் இருப்பதே சாலமன் ரேகையாகும்) சாலமன் எனும் ஓர் அரசருக்கு முன் உணரும் சக்தி இருந்ததாகவும் அவர் பெயராலேயே சாலமன் ரேகை என அழைக்கப்பட்டதாம்.

சுவாரஷ்யத்திற்காக உங்கள் கையை சோதித்துப்பாருங்கள் , நீங்களும் சாலமனாக இருக்கலாம். சாலமன் ரேகைக்கு "சக்திரேகை" எற்று மற்றொரு பெயரும் உள்ளது. கருத்துரைகளில் குட்டலாம்.

Saturday, September 17, 2011

சீதேவி,பூதேவி உடனமர் பருவாச்சி பெருமாள் திருக்கோவில் ,மைலம்பாடிசீதேவி,பூதேவி உடனமர் பருவாச்சி பெருமாள் திருக்கோவில் ,மைலம்பாடி





சீதேவி,பூதேவி உடனமர் பருவாச்சி பெருமாள் திருக்கோவில்


ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் மைலம்பாடி அருகில் கொண்ரெட்டிபாளையம் அருகில் கோம்புக்காடு எனும் ஊரில் அமைந்துள்ள திருக்கோவிலாகும். அழகிய வைணவத்திருத்தலமான பருவாச்சி பெருமாள் திருக்கோவில் 400 வருடங்களுங்களுக்கு முந்தைய ஆலயமாகும். அதற்கு திருக்கோவில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள கோவில் கல்வெட்டே எடுத்துக்காட்டாகும்.

சுற்றிலும் பசுமையாக விவசாயம் நடைபெற ஒலகடத்திலிருந்து தொட்டிய பாளையம் செல்லும் வழியில் அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோவில் அருகில் பருவாச்சி பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.

கிழக்கு நோக்கி அமைந்த திருக்கோவில் கொடிமரத்தை வணங்கி விட்டு உட்பிரகாரத்திலிருந்து இடப்புரம் ஆஞ்சநேயர் சிலையை வணங்கலாம்.

திருக்கோவில் மூலவராக சீதேவி,பூதேவி உடனமர் பருவாச்சி பெருமாள் திருக்கோவில் காண்பதற்கு அழகான கற்சிலையாக நின்று அருள்பாலிக்கின்றார். உட்பிரகாரத்தை உற்று நோக்கினால் திருக்கோவில் பழங்கால கல்வெட்டு அழகு புரியும்.திருக்கோவில் பிரகாரத்தை சுற்றி வருகையில் வில்வ மரத்தடியில் நாகர் சிலை வணங்கத்தக்கது.

தினமும்பூஜைகள் நடைபெறுகிறது. சனிக்கிழமை ,புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

பழமையான வைணவத் திருக்கோவிலை தரிசித்த திருப்தியுடன் விடைபெறுகிறேன், நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் காக்கும் கடவுளாம் பருவாச்சி பெருமாளின் அருள் பெற்று உய்ய வேண்டுகிறேன்.

Thursday, September 15, 2011

யார் சித்தர்..?


பழங்காலத்தில் பல்வேறு யோகிகளும் சித்தர்களும் இந்து மதத்தை பின்பற்றி மக்களுக்கும் ஆன்மிகத்திற்கும் பல வகையான நன்மைகளைச் செய்தார்கள் .பெரும்பாலான சித்தர்கள் சிவ வழிபாடு செய்பவர்களாகவும், சிவன் வழித்தோன்றவாகவும் ,சிவாலயங்களில் இருக்கும் பகுதிகளில் இருந்து வந்தவர்களே அதிகம் இருக்கிறார்கள்.

திருவண்ணாமலையில் பகவான் ரமணர், யோகி ராம் சுரத்குமார் ,சதுரகிரியில் இன்றும் சித்தர்கள் வாழ்வதாக பெளர்ணமி நாட்களில் வலம் வருவதாக உணரப்படுகிறது. குறிப்பாக சைவத்தை பின்பற்றியவர்களாகவே சித்தர்கள் இருக்கிறார்கள். சிற்றின்பத்தை விட பேரின்பமே உயர்ந்ததெனக் கருதி யோக வாழ்வு மேற்கொண்டவர்கள் சித்தர்கள்.

யாம் கேள்விப்பட்ட வகையில் சித்தர்கள் ஒரு வேளை உணவோ ,தேங்காய்,பழங்களோ அல்லது தண்ணீர் ,சாப்பிட்டு மட்டும் உயிர் வாழ்ந்து வந்ததாகவும் பல படிப்பினைகளில் அறிகின்றோம்.ஆனால் இன்று இந்து மதத்தை தவறாக பயன்படுத்தி சித்தர்கள் உருவில் போலியாக நடித்து பணம் பறித்தும்,தாங்கள் யோகிகள் என்று நம்ப வைத்து பல தவறுகளை ஏற்க முடியவில்லை .சரி இதற்கு என்னதான் தீர்வு.

சித்தர்களை எப்படி அடையாளம் காண்பது? இதற்கு பதில் தேடல் தான்.ஆர்வமிருந்தால் தேடுங்கள் கண்டிப்பாக காட்சி தருவார்கள் எப்படி தேடுவது அனுதினமும் சிவ வழிபாடு மேற்கொண்டால் கண்டிப்பாக காணலாம்.


ஆனால் யாரெல்லாம் சித்தர் யோகியாக இருக்க முடியாது என எனக்கு தெரிந்தவற்றை முன் வைக்கின்றேன் 1. காவி உடையில் நான் பல வித்தைகளை செய்வேன் என்று சொல்பவர் 2. மாடமாளிகை பட்டு மெத்தையில் உறங்குபவர் 3. மூன்று வேளையும் நன்றாக உண்பவர் 4.பெண் சீடர்களை அருகில் வைத்துக்கொள்பவர் 5. ஆசிரம நிதிக்காக வெளிநாடுகளில் பணம் திரட்டுபவர் 6.பாத அபிஷேகம் செய்யச் சொல்பவர் 7.வாயிலிருந்து லிங்கம் எடுப்பவர் 8. பல வகையான நவின கார்களில் வலம் வருபவர் என இந்த 8 வகையான ஆட்களுக்கும் சித்தராகும் தகுதி இல்லை. இறைவன் அருகில் உட்கார்ந்திருப்பதால் மட்டும் சித்தர் ஆகும் ஞானம் கிட்டாது. எனவே சித்தர்கள் யோகிகள் பெயரில் போலிகளை மக்கள் தங்கள் அறியாமையில் இருந்து விலகி இனம் கண்டு கொள்ள வேண்டும் .


எல்லோரும் கூட்டமாக ஓர் ஆன்மீக வாதியை தேடிச் செல்கிறார்கள் .அவர்கள் பின்னே நாமும் செல்லாமல் அவரைப்பற்றி உணர்ந்து அறிந்து தெளிந்து ,சாக்கடையா சந்தனமா எனப் புரிந்து ஆசிர்வாதம் பெறுவது நமக்கும் குடும்பத்திற்கும் நல்லது. இன்றும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். காடுகளில், மலைகளில்,சூட்சம உருவங்களில் எளிமையாக ஒரு துளி திருநீற்றில் பலர் வாழ்வில் ஒளி ஏற்றுகிறார்கள். உண்மையான கடவுள் வழிபாடு செய்பவர்களுக்கு ஆபத்து, உதவிகள் தேவைப்படும்போது அருகே வந்து பல நன்மைகளைச் செய்கிறார்கள்.மனித வாழ்வில் சாதாரண மனிதனாய் உலக வாழ்வைக்கண்டு மெளனமாய் புன்னகைத்து வலம் வருகிறார்கள்.


சித்தர்களை நீங்கள் பார்த்தே ஆக வேண்டுமெனில் சிவ வழிபாடு அனு தினமும் மேற்கொள்ளுங்கள். முதல் சித்தர் சிவபெருமான் என்பதை உணருங்கள் . எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவபெருமானை வணங்குங்கள். சித்தர்கள் பற்றியும் சித்தர்கள் வாழ்வு பற்றியும் உங்களுக்கு புலப்படும். ஓம் நமச்சிவாயம். இந்த இடுகை சித்தர்கள் பற்றி யோகிகள் பற்றி அலசலே தவிர யாரையும் புண்படுத்தும் எண்ணமில்லை.மக்களை ஆன்மீகம் எனும் போர்வையில் ஏமாற்றக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட இடுகையாகும். கருத்துரைகளில் உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து


நட்புடன் குரு.பழ.மாதேசு

Thursday, September 8, 2011

அழகில் மயக்கும் கோபிசெட்டிபாளையம் அத்தாணி சாலை








கோபி(GOBI) என அழைக்கப்படும் கோபிச் செட்டியாபாளையம் (Gobichetty palayam) மினி கோடம்பாக்கம் என்று அழைப்பதில் அர்த்தம் இல்லாமல் இல்லை.பச்சை பச்சையாக வளர்ந்திருக்கும் நெற்பயிர்களும் வரிசையாக அமைந்த பனை மரங்களின் அழகும் அருகே ஓடும் பவானி ஆற்றின் பெரிய சிறிய வாய்கால்களும் மிக அழகானவை.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சையாக புல்வெளிகளும் மேற்குமலைத் தொடரின் அழகையும் இயற்கை நமக்களித்த கொடைகளாகும்.

கோபியிலிருந்து அத்தாணி வரும் இந்த அழகிய சாலையில் தான் பாரியூர் அம்மன் திருக்கோவிலும் ,கருங்கரடு முருகன் ஆலயமும்,கூகலூர் வயல் வெளிகளும் ,பவானி ஆறு கடந்து செல்லும் அழகும்,வளைந்து வளைந்து செல்லும்பாதைகளும் மனதை இளகுவாக்கும்.

ஒர் அற்புத பயணமாக இருக்கும். பல பிரபல திரைப்படங்களில் வந்து போகும் இடமாக கோபியும் அதைச்சுற்றியுள்ள இடங்களும் பார்க்கவேண்டிய இடமாகும்.

கருத்துரைகள் வரவேற்கப்படுகிறது.

ARULMIGU pathrakaliamman thiru kovil history ,ANTHIYUR





அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவில்



ஈரோடுமாவட்டம் பவானி வட்டத்தில் பிரசித்தி பெற்ற அந்தியூரில் ஆட்சி செய்யும் அன்னையின் ஆலயமாகும் . அருள்மிகு பத்ரகாளியமன் திருக்கோவில் அந்தியூர் பஸ் நிலையத்திற்கு அருகில் (100மீட்டர்) கோபி சாலையில் அமைந்த ஓர் அழகிய ஆலயமாகும்.


திருக்கோவில் முகப்பில் குண்டமும் அரசமரத்தடியில் பெரிய விநாயகர் சிலை தரிசிக்க வேண்டிய ஒன்றாகும்.

திருக்கோவில் இராஜகோபுரத்துடன் இணைந்த இரு நிலைக்கோபுரங்கள் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த ஓர் அழகிய முகப்பு நம்மை வரவேற்க உள்ளே சென்றால் அழகிய கொடிமரத்தையும் சிம்ம வாகனமும் தரிசித்து ஆண்,பெண் என இரு காவல் தெய்வங்களை வணங்கி திருக்கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தால் அழகிய உருவில் அம்பிகை அருள்மிகு பத்ரகாளியம்மன் அழகிய திருக்கோலம் பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தும்.

திருக்கோவில் வடக்குதிசை நோக்கி அமைந்துள்ளது. திருக்கோவில் பின்புறம் முத்துமினியப்பர் சன்னதி யும் அருகில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதிகளும் கண்டு தரிசிக்கவேண்டிய சன்னதிகளாகும் .

பழங்காலத்தில் இருந்து அந்தியூர் பகுதி வாழ் மக்களால் விரும்பி வணங்குகின்ற அந்தியூர் பத்ரகாளியம்மன் திருக்கோவில் அருகில் கோட்டை போன்ற அமைப்பு இருந்ததாக செவி வழிச்செய்திகள் இயம்புகின்றது.

பல ஊர்களில் இருந்து பக்தர்களால் அம்மாவசை, பௌர்ணமி நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது.திருக்கோவில் எல்லா நாட்களிலும் திறந்திருக்கிறது.

பலர் வாழ்வில் ஏற்றம் தந்த அன்னை அந்தியூர் பத்ரகாளியம்மனை வணங்கி நம் வாழ்வில் எல்லா நலன்களையும் பெற வாழ்த்தும்

அன்பன் குரு.பழ. மாதேசு.

நிறைகுறைகளை கருத்துரைகளில் இயம்பலாம்.

நன்றி

Arulmigu kariakalimman temple,mylampadi,bhavani taluk






அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோவில்


ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் அமைந்த ஓர் அற்புதமான ஆலயமாகும். ஒலகடத்தில் இருந்து தொட்டியபாளையம் செல்லும் வழியில் 5வது கி.மீட்டரில் அமைந்த அருள்மிகு கரியகாளியம்மன் ஆலயம் பார்க்கவேண்டிய ஆலயங்களில் ஒன்றாகும்.

பழங்காலமாக சுமார் 400ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த ஆலயத்தை ஆன்மீகப்பெரியோர்கள் முயற்சியினால் 26.1.04 ஆம் நாள் திங்கள் காலை 09.00 முதல் 10.00மணி வரை குடமுழுக்கு நடத்தி திருக்கோவிலை அழகாக்கி இருக்கிறார்கள்.


பழங்காலத்தில் மையிலம்பாடி எனும் இந்த ஊர் மயிலாபுரிபட்டணம் என அழைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கொண்ரெட்டிபாளையம்,சானார்பாளையத்திற்கு அருகில் உள்ள கரிய காளியம்மன் ஆலயம் 18கிராம மக்கள் வணங்கும் அம்பிகையாக அமைந்து அருளாட்சி வழங்குவது சிறப்பான ஒன்றாகும்.

திருக்கோவில் மூலவராக கரியகாளியம் மன் வரும் பக்தர்கள் துயர் தீர்க்கும் அம்பிகையாக அமைந்திருப்பது சிறப்பான ஒன்றாகும்.அருள்மிகு விநாயகர்,சுப்பிரமணியர் துர்க்கை அம்மன் சன்னதிகள் அமைந்திருப்பது சிறப்பாகும்.

திருக்கோவில் முன்பாக 75 அடிக்குண்டமும் பெரிய இரண்டு முனியப்பர் சிலைகளும் பிரமிக்க வைக்கின்றன.

உள் பிரகாரத்தை சுற்றி வரும்போது திருக்கோவில் எங்கும் காணாத அதியமாக நின்ற நிலையில் வன்னிமரத்தடியில் விநாயகர் அழகாக அமைந்திருப்பது வியப்பான ஒன்றாகும்.

ஒருநிலைக்கோபுரமும் அழகான குதிரைச்சிலைகளும் சிற்பக்கலை அழிந்து விடவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகும். எல்லா நாட்களிலும் திருக்கோவில் திறந்தே இருக்கின்றது.திருக்கோவில் திருமண மண்டபம் அருகிலேயே அமைந்துள்ளது.

பஸ் வசதி சரியாக இல்லை எனினும் பவானியில் இருந்து ஒலகடம் செல்லும் மினிபஸ்கள் கரியகாளியம்மன் திருக்கோவில் வழியாகவே செல்கின்றன .அம்மாவசை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

பழங்காலத்தில் மையிலாபுரிப்பட்டணம் என அழைக்கப்பட்ட மையிலம்பாடி எனும் ஊரில் அமைந்த அருள்மிகு கரியகாளியம்மனை தரிசித்து வேண்டிய எல்லாமும் பெற வாழ்த்துகிறேன்.

Monday, August 29, 2011

நீரிழிவு (அ) சர்க்கரை நோய்க்கு எளிய மருத்துவம்




நீரிழிவு நோய் எனப்படும் சக்கரை நோய் வந்துவிட்டால் மனிதர்கள் படுகின்ற கஷ்டம் சொல்லி மாளாதது. அதற்கு இந்த எளிய வைத்திய முறை பயன் அளிப்பதாக ஓர் கட்டுரையில் படித்ததை உங்களுக்குடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

தினமும் இரவு ஓர் வெண்டைக்காயை எடுத்து இரு முனைகளையும் அறுத்து விட்டு மீதமுள்ள வெண்டைக்காயை மூன்று பாகமாக கட் செய்து அரை டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் எழுந்து வெறும் வயிற்றில் தண்ணீரில் உள்ள வெண்டைக்காய் துண்டுகளை தூக்கி போட்டு விட்டு வெண்டைக்காய் ஊறிய அந்த தண்ணீரை குடித்து வந்தால் உடம்பில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறதாம்.

மாதம் ஒரு முறை மருத்துவரிடம் செக்கிங் செல்லும்போது உங்கள் சக்கரையின் அளவை பாருங்கள்.பின்பு இந்த டிப்ஸ்ஐ பயன்படுத்தி பாருங்கள். இதைப்பயன் படுத்தியவர்கள் ரத்ததில் சர்க்கரையின் அளவு குறைவதாக சொல்கிறார்கள்.

டாக்டர் தரும் மருந்தை எடுத்துக்கொண்டு மேற்கண்ட வெண்டைக்காய் நீரை குடித்து விட்டு உங்கள் சர்க்கரை நோயின் அளவு குறைந்தால் எமக்கு எழுதுங்கள்.

நான் படித்ததில் பிடித்த இடிகையை பகிரவே இவ்விடுகை .

மருத்துவர் ஆலோசனைப்படி பின்பற்றலாம்.

நன்றி

Sunday, August 28, 2011

திருஷ்டிபூசணிக்காயும் சாலை விபத்தும்




திருஷ்டி என்பது நம் பராம்பரியமாக செய்யப்படும் மூட நம்பிகைகளில் ஒன்று. கண்பட்டது ,அல்லது யாரோ ஒருவர் நம் வளர்ச்சியில் பொறமைகொண்டு பார்த்தால் நாம் நமக்கு கண்பட்டு விட்டதாக அலறுகிறோம். ஒருவர் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்பதை உணர மறுக்கிறோம்.

கண் வைத்து விட்டதாக சொல்லி எலுமிச்சம் பழத்தை நான்கு பாகமாக அறுத்து நான்கு திசைகளில் வீசுகின்றோம். அடுத்து தேங்காயை வாங்கி தலையை சுற்றி ரோட்டில் உடைத்து திருஷ்டியை போக்குவதாக சொல்லி சந்தோஷப்பட்டுக்கொள்கிறாம். அடுத்து இதை விட பெரிதாக பூசணிக்காயை நான்காக ஆக அறுத்து சிகப்பு தடவி ரோட்டில் உடைத்து போட்டு விடுவோம்.

கழிந்து விடுகிறதா நம் திருஷ்டி , !

சரி கழிந்து விட்டதாகவே நாம் வீட்டில் படுத்துக்கொள்வோம்..! நாம் ரோட்டில் உடைத்த சிதறு தேங்காய் என்ன செய்யும் ? எங்கேயோ பார்த்து ரோட்டில் கவனமில்லாமல் செல்கின்றவரினின் இருசக்கர வாகனத்தின் முன்பக்க டயர் பஞ்சர் ஆகி அவருக்கு ஏதேனும் விபரீதம் நடந்தால் நம் திருஷ்டி கழியுமா? பாவக்கணக்கு அதிகம் தானே ஆகும்.

திருஷ்டி பூசணிக்காய் மேல் இருசக்கர வாகனத்த விட்டு எத்தனையோ பேர் கை கால்கள் இழந்து தவிக்கிறார்கள் .நமது நம்பிக்கை நமக்கு மட்டுமே அடுத்தவர்களை அது பாதிக்கலாமா ?

திருஷ்டியை நம்பினால் நீங்கள் அடுத்தவர்களுக்கு செய்கின்ற துன்பத்தையும் ஏற்க வேண்டியது தானே உண்மை. நமது நம்பிக்கைகளை நான் குறை சொல்லவில்லை. அப்படி தேங்காயும் பூசணிக்காயும் உடைக்கும் பட்சத்தில் அது ரோட்டிற்கு வரக்கூடாது .

அப்படி உடைத்தால் அந்த இடத்தை சுத்தம் செய்கின்ற பொறுப்பு நமக்கு உண்டு என்பதை நினைவில் கொண்டு விபத்தில்லாத மனித சமுதாயத்தை எதிர்காலத்தை உருவாக்குவோம்.

சின்ன சின்ன விஷயங்களில் தான் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் போகின்றது என்பதை உணர்வோம் .

கருத்துரகளில் குட்டலாம்.

நட்புடன் குரு.பழ.மாதேசு

Friday, August 26, 2011

பார்வதி உடனமர் பரமேஸ்வரர் ஆலயம் அரசமரத்து வீதி குருவரெட்டியூர்பார்வதி உடனமர் பரமேஸ்வரர் ஆலயம் அரசமரத்து வீதி குருவரெட்டியூர்




பார்வதி உடனமர் பரமேஸ்வரர் ஆலயம் பவானி வட்டம் குருவரெட்டியூர் அரசமரத்து வீதியில் அமர்ந்த அழகான ஆலயமாகும். இத்திருக்கோவில் 30.08.1957 ல் செம்பண ஆசாரி மகனார் மன்னாத ஆசாரியார் அவர்களால் கட்டப்பட்ட இந்த சிவாலாயம் எல்லா சிவாலயங்களில் இருந்து சற்றே வேறுபட்டது.

இங்கு மூலவராக கிழக்கு திசை நோக்கிய சிவபெருமான் பார்வதி உடனமர் நந்தீஷ்வரராக அமைந்திருப்பது காண்பதர்க்கு அரிய காட்சி. வலப்பக்கம் விநாயகப்பெருமானும் இடப்பக்கம் வள்ளி தெய்வானை உடனமர் முருகப்பெருமான் சன்னதி அழகான ஒன்றாகும்.

எதிரே நவகிரகங்களும் அருகிலுள்ள ராகு கேகு சிற்பங்களும் அழகானது. தனிச்சிற்பமாக பெருமாள் சன்னதியும் உள்ளே அமைந்துள்ளது.

தற்போது திரு கார்த்திகேயன் அவர்களால் தற்போது பராமரிக்கப்பட்டு பிரதோஷ பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது. மாசி மகா சிவராத்திரி அன்று நடைபெறும் பூஜைகள் சிறப்பான ஒன்றாகும்.

இப்பகுதிக்கு வரும் போது மூலவரான பார்வதி உடனமர் சிவபெருமான் நந்தீஷ்வரர் மேல் அமர்ந்திருக்கும் அழகிய திருக்கோலத்தை கண்டு செல்லங்கள்.

ஓம் சிவாய நமஹ.

நட்புடன் குரு.பழ.மாதேசு

Saturday, August 20, 2011

Arulmigu mannatheswarar &semmuni ahandavar thirukkovil ,vellithirupur





அருள்மிகு மன்னாதீஸ்வரர் ,செம்முனி ஆண்டவர் திருக்கோவில்

ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் வெள்ளித்திருப்பூர் அருகில் வாழைக்குட்டை தோட்டத்தில் அமைந்துள்ள திருக்கோவிலாகும். இது வெள்ளித்திருப்பூரில் இருந்து குருவரெட்டியூர் செல்லும் வழியில் 2வது கி.மீட்டரில் அமைந்துள்ளத வனம் ஆகும் .

குருவரெட்டியூரில் இருந்து 6வது கி.மீட்டரில் உள்ளது இங்கு மூலவராக மன்னாதீஸ்வரரும் ,அம்பிகையாக பச்சை நாயகி அம்மன் காக்கும் கடவுள்களாக செம்முனி ஆண்டவர் உட்பட 13 முனிகள் வாதமுனி,பூமினி,முத்துமினி,லாடமுனி, குண்டுமுனி ,வேதமுனி,தவசி முனி,தன்னாசி முனி,கொடுமுனி,மகா முனி,கருமுனி ஆகியவைகளாகும்.


மன்னாதீஸ்வரர் திருக்கோவில் உட்பிரகாரத்தில் இடக்குமரர்,கருங்குமரர் ,சுப்பிரமணியர், சித்தேஷ்வரர், சொக்கநாதசாமி, குருபகவான் ,அரங்கநாதர், கன்னிமார், வேதாந்தி வேதியர்,ஆரியசாமி (பிரம்மா,காயத்திரி, சரஸ்வதி) பச்சைநாயகி (திருக்கோவில் அம்பிகை) வேங்கை மலை அம்மன் கங்கா, செம்மரளி அம்மன், பூமரளி அம்மன், குமாரசாமி,உமைகங்கா உடனமர் மன்னாதீஷ்வரர். முடியரசி அம்மன்,கார்த்தி அம்மன்,பூங்குமரர், வலக்குமரர், ஆகிய சிலைகள் வரிசைக்கிரமாக அமைந்துள்ளது.

பிரதி வார பூஜை வெள்ளிக்கிழமை இரவு 7மணி முதல் 8மணி வரை நடைபெறும்.ஆடி 15 நாள் வெள்ளிக்கிழமை முதல் வனத்திருவிழா நடைபெறும். அப்போது 2 கி.மீட்டர் அருகிலுள்ள குரும்பபாளையம் மடப்பள்ளியில் இருந்து சுவாமி தேரில் பவனி வந்து வாழைக்குட்டை தோட்டம் அருகிலுள்ள மன்னாதீஷ்வரர்,செம்முனி ஆண்டவர் வனத்தில் வருடாந்திர பூஜை நடைபெறும்.

மாசி சிவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெறும். திருக்கோவில் ஸ்தலமரமாக புளிய மரம் கிட்டத்தட்ட 500 வருடங்கள் பழமையானதாகும் .

திருக்கோவில் சுற்றிலும் கற்கட்டுகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட ஆலமரம் ஒன்றுள்ளது.. தம்மைத்தேடி வரும் பக்தர்களுக்கு குழந்தைவரம்,திருமணம்,போன்ற சுப காரியங்களை இறைவன் நல்லபடியாய் நடத்தி தருவதால் பக்தர்கள் மன நிறைவுடன் வழிபட்டுச்செல்கிறார்கள்.

குழந்தை வரம்,தாமத திருமணம், போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக விளங்குகின்ற இத்திருக்கோவிலுக்கு நீங்களும் இப்பகுதிக்கு வருகை புரிந்தால் இறைவனை தரிசித்து விட்டு எழுதுங்கள்.

நன்றி

Thursday, August 18, 2011

எம் துதி சிவாய நமஹ


சிவாய நமஹ எனச் சொல்லி - என்

சிறு மனதை சிதறாமல் கட்டி ,

சிவனருளே எல்லாமென சிந்தையுள் வைத்து

சிவனே உன் அருளுக்காய் - தவமிருப்பேன்

சிவ சிவா என்னுள்ளே கலந்தருள்வாயாக...!

கவிதை : தேடிக்களைக்கின்றேன் இறை "வா"


கவிதை




தேடிக்களைக்கின்றேன் இறை "வா" :

பரபரப்பான
ஓவ்வொரு நாளும்
உன்னால் படைக்கப்படுகிறது,.!
இருப்பினும்
உனக்காக
நான்
ஒதுக்கிய நாட்கள்
அளவில்லாதது...!

எங்கும்
நீர் நீக்கமற
நிறைந்திருக்கும் "சக்தி"
என்றுணர்ந்த
எமக்கு என்றேனும்
ஒருநாள் ஒதுக்கு...!

அன்று நாம்
கைகோர்ந்து நடந்து ..!

உன்னால் பிறப்பிக்கப்பட்ட
இப்பிரபஞ்சத்தில்
எமக்கென
எழுந்துள்ள
வினாக்களுக்களுக்கு
நீங்கள்
அப்போது
பதிலளிக்கவேண்டும்..!


கேட்டுத் தெளிந்த
நான்

உன்னையும்
உன் காட்சி
பிம்பத்தையும்
எல்லோருக்கும்
அறிவிப்பேன் ..

உன் புகழ் தன்னை
வீதியெங்கிலும்

ஆதலால்
இறை" வா"

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...