Saturday, August 11, 2012

திருமணத்தடை நீக்கும் ஸ்ரீ கோகிலாம்பாள் உடனுறை ஸ்ரீ உத்வாகநாதர் திருக்கோவில் . திருமணஞ்சேரி. மயிலாடுதுறை


SRI UDVAGANATHAR KOKILAMPAL TEMPLE , TIRIMANASERI


"அயிலாரும் அம்பத னால்புர மூன்றெய்து
குயிலாரு மென்மொழி யாள்ஒரு கூறாகி
மயிலாறு மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில் வானைப் பற்றி நின் றார்கில்லை பாவமே"

தேவாரப்பாடல் திருஞானசம்பந்தர்அறிமுகம் :

சிவாலயங்களில் நால்வர்களால் பாடல் பெற்ற ஸ்தலங்கள் மொத்தம் 274 அவற்றில் காவிரி வடகரையில் அமையப்பெற்ற சிவஸ்தலங்கள் 63 ஆகும் . அதில் 25 வது திருத்தலமாக திருமணஞ்சேரி அமைந்துள்ளது .

மூலவர் :

ஸ்ரீ உத்வாகநாதசாமி

அம்பாள் : ஸ்ரீ கோகிலாம்பாள்

திருக்கோவில் பாடியவர்கள் : திருநாவுக்கரசர் ,திருஞானசம்பந்தர்

அமைவிடம் :

மயிலாடுதுறையை அடுத்த குத்தாலம் நகருக்கு வடக்கே சுமார் 7 கி.மீட்டர் தொலைவில் திருமணஞ்சேரி என்ற சிறிய ஊரில் பிரமாண்ட திருக்கோவிலாக அமைந்துள்ளது.

சிறப்பும் பெயர் காரணமும் :

சிவனும் பார்வதியும் பூலோக திருமணம் செய்து கொண்ட திருத்தலமாகும் . இறைவி அருள்மிகு கோகிலாம்பாள் இறைவன் ஸ்ரீ உத்வாக நாதர் ஸ்சுவாமியின் கோபத்தால் பசுசாபம் ஏற்பட்டு பசுமாடாக மாறி தவம் செய்து பின் சாபம் நீங்கி பூலோகத்தில் பரத்வாஜ ரிஷி என்பவரின் மகளாக பிறந்து மீண்டும் பூலோக முறைப்படி சிவபெருமானை திருமணம் புரிந்து மக்களுக்கு காட்சி அளிக்கும் இடமே திருமணச்சேரியாகும் .

கல்யாண சுந்தரமூர்த்தி (உத்வாக நாதர் ) காட்சி கொண்டு ஸ்ரீ கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் "திருமணஞ்சேரி " என சிறப்பு பெயர் பெற்றது.

ஸ்தல வரலாறு :

பார்வதி ஒருநாள் சிவனிடம் நாதா தங்களை பூலோக முறைப்படி திருமணம் செய்ய என் மனம் விரும்புகிறது . அவ்விருப்பத்தை நிறைவேற்றி வைக்குமாறு வேண்ட சிவனும் சிறிது காலம் பொறுத்திருக்கும்படி கூறினார் .

தம் எண்ணம் நிறைவேற வெகுகாலம் ஆகுமென்ற எண்ணத்தில் பார்வதி சிவனிடம் அலட்சியமாக நடந்து கொள்ள அதை கவனித்த சிவபெருமான் "நான் உன் விருப்பத்திற்கு சம்மதித்த போதும் காலம் கடக்கிறதென அலட்சியமாக நடப்பதால் எம்மைப்பிரிந்து நீ பூலோகத்தில் பசுவாக பிறப்பாய் " என கட்டளையிட்டார் .

ஈசனின் சாபத்தால் அம்பிகை பசுவாகி சிவனின் மீது பக்திகொண்டு உலவி வந்தார் .அங்குள்ள லிங்கத்தின் மீது தினம் பாலைப்பொழிந்து அபிஷேகித்து வந்தார் . சிவன் மனம் மாறினார் . பசு உருவில் இருந்த அம்பிகையில் பாதக்குளம்புகள் பட்டு ஈசனின் உடல் மீது பட்டு தழும்புகள் உண்டானது அந்த ஊர் " திருக்குளம்பம் என பெயர் பெற்றது .

பின் திருவாடுதுறையில் சிவனால் பசுவுக்கு முக்தி அளிக்கப்பட்டது. திருந்துருத்தி எனப்படும் குத்தாலத்தில் பரத மகரிஷி பிரமாண்ட யாகவேள்வி நடத்த அந்த யாக வேள்வியில் சிவபெருமானின் அருளால் அம்பிகை தோன்றினார் .

தெய்வீகப்பெண் ஒருவர் வேள்வியில் வர ஆச்சர்யப்பட்டு பரத மகரிஷி நிற்க சிவபெருமான் தோன்றி " மகரிஷியே வேள்வியில் வந்தவர் உமாதேவியே அவரை உமது பெண்ணாக ஏற்று எமக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள் நான் எதிர் கொண்டு வருவேன்" எனக்கூறி மறைந்தார் .

இறை உத்திரவுப்படி திருமண கங்கணதாரணமும் மங்கள ஸ்நானமும் திருவேள்விக்குடியில் நடைபெற்றது.பின் பாலிகை ஸ்தாபனம் குருமுலைப்பாலையில் சிறப்பாக செய்தார் .

பின் மணமகளான உமாதேவியை அழைத்துக்கொண்டு சிவனை தேடி பரத மகரிஷி வர இறைவன் எதிர் கொண்டு காட்சி கொடுத்த இடமே "திரு எதிர்கொள்பாடி " என அழைக்கபடுகிறது.

பின் மணமகனான சிவனையும் உமாதேவியையும் அழைத்துக்கொண்டு திருமணச்சேரியில் கல்யாண வைபவம் நடந்ததாக வரலாறு. திருமணத்தைகாண விண்ணவர்கள் தேவர்கள் நவகிரகங்கள் வந்தனர் .

திருமணச்சேரியில் சிவன் ஸ்ரீகல்யாண சுந்தரராக ஸ்ரீ உத்வாக நாதராக எழுந்தருளி தன்னை நாடி வந்தோர் திருமணத்தை நடத்தி வைக்கிறார். அம்பிகை எப்படி தாம் விரும்பியவாறு சிவனை மணம் புரிந்து கொண்டாரோ அதுபோல இங்கே வணங்குவோர்க்கு அவரவர் விருப்பம் போல திருமணம் நடைபெறுகிறது.

ஸ்தல விருட்சம் : வன்னி கொன்றை ஆகும்.

திருமணஞ்சேரியுடன் வரலாற்று தொடர்புடைய திருக்கோவில்கள் 10 ஆகும் .

தேரழந்தூர் -அம்பிகை பசு சாபம் ஏற்ற ஸ்தலம்

கோமல் - இறைவி பசுமாடக வலம் வந்த(நாச்சினார்குடி,திருக்கொலம்பியம் ,அசிக்காடு ) ஸ்தலங்கள்

திருவாடுதுறை - அம்பாள் பசு சாபம் நீங்கிய ஸ்தலம்

திருவாலங்காடு - அம்பிகை பரத மகரிஷியாக வேதி அவதாரம் எடுத்த ஸ்தலம்

குத்தாலம் அம்பாளை பெண் பார்க்க (திருத்துருத்தி )வந்த ஸ்தலம்

திருவேள்விக்குடி -திருமண யாகங்கள் புரிந்து மங்கள
ஸ்நானமும் கங்கணதாரமும் செய்த இடம்

குறுமுலைபாளை -பாலிகை ஸ்தாபனம் செய்த ஸ்தலம்

வில்லியநல்லூர் - பிரம்மா திருமண வேள்வி புரிந்த ஸ்தலம்

திரு எதிர்கொள்பாடி - இறைவனை மாப்பிள்ளை கோலத்தில் எதிர் கொண்டு வந்த இடம்

திருமணஞ்சேரி - பூலோக முறைப்படி இறைவனும் இறைவியும் திருமணம் செய்து மணம் புரிந்த கோலத்துடன் காட்சியளிக்கும் ஸ்தலம்

எம் அனுபவம்-

திருமணஞ்சேரியை தரிசிக்கும் ஆர்வத்தில் சென்ற வாரம் அந்த வாய்ப்பு கிட்டியது . திருக்கோவில் அமைப்பே அழகாக இருக்கிறது. திருக்கோவிலுக்குள் ரூ 15 மட்டுமே பரிகாரச்செலவாக மாலை பூ என 100ரூபாய்க்குள் மட்டுமே செலவாகிறது.

ஏழை பணக்கார பேதமின்றி எல்லோரும் திருமணம் தடை பரிகாரம் செய்யலாம் . இங்கு கல்யாணம் முடிந்து வருகிற தம்பதிகளைப் பார்த்தாலே திருக்கோவிலின் மகிமை நமக்கு புரிகிறது . திருமணமாகத பலர் வருகின்றனர்.

.திருக்கோவிலில் கொடுக்கப்படும் மாலை,விபூதி,குங்குமம் ,மஞ்சள், எலுமிச்சம்பழம் ஆகியவற்றை திருமணமாகாமல் வருகின்றவர் மட்டும் உபயோகித்தும் வீட்டிற்கு சென்றதும் காலையில் குளித்து பிரசாத எலுமிச்சையை பிழிந்து உப்பு சக்கரை சேர்காமல் சாப்பிட்டு ஆலயத்தில் கொடுத்த மாலையை அணித்து தீபம் ஏற்றி வழிபட்டும் விபூதி குங்குமத்தை தினம் இட்டுக்கொண்டும் வர வேண்டுமாம் .

திருமணம் முடிந்ததும் மஞ்சள்பையில் பத்திரப்படுத்திய பழைய மாலையை திருக்கோவில் கொண்டு வந்து பிரார்தனை பூர்த்தி செய்ய வேண்டும்.

திருமணஞ்சேரி வந்து சிவனை வணங்கி திருமணம் தடைபடும் திருமணம் நடைபெற வாழ்த்துக்கள் . திருக்கோவில் 1100 வருட வரலாற்றை உள்ளடக்கியது திருமணஞ்சேரியாகும் .

நாம் பகிர்ந்தது சிறிதளவே .
நன்றி

Wednesday, August 8, 2012

ஸ்ரீ கொன்னைமரத்தையன் திருக்கோவில், அந்தியூர்


SRI KONNAMARATHI AYYAN TIRUKKOVIL ANTHIYUR


அந்தியூர் ஸ்ரீ குருநாத சாமி (SRI GURUNATHA SAMY TEMPLE ., ANTHIYUR திருக்கோவிலின் உப கோவிலான ஸ்ரீ கொன்னைமரத்தையன் திருக்கோவில் விஷேசமானது . இத்திருக்கோவில் அந்தியூர் இருந்து பர்கூர் செல்லும் வழியில் புதுப்பாளையம் குருநாதசாமி திருக்கோவில் அருகில் சிறிய வனத்தில் அமைந்து உள்ளது.

திருக்கோவில் மூலவர் :

கொன்ன மரத்தையன்

பெயர் விளக்கம் ;

கொன்னை மரத்தையன் ,கொன்ன மரத்தய்யன் என அழைக்கப்பட்ட போதிலும் சுவாமி புன்னை மரத்தடியில் இருந்ததால் புன்னை மரத்தையன் என்பதே காலப்போக்கில் மருவி கொன்னை மரத்தையன் ஆனதாக கூறுவதுண்டு .

திருக்கோவிலைச் சுற்றிலும் வேப்ப மரங்கள் ,ஊஞ்சல் மரங்கள் நிறைந்த அமைதியான இடம் .தியானம் செய்ய ஏற்ற இடம் .

திருக்கோவில் முகப்பில் காவல்காரன் எனும் காவல் தெய்வமும் சற்று தூரம் நடந்தால் திருக்கோவில் முகப்பில் பல்வேறு வேல்கள் குத்தப்பட்டு இருக்க

வலப்புறம் ஸ்ரீவீரகாரன் ,
ஸ்ரீகொன்னை மரத்தையன்,
மற்றும் ஸ்ரீபெருமாளின் அம்சமாக பெருமாள் சாமியும்

திருக்கோவிலில் அமர்ந்திருக்க அழகான திருக்கோவிலாக காணப்படுகிறது.

வார பூஜை புதன் கிழமை அன்று நடைபெறுகிறது.

அருள்மிகு ஸ்ரீ குருநாத சாமியை பற்றிய முழு விபரங்களும் இந்த வலைப்பூவில் உள்ளது.

முடிவுரை:

ஆடி மாதம் வந்தாலே ஈரோடு மாவட்டம் கல கலப்பாகிவிடும் . ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பண்டிகையான அந்தியூர் ஸ்ரீ குருநாதசாமி பண்டிகை

இன்று 8.8.12 துவங்கியது. 5 நாட்கள் நடைபெறுகிற அந்தியூர் குருநாதசாமியின் வரலாறு, தோற்றம், ஆன்மீக நிகழ்வுகள் முன்பே இதே வலைப்பூவில் பகிர்ந்துள்ளேன் .

படியுங்கள் முடிந்தால் வந்துவிட்டு செல்லுங்கள் மிகப்பெரிய குதிரைச்சந்தையும் மாட்டுச்சந்தையுடன் ஸ்ரீ குருநாதசுவாமி அருள்பெற்றுச்செல்லுங்கள் .நன்றி