Wednesday, April 25, 2012

உனக்காக காத்திருக்கிறேன்ப்ரியமானவளே...!

உன்னை ஒரே
ஒரு நாள்
பார்த்து விட்டு
விலகி வந்தாலும்
உன் நினைவுகளில்
நகராது நிற்கிறது ... ?
என் நாட்கள் ...!

நீயே ஓவியமாகஅன்பே...
நீ வரைந்த
ஓவியங்களை ரசித்து
விட்டு திரும்புகையில்
என்னுடேனேயே வருகிறது...!
ஓவியத்தின் அழகும்
எனக்குள்ளே ஓவியமாய்
இருக்கிற
உன் நினைவுகளும் ..!

Monday, April 23, 2012

நாகதோஷம் போக்கி நல்வாழ்வளிக்கும் நாகமலை பயணக்கட்டுரை

நாகமலை

SRI NAGAMALAI ,MATHESWARA HILLS; KARNATAKA STATE

நாகமலை என்பது சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து மாதேஷ்வரமலை சென்றால் கர்நாடக மாநிலம் அடைந்து ஸ்ரீ மாதேஸ்வரரை தரிசனம் செய்து அங்கிருந்து நாகமலைக்கு செல்ல வேண்டும் எனக்கேட்டால் சொல்வார்கள் .

ஸ்ரீ மாதேஷ்வரமலையில் இருந்து 14 கி.மீ தூரத்தில் நாகமலை அமையப்பெற்றுள்ளது. 7 கி.மீட்டர் மாதேஷ்வரமலையில் இருந்து ஜீப் பயணம் கரடுமுரடான திகில் பயணத்துடன் செங்குத்தான செம்மண் மலைபாதைகளில் நம் பயணம் தொடர்ந்தது.

அங்கே சிறிய ஊரை அடைந்தோம் . இங்கிருந்து நாகமலைக்கு 6 கி.மீட்டர் மலையில் நடந்து செல்ல வேண்டும். ஜீப்பீல் மாதேஷ்வர மலையில் இருந்து நபர் ஒருவருக்கு ரூ 35 கொடுத்தால் 7 கி.மீட்டர் மலைப்பாதையில் கடந்து ஓர் கிராமத்தில் இறக்கி விடுகிறார்கள் . மலைக்கிராமமான இங்கு ஏழ்மைகள் தவழ குழந்தைகள் விளையாடுகிறது. சிறிய பள்ளிக்கூடமும் டீக்கடைகளும் இங்கு உண்டு .

நடக்க ஆரம்பித்தால் வளைந்து செல்லும் சாலைகள் நடக்க இந்த கிராமம் தாண்டினால் சமப்பகுதி வருகிறது.யானைகள் உலவும் இடமாகவும் கடக்கும் வழிகள் இருப்பதால் கவனமாக செல்லவும் . மலைகள் ஏற ஆரம்பித்தால் சிறியதும் பெரியதுமாக 7 மலைகள் ஏற வேண்டும் .எளிதான மலைதான் 4 மணி நேரத்தில் எளிதாக அடைந்து விடலாம் .

வயதானவர்கள் கூட மலை ஏறலாம் . 7மலை என்று சொன்னாலும் கூட 3 மலைகள் தான் கடப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது.

நாகமலை அடிவாரம் இண்டிக நத்தம் :

ஓர் வழியாக பயணித்து நாகமலை அடிவாரத்தில் இண்டிக நத்தம் என்ற ஊரை அடைந்தோம் . பக்தர்கள் பயன்படுத்த இரண்டு கிணறுகள் , ஓர் உணவுக்கடை , மற்றும் சில டீக்கடைகள் இங்கு உள்ளன. இங்கு குளிப்பவர்கள் கிணற்று நீரை வாளியில் இழுத்து பயண்படுத்திக்கொள்ளலாம் .

அடிவார விநாகர் திருக்கோவில் வணங்கி ,அருகில் உள்ள சனீஷ்வரர் தனிச்சன்னதியை வணங்கி சற்றே மேலே சென்றால் சிறிய மலையின் உச்சியில் நாகமலை அமைந்துள்ளது.

மூலவர் :

லிங்க உருவில் அமைந்துள்ள மாதேஸ்வரர் ஆவார். 7தலை கொண்ட தலைநாகமாக அமைந்துள்ளது. இயல்பாக லிங்கம் சுயம்பு மூர்த்தியாக விளங்குகிறார் . .மாதேஷ்வரர் தற்போதுள்ள ஸ்ரீ மலைமாதேஸ்வரர் நடுமலைக்கு வருவதற்கு முன் நாகமலையில் சஞ்சாரம் செய்ததாக வரலாறு.

இங்கு லிங்க உருவில் நாகேஷ்வரராக காட்சி அளிக்கிறார் . நாகமலைக்குன்றின் வலப்பக்கம் சிறிய குகை உள்ளது. அதில் பக்தர்கள் பசும்பால் இட அது நீலநிறமாக மாறும் ஆச்சர்யம் காணலாம் . நாகமே சிவனைக்காக்கின்ற அமைப்பும் வித்தியாசமானதாகும் .

நாகமலை பெயர் காரணமும் அதிசயமும் :

திருக்கோவில் அமைவிடத்தின் பின்புறம் மிகப்பெரிய லிங்க உருவில் பாறையும் அதன் பின்னால் நாகப்பாம்பு உருவில் அந்த லிங்கத்தை பாதுகாப்பதுபோல் படம் எடுத்த நிலையில் பெரிய பாறையும் மிகப்பெரிய ஆச்சர்யம் அளிக்கிறது. போட்டோவை இணைத்துள்ளேன் பாருங்கள் .

திருக்கோவில் காலம் :

சுமார் 800முதல் 1000ஆண்டுகாலமாக இங்குள்ள மலைவாழ்மக்களான லிங்காயத்துகளால் பத்து தலைமுறைகளாக பூஜை செய்து வருவதாக செவிவழிச்செய்திகளாகும் . சான்றுகள் இல்லா விட்டாலும் மிகப்பழமை கொண்ட மலையாகும் . இங்குதான் ஸ்ரீமாதேஷ்வரர் புலியின் மீதேறி வலம் வந்தாராம் .நாக சர்ப்பம் இன்னும் இந்த நாகமலையில் ஏராளமாக வாழ்வதாகவும் பக்தர்கள் நம்பிக்கை

ஸ்தலமரம் :

பயிரன் மரம் மூலவர் எதிரே அமைந்துள்ளது . அருகே முகப்பில் விநாகர் அமைந்துள்ளார் .

பூஜைநாட்கள் :

எல்லா விஷேச நாட்களிலும் கூட்டம் இருந்தாலும் அமாவசை அன்று கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஸ்ரீ மாதேஸ்வரர் :

முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவனிடம் அசுரர்களை அழிக்க வேண்டியதாகவும் பின் ஸ்ரீ சைலத்தில் உத்திரராஜம்மா ,சந்திரசேகரமூர்த்திக்கு மகனாக ஸ்ரீ மாதேஸ்வரர் பிறந்து 16 வயதில் சிவாம்சம் பொருந்திய சித்தராக சாமியாக சிவனாக வணங்கப்படுகிற பல அற்புதங்களை காண்பித்தவர் .

புலி மேல் வலம் வந்து மகிமாசுரன் சிரவணா போன்ற அசுரர்கள் அழிக்க வந்த சிவனாக வழங்கப்படுகிறவர் . நாகமலையை சுற்றி பல மலைகள் அரணாக காக்கின்றன . இங்கு எல்லாம் ஸ்ரீ மாதேஸ்வரர் வலம் வந்ததால் பக்தர்கள் செருப்பில்லாமல் மலை ஏறுகிறார்கள் . அசுரர்களை அழித்த இடம் சித்தூர் மட்டமாகும் .

நாகமலை சுற்றியுள்ள மலைகள் :

மயில் மலை, தேவுமலை ,ஆதி மாதேஷ்வரமலை ,கோடுகல் மாதேஷ்வரமலை, ஆணைத்தலை திம்பம் , தப்பசரைபெட்டா, குஞ்சுமலை, கத்திரி மலை , குருகஞ்சிமலை, சங்குமலை,தேன்மலை என நாகமலையை சுற்றிலும் மிகப்பிரமாண்ட மலைகள் அமைந்துள்ளன.

எல்லா மலைகளிலும் ஸ்ரீ மாதேஸ்வரர் சஞ்சாரம் செய்தாலும் நாகமலையில் வலம் வந்து கடைசியாக தற்போது அமைந்துள்ள நடுமலையில் மலை மாதேஸ்வரர் வந்து புற்றுக்கண்ணில் ஐக்கியமாகி வரும் பக்தர்களுக்காக சுயம்பு லிங்கமாக அமைந்து அருளாட்சி புரிகிறார் .

பக்தர்கள் :

20 வருடமாக அமாவசை தொடர்ந்து வரும் பக்தர்கள் ஏராளம் . வீடு, திருமணம், குழந்தைவரம் .போன்ற சுப நிகழ்வு பிரார்த்தனைகள் இங்கு எளிதாக நிறைவேறுகிறது. ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஜாதக தடை உள்ளவர்கள் கண்டிப்பாக தரிசனம் செய்யதால் பலன் நிச்சயம் .

பெங்களூர் பக்தர் ஒருவர் தன் மகன் வேலைக்காக வேண்டி வேலை கிடைத்தும் கோபிநத்தத்தில் இருந்து மின்சார வசதியை நாகமலைக்கு கொண்டு வந்து தன்பங்காக திருக்கோவிலை ஒளிர விட்டுள்ளார். '

முடிவுரை :

சுயம்பு மூர்த்தியாய் சிவலிங்கம் நாகமலையில் சிவனைக்காக்கிற அதிசயம் காண ஓர் முறை செல்லுங்கள் . பல தடைகளை தாண்டியே எம்மால் செல்ல முடிந்தது ." அவனவன் பால் அவன் தாள் வணங்கி" என்னும் இறை கூற்றிற்கு ஏற்ப இறைவன் அழைத்தால் மட்டுமே செல்லக்கூடிய திருக்கோவில் .

வாய்ப்பு கிடைத்தால் ஒர்முறை வந்து தரிசித்து விட்டு செல்லுங்கள் . இதைப்படிக்கிற உங்களுக்கும் வாழ்வில் மாற்றங்களும் ஏற்றங்களும் வர ஸ்ரீ நாகமலை ஆண்டவரை வேண்டுகிறேன் .

ஓம் சிவாய நமஹ.

ஆயிரம் ஆண்டுகள் கடந்த ஈரோடு ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவில்ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவில் ஈரோடு
SRI MAGIMALEESWARAR TMPLE ERODE


அமைப்பு:

ஈரோடு மாவட்டத்தில் பல சிவாலயங்கள் இருக்கப்பெற்றாலும் 1000ஆண்டுகள் தாண்டி கம்பீரமாக இருக்கும் சிவாலயங்கள் சிலதே. அதில் ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவிலும் ஒன்று. திருக்கோவில் ஈரோடு நகரில் பன்னீர் செல்வம் பூங்கா அருகில் டி.வீ.எஸ் வீதியில் அமைந்துள்ளது. ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சிவாலயமாகும் .

திருக்கோவில் சிறப்புகள் :

பெரும்பாலான சிவாலயங்கள் கிழக்கு நோக்கி இருக்க ஸ்ரீமகிமாலிஷ்வரர் மேற்கு நோக்கி அமைந்துள்ளார் .முதல் கொங்கு சோழனால் கட்டப்பெற்ற திருக்கோவில் .

மூலவர் அமைப்பு :

ஸ்ரீமகிமாலீஷ்வரர் சிவலிங்கமாக 2மீட்டர் அகலமும் ஒரு மீட்டர் உயரமும் கொண்டவராக அமைந்துள்ளார் . மூலவர் வெளியே எடுக்கமுடியாத படி மூலவரின் வாசற்படிகள் அமைந்துள்ளது வித்தியாசமானது.

ஸ்தலமரம் :

வில்வமரம் பழங்காலத்தில் திருக்கோவில் அமைந்துள்ள இடம் வில்வ மரங்கள் சூழ்ந்து வில்வ வனமாக அமைந்திருந்து. ஆயிரம் வருடம் கழித்து ஈரோடு நகரின் பெருக்கத்தால் தற்போது காணாமல் போய் ஸ்தலமரமாக ஒரு வில்வம் மட்டும் அமைந்துள்ளது.


திருக்கோவில் காலமும் பெயர் விளக்கமும் :

கி.பி 942 முதல் கி.பி 980 வரை ஈரோடு மண்ணை ஆட்சி செய்த முதல் கொங்கு நாட்டின் சோழ மன்னன் மகிமாலயன் என்பவரால் கட்டப்பெற்றதாக வரலாறுப்பதிவாகும் . திருக்கோவில் ஸ்தலபுராணமும் இதே கருத்தை இயம்ப மன்னர் மகிமாலயனால் தோற்றுவிக்கபட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட ஈஸ்வரர் என்பதால் தனது பெயராலேயே ஸ்ரீமகிமாலீஸ்வரர் திருக்கோவில் என அழைக்கப்பட்டதாக கருதலாம் . இயல்பாக சிவபக்தி கொண்ட மகிமாலயனுக்கு பரகேசரி கோநாட்டான் வீரசோழ பெருமான் அடிகள் என அழைக்கப்பட்டார் .

மாற்றுக்கருத்துடைய சிலர் ராவணனின் முன்னோர்களான மாலி ,சுமாலி ,மகிமாலி ஆகியோர்கள் கட்டியதாகவும் ஸ்தல புராணக்கருத்துக்கள் கருத்துக்கள் உலவுகின்றது .இது ஆய்வுக்குரிய ஒன்றாகும் .

திருக்கோவில் அம்பாள் ஸ்ரீ மங்களாம்பிகை சன்னதி வலப்புறத்தில் உள்ளது. அம்பாள் அழகு சிலை வியக்கும் வண்ணம் அழகாக அமையப்பெற்றுள்ளது. பழங்கால வில்வமரம் கோபுரங்களின் அழகும் வியக்கவைக்கின்றன.

முடிவரை :
கி.பி 980 ல் கட்டப்பெற்ற ஸ்ரீ மகிமாலீஸ்வரர் திருக்கோவிலுக்கு தற்போது 1032 வருடங்கள் தாண்டி கோடிக்கணக்காணக்கான மக்கள் வணங்கி ஈரோடு மாநகரின் நடுவில் அமைந்த பழங்காலத்திய ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவில் வந்து வணங்கி சிவபெருமானின் பரிபூரண அருள் பெறுங்கள் .