Monday, April 23, 2012
ஆயிரம் ஆண்டுகள் கடந்த ஈரோடு ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவில்
ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவில் ஈரோடு
SRI MAGIMALEESWARAR TMPLE ERODE
அமைப்பு:
ஈரோடு மாவட்டத்தில் பல சிவாலயங்கள் இருக்கப்பெற்றாலும் 1000ஆண்டுகள் தாண்டி கம்பீரமாக இருக்கும் சிவாலயங்கள் சிலதே. அதில் ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவிலும் ஒன்று. திருக்கோவில் ஈரோடு நகரில் பன்னீர் செல்வம் பூங்கா அருகில் டி.வீ.எஸ் வீதியில் அமைந்துள்ளது. ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சிவாலயமாகும் .
திருக்கோவில் சிறப்புகள் :
பெரும்பாலான சிவாலயங்கள் கிழக்கு நோக்கி இருக்க ஸ்ரீமகிமாலிஷ்வரர் மேற்கு நோக்கி அமைந்துள்ளார் .முதல் கொங்கு சோழனால் கட்டப்பெற்ற திருக்கோவில் .
மூலவர் அமைப்பு :
ஸ்ரீமகிமாலீஷ்வரர் சிவலிங்கமாக 2மீட்டர் அகலமும் ஒரு மீட்டர் உயரமும் கொண்டவராக அமைந்துள்ளார் . மூலவர் வெளியே எடுக்கமுடியாத படி மூலவரின் வாசற்படிகள் அமைந்துள்ளது வித்தியாசமானது.
ஸ்தலமரம் :
வில்வமரம் பழங்காலத்தில் திருக்கோவில் அமைந்துள்ள இடம் வில்வ மரங்கள் சூழ்ந்து வில்வ வனமாக அமைந்திருந்து. ஆயிரம் வருடம் கழித்து ஈரோடு நகரின் பெருக்கத்தால் தற்போது காணாமல் போய் ஸ்தலமரமாக ஒரு வில்வம் மட்டும் அமைந்துள்ளது.
திருக்கோவில் காலமும் பெயர் விளக்கமும் :
கி.பி 942 முதல் கி.பி 980 வரை ஈரோடு மண்ணை ஆட்சி செய்த முதல் கொங்கு நாட்டின் சோழ மன்னன் மகிமாலயன் என்பவரால் கட்டப்பெற்றதாக வரலாறுப்பதிவாகும் . திருக்கோவில் ஸ்தலபுராணமும் இதே கருத்தை இயம்ப மன்னர் மகிமாலயனால் தோற்றுவிக்கபட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட ஈஸ்வரர் என்பதால் தனது பெயராலேயே ஸ்ரீமகிமாலீஸ்வரர் திருக்கோவில் என அழைக்கப்பட்டதாக கருதலாம் . இயல்பாக சிவபக்தி கொண்ட மகிமாலயனுக்கு பரகேசரி கோநாட்டான் வீரசோழ பெருமான் அடிகள் என அழைக்கப்பட்டார் .
மாற்றுக்கருத்துடைய சிலர் ராவணனின் முன்னோர்களான மாலி ,சுமாலி ,மகிமாலி ஆகியோர்கள் கட்டியதாகவும் ஸ்தல புராணக்கருத்துக்கள் கருத்துக்கள் உலவுகின்றது .இது ஆய்வுக்குரிய ஒன்றாகும் .
திருக்கோவில் அம்பாள் ஸ்ரீ மங்களாம்பிகை சன்னதி வலப்புறத்தில் உள்ளது. அம்பாள் அழகு சிலை வியக்கும் வண்ணம் அழகாக அமையப்பெற்றுள்ளது. பழங்கால வில்வமரம் கோபுரங்களின் அழகும் வியக்கவைக்கின்றன.
முடிவரை :
கி.பி 980 ல் கட்டப்பெற்ற ஸ்ரீ மகிமாலீஸ்வரர் திருக்கோவிலுக்கு தற்போது 1032 வருடங்கள் தாண்டி கோடிக்கணக்காணக்கான மக்கள் வணங்கி ஈரோடு மாநகரின் நடுவில் அமைந்த பழங்காலத்திய ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவில் வந்து வணங்கி சிவபெருமானின் பரிபூரண அருள் பெறுங்கள் .
Thursday, April 12, 2012
sri sokkanatchi amman temple.guruvareddiyur
ஸ்ரீ சொக்கநாச்சி அம்மன் திருக்கோவில் குருவரெட்டியூர்
திருக்கோவில் அமைவிடம் :
பாலமலையின் சாரலில் அமைந்துள்ள இலிப்பிலி ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூரில் இருந்து கோனார் பாளையம் செல்லும் வழியில் 3 கி.மீ சென்று ஆலமரத்துக்காடு என்ற ஊரின் அருகே அமைந்துள்ளது .
பழங்காலத்தில் குருவரெட்டியூர் மக்களின் கிராம தேவதையாக வணங்கப்படுகிற திருக்கோவிலாகும் .பழங்காலத்தில் திருக்கோவிலைக் காக்கும் ஆண்பெண் மினிகளை குருவரெட்டியூரில் இருந்து மண்ணால் ஆன மினிகள் சிலைகளை பூஜை செய்து நடக்க வைத்து திருக்கோவிலுக்கு கூட்டிச்சென்றதாக வரலாறு.
மூலவர் :
ஸ்ரீ சொக்கநாச்சி அம்மன் சுயம்பு மூர்த்தி உருவ அமைப்பில்லாத சிலையாக விளங்குகின்றது. முன்புறம் விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. திருக்கோவில் சுற்றி இரண்டு பெரிய ஆலமரங்கள் அருகே கரடிப்பட்டியூர் ஏரியின் பள்ளம் செல்கிறது. திருக்கோவில் பல காலமாக பராமரிப்பின்றி இருந்தது.
தற்போது ஆன்மீகப்பெரியோர்களின் முயற்சியால் திருக்கோவில் குண்டத்துடன் பூச்சாட்டு விழா துவங்க உள்ளது. பல கோவில்கள் சென்று எழுதினாலும் சிறிய
வயதில் இங்குள்ள ஆலமரத்தில் தூரிகை ஆடி விளையாடிய நாட்கள் மறக்க முடியாததாகும் .
ஸ்ரீ சொக்கநாச்சி அம்மன் திருக்கோவில் விழா ஆரம்பித்த பின் குருவரெட்டியூர் ஊர் மாரியம்மன் ஸ்ரீ சக்தி மாரியம்மன் பூச்சாட்டு விழா துவங்கும் .
நம் பகுதி வாழ் மக்கள் ஸ்ரீ சொக்கநாச்சி அம்மன் அருள்பெற அன்புடன் அழைக்கிறேன் .
Saturday, April 7, 2012
சிவனையும் சித்தர்களையும் தேடி சிவபயணம்
சதுரகிரியில் சித்தர்கள் பலரும் ஸ்ரீ சுந்தரமகாலிங்கத்தையும் ,ஸ்ரீ சந்தன மகாலிங்கத்தையும் தரிசித்தும் வரும் பக்தர்கள் சிலருக்கு காட்சி கொடுப்பதாகவும் நம்பப்படுவதால் சதுரகிரியை நோக்கி பக்தர்களும் அடியார்களும் பெளர்ணமி நாட்களில் வழிபடுகிறனர் .
சித்தர்களை சந்திக்கும் ஆசையிலும் ஸ்ரீ சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்கும் ஆசையிலும் நாமும் பயணத்தை தொடர்ந்தோம் . சதுரகிரியின் மலைப்பகுதியில் நடுப்பகுதியில் நாவல் ஊற்று கடந்து செல்ககையில் காவி உடையணிந்த வயதான பெண்மணியாரை சந்தித்தோம் .தனியாக நடந்து வந்த அவரை வணங்க அவர் "சிவாய நமஹ " பஞ்சாட்சர மந்திரத்தை உதிர்த்து ஆசிர்வதித்து கடந்து சென்றார் .
அவர் முகம் ஒளிரும் வண்ணமாக இருக்க சித்தரை கண்டு விட்டோம் என மனம் மகிழ்ந்தது. அடிமலையில் கிளம்பும் மலையில் பாதி தூரம் வரை இடப்பக்கம் சர சர வென சிறிய சப்தம் எங்களுடனேயே வந்தது மேலும் ஆச்சர்யம் கொள்ளச்செய்தது. ஸ்ரீ சுந்தர மகாலிங்கத்தை தரிசனம் செய்து திரும்புகையில் எதிரே காவியுடையில் திருநீரு கொடுத்து வாழ்த்தினார் .
ஆங்காங்கே சில நறுமணங்கள் நம்மிடையே வந்து செல்கின்றன.
பைரவர் :
சதுரகிரி வரும் பக்தர்களுக்கு வழி மறந்து வேறு எங்கும் சென்று விடாமல் இருக்க சித்தர்கள் சூட்சம உருவில் பைரவராக( நாய்) கூடவே வருகிறார் . நாங்கள் இறங்கி வரும்போது பாதி வழியில் எங்கு இருந்து வந்ததோ எங்களுடன் கூடவே பாதுகாப்பாக வந்து மறைந்து சென்றது . இரவில் தனியாக செல்கிற பக்தர்களுக்கு துணையாக வருகின்ற பைரவர்கள் மிகுந்த ஆச்சர்யம் தருகிறார்கள் .
பசுக்கள் :
வேண்டுதலுக்காக விடப்பட்ட பசுக்கள் இங்கு ஆங்காங்கே தென்படுகின்றது . ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதியில் பூஜையின் போது பசுக்கள் நந்தீசராக பக்தர்களுடன் வந்து வழிபாடு செய்வது ஆச்சர்யமாகும் . நான் கண்ட சதுரகிரி பெளர்ணமி அம்மாவசை நாட்களில் அல்ல .
ஓர் மத்திம நாட்களில் தான் சதுரகிரியை உணர முடியும் . சதுரகிரி முதல் முறையாக செல்ல விரும்பும் பக்தர்கள் விஷேச நாட்கள் தவிர்த்து பிரதோஷ நாட்களில் தரிசனம் செய்யும் வண்ணம் சென்றால் நிறைய அனுபவங்களை உணரமுடியும் .
மரங்கள் :
செடிகளில் மலர்களை பார்ப்பது இயல்பு . மரங்களில் மலர்கள் பூப்பது ஆச்சர்யமாகுமாகும் .நான் சென்றபோது சிவப்பு,மஞ்சள் இளஞ்சிவப்பில் மரங்களில் பூக்களைக்கண்டோம் .
மூலிகைகள் :
இங்கு பல்வேறு மூலிகைகள் இருப்பதை உணரலாம் .கருநெல்லி போன்ற எங்கும் கிடைக்காத மூலிகைகள் இருப்பதாக சொன்னாலும் நாம் காட்டுக்குள் மிருகங்கள் இருப்பதால் செல்லகூடாது . சில மூலிகைகளையும் குங்கிலிய பிசினால் ஆன சாம்பிராணி தூள்கள் இங்குள்ள கடைகளில் விற்கிறார்கள் . மற்ற நாட்களில் சதுரகிரி வரும் பக்தர்கள் பூமாலைகள் , வில்வம் ,மற்றும் மலைக்கு மேலே வரும் வரை உணவு , குளுக்கோஷ் , கொண்டு வரவும் .
எல்லாநாட்களிலும் அன்னதானம் இட்டாலும் மலை ஏறும் வரை நீண்ட தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் ஒரு வேளை உணவு கொண்டு வருதல் நலம் . இப்படி பல்வேறு ஆச்சர்யங்களை சுமந்து வரும் சதுரகிரியை சென்று மக்கள் கூட்டம் இல்லாத அமைதியான நாளில் வணங்கி சிவன் சித்தர்கள் ஆசி பெற்று உங்கள் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட வாழ்த்துகிறேன்.
சதுரகிரியில் என் தேடல் பயணம் முடிவுறவில்லை. இன்னும் எழுதப்படாத இடங்கள் ,கதைகள் நிறைய உள்ளன. சதுரகிரியின் தேடல் தற்காலிகமாக இப்பதிவில் முற்றுப்பெற்றாலும் கூட மறுபடியும் தேடல் தொடரும் .
ஸ்ரீசந்தனமகாலிங்க தரிசனம் .சதுரகிரி
ஸ்ரீ சந்தன மகாலிங்கம் சன்னதி
சதுரகிரி சித்தர்களால் வணங்கப்படுகிற வாழ்கிற சதுரகியில் வலப்புறம் ஸ்ரீ சுந்தரமகாலிங்கமும் இடப்புறம் செல்லும் மலையில் ஸ்ரீ சந்தனமகாலிங்கமும் சன்னதியும் உள்ளது. ஸ்ரீ சந்தன மகாலிங்கம் செல்லும் பாதையில் பெரிய ஓடை ஓடுகிறது.பக்தர்கள் செல்ல வசதியாக பாலம் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள மூன்று சிவலிங்கங்களும் கிழக்கு பார்த்து அமர்ந்திருக்க ஸ்ரீ சந்தன மகாலிங்கமும் கிழக்கு பார்த்த நிலையில் லிங்க உருவில் தனி சன்னதியாக அமர்ந்து பக்தர்கள் குறை போக்குகிறார் . ஸ்ரீ சந்தனமகாலிங்கம் சன்னதிக்கு அருகே ஆகாய கங்கை தீர்த்தம் மலைமீது இருந்து வருவது சிறப்பாகும் .
ஆகாயகங்கை தீர்த்தம் கோடை காலங்களில் தீர்த்தம் வருவதில்லை. ஸ்ரீ சந்தனமகாலிங்கம் சன்னதியில் சந்தனம் மணக்கிறக்கிறது. பக்தர்கள் திருக்கோவில் சுற்றிலும் சந்தனதை கரைத்து படிக்கட்டுகளில் தடவுகிறார்கள் .
அருகில் அம்பாள் ஸ்ரீ சந்தனமகாதேவியார் சன்னதியும் , ஸ்ரீ சந்தனமுருகர் சன்னதியும் பார்த்து பரவசமடைய வேண்டியவையாகும் . 18 சித்தர்களுக்கும் சிலை பிரதிஸ்டை செய்து அழகான தனிச்சன்னதியாக அமைந்து உள்ளது.
சதுரகிரி பூஜை நேரங்கள்
காலை 06.00மணிக்கும்
பகல் 12.00மணிக்கும் 04.00மணிக்கும்
மாலை 06. 00மணிக்கும் நடைபெறுகிறது.
உணவு :
காலை மதியம் இரவு எல்லா நாட்களிலும் சிறப்பான அன்னதானத்தை ஸ்ரீ காளிமுத்து சுவாமிகள் அன்னதான மடத்தில் வரும் பக்தர்களுக்கு இலவசமாக நிறைவாக சுவையாக பாராட்டும்படி செய்து தருகிறார்கள் . அகத்தியர் மடம் என அழைக்கப்படும் அன்னதானமடம் ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதியில் இருந்து படிக்கட்டில் கீழே வரும் வழியில் அமைந்துள்ளது.
ஆனந்த வள்ளி மடம் தங்கும் வசதி:
ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறமுள்ள ஆனந்தவள்ளிமடம் சுமார் 200பக்தர்கள் தங்கும் அளவில் அமைந்துள்ளது . இரவு பயமில்லாமல் இங்கு உறங்கலாம் . போர்வை ,பெட்சிட் கொண்டு செல்வது நலம் .
சதுரகிரி எப்போது செல்லலாம் : பெளர்ணமி அமாவசை நாட்களில் அதிக கூட்டம் வருகிறது. மற்ற நாட்களில் செல்வதே சிறப்பு .சிவபெருமானையும் சித்தர்களையும் தரிசிக்க விழாக்காலங்கள் அல்லாத நாட்களில் தான் அமைதியாக தரிசிக்கமுடியும் . பெளர்ணமி இரவில் சித்தர்கள் வலம் வருவதாக நம்பினாலும் கூட மற்ற நாட்களில் தான் பக்தர்கள் பலர் சித்தர்களை கண்டதாக சொல்கிறார்கள் .
விலங்குகள் பற்றிய பயப்படத்தேவையில்லை. வெயில் காலங்களில் நீர் பற்றாக்குறைக்கு யானைகள் எப்போதாவது வருமாம் .மற்றபடி எங்கள் கண்களில் எந்த மிருகமும் தென்படவில்லை.ஸ்ரீ சந்தனமகாலிங்கம் சன்னதியை தரிசித்து விட்டு அடுத்த சதுரகிரியில் நான் கண்ட சித்தர் ,
மற்றும் அனுபவங்களை அடுத்த பதிவில் காண்போம் .ஸ்ரீ சந்தன மகாலிங்கத்தை தரிசனம் செய்து பேரருள் பெறுக நன்றி
Thursday, April 5, 2012
சதுரகிரியில் அருளாட்சி புரியும் ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதி
ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதி
சதுரகிரியில் அமைந்துள்ள மூலவர் சன்னதியாகும் . திருக்கோவில் பகுதியில் வலப்புறம் திரும்பி திருக்கோவில் முகப்பில் உள்ள ஸ்ரீ சுந்தர மூர்த்தி சுவாமிகளை வணங்கி பின் நாம் காண வேண்டிய சன்னதி ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் ஆகும் .
நீண்டு வளர்ந்த தென்னை மரங்களுக்கிடையில் எதிரே உயரமான மலை ஆரம்பிக்குமிடமும் சிறிய ஓடையும் எதிரே ஒட நந்தீசரை வணங்கி உள்ளே சென்றால் ஸ்ரீ சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்கலாம் .
சதுரகிரியின் சுயம்பு மூர்த்தியான பெருமான் இடப்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்க சிவலிங்கமாக சிவபெருமான் வரும் பக்தர்களை கவருகிறார் . முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அருகே அமர்ந்துள்ளார் .
திருக்கோவில் அலங்காரமும் மணமும் சுகந்தம் தரும் வாசனையும் இறைவன் இங்கே அருள்பாலிப்பதை இயம்புவதாக அமைந்துள்ளது .பூஜை நேரத்திற்கு சரியாக இங்கே நேர்த்திக்கடனாக விடப்பட்ட பசுக்கள் மக்களோடு மக்களாக கலந்து ஸ்ரீ சுந்தரமகாலிங்கத்தை தரிசிப்பது ஆச்சர்யங்களில் ஒன்றாகும் .
வரும் பக்தர்களிடம் அன்பாக பழகுகின்ற பசுக்களை பக்தர்கள் நந்தீசர் பசுவாக நேரில் தரிசனம் செய்வதை கண்டு பழங்கள் உணவாக தருகிறார்கள் . சதுர கிரி சித்தர்கள் பலர் வந்து ஸ்ரீ சுந்தர மகாலிங்கத்த தரிசிப்பதாக ஐதீகம் .
திருக்கோவில் அமைதியான சூழலில் காணப்படுகிது.வாழ்நாளில் ஒரு முறையேனும் சதுரகிரி வந்து ஸ்ரீ சுந்தரமகாலிங்கத்தை வந்து வணங்குங்கள் .
மிக மேன்மையான சதுரகிரியில் அருள்பாலிக்கும்
ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் உங்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவார் .
நன்றி
ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமி சன்னதியும் சதுரகிரியின் அமைப்பும்
அருள்மிகு சதுரகிரி சுந்தரமூர்த்தி
சுவாமி சன்னதியில் லிங்க வடிவில் திருக்கோவில் முகப்பிலேயே அமர்ந்திருக்கிறார் . இங்குள்ள மூன்று சிவலிங்கங்களில் முதல் பூஜையாக ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிக்கு நடைபெறுகிறது. சன்னதிக்கு உட்புறமாக சிறிய விநாயகர் சன்னதி அமைந்துள்ளது . தினசரி நான்கு கால பூஜை நடைபெறுகிறது.
சுற்றிலும் மலை சூழ்ந்திருக்க இயற்கை எழிலில் சிவபெருமானை தரிசிப்பதே பெறும் பேறாகும் . இரவு 12 மணிக்கு மேல் சித்தர்கள் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளை வந்து வணங்குவதாக ஐதீகம் .
சதுரகிரியின் அமைப்பு :
சதுரம் என்றால் நான்பக்கமும் சமமாக கொண்டுள்ள எனவும் கிரி என்றால் மலை எனவும் பொருள் கொள்ளலாம் . மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சர்வே எண் 517 ன் படி சதுரகிரி திருக்கோவிலுக்கு 64 ஏக்கர் ஸ்ரீ சுந்தரமகாலிங்க சாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்டதாகும் .
திருக்கோவில் தற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பக்தர்கள் யானை ,சிறுத்தை,கரடி போன்ற மிருகங்கள் இருப்பதாக கூறப்படுவதால் திருக்கோவில் வளாகம் தவிர இரவு நேரங்களில் வெளியே காட்டுக்குள் செல்வது ஆபத்தாகும் .
ஸ்ரீ சதுரகிரி சுந்தரமூர்த்தி சுவாமிகளை தரிசனம் செய்த பின் அடுத்த பதிவில் ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதியை தரிசிக்கலாம் .
Monday, April 2, 2012
சதுரகிரி பயணம்
ஈரோட்டில் துவங்கிய சதுரகிரி திருக்கோவில் பயணம் 31.3.12 :
சதுரகிரியை இணைய உலகமும் ஆன்மீக அன்பர்களும் சிவனடியார்களும் கொண்டாட எமது இரண்டு நன்பர்களுடன் பயணத்தை தொடர்ந்தோம் . ஈரோட்டில் இருந்து மதுரைக்கு செல்ல 5 மணி நேரப்பயணமும் பஸ் கட்டணம் 120 ரூபாய் ஆகின்றது.
மதுரையில் இருந்து சுமார் 80 கி.மீட்டர் தொலைவில் சதுரகிரி அடிவாரம் உள்ளது. ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இறங்கி பின் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் சென்று அங்கிருந்து ராஜபாளையம் செல்லும் வழியில் கிருஷ்ணன் கோவில் பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து வத்திராயிருப்பு சென்று பின் தாணிப்பாறை என்னும் சதுரகிரி அடிவாரத்தை அடையவேண்டும் .
ஈரோட்டில் இருந்து பஸ் மற்றும் போக்குவரத்துச்செலவாக ரூ 400 ஆகிறது . செல்லும் வழியில் அடிவாரத்தில் கஞ்சிமடம் போன்ற மடங்கள் உள்ளன. நீண்ட தூரப்பயணம் செல்லும் சதுரகிரி பக்தர்கள் குளிக்க ஏதுவாக அடிவாரத்தில் பெரிய தொட்டி உள்ளது . சிறிய டீக்கடைகள் , கேசட்கடைகள் , என 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இங்குள்ள தாணிப்பாறை அடிவாரத்தில் அம்மாவசை பெளர்ணமி நாட்கள் அல்லாத நாட்களில் உணவு விடுதிகள் கிடையாது. திருக்கோவில் சன்னதியில் மூன்று வேளை உணவையும் இலவசமாக தருகிறார்கள் . பயணத்தை துவங்கிய நமக்கு பல ஆச்சர்யங்களை ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் தரப்போகிறார் என அப்போது நமக்கு தெரியாது.
சதுரகிரி பல சித்தர்கள் ,முனிவர்கள் ,யோகிகள் வாழ்வதாலும் மலையே சிவனாக வணங்குவதாலும் செருப்பில்லாமல் பயணத்தை ஆரம்பிப்பது நல்லதாம் . முதலில் சற்று தூரம் நடந்தவுடன் பிரமாண்ட பாறகளுடன் அடிவாரங்களும் நீர் ஊற்றுகளும் தென்பட ஆச்சர்யப்பட்டு எட்டிப்பார்க்க பழங்கால ஆமைகள் கரையில் விளையாடி எங்களைக்கண்டதும் குளத்திற்குள் தங்களை மறைத்துக்கொண்டது.
பின் ஆச்சர்யத்துடன் சற்று தூரம் நடக்க முதலில் ஸ்ரீ ஆசிர்வாத விநாயகரை வணங்கி சற்று தூரம் நடந்தால் இடப்புறம் ஸ்ரீ தங்க காளியம்மன் திருக்கோவில் தரிசனம் செய்து நடந்து செல்கிறோம் . பின் ஆங்காங்கே உட்கார்ந்து நடக்க காவல் தெய்வமான ஸ்ரீகருப்பசாமி பேச்சியம்மன் சன்னதியில் வணங்கி பின் சற்று தூரத்தில் குதிரை ஊற்று சிறிய தண்ணீர் குளங்களை கொண்டது. பின் சற்று தூரம் நடந்தால் கோணத்தலைவாசல் வருகிறது.
அதைக்கடந்து காராம் பசு தீர்த்தம் கண்டு நகர்ந்து சென்றால் இரட்டை லிங்கசாமி திருக்கோவில் .இங்கு இரட்டை லிங்கங்கள் அழகாய அமைக்கப்பட்ட சிறிய சன்னதியாகும். சதுரகிரி செல்லும் வழியில் பார்க்க வேண்டிய சன்னதியாகும் . அடுத்து நாம் காணப்போவது சின்னப்பசுக்கிடையாகும் .இங்குள்ள இயற்கை சூழல்களை ரசித்து சென்றால் நாவல் ஊற்றைக்காணலாம் .
நாவல் ஊற்று :
சதரகிரியில் பல திர்த்தங்கள் இருந்தாலும் நாவல் ஊற்று விஷேசமானது. இங்குள்ள தீர்த்தம் குடித்தால் சர்க்கரை நோய் உட்பட கொடிய நோய்கள் குணமாவதாக வரலாறு. இங்குள்ள தண்ணீர் மிகச்சுத்தமாக சுவையாக உள்ளது.
அடுத்து சில அடி தூரம் நடந்தால் தேனி,கம்பம் செல்லும் பாதை பிரிகிறது. அதைக்கடந்தால் பச்சரிசி பாறை வித விதமான குறிப்பாக சிவப்பு நிறங்களில் காணப்படுகிறது. அடுத்து வனத்தைக்காக்கும் வன பத்ரகாளி அம்மன் சன்னதி வருகின்றது.
அடுத்து நாம் காண்பது பெரிய பசுக்கிடை அதைத்தாண்டி சென்றால் சதுரகிரியின் ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதி அருகில் வந்து விட்டோம் என்பதை உணர்த்தும் விதமாக திருக்கோவில் முகப்பின் காவல் தெய்வமான பிலாவடிக் கருப்பசாமி திருக்கோவில் வருகிறது .
இங்கு பக்தர்கள் குளித்து விட்டு பிலாவடிக்கருப்ப சாமியை வணங்கி விட்டு ஸ்ரீ சுந்தரமகாலிங்கத்தை தரிசனம் செய்ய பக்தர்கள் செல்கிறார்கள் . அடிவாரத்தில் இருந்து சுமார் 4 முதல் 5 மணி நேரத்தில் திருக்கோவிலை அடையலாம் .
எல்லா வயதினரும் செல்லலாம் . ஸ்ரீ சுந்தரமகாலிங்க தரிசனம் பற்றிய இடுகை அடுத்த பதிவில் காணவும் .
Thursday, March 22, 2012
அகத்தியாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஅகிலாண்டீஷ்வரி உடனமர் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் சன்னதி .அகிலாண்டபுரம் காங்கேயம்
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனமர் அகஸ்தீஷ்வரர் திருக்கோவில்
திருக்கோவில் அமைவிடம் வழி:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் காங்கேயத்தில் இருந்து 3 கி.மீட்டர் தொலைவில் அகிலாண்டபுரம் என்னும் ஊரில் அம்பாளின் திருப்பெயரையே ஊரின் பெயராக கொண்ட அழகிய ஊரில் திருக்கோவில் அமைந்துள்ளது.
பழங்காலத்தில் சதுர்வேதிமங்கலம் என அழைக்கப்பட்டதாகவும் வரலாறு. காங்கேயத்திற்கு பழங்காலத்தில் சிங்கையூர் என்னும் பெயர் கொண்டு இருந்ததாகவும் கூறப்பட்டுகிறது.
திருக்கோவில் அமைப்பு :
சாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார் அகஸ்தீஷ்வரர் அகத்திய சித்தரால் பூஜிக்கப்பட்ட சுயம்பு லிங்கமாகும். .பழங்கோவிலாக இருந்த திருக்கோவிலை சலவைக்கற்களால் அழகுபடுத்தி உள்ளார்கள் .அகன்ற பிரகாரத்தில் இருநிலைக்கோபுரங்களுடன் அழகான சிவலயமாக அமைந்துள்ளது. பாடல் பெற்ற சிவத்தலமாகும்
ஸ்ரீஅகிலாண்டீஷ்வரி சன்னதி :
ஒரு காலத்தில் சிவாலயமாக மட்டுமே இருந்த திருக்கோவிலுக்கு அகத்தியர் வந்தார் .அப்போது அகத்தீஷ்வரர் பூஜித்து வந்த போது சிவலிங்கம் மட்டுமே இருப்பதைக்கண்டு அம்பாள் சிலையை பிரதிஷ்டை செய்ய எண்ணி ஸ்ரீ அகிலாண்டிஸ்வரியை பிரதிஷ்டை செய்து அம்பாள் சன்னதியை உருவாக்கினார் என்பது வரலாறாகும் . இதனால் அகத்திய சித்தரால் உருவாக்கப்பெற்ற அம்பாள் சன்னதி என்னும் தனிச்சிறப்பு பெறுகிறது.
சலவைக்கற்களால் உருவாக்கப்பெற்ற அழகான திருக்கோவில் வடிவமைப்பாகும் .அம்பாள் சன்னதியின் பின்புறம் லட்சுமி நரசிம்மர் ,ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளது. கொங்கு வேளாளக்கவுண்டர்களில் செங்கண்ணன் உட்பட 8 கூட்டத்தாருக்கு குலதெய்வமாக விளங்குகிறது.
இத்திருக்கோவிலின் சார்பு கோவிலான காக்கும் கடவுள்களாக ஸ்ரீ பகவதி அம்மன் ஸ்ரீ அழகுநாச்சியம்மன் திருக்கோவில்கள் காங்கேயத்திலிருந்து கருர் ரோட்டில் அமைந்துள்ளன . ஆயி அம்மன் திருக்கோவில் வீரணாம்பாளையத்தில் அமைந்துள்ளது.
பழங்கால சிறப்புமிக்க அகில உலகம் ஆளும் அகிலாண்டீஷ்வரிக்கு சன்னதி, அகத்தியரால் பூஜிக்கப்பெற்ற ,பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவாலயத்தை
காங்கேயம் அகிலாண்டபுரம் வந்து வணங்கி எல்லா வளமும் நலமும் சிவனருள் பெற்றுச்செல்லுங்கள் .நன்றி
12ஆண்டுக்கு ஒரு முறை சென்னிமலையில் பொங்கும் மாமாங்க தீர்த்தமும் ,விநாயகர் வழிபாடும் (2012)
சென்னிமலையில் புகழ்பெற்றது மாமாங்க தீர்த்தமென எல்லோரும் செல்ல பார்க்கவேண்டுமென பல நாள் ஆவல் இருந்தாலும் நேரில் செல்லமுடியாது தவிப்பாகவே இருந்து வந்தது .
கடந்த 15 நாட்களுக்கு முன் ஓருவர் மாமாங்க தீர்த்ததைப்பார்க்க சென்றபோது அங்கு தீர்த்தம் பொங்கி வழிவதை பார்த்து ஊர் மக்களிடம் சொல்ல கேள்விப்பட்டு பல ஊர்களில் இருந்தும் முருகபக்கதர்கள் கிளம்பி சென்னி மலையை நோக்கி படையெடுக்க இந்த 2012 மார்ச் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமிருக்க மாமாங்க தீர்த்தத்தையும் மாமாங்க விநாயகரையும் தரிசனம் செய்ய கிளம்பினோம் .
எப்படிச்செல்வது :
ஈரோட்டில் இருந்து சென்னிமலைக்கு 25 கி.மீட்டர் தொலைவிலும் பெருந்துறையில் இருந்து 12 கி.மீட்டர் தொலைவில் சென்னிமலை திருக்கோவிலும் வனமும் அமைந்துள்ளது. சென்னிமலையில் இருந்து காங்கேயம் சாலையில் 2கி.மீட்டர் பயணித்து வெப்பிலி பிரிவில் வலப்புறம் திரும்பி சில்லாங்காட்டு வலசு (2 கி.மீ)சென்றால் வலப்புறம் திரும்பி 1 கி.மீட்டர் பயணித்தால் சென்னிமலையின் தெற்குபுறமான மலை அமைப்பை அடைகிறாம் .
பின் ஆங்காங்கே பாறை வெட்டி எடுக்கப்பட்டுள்ள பள்ளங்களை தாண்டி மிக கவனமாக பாதுகாப்பாக பயணித்தால் மலை அடிவாரம் வருகிறது. இருசக்கரபயணம் மட்டுமே ஏற்றது. மாமாங்க விநாயகர் கோவிலும் தீர்ததமும் சென்னிமலையின் தென்புறமுள்ளது குறிப்பிடத்தக்கதாகும் .
பின் ஒற்றையடிப்பாதையில் சுமார் 15 நிமிடம் மலைப்பாதையில் நடக்க மாமாங்க விநாயகர் தீர்ததங்களை தரிசிக்கலாம் .
மாமாங்க தீர்த்தத்தின் மகிமைகள் :
சென்னிமலை முருகப்பெருமானின் அருளால் மாமாங்க தீர்த்தம் 12 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே சுரந்து மாமாங்க தீர்த்தம் பொங்கி வழிகிறது. சென்னிமலையின் இயல்பான அமைப்பே செவ்வாயின் அம்சமாக முருகப்பெருமான் திகழ்வதாலும் பிப்ரவரிமுதல் ஜுன் மாதம் முடிய வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் .
சென்னிமலை முழுவதும் வறண்டு கிடக்கிற காலம் . இப்படிப்பட்ட கோடை காலத்தில் தான் மாமாங்க தீர்த்தம் பொங்கி வழிகிறது என்றால் இறைவனின் மகிமைகளை கண்கூடாக உணரலாம் .
இதற்கு முன் பல ஆண்டாக 12 ஆண்டுக்கு ஒரு முறை மாமாங்க தீர்த்தம் பொங்கி வழிந்தாலும் கடைசியாக 1988, 2000, 2012 ஆண்டுகளில் சரியாக மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் பொங்கி வழிவது ஆச்சர்யமான ஒன்று.
கால மாறுபாட்டால் 4 வருடங்களுக்கு முன் ஓரே ஒர் முறை மாமாங்க தீர்த்தம் வெளிபட்டதாக சொல்வோரும் உண்டு.
தீர்த்ததின் பலன்கள்:
சென்னிமலையில் பல மூலிகைகளும் முக்கியமாக வெண்சாரை, கருநொச்சி போன்ற அரிய மூலிகைகளும் சுமந்து வருவதால் மாமாங்க தீர்த்தம் அருந்துவதால் நல்ல உடல் நிலையும் உடற் சரிர நோய்கள் தெளித்துக்கொள்வதால் நலமாக ஆவதும் உண்மைக்கூற்றே .
மாமாங்க தீர்த்தம் விநாயகர் சன்னதியின் அமைப்பு :
கிழக்கு நோக்கிய நிலையில் ஸ்ரீவிநாயகப்பெருமான் அமர்ந்திருக்க சுற்றிலும் சிறிய கட்டிட அமைப்பில் 10க்கு 10 அகல அமைப்பில் விநாயகருக்கு எதிரே காய்ந்து தற்போது வளர்ந்து கொண்டிருக்கிற கிளுவை மரத்தின் அடியில் சிறிய பொந்தின் வழியில் மாமாங்க தீர்த்தம் சுரக்கிறது. வேம்பு மரம் அருகே உள்ளது.
தற்போது ஒரு முதியவர் பூஜை செய்து வருகிறார் .மாமாங்க ஸ்ரீ விநாயகப்பெருமான் தீர்த்தம் ஆகியவற்றை பார்க்க செல்பவர்கள் பூஜைப்பொருட்கள் ,உணவுத்தேவைகள் உடன் செல்லவும் .இங்கு கடைகள் ஏதுமில்லை.
தீர்த்தத்தில் உள்ளே சென்று குளிக்காமல் வெளியே தீர்த்தம் எடுத்துச்சென்று தெளித்துக்கொள்ளலாம் .மாமாங்க தீர்த்தம் கொண்டு வர ஏதுவாக சிறிய பாட்டில்களுடன் செல்வது நலம் .
ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை வனத்தில் உள்ள மாமாங்க தீர்த்தம் சென்று தீர்த்தம் தெளித்து ஸ்ரீ விநாயகப்பெருமானை வணங்கி வாருங்கள் .
எல்லா வளமும் நலமும் பெறுங்கள் .
Wednesday, March 21, 2012
தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலைக்காவலராக விருப்பமா? (வேலை வாய்ப்பு)
தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலைக்காவலராக சேர அரிய வாய்ப்பு. தமிழ்நாடு அரசின் சீருடைப்பணியாளர் குழுமம் இரண்டாம் நிலைக்காவலர்கள் (ஆண்/ பெண் ) ,சிறைக்காவலர்கள் , தீயணைப்புபோர்கள் பணிக்காலியிடங்களுக்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது .
விண்ணப்பங்கள் தமிழகத்தின் 284 தபால் நிலையங்களில் கிடைக்கும் . முழு விபரங்களை www.tn.gov.in/tnusrb இணையத்தளத்தில் காணலாம் . இணையத்தளத்தை காணமுடியாத நன்பர்கள் தமிழக முண்ணனி நாளிதளான தினத்தந்தியில் 21.3. 12 பக்கம் 8 ல் விளம்பரத்தை காணவும் .
தபால் நிலையங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும் நாள் 21.3.12
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் குழுமத்திற்கு வரவேண்டிய கடைசி நாள் : 23.04.2012 மாலை 05.45 மணிக்குள்
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 24. 6.12 காலை09.00மணி .
முழுத்தகவல் விபரங்கள் விண்ணப்பத்துடன் கூடிய தகவல் சிற்றேட்டில் தெளிவாக கூறப்பட்டுள்ளது
தகுதி :
10ஆம் வகுப்பு தேர்வான 18 வயது நிரம்பிய 24 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . உயரம் 170 செ.மீ மார்பளவு 81 செ.மீ விரிவாக்கம் 5.செ.மீ பெண்கள் உயரம் 159 செ.மீட்டர் இருந்தால் போதுமானது.
எழுத்துத்தேர்வு :
50மதிப்பெண்கள் பொது அறிவுக்கும் 30மதிப்பெண்கள் உளவியல் தேர்வுக்கும் நடைபெறும் . உடல் திறன் போட்டிக்கு 15 மதிப்பெண்களும் , ncc,nss விளையாட்டு சான்றிதல்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள்களாக 5 அளிக்கப்படும். இரண்டாம் நிலைக்காவலர்கள் சிறைக்காவலர்கள் ,தீயணைப்பு படை என மொத்த பணியிடங்கள் :13320
நம் வலைப்பூவில் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பினை படிக்கின்ற நண்பர்கள் மெயிலாக தகுதியான நன்பர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . உங்களால் யாரேனும் பயன் அடைந்தால் நல்லதுதானே.
மற்றபடி மேற்படி பணிக்காக விண்ணப்பங்கள் அனுப்ப தயாராக உள்ள அனைத்து நன்பர்களுக்கு இறைதுணையுடன் வாழ்த்துக்கள் .
Sunday, March 18, 2012
காசியில் இருந்து கோபிசெட்டிபாளையம் வந்த சிவலிங்கம் ஸ்ரீ விசாலாட்சி உடனமர் விஷ்வேஸ்வரர் திருக்கோவில்
ஸ்ரீ விசாலாட்சி உடனமர் விஸ்வேஷ்வரர் திருக்கோவில் கோபிசெட்டிபாளையம்
அமைவிடம் :
ஈரோடுமாவட்டம் கோபி வட்டம் வீரபாண்டி அக்ரஹாரம் கோபி செட்டி பாளையம். கோபி பஸ் நிலையத்தில் இருந்து 500மீட்டர் தொலைவில் உள்ளது .
மூலவர் :
ஸ்ரீ விஸ்வேஷ்வரர்
அம்பாள் :
ஸ்ரீ விசாலாட்சி
திருக்கோவில் உருவான கதை :
பழங்காலத்தில் பாணசுரன் என்னும் அசுரன் தினம் ஒரு சிவ லிங்கத்தை கங்கையில் வைத்து பூஜை செய்து பின் கங்கையில் விட்டு விடுவது வழக்கம் . அதைப்பாணலிங்கம் என்று அழைப்பார்கள் .அவ்வாறு கங்கையில் விட்ட பாணலிங்கங்களை வியாபாரிகள் சேகரித்து எடுத்துக்கொண்டு இந்தியா முழுவதும் கொண்டு சென்று விற்பார்கள் .
சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் கோபிச்செட்டிய பாளையம் வீரபாண்டி அக்ரஹாரத்தில் ஒரு சிவாலயம் ஒன்றை உருவாக்க வேண்டுமென எண்ணி திருக்கோவில் எழுப்பினார்கள் .
பின் லிங்கம் பிரதிஷ்டை செய்யவேண்டுமென யோசித்தபோது காசியில் பாணலிங்கத்தை எடுத்துக் கொண்டு பெரிய கூடையில் வியாபாரத்திற்காக ஒருவர் கோபிசெட்டிபாளையம் வந்தார் .
திருக்கோவில் உருவாக்கிய ஆன்மீகப்பெரியோர்கள் வியாபாரியிடம் நீங்கள் கொண்டு வந்த சிவலிங்கம் எங்களுக்கு பிடித்துள்ளது.நாங்கள் கட்டுகிற சிவாலயத்திற்கு விலைக்கு தாருங்கள் என சொல்ல லிங்கம் கொண்டு வந்த வியாபாரி ஒரு விலையை சொல்ல விலை கட்டுப்படியாகதால் திருக்கோவில் கமிட்டியினர் திரும்பி ஏமாற்றதுடன் சென்று விட்டனர் .
நீண்ட பயணத்தில் வந்த லிங்க வியாபாரி அசதியில் தூங்கி விட்டு காலையில் கிளம்பத்தயாராகி சிவலிங்கம் கொண்டு வந்த பூக்கூடையை தூக்க முயற்சித்தான் . முடியவே இல்லை.
கங்கை நதிக்கரையில் இருந்து கோபி வரை எளிதாக கொண்டு வரப்பெற்ற சிவலிங்கம் தூக்க முடியாததை ஆச்சர்யத்துடன் யோசித்து வீரபாண்டி அக்ஹாரம் சென்று திருக்கோவில் கமிட்டியாரிடம் சிவபெருமான் இங்கேயே தங்க ஆசைப்படுகிறார் .
இந்த பாணலிங்கத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் . நீங்களாக மனமுவந்து தருகிற தொகையை கொடுத்தால் போதும் எனக்கூறி கொடுத்த தொகையை லிங்க வியாபாரி பெற்றுக்கொண்டு காசி சென்றதாக வரலாறு .
பின்னர் திருக்கோவில் கட்டிய குடும்பத்தார் சந்தோஷத்துடன் அதை காசியில் இருந்து கொண்டு வந்ததால் காசிலிங்கம் என பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகிறார்கள் .
திருக்கோவில் தற்போதைய அமைப்பு :
மூன்று நிலைக் கோபுரங்களுடன் முன்னை அழகிய கொடிமரம் நந்தீசர் என அழகாயிருக்க மூலவர் ஸ்ரீ விஸ்வேஷ்வரர் லிங்கமாக அமர்ந்து அருள்பாலிக்க திருக்கோவில் பின்புறம் பஞ்சலிங்கம் சிறப்பு விஷேசமாக அமர்ந்திருக்க திருக்கோவில் நேர்த்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
சிவாலயம் கட்டி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து மக்கள் தரிசிக்க ஏதுவாக அமைந்த திருக்கோவில் அமைப்பினர்களுக்கு பாராட்டுக்கள் .
காசியில் இருந்து கொண்டு வரப்பெற்ற சிறப்பு வாய்ந்த சிவாலயத்தை வணங்கி எல்லாம் வல்ல சிவனருள் பெறுங்கள் .
ஓம் சிவாய நமஹ
Subscribe to:
Posts (Atom)
பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை
நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...
-
மனித வாழ்வில் எத்தனோயோ வரங்கள் கிடைக்கப்பெற்றாலும் குழந்தை வரம் முக்கியமானது. அதுவே நம் அடுத்த தலைமுறையின் சொத்தாகும் . குழந்தையில்லா பெண...
-
பாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில் palamalai sri sidheswara temple; kolathur, ...