Tuesday, January 24, 2012
சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில்
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் ஆலயம் ,பண்ணாரி ,சத்தியமங்கலம்
SRI BANNARI MARIAMMAN TEMPLE , SATHYAMANGALAM ERODE D.T
அமைவிடம் :
ஈரோடு மாவட்டத்தில் பல மாரியம்மன் ஆலயங்கள் இருந்தாலும் மிகப்பிரசித்திபெற்ற ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் முக்கிய மான ஒன்றாகும் . ஈரோட்டில் இருந்தும் கோயம்புத்தூரில் இருந்தும் சுமார் 75 கி.மீட்டர் தொலைவிலும் சத்தியமங்கலத்திலிருந்து 15 கி.மீட்டர் தொலைவிலும் மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரலில் மைசூர் ,தாளவாடி, செல்லும் வழியில் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.
திருக்கோவில் உருவான வரலாறு :
சுமார் 500 வருட முன்பு பழங்காலத்தில் பசுக்களை மேய்த்து வந்த பசுமாட்டின் உரிமையாளர் ஓர் நாள் பசுமாடு அழகிய ஓர் இடத்தில் வேங்கை மரத்தடியில் பால் செரிவூட்டி வருவதை கண்டு(தற்போது திருக்கோவில் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் அமைவிடத்தில் ) திகைப்புற்று
அப்பகுதி மக்களிடம் தாம் ஆச்சரியப்பட்ட விஷயத்தை ஊர் பெரியவர்களிடம் சொல்ல அடர்ந்த அழகிய வனத்தில் வேங்கை மரத்தின் அடியில் சுத்தம் செய்து பார்க்க அப்போது எல்லோரும் வியக்கும் வண்ணம் "சுயம்பு மூர்த்தியாக ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் "வெளிப்பட்டார்.
அப்போது அருள் வந்த ஆன்மீகப் பெரியவர் " கேரளா கர்நாடக மங்களின் வழித்துணையாக வந்த அம்பிகை நான் இந்த அழகிய இடம் எமக்கு பிடித்திருப்பதால் இங்கேயே தங்கி விட்டேன் .என்னை ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் என அழைத்து பூஜை செய்யுங்கள் ". என வாக்கு சொல்ல அன்றிலிருந்து அம்பிகைக்கு விஷேச பூஜைகள் நடைபெற்று படிப்படியாக வளர்ச்சி பெற்று மிகப் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் .
மூலவர் :
ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன்
திருக்கோவில் எல்லா நாட்களிலும் திறந்திருக்கும் காலை 06.00மணி முதல் இரவு 09.00. மணிவரை செவ்வாய் வெள்ளி வழிபட உகந்த நாட்கள்
அம்பிகையின் அழகு:
தாமரைபீடத்தில் கத்தி,கபாலம் ,கலசங்களுடன் உயிர்ப்புடன் சக்தி அம்சமாய் பிரமாண்டாமாய் அழகாய் அருள்பாலிக்கும் அழகை காண்போர்க்கு சக்தியின் அருளை உணரலாம் .
குண்டம் திருவிழா :
பங்குனி மாதத்தில் வருடாந்திர விழாவாக குண்டம் திருவிழா நடைபெறுகிறது. அக்னி குண்டத்திற்கு தேவயான விறகுகளை வெட்ட காட்டுக்குள் சென்று பக்தர்கள் வெட்டி வருவார்கள் இதை "கரும்பு வெட்டுதல் " என இப்பகுதில் அழைப்பார்கள் .
8 அடிக்குண்டத்தில் அதிகாலை 4 மணியில் இருந்து பக்தர்கள் குண்டம் இறங்க மதியம் 1 மணிவரை சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதிப்பார்கள் . இதில் பல பக்தர்கள் ஐ.பி.எஸ் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் வேண்டுதல் நிறேவேறியதும் குண்டம் மிதிப்பது குறிப்பிட வேண்டியதாகும் .
பக்தர்கள் அல்லாது ஆடு மாடுகளை குண்டம் இறங்குவதை இங்கு கண்டு ஆச்சர்யப்படலாம் .
வேண்டும் வரமருளும் அம்பிகை:
தம்மைநாடி வரும் பக்தர்கள் துயர் தீர்க்கும் அம்பிகையை வணங்குவது கண்நோய் , அம்மை நோய்க்கள் தீர சிறப்பு ஸ்தலமாக போற்றப்படுகிறது.
ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் ஸ்தல சிறப்பு :
1.தெற்கு நோக்கிய அம்மன் கோவில்
2.தாமே தோன்றிய சுயம்பு மூர்த்தி
பிரசாதம் :
எல்லா திருக்கோவில்களிலும் திருநீரு பிரசாதமாக தருவார்கள் .
இங்கே "புற்று மணலையே விபூதி பிரசாதமாக "தருகிறார்கள்.
கோவில் வளாகத்தில் தரிசிக்கவேண்டிய இடங்கள் :
தெப்பக்கிணரும் ,அருகேயுள்ள சருகு மாரியம்மன் மற்றும் முனியப்ப சாமி சன்னதிகளாகும் .
பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அன்னையின் அருளாளே பெண்குழந்தை பிறந்தால் பண்ணாரி என பெயரிட்டு அன்புடன் அழைக்கிறார்கள். திருக்கோவில் கர்நாடகா .கேரளாவில் இருந்தும் தமிழகத்தில் பலபக்தர்கள் வந்து ஸ்ரீ பண்ணாரி மாரியம்மனை வணங்கி செல்வார்கள் .
சுயம்பு மூர்த்தீயாய் வெளிப்பட்ட பண்ணாரி மாரியம்மனை வந்து வழிபடுங்கள்.
அம்பிகை வணங்கி எல்லா வளமும் நலமும் பெறுங்கள் .
திருஞானசம்பந்தர் பாடிய குழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம் ( குழந்தைப்பேறு இல்லாதவர் கண்டிப்பாக படிக்க வேண்டிய சிவ பதிகம் )
மனித வாழ்வில் எத்தனோயோ வரங்கள் கிடைக்கப்பெற்றாலும் குழந்தை வரம் முக்கியமானது. அதுவே நம் அடுத்த தலைமுறையின் சொத்தாகும் . குழந்தையில்லா பெண்கள் தம்பதிகளின் மனவருத்தம் வருந்தத்தக்கது .
கீழே யாம் பதிவு செய்துள்ள பதிகம் சமயக்குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் புகழ் பெற்ற சைவத் திருத்தலமான திருவெண்காட்டில் பாடப்பெற்ற அருமையான பதிகமாகும் . இப்பதிகத்தை தெய்வச் சேக்கிழார் " செப்பரும் பதிக மாலை " எனப் போற்றியுள்ளார் . இவ்வளவு புகழ் பெற்ற திருவெண்காட்டுப் பதிகத்தைப் பாடித்தான் நம் சைவ சித்தாந்த ஞானக்களிறு எனப் போற்றப்படும் "மெய்கண்டார்" பிறந்தார் என்பது வரலாற்று ஆவனமாகும்
. இவ்வளவு சிறப்பு மிக்க சிவபதிகத்தை பாடுவதால் குழந்தை வரம் கிட்டும் என்பதில் ஐயமில்லை .
திருவெண்காடு பண் - சீகாமரம்
திருஞானசம்பந்தர் 2 ஆம் திருமுறை
கண் காட்டு நூதலானும் கனல் காட்டும் கையானும்
பெண் காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும்
பண் காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே. 1
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு
ஆயினவே வரம்பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குள நீர்
தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீ வினையே.2
மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி
எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண்திசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர் கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே.3
விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூ மறையக்
கடல் விண்ட கதிர்முத்த நகைகாட்டும் காட்சியதே.4
வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக் கீழ்
மாலைமலி வண் சாந்தால் வழிபடு நன் மறையவன் தன்
மேலடர் வெங் காலனுயிர் விண்ட பினை நமன் தூதர்
ஆலமிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே.5
தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
பண் மொழியால் அவன் நாமம் பல ஓதப் பசுங்கிள்ளை
வெண்முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே. 6
சக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரை மேல் அசைத்தானும் அடைந்த அயிராவதம் பணிய
மிக்கதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம் நன்கு உடையானும் முக்கணுடை இறையவனே.7
பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம் நெரித்தன்று அருள் செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கரு மஞ்ஞை நடமாடக் கடல் முழங்KA
விண்மொய்த்த பொழில் வரி வண்டு இசைமுரலும் வெண்காடே 8
கள்ளார் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்
ஒள்ளாண்மை கொளற் கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.9
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு மொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர் பிறிமின் அறிவுடையீர் இது கேண்மின்
வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திருவெண்காட்டான் என்று
ஓதியவர் யாதுமொரு தீதிலர் என்று உணருமினே.10
தண்பொழில் சூழ் சண்பையர் கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண்பொலி வெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண் காட்டைப்
பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்திவை வல்லார்
மண்பொழிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே.11
எப்படி பாடுவது :
சிவ பேறு பெற்ற குழந்தை விரும்பும் தம்பதிகள் திருவெண்காடு சென்று முக்குள நீராடி சிவபெருமானை மேற்கண்ட பதிகத்தை மனமுருகப்பாடி வழிபட்டால் நல்ல சிவஞானம் பெற்ற குழந்தை பிறந்து அடுத்த தலைமுறை வளரும் என்பது நிச்சயம் .
சரி ஏழ்மை நிலையால் திருவெண்காடு செல்லமுடியாதவர்கள் உங்கள் ஊரில் அமைந்துள்ள சிவலாயத்தில் சோமவாரம் என அழைக்கப்படும் திங்கட்கிழமை நாட்களிலோ அல்லது பிரதோஷ நாளிலோ மனமுருக வேண்டி வணங்கி வாருங்கள் .பதிகத்தை படிக்க முடியாதவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் நன்பர்கள் இப்பதிகத்தை அவர்களுக்காக பாடுங்கள் . பலன் கண்கூடு
முடிவு :
பழங்காலத்தில் நம் முன்னோர்கள் எல்லா விஷயங்களையும் சாதரணமாக எழுதி வைக்கவில்லை. எட்டு வருடங்களாக குழந்தையில்லா இரு தம்பதிகள் இப்பதிகத்தை பாடி குழந்தை வரம் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதது . நம்பிக்கையுடன் இதை நகல் எடுத்து படியுங்கள் .குழந்தைப்பேறு பெற்ற பின் எமக்கு மெயில் செய்யுங்கள் .
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கு சிவபெருமான் குழந்தைவரம் வேண்டுகிற உங்களுக்கு நற் குழந்தைப்பேறு கிடைக்க அருள்புரிய வேண்டுமென மனமுருக வேண்டி முடிக்கிறேன் .
ஓம் சிவாய நமஹ
Sunday, January 22, 2012
ஆற்றங்கரை நாகரீகத்தின் உச்சம் ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் திருக்கோவில் ,தூக்கநாயக்கன் பாளையம் .கோபி
ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் திருக்கோவில் திருக்கோவில்
அமைவிடம் :
ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் தூக்கநாயக்கன் பாளையம் என்னும் அழகிய ஊரில் அமைந்துள்ளது. T.N .PALAYAM என சுருக்கமாக அழைக்கப்படும் தூக்கநாயக்கன் பாளையம் ஊரின் பஸ் ஸ்டாப்பில் இறங்கி ஸ்ரீ முருங்கத்தூர் முனியப்பன் திருக்கோவில் கடந்து வாய்க்கால் கரை வழியாக சுமார் 1 கி.மீ பயணித்தால் மத்தாளக்கோம்பு விநாயகர் எனக்கேட்டால் சொல்வார்கள்.
மத்தாளக்கோம்பு:
திருக்கோவில் தலைப்பே வித்தியாசமாக இருப்பதால் புராணத்திற்கு செல்வோம் . பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது இப்பகுதிக்கு வந்த போது திரவுபதிக்கு தாகம் எற்பட அப்போது தன் அம்பால் மத்து ஆழத்தில் கோம்பு ஓன்றை உருவாக்கி தாகம் தீர்த்ததாக புராண வழிச் செய்திகள் இயம்புகின்றன.
மற்றொரு பெயர் காரணம் உண்டு அதன் விளக்கம் கோம்பு முழுவதும் மத்த இலை பழங்காலத்தில் படர்ந்து இருந்ததால் மத்த இலைகோம்பு என்பது மாறி மருவி மத்தாளக்கோம்பு என மாறி இருக்கும்.
ஸ்ரீ விநாயகர் :
பழங்கால ஆற்றங்கரை நாகரீகத்தை பறைசாற்றும் விதமாக கால வரையறை அறியாத அறிய முடியாத திருக்கோவிலாக ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் திருக்கோவிலாகும் . ஸ்ரீ விநாயகர் இருண்டுகரம் ஓர் தும்பிக்கையுடன் இடது கரத்தால் தும்பிக்கையை இறுக்கிப்பிடித்தபடி யோக நிலையில் இருப்பது எங்கும் காண முடியாத விஷேசமாகும்
கிரிடம் இல்லாத மொட்டை தலை மனிதகாதுடன் ஸ்ரீ மத்தாளகோம்பு விநாயகர் விஷேசமானவர் . விநாயகர் முன்பு உள்ள மூக்ஷிதவாகனர்க்கு பதிலாக நந்தீஸ்வரர் அமைந்திருக்கிருப்பது இத்திருக்கோவில் சிவ அம்சம் பொருந்திய ஸ்தலமாகும் . விநாயகர் அருகில் சுமார் 28 ராகு கேது சிலைகள் அமைந்துள்ளன.
நடந்த உண்மை:
சுமார் 120 வருடங்களுக்கு ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகரை திருடிச்செல்ல இரவில் மூன்று திருடர்கள் வந்தாகவும் ,அப்போது கடப்பாரையால் குத்தும்போது (தற்போதும் விநாயகர் வயிற்றில் காயம் உள்ளது) யானை பிளிரும் சத்தம் கேட்டு பயந்து கை கால்கள் செயலிழந்து இரண்டு திருடர்கள் விழுந்து விட ஒருவர்க்கு பார்வை பறி போய்விட்டதாம் . பின்பு திருக்கோவில் பூசாரி பழனியாண்டி அவர்கள் வந்து ஊர் மக்களும் எச்சரித்து விரட்டி விட்டதாக செவி வழிச்செய்திகள் இயம்புகின்றன.
ஸ்தலமரம் :
இரட்டை அரசமரம் .பழங்காலத்தில் ஓர் பெரிய அரசமரம் இருந்து விழந்துவிட்டதாகவும் பிறகு அதன் விதையால் தற்போது முளைத்துள்ள இரட்டை அரசமரத்திற்கு 400 வருடங்கள் இருக்கும் . அருகே நாகலிங்கமரம் அழகாய் பூத்துக்குழுங்கிறது.
மத்தாளக்கோம்பு தீர்த்தம் :
ஸ்ரீ விநாயகர் சன்னதிக்கு எதிரில் 50மீட்டர் தொலைவில் உள்ள அழகிய நீர் ஊற்றுக் குளமாகும். எக்காலத்திலும் இது வற்றாத தீர்த்தக்குளமாகும் . சுற்றிலும் நெல் வயல்கள் சேறுகளாய் இருக்க தீர்த்தக்குளத்தில் உள்ள நீர் பன்னீர் போன்ற சுத்தமாக அழகாக மிகச்சுத்தமாக இருப்பது ஆச்சர்யமாக உள்ளது. திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சோப்பு பயன்படுத்தாமல் குளிக்க அனுமதிக்கிறார்கள் .இங்கு படிக்கட்டில் பழங்கால தமிழ் எழுத்துக்கள் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது.
பழங்கால ஆற்றங்கரை நாகரீக சான்று :
திருக்கோவிலுக்கு சற்று தூரத்தில் எருக்கந்துறை என்னுமிடத்தில் பழங்கால தமிழ் மக்கள் வாழ்ந்த சுவடுகள் கல்தூண் ,மண்ணால் ஆன சட்டிகள் , பழங்கால கற்கள் இருப்பதே சாட்சி . ஆக ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் அக்காலத்தில் வாழ்ந்த மக்களால் வணங்கப்பட்ட ஆலயம் சுமார் 1500வருடங்கள் முந்தைய பழமையான திருக்கோவில் என்பது புலனாகிறது. கோம்பு என்றால் ,தீர்த்தக்குளம் என பொருள் கொள்ளலாம் .
ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் திருக்கோவில் செல்ல ஏதேனும் வழி அல்லது விபரங்கள் அறிய முன்பு இப்பகுதியில் வாழ்ந்து தற்போது சென்னையில் உள்ள
நன்பர் சுதாகர் 9841984524
எண்ணில் தொடர்பு கொள்ளலாம் . நமக்கு திருக்கோவிலை அறிமுகப்படுதியதும் இவரே.
முடிவுரை :
நம் ஆன்மீகப்பயணத்தில் இந்த வருடத்தின் பிள்ளையார் சுழியாக ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது . கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஆலயமாகும். உங்களுக்கும் ஆச்சர்யமூட்டும் திருக்கோவிலாக இது இருக்குமென நம்புகிறேன் .ராகு ,கேது தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும் .
வந்து வணங்கி விட்டு மெயில் செய்யுங்கள் .
நன்றி
Saturday, January 14, 2012
சூரியப் பொங்கல்
அதிகாலைச் சூரியன்
எட்டிப்பார்க்க
வண்ணமிகு கோலத்தில்
சாணத்தில் விநாயகர்
கண் சிமிட்ட
கரும்பின் இனிப்பும்
மஞ்சளின் மங்கலமும் கலக்க
பொங்கல் பானையில்
வழிந்தோடுகின்ற பொங்கலில்
சூரிய ஒளி கண் சிமிட்ட ..!
எப்போதும் போலத்தான்
நம் வேண்டுதல் ...!
" சூரிய பகவானே இனியேனும்
எங்களுக்குள் புகுந்து விட்ட
சாதி,மதம் ,
இப்படி கண்ணுக்குத்தெரியாத
ஆயிரமாயிரம்
"மாய இருளை"
அகற்றிடு என்பதே..!
போகி
செல்வந்தன் வீட்டில்
"பழையன கழிதழும்
புதியன புகுதலும்"
போகி பண்டிகையெனக்
கருதி
பழைய துணிகள் எரிக்கப்பட்டது .
எட்டி ஒட்டி நிற்கிற
ஒலைக்குடிசையில்
மேல் சட்டையில்லாமல்
ஏழைச்சிறுவனுக்கு
ஏக்கப்பெருமுச்சே
போகிப் பண்டிகையாய்..!
(எம்மைப் வலைப்பூ,பேஷ்புக் ,டுவிட்டரில் பின் தொடர்கின்ற நட்புகளுக்கும் ,எமது ஊர் நட்புகளுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் )
Thursday, January 12, 2012
பிணங்களாய் மனிதர்கள்
திறக்கப்படாத பக்கங்கள்
வயதானவர்களை வணக்கவேண்டிய தருணம்
வயதானவர்கள் என்றால் கேவலமா ? இன்று பொது இடங்களில் வயதானவர்களை சிலர் "பெரிசுகள் " "கிழடு "" கிழவி" என பல ஏகவசனங்களில் கூப்பிட பல இளைய தலைமுறைகள் தாய் ,தந்தையை அனாதை ஆசிரமங்களில் தவிக்க விட்டு தனிக்குடித்தனம் என தனிமையில் வாழ்கின்றனர் .
பழங்காலத்தில் வீட்டில் பெரியவர்களுடன் குழந்தைகள் அன்பாக இருக்க எல்லா வீட்டிலும் அன்பு பல்கிப்பெருகிருந்தது. தற்காலத்தில் அந்த நிலை மாறி சில குடும்பங்களில் வயதானவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் . அந்த பெரியவர்கள் அல்லது வயதானவர்கள் முக்கியதுவத்தை விளக்க இந்த கதையை படித்துவிட்டு வாருங்கள் .
பழங்காலத்தில் ஒர் அரசன் இருந்தான் .அவன் தன் நாட்டில் வளர்ச்சி பாதையில் செல்ல தடையாக இருப்பது வயதானவர்கள் தான் என்ற எண்ணம் கொண்டு இருந்தான் .ஏனெனில் அவர்களுக்கு உணவு, இருப்பிடம் பராமரிப்பு செலவு என இருப்பதால்தான் நாட்டின் வளர்ச்சி குறைவதாக எண்ணி அமைச்சரை கூப்பிட்டு " நாளையில் இருந்து ஒரு வாரத்திற்குள் நம் நாட்டில் உள்ள 60 மேலுள்ள வயதானவர்களை கொன்று விடச்சொல்லி உத்தரவிட்டார் .
அப்படி கொல்ல அவர்கள் வீட்டில் யாரேனும் தடுத்தால் அவர்களையும் கொல்ல உத்திரவிட்டான் .அதன்படி நாட்டில் உள்ள 60வயதுக்கும் மேற்பட்ட வயதானவர்கள் கொல்லப்பட்டனர் . சில காலம் கழிந்தது. நாட்டில் திடீரென உருவான வெள்ளப்பெருக்கால் நாட்டில் பலருக்கு இனம் புரியாத நோய் தோன்றியது. பலர் இறந்து போயினர் .
என்ன செய்வது எனத்திகைத்த அரசன் இந்த கொடிய நோயை தீர்த்து மக்களை காப்பாற்றுபவர்களுக்கு 1000 பொற்காசுகளும் அரசவையில் நாட்டு பாதுகாப்பு ஆலோசகராக நியமிப்பதாக அறிவித்தான் .
அடுத்த நாள் காலையில் ஓர் இளைஞன் சித்த மருந்துகள் அடங்கிய பெரிய குடுவையுடன் அரசவைக்கு வந்தான் . தான் நோயை குணப்படுத்துவதாகவும் ,அரசர் அனுமதிக்க வேண்டும் என அந்த இளைஞர் கேட்க அரசர் மக்களைக் காப்பாற்றும் படி வேண்டினான். மூலிகைச்சாற்றின் வித்தையால் ஒரே மாதத்தில் எல்லோர்க்கும் வைத்தியம் அளித்து காப்பாற்றினான் .
மன்னர் மகிழ்ந்து அந்த இளைஞர்க்கு பாராட்டு விழா நடத்த விரும்பி அந்த இளைஞரிடம் கேட்க இந்தப்பாராட்டுகுரிய ஓர் முக்கியமானவரை கூட்டிவர அனுமதிக்க வேண்டும் எனக்கேட்க அரசர் கூட்டி வருமாறு கூறினார் . அடுத்த நாள் பிரமாண்ட விழா அந்த இளைஞர் ஒரு பெரியவருடன் விழாவுக்கு வந்திருந்தார் .
அதிர்ச்சியுற்ற மன்னர் நாட்டில் ஒரு வயதானவர் கூட இருக்ககூடாது கொல்ல வேண்டும் என உத்திரவிட்டும் வயதானவருடன் விழாவுக்கு வந்துள்ளான என யோசித்தவாறு இளைஞனே நில் யார் இந்தப்பெரியவர் ? இவரை ஏன் கூட்டி வந்தாய் எனக்கேட்க ஜயா மன்னரே என்னை மன்னிக்கவேண்டும் !
நாட்டில் எல்லா வயதானவர்களையும் கொல்லும்படி உத்திரவிட்டீர்கள் . ஆனால் பாசத்தால் என் தாத்தாவை கொல்லாமல் பாதாள அறையில் பராமரித்து வந்தேன் .மக்கள் நோயால் இறந்து கொண்டு இருந்த போது எனது தாத்தா தன் சித்த வைத்திய திறமையால் இந்த நோயை எளிதாக தீர்க்க முடியும் என எனக்கு கற்றுக்கொடுத்து உங்களிடம் அனுப்பி வைத்தார் .
அதனால் தான் என்னால் இந்த கடுமையான நோயை தீர்க்க முடிந்தது எனக்கூற அதைக்கேட்ட மன்னர் பெரும் தவறு செய்து விட்டேனே ! நாட்டில் முக்கிய செல்வங்களில் பெரியோர்கள் என்று உணர்ந்து தம்மை மன்னிக்குமாறு அந்தப்பெரியவரிடம் வேண்டினார் . சொன்னது போலவே இளைஞருக்கும் , வயதானவர் நல்ல பொறுப்பில் வைத்து தொடர்ந்து நல் ஆலோசனைகள் வழங்கி நாட்டையும் நாட்டுமக்களையும் காக்குமாறு அந்த விழாவில் ஆயிரம் பொற்காசுகள் வழங்கி அறிவித்தார் .
கதை நல்லாயிருக்கா? படிச்சிட்டு மறக்க அல்ல இந்தக்கதை .
வயதானவர்களின் முக்கியதுவத்தை உணர்த்தவே இந்தக்கதை .
பெரியவர்கள் வயதானவர்கள் அனுபவ பொக்கிசங்கள் . அதை நன்கு உணர்ந்து பாதுகாத்து நம்முடன் வைத்து அரவணைப்போம் .
இனி வீட்டிலும் நாட்டிலும் பொது இடங்களில் வயதானவர்களை கண்டிப்பாக மதிப்பீர்கள் என்று நம்பிகிறேன் .ஏனெனில் எல்லா சமுக மாற்றங்களும் நம்மிடம் இருந்து கிளம்பவேண்டுமென் விரும்பும்
உங்கள் நட்பூ.
Sunday, January 8, 2012
ஸ்ரீ வேதநாயகி உடனமர் வேதகிரிஷ்வர் திருக்கோவில் .வேதகிரிமலை . ஊராட்சிக்கோட்டை பவானி
ஸ்ரீ வேதநாயகி உடனமர் வேதகிரீஷ்வரர் திருக்கோவில் . வேதகிரி மலை.
ஸ்ரீதேவி,பூதேவி உடனமர் வரதராஜப்பெருமாள் திருக்கோவில். ஊராட்சிக்கோட்டை.பவானி.
ஈரோடு மாவட்டம் திருக்கோவில் அமைவிடம் :
ஈரோடு மாவட்டத்தில் அழகு மிகுந்த காவிரி நதிக்கரையின் அருகே பவானியில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் 3 கி.மீட்டரில் ஊராட்சிக்கோட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள மலையாகும் .
திருக்கோவில் செல்லவழி :
ஊராட்சிக்கோட்டையில் இறங்கி மலைப்பாதை வழியாக சுமார் 1500மீட்டர் உயரம் நடக்க வேண்டும் . 10அடிப்பாதையில் எளிமையான படிக்கட்டில் நடைப் பயணம் செய்ய வேண்டும். திருக்கோவில் செல்ல பயண நேரம் :ஒரு மணி நேரம் பயணிக்க வேண்டும் .உணவு,தண்ணீர் தேவைகளுடன் பயணிக்கலாம் .
வேதகிரியின் சிறப்புகள் :
ஊராட்சிக்கோட்டை வேதகிரி மலை பஞ்சமூர்த்திகளில் முதன்மையானது. திருக்கோவில் தோன்றல் காலம் 600 முதல் 1000ஆண்டுகள் இருக்கலாம் . சைவ,வைணவத் திருத்தலங்கள் ஒன்றாக அமைந்திருப்பது ஓர் சிறப்பு.
திருக்கோவில் சென்றுவர சரியான பாதை பழங்காலத்தில் இல்லாததால் இப்பகுதியில் உள்ள வேதகிரி நற்பணி மன்றம் மற்றும் இங்குள்ள மக்களால் திருப்பணி 1997ல் தொடங்கி அயராத முயற்சியால் 2001 ஆம் ஆண்டு ஜுலை 2 ஆம் நாள் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
பழங்காலத்தில் மலையின் மேற்பரப்பில் 2000அடி அகலம் மட்டுமே இருந்துள்ளது. திருப்பணிக்குழுவினர் அதை 27000 சதுர அடியாக ஆகம முறைப்படி அகலம் செய்து திருக்கோவில் மேற்பரப்பில் தற்போது 8 கோவில்களை சிறப்பாக அமைத்துள்ளார்கள் .
அப்படி திருப்பணி நடக்கும் போது வேதகிரி மலையின் நடுவில் ஸ்ரீ லிங்கேஷ்வரர் சுயம்பு மூர்த்தியாக தோன்றி எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார் . அவருக்கு தனிச்சன்னதி தற்போது நாம் பயணிக்கும் நடைபாதையின் நடுவில் அமைந்துள்ளது.
திருக்கோவில் மேலே அமைத்துள்ள கோவில்கள் :
ஸ்ரீ வேதகிரிஷ்வரர் ,ஸ்ரீ வேதநாயகி, வள்ளி,தெய்வானை உடனமர் கல்யாண சுப்பிரமணியர் ,ஸ்ரீதேவி,பூதேவி உடனமர் வரதராஜப்பெருமாள் . பள்ளி கொண்ட நிலையில் வேதநாரயணர் ,வேதவியாசர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர் .
ஸ்தலமரம் : ஆலமரம் அருகே ஸ்ரீ பெருமாள் பழங்கால சிலை அமைந்திருக்கிறது .இங்கு மூன்று பௌர்ணமி திதிகளில் வணங்கி வந்தால் திருமணத்தடை அகலும் . மூன்று அம்மாவசை திதிகளில் வணங்கிவந்தால் குழந்தைப்பேறு கிட்டுமென்பது ஐதீகம் .
ஜீவசமாதி :
திருக்கோவில் பழையவழி ஜீவாநகர் என்னும் பஸ் நிறுத்தத்தில் இருந்து செல்லும் வழியில் முருகர் கோவில் வலப்புறம் " ஆத்தூர் அருளன்னை ஜீவசமாதி" அமைந்துள்ளது.
1920களில் இப்பகுதிக்கு ஆத்தூரில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிற அருள் அன்னை இங்கேயே பலகாலமாக வாழ்ந்து ஆன்மீக சேவை செய்து வந்ததாகவும் .25.8.1971 ல் ஜீவசமாதி அடைந்து விட்டதாகவும் ,தம்மை நாடி வருபவர்கள் குறைகளை இன்றும் தீர்த்து வரும் அன்னை அவர் .
தற்போது அன்னையுடன் இருந்த முதியவர் தள்ளாத வயதில் சிறிய ஆசிரமத்தில் உள்ளார் .தற்போது ஒருவர் ஆத்தூர் அருளன்னை ஜீவசமாதிக்கு பூஜைசெய்து வருகிறார். அன்னையின் ஜீவசமாதியும் , அவர் தவம் செய்த சிறிய குகையும் தற்போதும் உள்ளது.
திருக்கோவில் மேலிருந்து பார்த்தால் பவானி, கொமராபாளையம் ,பெருமாள் மலை. காவிரியின் அழகும் தெரிகிறது. பஞ்சகிரிகளில் முதன்மையான
அருள்மிகு ஸ்ரீ வேதகிரிஷ்வரரை வந்து வணங்கி எல்லா வளமும் பெறுங்கள் .
Saturday, January 7, 2012
பிரியமானவேளே...! உன் வரவுவுக்காக..!
Subscribe to:
Posts (Atom)
பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை
நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...
-
மனித வாழ்வில் எத்தனோயோ வரங்கள் கிடைக்கப்பெற்றாலும் குழந்தை வரம் முக்கியமானது. அதுவே நம் அடுத்த தலைமுறையின் சொத்தாகும் . குழந்தையில்லா பெண...
-
பாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில் palamalai sri sidheswara temple; kolathur, ...