ஈரோட்டில் துவங்கிய சதுரகிரி திருக்கோவில் பயணம் 31.3.12 :
சதுரகிரியை இணைய உலகமும் ஆன்மீக அன்பர்களும் சிவனடியார்களும் கொண்டாட எமது இரண்டு நன்பர்களுடன் பயணத்தை தொடர்ந்தோம் . ஈரோட்டில் இருந்து மதுரைக்கு செல்ல 5 மணி நேரப்பயணமும் பஸ் கட்டணம் 120 ரூபாய் ஆகின்றது.
மதுரையில் இருந்து சுமார் 80 கி.மீட்டர் தொலைவில் சதுரகிரி அடிவாரம் உள்ளது. ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இறங்கி பின் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் சென்று அங்கிருந்து ராஜபாளையம் செல்லும் வழியில் கிருஷ்ணன் கோவில் பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து வத்திராயிருப்பு சென்று பின் தாணிப்பாறை என்னும் சதுரகிரி அடிவாரத்தை அடையவேண்டும் .
ஈரோட்டில் இருந்து பஸ் மற்றும் போக்குவரத்துச்செலவாக ரூ 400 ஆகிறது . செல்லும் வழியில் அடிவாரத்தில் கஞ்சிமடம் போன்ற மடங்கள் உள்ளன. நீண்ட தூரப்பயணம் செல்லும் சதுரகிரி பக்தர்கள் குளிக்க ஏதுவாக அடிவாரத்தில் பெரிய தொட்டி உள்ளது . சிறிய டீக்கடைகள் , கேசட்கடைகள் , என 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இங்குள்ள தாணிப்பாறை அடிவாரத்தில் அம்மாவசை பெளர்ணமி நாட்கள் அல்லாத நாட்களில் உணவு விடுதிகள் கிடையாது. திருக்கோவில் சன்னதியில் மூன்று வேளை உணவையும் இலவசமாக தருகிறார்கள் . பயணத்தை துவங்கிய நமக்கு பல ஆச்சர்யங்களை ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் தரப்போகிறார் என அப்போது நமக்கு தெரியாது.
சதுரகிரி பல சித்தர்கள் ,முனிவர்கள் ,யோகிகள் வாழ்வதாலும் மலையே சிவனாக வணங்குவதாலும் செருப்பில்லாமல் பயணத்தை ஆரம்பிப்பது நல்லதாம் . முதலில் சற்று தூரம் நடந்தவுடன் பிரமாண்ட பாறகளுடன் அடிவாரங்களும் நீர் ஊற்றுகளும் தென்பட ஆச்சர்யப்பட்டு எட்டிப்பார்க்க பழங்கால ஆமைகள் கரையில் விளையாடி எங்களைக்கண்டதும் குளத்திற்குள் தங்களை மறைத்துக்கொண்டது.
பின் ஆச்சர்யத்துடன் சற்று தூரம் நடக்க முதலில் ஸ்ரீ ஆசிர்வாத விநாயகரை வணங்கி சற்று தூரம் நடந்தால் இடப்புறம் ஸ்ரீ தங்க காளியம்மன் திருக்கோவில் தரிசனம் செய்து நடந்து செல்கிறோம் . பின் ஆங்காங்கே உட்கார்ந்து நடக்க காவல் தெய்வமான ஸ்ரீகருப்பசாமி பேச்சியம்மன் சன்னதியில் வணங்கி பின் சற்று தூரத்தில் குதிரை ஊற்று சிறிய தண்ணீர் குளங்களை கொண்டது. பின் சற்று தூரம் நடந்தால் கோணத்தலைவாசல் வருகிறது.
அதைக்கடந்து காராம் பசு தீர்த்தம் கண்டு நகர்ந்து சென்றால் இரட்டை லிங்கசாமி திருக்கோவில் .இங்கு இரட்டை லிங்கங்கள் அழகாய அமைக்கப்பட்ட சிறிய சன்னதியாகும். சதுரகிரி செல்லும் வழியில் பார்க்க வேண்டிய சன்னதியாகும் . அடுத்து நாம் காணப்போவது சின்னப்பசுக்கிடையாகும் .இங்குள்ள இயற்கை சூழல்களை ரசித்து சென்றால் நாவல் ஊற்றைக்காணலாம் .
நாவல் ஊற்று :
சதரகிரியில் பல திர்த்தங்கள் இருந்தாலும் நாவல் ஊற்று விஷேசமானது. இங்குள்ள தீர்த்தம் குடித்தால் சர்க்கரை நோய் உட்பட கொடிய நோய்கள் குணமாவதாக வரலாறு. இங்குள்ள தண்ணீர் மிகச்சுத்தமாக சுவையாக உள்ளது.
அடுத்து சில அடி தூரம் நடந்தால் தேனி,கம்பம் செல்லும் பாதை பிரிகிறது. அதைக்கடந்தால் பச்சரிசி பாறை வித விதமான குறிப்பாக சிவப்பு நிறங்களில் காணப்படுகிறது. அடுத்து வனத்தைக்காக்கும் வன பத்ரகாளி அம்மன் சன்னதி வருகின்றது.
அடுத்து நாம் காண்பது பெரிய பசுக்கிடை அதைத்தாண்டி சென்றால் சதுரகிரியின் ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதி அருகில் வந்து விட்டோம் என்பதை உணர்த்தும் விதமாக திருக்கோவில் முகப்பின் காவல் தெய்வமான பிலாவடிக் கருப்பசாமி திருக்கோவில் வருகிறது .
இங்கு பக்தர்கள் குளித்து விட்டு பிலாவடிக்கருப்ப சாமியை வணங்கி விட்டு ஸ்ரீ சுந்தரமகாலிங்கத்தை தரிசனம் செய்ய பக்தர்கள் செல்கிறார்கள் . அடிவாரத்தில் இருந்து சுமார் 4 முதல் 5 மணி நேரத்தில் திருக்கோவிலை அடையலாம் .
எல்லா வயதினரும் செல்லலாம் . ஸ்ரீ சுந்தரமகாலிங்க தரிசனம் பற்றிய இடுகை அடுத்த பதிவில் காணவும் .
4 comments:
அருமையான அனுபவம். அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.
பயணம் அனுபவம் அருமை..
அடுத்த பதிவு உங்களுக்காக காத்திருக்கிறது,நன்பா கருத்துரைக்கு நன்றிகளாயிரம் .
dear, kovainearam,gobinath welcome thanks
Post a Comment