

திருமணத்தடை தீர்க்கும்
திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
துதி :
ஒரு முருகா என்று என் உள்ளங்குளிர உவந்துடனே
வருமுருகா என்று வாய் வொருவா நிற்பக் கையிங்ஙனே
திருமுருகா என்று தான் புலம்பா நிற்கும் தையல் முன்னே
திருமுருகாற்றுப்படையுடனே வரும் சேவகனே !
அமைவிடம் :
தமிழ்சங்கம் வளர்த்த மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் மதுரைக்கு தென்மேற்கில் சுமார் 7 கி.மீட்டர் தொலைவிலும் மதுரையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது.
திருக்கோவில் அமைப்பு :
சுமார் 300அடி உயர பாறையின் அடியில் அமையப்பெற்ற அழகிய குடவரைக்கோவிலாகும் . மூலவர் : திருமுருகன் தெய்வானையுடன் திருமணம் நடைபெற்ற இடம் . இங்கு முருகப்பெருமான் தெய்வானை திருமணத்திருக்கோலத்தில் அமைந்திருக்கிறார் . ஸ்ரீ முருகர் திருப்பரங்குன்றத்தில் தவம் செய்ததாக புராணங்கள் இயம்புகின்றன.
மூலவரும் உடனுறை மூர்த்திகளும் :
ஸ்ரீ பரங்கிநாதர் (சிவலிங்கம் )
ஸ்ரீ கற்பக விநாயகர் ,
துர்க்கை ( கொற்றவை )
ஸ்ரீதேவிபூதேவி உடனமர் பெருமாள் ,
மூலவர் தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர்
ஆகிய ஐந்து மூர்த்திகளும் தனித்தனி கருவறைகளில் ஒரே மண்டபத்தில் அருள்பாலிக்கின்றனர் . குகைக்குள் உள்ள குடவரைக்கோவில் வித்தியசாமான ஆன்மீக அனுபவம் .
புராணக்கதை :
சூரபத்மனை அழித்தமையால் இந்திரன் தன் மகளான தெய்வானையை மணம் செய்து வைக்க திருப்பரங்குன்றத்தில் ஆசைப்பட்டு தேவர்கள் ,நாரதர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீ முருகப்பெருமான் தெய்வானையை இத்தலத்தில் மணம் புரிந்து முருப்பெருமான் உறையும் அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக சிறப்பிடம் பெற்று விளங்குகிறது.
திருப்பரங்குன்றத்தின் சிறப்புகள் :
1. பாண்டிய நாட்டில் பாடல்பெற்ற 14 சைவத்திருத்தலங்களில் ஒன்று
2. ஸ்ரீ முருகர் தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் இங்கு மட்டுமே காணலாம்
3. பாறையில் செதுக்கப்பட்ட ஒரே குடவரைக்கோவில்
4. ஆறுபடைவீடுகளில் முதல் படை வீடு
5.இரட்டை விநாயகர் சிலைகள்
6. மூர்த்தி,ஸ்தலம் ,தீர்த்தம் ஆகிய முச்சிறப்புகளையும் கொண்டது
7. தேவாரம் கூறும் சைவத்திருத்தலங்கள் 275ல் ஒன்று
8. முருகர் அமர்ந்த நிலையில் காணப்படும் சிறப்பு
9 .சிவபெருமானும் முருகரும் இணைந்து காணப்படுவதால் "தெற்கு கயிலாய மலை " என கூறப்படும் சிறப்பு
10.போகர் சாப விமோசனம் பெற்ற ஸ்தலம்
11. பாராசுர முனிவரின் மகன்கள் சாபம் நீங்கப்பெற்ற ஸ்தலம் என கண்ணுக்கு தெரியாத பல்வேறு சிறப்புகளை அற்புதங்களை நிகழ்திய ஸ்தலமாகும் .
சான்றுகள் :
சமண முனிவர்கள் இங்கு பஞ்சபாண்டவர்கள் குகையில் தங்கியிருந்ததற்கான சான்றுகள் 3 ஆம் நூற்றாண்டின் பிராமி எழுத்துக்கள் இன்றும் உள்ளதாம் . புராணங்காலங்களில் இருந்து புகழ்பெற்றுவந்த திருப்பரங்குன்றத்தை பாண்டிய மன்னர் நெடுஞ்சடையான் பராந்தகன் கி.பி 765- 815 ல் உருவாக்க முனைந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றது.
ஸ்தலமரம் : கல்லத்தி மரம்
லட்சுமி தீர்த்தம் :
திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பெரிய குளமாகும் . அழகிய மீன்களுக்கு மக்கள் இங்கே விற்கப்படும் பொறிகளை இறைத்து வருகின்றனர் .
திருப்பரங்குன்றதை வியந்து பாடல் பாடியவர்கள் :
திருஞானசம்பந்தர் ,ஸ்ரீ சுந்தரர் ஆகியராலும் தேவாரப்பதிகளில் பாடப்பெற்றும் குமரகுருபரர் ,நக்கீரர்,பாம்பன் சுவாமிகள் ,அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலம் .
பூஜை நடைபெறும் நேரங்கள் :
கோபூஜை -5..00மணிக்கு துவங்கி உச்சிகாலம் பூஜை12.30வரையிலும் மாலை சாயரட்சையில் 05.30க்கு துவங்கி இரவு 9.30க்கு பள்ளியறை பூஜைகளுடன் முடிவுகிறது.
திருவிழா :
வைகாசி மாதத்தில் வைகாசி விசாக தினம், பங்குனி உத்திரம் ஆகிய இந்துக்களின் அனைத்து விஷேச தினங்களும் முருகப்பெருமானுக்குரிய விஷேச பூஜைநாட்களும் உகந்தது. வெளியூர் பக்தர்கள் எல்லா நாட்களிலும் அருள் வேண்டி வருகின்றனர் .
முடிவுரை :
ஏழு நிலை இராஜகோபுரங்களுடன் 12 தீர்த்தங்களுடன் ஸ்ரீ முருகப்பெருமான் தெய்வானையுடன் மணக்கோலத்தில் புரிகிறார் . இங்கே வழிபடுபவர்கள் நல்ல மணவாழ்வு அமைந்து மங்கள இசை கேட்கலாம் திருமண வரம் கிட்டும் .
திருப்பரங்கிரி,சுமந்தவனம் ,கந்தமாலை ,சுவாமிநாதபுரம் ,தென்பரங்குன்றம் ,தண்பரங்குன்றம் என்று அழைக்கப்படும் திருப்பரங்குன்றத்தை திருப்பரங்குன்ற நாதனை வணங்கி மங்களம் உண்டாக வாழ்த்துக்கள் .
ஓம் முருகா சரணம் முருகா
No comments:
Post a Comment