


திருக்கோவில் அமைவிடம்: விஜயமங்கலம்.,
பெருந்துறை வட்டம்,ஈரோடு மாவட்டம்.
மூலவர் : சந்திரபிரபா தீர்த்தங்கரர் (8 ஆம் தீர்த்தங்கரர்)
அம்பாள் : குஷ்மாண்டணி தேவி (தர்மதேவி)
காணப்படும் சிலைகள் : வர்த்தமான் மகாவீரர் .ரிஷப தீர்த்தங்கரர் (ஆதிநாதர்) நிபக்ஷாயக்ஷிகள் (5 இறைவன் புகழ் பாடிய புலவர்கள் )
கோவிலின் சிறப்புகள் : விஜய நகரப்பேரரசு ஆட்சிக்காலத்தில் விஜயபுரி (விஜயமங்கலம்)தலைநகராகவும் இருந்து வந்துள்ளது. இங்குதான் வரலாற்று சிறப்புமிக்க இல்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் சுமார் 2800 வருடங்கள் பழமையானது என்கிறார்கள் .அண்மையில் இத்திருக்கோவில் சென்று பார்த்தபோது பலவீனமாக இருப்பதை உணர முடிந்தது.
"நெட்டைக்கோபுரம்"ஒற்றைக்கோபுரம் என விஜயமங்கலம் மக்களால் அழைக்கப்படும் இத்திருக்கோவில் மிகப்பழமை வாய்ந்த கோவிலாக தெரிகிறது. ஆனால் சிலருக்கு மட்டுமே இக்கோவில் பற்றி தெரிகிறது. பழங்காலத்தில் பல சமண மதத்தை சார்ந்தவர்கள் இங்கு குடியிருந்து வந்ததாகவும் ,கால மாற்றங்களினால் அவர்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கு குடியேற்றம் ஆகிவிட்டதாக தெரிகிறது. இந்த திருக்கோவிலை கொங்கு வேளீர்கள் கட்டியதாக வரலாறு. காலம் கி.பி ஆறாம் நூற்றாண்டை சேர்ந்தது எனவும் கூறப்படுகின்றது.
தற்போது கேரளாவின் வயநாடு பகுதிகளில் இத்திருக்கோவில் சம்பந்தப்பட்ட சொந்தங்கள் வசிப்பதாக சொல்கிறார்கள். தற்போது இக்கோவில் வளாகத்தில் மூன்று குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள்தான் இத்திருக்கோவில் பூஜை புனஸ்காரங்கள் செய்து கோவிலை தற்போது பராமரித்து வருகின்றனர்.
இத்திருக்கோவிலில் மூலவர்(சந்திரபிரபா தீர்த்தங்கரர் 8 ஆம் தீர்த்தங்கரர்) சிலை சில வருடங்களுக்கு முன் திருட்டுப்போய் விட்டதால் பூஜை குஷ்மாண்டணிதேவி எனும் அம்பாள் சிலைக்கு தான் செய்யப்படுகிறது.
கோவில் தற்போது தேசிய முக்கியதுவம் வாய்ந்து சின்னமாக (1958 எண் 24 கீழ்) கருதி மத்திய தொல்பொருள் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சின்னங்களையோ ,கோவிலையா சேதப்படுத்துதல்,அகற்றுதல் ,திருத்துதல் ,தகாத முறையில் உபயோகித்தால் 3மாத சிறை 5000 அபராதமாகும் எனும் அறிவிப்பு பலகையாகவும், கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பகுதியாகவும் இப்பகுதியை சுற்றி 200மீட்டர் தோண்டுதல் கட்டிடப்பணிக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
பழங்கால இக்கோவில் பற்றி கேள்விப்பட்டு மக்கள் பலரும் அவ்வப்போது வந்து செல்கிறார்கள். நீங்களும் முடிந்தால் பழங்கால கோவில் பார்க்க ஆசையிருப்பின் கோயமுத்தூரில் இருந்து சேலம் செல்லும் நான்கு வழிச்சாலையில் விஜயமங்கலம் (பெருந்துறையில் இருந்து 12 கி.மிட்டர்)உள்ளது. அங்கிருந்து கள்ளியம்புதூர் செல்லும் சாலையில் வலதுபுறம் செல்லவேண்டும் .நெட்டைக்கோபுரம் என விசாரித்தால் சொல்லுவார்கள். திருக்கோவிலுக்கு ஸ்ரீ அமணேஸ்வரர் ஆலயம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. திருக்கோவில் சிற்பங்கள் கல்தூண் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ள ராசி சக்கரங்கள் , சமணர்கள் வாழ்க்கை வரலாறு,தத்துவம் ,பண்பாடு சமணர் இலக்கியத்தை விளக்கும் நல்லதொரு சான்றாக திருக்கோவில் விளங்குகின்றது
இக்கோவில் பற்றி எழுதப்பட்டுள்ள இவ்விடுகை பழங்கால ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் உதவி செய்யும் நோக்கில் பலரையும் கேட்டு செவி வழிச்செய்தியாக உங்கள் முன் வைக்கிறேன். ஆகவே இதன் உண்மைதன்மைகள் ஆய்ந்து உணர வேண்டியுள்ளது.இக்கோவில் பற்றி தகவல்கள் கிடைக்கும் போது இப்பகுதி நீட்டிக்கப்படும். உங்களுக்கு தெரிந்தால் மெயில் செய்யவும்.மற்றபடி உங்களின்
விமர்சனங்கள் வேண்டி
குரு.பழ.மாதேசு.