Sunday, October 30, 2011

மோதிரக் கையால் குட்டு

வலைப்பூ தொடங்கி ஒரு வருடமாகிவிட்டது. எதைப்பற்றி எழுதுவது என யோசித்தபோது தோன்றியதை விட , எதைப்பற்றியாவது எழுதி அடுத்த தலைமுறையை தவறான வழிக்கு இட்டுச்சென்று விடக்கூடாது என்ற எண்ணமே அதிகம் .

சரி வலைப்பூவில் எழுதுகிறோம் .அது நல்ல இடுகையா என எப்படி அறிந்து கொள்வது ? யாராவது சொன்னால் தானே தெரியும்.. ? சொன்னார் அவர் தான் " பதிவர் தென்றல்" என பதிவர்களுக்காக தொடங்கப்பட்ட மாத இதழ் ஆசிரியர் திரு அன்புமணி .

SEPTEMPER- 2011 பதிவர் தென்றல் இதழில் நம் வலைத்தளத்திற்கு (www.kavithaimathesu.blogspot.com) மோதிரக்கையால் குட்டு வாங்கினாற் போல நமது வலைத்தளத்தின் இடுகையான " நீங்கள் பங்குச்சந்தைக்கு புதியவரா..?" என்ற இடுகை தேர்ந்தெடுக்கப்பட்டு பதிவர் தென்றல் இதழில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்கள்.


சந்தோஷமான செய்தி ,நீங்களும் வலைத்தளத்தில் எழுதுபவர் எனில் உங்கள் படைப்புகள் இடம் பெற வேண்டுமானால், தங்களின் வலைத்தள முகவரி,மெயில் முகவரி,உங்களின் இல்ல முகவரியை மின் அஞ்சல் மூலம் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:


thambaramanbu@gmail.com

பதிவர் தென்றல் மாத இதழ் ஆசிரியர் திரு.அன்புமணி

அலைபேசி - 98409-92769

பதிவர் தென்றல் முகவரி :

ஆசிரியர் ஜெ.அன்புமணி, பதிவர் தென்றல் 163,திருவள்ளுவர் தெரு, கிழக்குதாம்பரம் ,சென்னை -600059

வலைத்தளம் : http://anbuvanam.blogspot.com மற்றும் http://thagavalmalar.blogspot.com ஆகிய இணையத்தை காணுங்கள் .

நமது இடுகையை வெளியிட்ட பதிவர் தென்றல் ஆசிரியர் அன்பு மணிக்கு வாழ்த்துக்கள் கூறி இத்துடன் முடிக்கிறேன் .

நட்புடன் குரு.பழ.மாதேசு ,குருவரெட்டியூர்

சவால் சிறுகதை போட்டிக்கு வாழ்த்துக்கள்


வலைப்பதிவாளர்களுக்காக வலைப்பதிவாளர்கள் நடத்தும் "சவால் சிறுகதைப்போட்டி - 2011 " அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை தரமான சிறுகதை எழுத வரவேற்கும் ஓர் புதிய முயற்சி. இரண்டாவது வருடத்தில் அடி எடுத்துவைக்கும் சவால் சிறுகதைப்போட்டியை அமைப்பினர் வலைப்பதிவாளர்கள் திரு .பரிசல்காரன் மற்றும் திரு.ஆதிமூலகிருஷ்ணன் (தாமிரா) மற்றும் யுடான்ஸ் வலைத்திரட்டி ,யுடான்ஸ் டி.வி அமைப்பினர்கள் அனைவருக்கும் , எனது பாரட்டுக்கள் .

கதைக்காக ஓர் படத்தை தேர்வு செய்து ,அந்தப்படத்தின் துண்டுசீட்டுகளை வைத்தும் ,படத்தை உள்வாங்கியும் சிறுகதை எழுதச்சொன்னார்கள் . நானும் சேலஞ்ச், சித்தரின் எழுத்துக்கள் என்ற தலைப்பில் இரண்டு சிறுகதைகளை அனுப்பி உள்ளேன் .எனது வலைத்தளத்தை பார்வையிடும் நீங்கள் எமது கதையை படித்துவிட்டு நிறைகுறைகளை சுட்டிக்காட்டுங்கள் .

எமது சிறுகதை பிடித்திருந்தால் ,நன்றாக இருந்தால் சிறுகதைக்கு கீழே உள்ள like பட்டனை தட்டிவிட்டு செல்லுங்கள் . கதைக்கு நீங்களும் 10 மதிப்பெண் போடலாம் . மீதி 90மதிப்பெண்களை நடுவர் குழு ஆராய்ந்து தீர்மானித்து நவம்பர் 15 ஆம் நாள் சவால் சிறுகதையில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள் .

கதையை படித்துவிட்டு எமக்கு தேவைப்படுவதெல்லாம்

உங்கள் கருத்துரையே மறவாமால் இட்டுச்செல்லுங்கள் .

நட்புடன் குரு.பழ.மாதேசு, குருவரெட்டியூர்

Saturday, October 29, 2011

சித்தரின் எழுத்துக்கள் ( சவால் சிறுகதைப்போட்டி-2011 )

ஐ.ஜீ அலுவலகம். ஐ.ஜீ ரவியை பார்க்க கதவை திறந்து உள்ளே வந்த எஸ்.பி கோகுல் க்ரைம் பிராஞ்ச் ஓர் சல்யூட் அடிக்க வாங்க எஸ்.பி கோகுல் ஓர் முக்கியமான தகவல் சேகரிக்கற விஷயமா உங்களை வரச் சொன்னேன் சார் சொல்லுங்க என்றவாறு ஐ.ஜீ ரவியை பார்த்தவாறு எஸ்பி கோகுல் இருக்க ஓர் பைல் ஒன்றை எடுத்துபார்த்துவிட்டு நிமிர்ந்தஐ.ஜி" ஆல் இந்திய மெடிக்கல் கவுன்சில் நம்மகிட்ட ஓர் உதவி கேட்டுருக்காங்க ..!


அது சம்பந்தப்பட்ட விபரங்கள் இந்த பைல்ல இருக்கு இது சம்பந்தமா உங்களுக்கு உதவ ஓர் இன்பார்மர் தயார் பண்ணிருக்கேன் அவன் பேர் விஷ்ணு அவனோட விபரங்கள் இந்த பைல்ல இருக்கு உங்களுக்கு சந்தேகம்னா எனக்கு எப்ப வேணா கூப்பிடலாம் "என தன் உரையை முடித்த ஐ.ஜரவிக்கு ஓர் சல்யூட் அடித்து பைலை பெற்றுக் கொண்டு கிளம்பினார்.

எஸ்.பி கோகுல் இந்த பைலில் என்ன தான் இருக்கும்.? ஆல் இந்திய மெடிக்கல் கவுன்சில் போலீஸ் உதவி தேவைப்படுகிறதா ஏன் ? என்பது உட்பட மனதில் ஏற்பட்ட பல கேள்விகளுக்கு யோசித்துக் கொண்டிருக்கையில் எஸ்.பி கோகுலின் கார் தன் வீட்டின் முன் வந்து நின்றது உள்ளே வந்ததும் தனியறையில் உட்கார்ந்த எஸ்.பி.கோகுல் பைலை புரட்டி பார்த்தார்.. அதில் கண்ட வாசகங்கள் பின்வருமாறு இருந்தன

சேலம் பாலமலை அடிவாரத்தில் அமைந்த பாலமலை சித்தர் ஆசிரமம் என்ற ஒன்று உள்ளது .மனித உலகிற்கு இந்த ஆசிரமம் பிரபலமாக அறியாவிட்டாலும் ,பாலமலை சித்தரின் சித்த மருத்துவத்தின் மூலம் மருத்துவ உலகை திரும்பி பார்க்க வைத்துவிட்டார். தற்காலத்தில் மனிதனை வேகமாக கொன்று வரும் எச்.ஐ.வி எய்ட்ஸ்க்கு தனது தளராத முயற்சியால் மருந்து கண்டு பிடித்து சிலருக்கு சோதனை செய்து பார்த்ததில் அவர்கள் குணமாகி தற்போது நல்ல நிலையில் உள்ளார்கள்..

அந்த மூலிகை பற்றியும் அதன் தாதுக்கள் கலந்த விபரங்களேயும் ரகசியமாக பாதுகாத்து வைத்திருந்த சித்தர் கடந்த வாரம் தள்ளாத வயதினால் இறந்துவிட்டார் உதவிக்கு கூட ஆள் வைத்துக்கொள்ளாத சித்தர் இறந்த பின்பு அவர்எச்.ஐ.வி எய்ட்ஸ்க்கு மருந்து தயாரித்த விதம் ரகசியம் காக்கப்பட்டதால் இன்று வரைஅறியமுடியாத தாக உள்ளது .

எங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் இந்த ரகசியங்கள் சித்தர் எங்குவைத்துள்ளார் ?

அதன்விபரங்கள் என்ன ? என்பதைஇந்திய மெடிக்கல் கவுன்சிலுக்கு தேவைப்படுகிறது.! சித்தர்யார்என்கிற விபரங்களும் ? தேவைப்படுகிறது. முக்கியமான விஷயம் இந்த உதவியை உங்கள் காவல்துறை செய்வதன் மூலம் வரும் காலத்தில் எச்.ஐ.வி இல்லாத இந்தியாவை உருவாக்க உதவி செய்வதாக இருக்கும் இப்படிக்கு மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா


அடுத்த பக்கத்தில் இன்பார்மர் விஷ்ணுவின் முகவரியும் செல்போன் நம்மரும் இருந்தது படித்து முடித்த எஸ்பி கோகுல் இந்த விபரங்களை வைத்துக்கொண்டு எப்படி கண்டு பிடிப்பது என யோசித்துக்கொண்டு இருக்கையில் விஷ்ணுவின் செல் நம்பர் கண்ணில் பட்டது . ஓ.கே விஷ்ணுவிடம் பேசினால் சில தகவல் இருக்காலாம் என எண்ணிய எஸ் பி தனது செல்போனில் விஷ்ணுவை அழைத்தார்

ரிங்ஆனது

விஷ்ணு புது நம்பரா இருக்கே என யோசித்தவாறு எடுத்து விஷ்ணு

ஹலோ..!

ஹலோநான் எஸ் பி கோகுல் பேசறேன்.
ஐஜீ ரவி பாலமலை சித்தர் ரகசியம் சம்பந்தமாக உங்களிடம் சில விபரங்கள் இருப்பதாக சொன்னார் அதைச் சொல்ல முடியுமா ?

சார் நான் ஒரே ஒரு க்ளு மட்டும் பாலமலை சித்தர் ஆசிரமத்துல எடுத்தேன் . இப்ப வண்டில போயிட்டு இருக்கேன். வீட்டுக்கு போய்ட்டு உங்களுக்கு எஸ்.எம் .எஸ் ல அந்த குறியீட்டை அனுப்பறேன் சார் . ஓகே என்றவாறு போனை கட் செய்தார் எஸ்பி கோகுல் .அடுத்த நிமிடம் ஐஜீ இன்பார்மர் விஷ்ணுவை அழைத்து எஸ் பி கோகுல் உனக்கு போன் செய்து குறியீடு கேட்டால் சரியான குறியீடு கேட்டால் கொடுக்காதே ! மாற்றிக்கொடு காரணம் கேட்காதே . என்றார் சரிங்க சார் என்றவாறு குழம்பி போனை வைத்தான் விஷ்ணு20நிமிடத்தில் எஸ்பி கோகுலுக்கு ஓர் எஸ் எம் எஸ் வந்தது . அதை திறந்து பார்த்தார் எஸ்பி அதில் MR கோகுல், SW H2 6F இதுதான் குறியீடு .விஷ்ணு . தனது டேபிளில் ஓர் துண்டுசீட்டில் எழுதி வைத்துக்கொண்டு யோசிக்கஆரம்பித்தார்


அடுத்த நிமிடம் ஐ.ஜீக்கு செல்லுக்கு ஓர் எஸ்எம் வந்தது. அதில் சார் நான் எஸ்பி கோகுலிடம் தவறான குறியீட்டை தான் கொடுத்திருக்கிறேன் கவலை வேண்டாம் என இருந்தது படித்துவிட்டு மெளனமாய் சிரித்தார் ஐஜீ

தன்னிடம் கொடுக்கப்பட்ட முக்கியமான பணியை அறிந்த எஸ்பி கோகுல் மொபைல் டிரேஸிங் வசதி மூலம் ஐ.ஜிக்கு விஷ்ணு அனுப்பிய எஸ்எம் எஸ் ஐ படித்தார் .சற்றே அதிர்ச்சி அடைந்தவாராக ஏன் இப்படி ?விஷ்ணு தவறான குறியீட்டை கொடுக்கவேண்டும் என யோசித்தவாறு இருக்க அந்தக் குறீயீட்டின் அர்த்தம் தேட ஆரம்பித்தார் .

விளங்கவேயில்லை .அடுத்த நாள் தனியாக பாலமலை சித்தர் ஆசிரமம் சென்று ஓர் ரிப்போர்ட்டர் போல விசாரித்து விட்டு வந்தார் பலனில்லை. சித்தர் எட்டாம் வகுப்புவரை படித்தவர் சொந்த பந்தம் யாருமில்லை என்பதை தவிர உபயோகமான குறிப்பு ஏதும் இல்லை.

சரி மனதில் உதித்த கேள்விகளை ஐ.ஜியிடம் கேட்டுவிடலாமென எண்ணி ஐ.ஜி ரவிக்கு போன் செய்தார் .

ஹலோ ஐஜீ ரவி ஹியர்,

சார் நான் எஸ்பி கோகுல் பேசறேன்.

நேரடியா விஷயத்திற்கு வந்துடறேன் விஷ்ணுவோட மொபைல் டிரேஷ் பண்ணுனப்ப உங்களுக்கு ஓர் எஸ்எம்எஸ் அனுப்பிருக்கிறத பார்த்தேன் 'ஏன் எனக்கு குறீயீட்ட தப்பா அனுப்ப சொன்னீங்க??

சிறிது மௌனத்திற்கு பின்

எய்ட்ஸ்கிற கொடிய நோய்க்கு மருந்தை சித்தர் கண்டுபிடிச்சிருக்கலாம் . அது சமுகத்திற்கு நல்லதுதான். ஆனால் இப்ப எய்ட்ஸ் இருக்கிற பயத்தால தான் மனிதன் ஒழுங்கமா பயத்துல இருக்கிறான்னு எனக்குபட்டுச்சு அதான் THAPPA சொன்னேன் என விளக்கினார் ஐ.ஜீ

இருக்கலாம்சார். ஆனா அடுத்த தலைமுறை குழந்தைகள் அப்பாவியா சாகறாங்களே அதுக்காகவாவது நாம இந்த மருந்து இருக்கிற இடத்தை கண்டுபிடிக்கனும் ' சரியான குறியீட்டை சொல்லுங்க சார்

சரி குறிச்சிக்கோ என மனம் மாறி ஐஜீ சொன்னார்

SW2HF6

ஆல்தபெஷ்ட் எஸ்பிகோகுல் இதான் உண்மையான குறீயீடு.

4ஆம் நாள் பாலமலை சித்தரின் ஓலைச்சுவடியுடன் பாதுகாக்கபட்ட பெட்டியுடன் ஐஜீ அலுவகத்திற்கு வந்தார் ஆல் இந்தியா மெடிக்கல் கவுன்சில் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு எஸ்பி கோகுலை பாராட்டினர்.


ஐஜீ பொறுமைதாங்காதுகேட்டார்.SWக்கு(SIDDES WARAN )என்றும்2Hக்கு(HILLS 2)என்றும்F6க்கு (feet 6)என்றும் அர்த்தம்.
சித்தரின் ரகசிய பெட்டியை தன் இறப்பை முன்னமே அறிந்து பாலமலையில் உள்ள சித்தேஷ்வரன்என்னும் மலைக் கோவிலில் தான் தவம்செய்த இடத்தில் இந்த அரிய ஓலைச் சுவடியை பாதுகாத்து வைத்துள்ளார்.(பால மலையில் உள்ள ஒரு கோவில் தான் சித்தேஷ்வர மலை) அந்த குறியீட்டின் மூலம் இடத்தை கண்டுபிடித்து கொண்டு வந்து விட்டேன் சார் Eன்றார் எஸ்பிகோகுல் சபாஷ் என தட்டிக்கொடுத்தார் ஐஜி

Thursday, October 27, 2011

சேலன்ஜ் (" சவால் சிறுகதைப்போட்டி -2011)

ஆள் அரவமில்லாத சேலத்தில் இருந்து கோவை செல்லும் பைபாஸ்ரோட்டின் ஓரத்தில்அமைந்த தனி வீட்டில் பிரகாஷ் உட்கார்ந்திருத்தான்.
பிரகாஷ் யாருமல்ல சேலத்தில் பெண்கள்,சிறுமிகளை கடத்தி பெற்றோரிடம் பணம் பறிக்கும் கும்பலின் தலைவன்.

போலீஸ்க்கு தகவல் சொன்னால் தடயமில்லாமல் கொலை செய்து காவிரி ஆற்றில் உருத்தெரியாமல் விட்டுவிடுகிற நிகழ்காலகுற்றவாளி

அந்த வீட்டில் பிரகாஷ் கூடவே நன்கு மாடு,பன்றிகளாய் சாப்பிட்டு (சமைத்துதான் )உடம்பை வளர்த்து தலைவன் பிரகாஷ் சொல்வதை கேட்க நான்கு பேர்கள் அந்த வீட்டில் கூடவே ஓர் வசதியான குடும்ப பர்பியூம் வாசனையில் 20வயதானலும் 16 வயதிலேயே இருக்கும் இளம்பெண் வாயை துப்பட்டாவால் கட்டியநிலையில் கை,கால்களுக்கு கயிறு கட்டியவாறு பயத்தால் மயங்கிலையில் ஓர் ஓரமாக கிடந்தாள் சுகந்தி .

பிரகாஷ் ஓர் தடி மாடு போல இருந்த ரவுடியை கூப்பிட்டான் "டேய் ! நம்ம இன்பார்மர் விஷ்ணு நம்மகிட்டயே காசு வாங்கிட்டு நம்மள போலீஸ்கிட்ட காட்டிக் கொடுத்துடப்போறான் .. அவன்ஆள்எப்படி?

"அண்ணே அவன் நம்ம ஆளுண்ணே..! நம்மள போலீஸ் கிட்ட காட்டி கொடுக்கமாட்டான் !அவன்எஸ்.பிகோகுல் கிட்டநெருக்கமா இருக்கிறதே நமக்கு தகவல் சொல்லத்தான் ..!


ஆமா ..! அப்படி ஏதாச்சும் பண்ணுனான்னா அவன் குடும்பத்தை காலி பண்ணிட ஆள்வெச்சிடு.!

சரிண்ணே என்றவாறு தலையாட்ட பிரகாஷின் செல்போன்எஸ்.எம்.எஸ் ஒலித்தது.அது இன்பார்மர் விஷ்ணு அனுப்பியது.
அதில் " சார் எஸ் .பிகோகுல் இந்த பொண்ணு கடத்துன விவகாரத்துல டீப்பா இன்வஸ்டிகேசன் பண்ணீட்டு இருக்கார் . ஆனா நான் எஸ் பி கோகுலிடம் குழம்பி போக தவறான தகவல் குறியீட்டை கொடுத்திருக்கிறேன் கவலைப்படாதீர்கள் என அதில் எஸ் எம் எஸ் இருந்தது.

சந்தோஷத்தில் பிரகாஷ் பிற ரவுடிகளிடம் "டேய் விஷ்ணு இருக்கிற வரைக்கும் போலீஸ் நம்ம கிட்ட வராது " ஓகே பணம் எவ்வளவு வேணும்ங்கிறத நாளைக்கு இந்த பிள்ளையோடஅப்பன் கிட்டபேசிக்கலாம் கார்ல கிடக்கற சரக்க கொண்டு வாடா ! சாப்பிடலாம் என்றவாறு ஹாயாக சோபாவில் சாய்ந்தான் .


எஸ் அலுவலகத்தில் அவசரமாக ரகசியமாக கூட்டப்பட்ட மீட்டிங் .


கிரைம் புலி என்று சேலம் மாவட்டக் காவல்துறையினயரால் பாராட்டை வாரம் ஒருமுறை பெறுபவர் . எஸ் பி கோகுல் முன்பு ஏ.டி.எஸ்.பி மாதேஸ்வரன் , டி.எஸ்.பி சிவசங்கரன் மூவரும் அமர்ந்திருந்தனர் .

எஸ் .பி கோகுல் பேச ஆரம்பித்தார்.

"நம்ம அமைச்சர் பொண்ணு சுகந்தி காணாம போயி 12 மணி நேரம் ஆச்சு..! எல்லா இடத்தில இருந்தும் போன்ல பிரசர் .! நம்ம அமைச்சர் குழந்தை மாதிரி அழறார் . ஏதாச்சும் க்ளு கிடைச்சுதா மாதேஸ்..?

ஏடி.எஸ்.பி மாதேஸ் தனது பைலை புரட்டியவாறு " சார் பொண்ணுங்களை கடத்தற அக்கயுஷ்ட் லிஸ்ட்ல 5 கும்பல் இருக்கு சார் ..! இப்ப மூன்று டீம் இடத்தை மாத்திட்டாங்க சார் ! அவங்களை வாட்ச் பண்ணி ஓர் டீம் தேடிட்டிருக்கு சார் ! இரண்டு டீம் கோவை மத்திய சிறையில் இருக்காங்க ! ஆனா ஓர் சின்ன க்ளு நாம நம்புற இன்பார்மர் விஷ்ணு ஒர் டீம் கூட தொடர்பு இருக்கிறதாக ஓர் தகவல் இருக்கு சார் ..!


எஸ்.பி கோகுல் ஆச்சரியமாக ஏடி .எஸ்.பி மாதேசை பார்த்து விட்டு " அப்ப விஷ்ணுவையும் குளோஸ் வாட்ச் பண்டிறீங்களா..?

மாதேஸ் சற்றே உறுதியுடன் பேசினார் " ஆமாசார் ! அவன் நமக்கு வேலை செய்யற மாதிரி நம்ம டவுன் இன்ஸ்பெக்டர் ராஜீவ் கூட சுத்திட்டு இருந்துட்டு இப்பதான் வீட்டுக்கு போறானாம் !

எஸ்.பி கோகுல் தொடர்ந்தார் .

ஓ.கே அவனை அப்ப டீப்பா வாட்ச் பண்ணுங்க ! நம்ம மேல அவனுக்கு டவுட் வந்திடக்கூடாது.

இன்பார்மர் விஷ்ணு லிங்க் வைச்சிருக்கிற அக்யூஸ்ட் டீம் யாரு?

மற்றோர் பைலை எடுத்துக்காட்டிய ஏடி. எஸ் .பி மாதேஷ் சார் இவன் பேரு பிரகாஷ் .சேலம் அம்மாபேட்டை பக்கத்துல வீடு .இவன் இப்போ வீட்ல இல்லையாம் .அவன் வீட்டை வாட்ச் பண்ற எஸ் .ஐ புகழ் மாறன் அங்க இருந்து தகவல் சொன்னார் சார் !


அப்போது எஸ் .பி கோகுல் செல்போன் எஸ்.எம். எஸ் ஒலி ஒலித்தது .

அதில் ஓர் எஸ் எம் எஸ் SW H2 6F இதுதான் குறியீடு அதை ஏடிஎஸ்பி மாதேஸ் வாங்கிப்பார்த்தார் . சார் இதை நான் நோட் பண்ணிக்கறேன் .என்ற மாதேஸ்
'' சார் இன்பார்மர் விஷ்ணு யாருக்கு போன் செய்தாலும் டெக்கினிக்கல் எஸ் ஐ பார்த்தீபனை வாட்ச் பண்ணச் சொல்லிருக்கேன்''

. எஸ் பி கோகுல் வெரி குட் ஏடி எஷ் பி இப்ப எல்லா ஸ்டேசன்லயும் இன்ஸ்பெக்டர்ஸ் அலார்ட் பண்ணாடுங்க !

ஓகே சார் ! மறுபடி எஸ்.பி கோகுலின் செல்போன் ஒலித்தது .

அதில் விஷ்ணு இன்பார்மர் புகைப்படத்துடன் அழைப்பு

எஸ் பி கோகுல்போன் எடுத்து விஷ்ணுதகவல் ஏதாச்சும்இருக்கா?

சார் நான்முன்புஅனுப்பின எஸ்.எம் .எஸ் ஸ்டேட் ஹ வேஸ் H2 ல 6பீட்ல ஓர் கார் நிற்க்குது. இது சேலம் டு ஆத்தூர் ரோட்ல இருக்கு .பார்க்கச்சொல்லுங்க !அத விளக்கமா சொல்லத்தான் கூப்பிட்டேன் சார் !

உடனே எஸ்.பி கோகுல் தேங்ஸ் விஷ்ணு என்னோட ஆபீஸ் வரைக்கும் வந்திட்டு போ ஓர் வேலை இருக்கு!

அதற்கு விஷ்ணு "உடனே ஒரு மணி நேரத்தில் வர்றேன் சார் " என்றவாறு எஸ்.பியை பார்க்க எஸ்.பி அலுவலகம் கிளம்பினான்.

எஸ்.பி கோகுல் டெக்னிக்கல் எஸ் .ஐ பார்த்தீபனை போனில் அழைத்து உடனே இன்பார்மர் விஷ்ணுவின் இன்றைய தினம் யாருக்கெல்லாம் போன் செய்தார் என்ற விபரங்களை கொண்டு வரச்சொன்னார்.


அதே வேளையாக காலையில் இருந்து வாட்ச் செய்து கொண்டிருந்த எஸ்.ஐ பார்த்தீபன் கால்லிஷ்ட் உடன் எஸ்.பி கோகுல் முன்பு அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் முன் நின்றார் .

"பார்த்தீபன்,இன்பார்மர் விஷ்ணுசெல்போன்லயார்அதிகமாதொடர்புவச்சிருக்காங்க?

சார் பிரகாஷ்ன்னு ஓர் பழைய குற்றவாளி அவன் கூட 30 தடவை பேசியிருக்கான் பிரகாஷ் டவர்லொக்கேசன் சேலத்திலிந்து கோவை செல்லும் வழியில் 10 கி.மீட்டரில் காட்டுது சார் .! அதுபழைய குற்றவாளி பிரகாஷ் உடைய குரல்தான் என சோதித்து சரியாக சொல்ல வெரிகுட் தேங்க்ஸ் என்றவாறு

எழுந்த எஸ்பி கோகுல் டிஎஸ்பி சிவசங்கரனிடம் கீழ் புளோர்ள உங்க டீம் கூட வெயிட் பண்ணுங்க.அவனை நம்ம டவுன்ஸ்டேசன்ல வச்சு நல்லா கவனிங்க!

என்றார் வந்த விஷ்ணுவை தூக்கிப்போய் கவனித்தார் டிஎஸ்பி.
உண்மையை ஒப்புக்கொண்டான்.வோறொரு போலீஸ் டீம் கோவை ரோட்டில் பறந்தது.

அடுத்த நாள் காலைச்செய்தியின் தலைப்பு

"அமைச்சர் மகள் மீட்பு.பழங்குற்றவாளி
பிரகாஷ் உட்பட 4 பேருடன் போலீஸ் இன்பார்மர் விஷ்ணு கைது

Monday, October 24, 2011

உண்மையான தீபாவளி

வேடிக்கை பார்க்க மட்டுமே பட்டாசுக்கடை
எனும் வறுமை ..!
போதை அரக்கனிடம் நாள்தேறும்
தோற்றுப் போகிற மனிதன் ..!

நாளும் நமக்கேது உணவு என்னும்
நிலையில் பிச்சைக்கார்கள் ..!
சமுகமும் சாதரண மனிதரும்
உயரவேண்டும்

நம்மிலும் நம்மைச் சுற்றியிலும் இருக்கிற
நரகாசுரன்களை கொன்று .!

அதுவே உண்மையாதொரு தீபாவளி... !

( எனது வலைப்பக்கத்த பின் தொடர்பவர்களுக்கு
தீபாவளி வாழ்த்துக்கள்)

தீபாவளி (முற்றுப்பெறாத பயணம் )

பட்டாசு,
வீட்டில் அனைவருக்கும் புத்தாடை ,
இனிப்புகள் வாங்கி
இருசக்கர வாகனத்தில்
பயணித்து சாலையில் வருகையில்
அனாதை ஆசிரம வாயிலில்
அழுக்குத் துணியுடன்
தீபாவளி வாழ்த்துச் சொல்கின்ற குழந்தைக்கு ,
டாடா காட்டி விட்டு
வீட்டுக்கு வந்த சேர்ந்த பின்னும்
மனம் அந்த அநாதை ஆசிரமத்தின வாசலியே
நின்று அதற்றிக்கொண்டிருக்கிறது .
ஒர் சுவிட் பாக்ஸ்யேனும்
அந்தக்குழந்தையின்
கையில் கொடுத்து விட்டு
வந்திருக்ககூடாதாவென ..!

அஞ்சல் குறியீட்டு எண்ணின் ( PINCODE ) பயன்களும் விபரங்களும்

பின்கோடு என்று அழைக்கப்படுகின்ற அஞ்சலக குறீயீட்டு எண் முக்கிய மான ஒன்றாகும் . அதன் பயன்களை விளக்கவே இந்தப்பதிவு .

நாம் அஞ்சலகங்கள் மூலம் அனுப்பும் தபால்கள்,பதிவுத்தபால்கள் ,மணியார்டர்கள்,விரைவு அஞ்சல் ஆகியவற்றில் பெறுபவரின் பெயர் மற்றும் விலாசத்துடன் செல்ல வேண்டிய ஊரின் அஞ்சல் அலுவலகத்தின் குறியீட்டு எண் (PINCODE) பயன் படுத்துவோம் .

இந்த முறை 15. 08. 1972 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு நாம் அஞ்சலகங்கள் மூலம் எளிதாக ,விரைவாக தபால்களை அனுப்ப ஆவண செய்யப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறை தபால்களை அனுப்ப 6 இலக்க அஞ்சல் குறியீட்டு எண்ணை வழங்கியுள்ளது.

புரியும் விதமாக சொன்னால் எமது குருவரெட்டியூர் (GURUVAREDDIYUR) அஞ்சல் குறியீட்டு எண் 638504 என்பதாகும் .குருவரெட்டியூர் என்பது ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓர் கிராமம் ஆகும் . இதில் 6 என்பது தமிழ் நாடு அஞ்சல் மாநிலத்தையும் 38 என்பது ஈரோடு அஞ்சல் மாவட்டத்தையும் , 504 என்பது குருவரெட்டியூர் என்னும் ஊரின் அஞ்சலகத்தையும் குறிக்கிறது.

அஞ்சல் குறியீட்டு எண் பயன் படுத்துவதால் பயன்கள் :

1.நீங்கள் அனுப்பும் கடிதங்கள் உடனே பெறுபவர்களுக்கு கால தாமதம் இல்லாமல் சென்றடைகிறது .

2.ஓரே பெயரில் பல நகரம் ,கிராமம் ,ஊர்கள் இருப்பதால் சரியாக அஞ்சல் குறியீட்டு எண் தபாலில் இடுவதன் மூலம் தபால் களை குறிப்பிட்ட ஊருக்கு பிரித்து அனுப்ப ஏதுவாக இருக்கும் .

3. முகவரி எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் அஞ்சல் குறியீட்டு எண் உதவியுடன் பெறுபவர்க்கு உடன் அனுப்ப முடியும்.

முன்பு எல்லாம் கடிதம் அனுப்ப அஞ்சலகத்தை நம்பியிருந்த நாம் தற்போது இமெயில் ,பேக்ஸ் ,எஸ்.எம் . எஸ் என புதிய பரிணாமத்திற்கு வந்து விட்டாலும்

அஞ்சலகத்தின் வழியே நமக்கு முக்கிய தபால்கள் ,ஆவணங்கள் , பல்கலைகழக தபால்கள் வங்கி தபால்கள் ,ஷேர் மார்க்கெட் தபால்கள்,திருமண அழைப்பிதழ் போன்ற அஞ்சல்களை நம் வீட்டிற்கு அஞ்சலகத்தின் மூலமே பெற்று வருகிறோம் என்பதை மறக்க கூடாது .


அஞ்சலகம் வழங்கும் தரமான இந்த சேவையில் நாமும் கடிதங்களில் சரியான அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் குறிப்பிட்டு நமது கடிதங்கள் எளிதில் சென்றடய உதவி செய்வோம் . அஞ்சல் அலுவலகத்தின் பயன்கள், விபரங்கள் அறிய www.indiapost.gov.in என்ற இணையத்தளம் உதவுகிறது.


நட்புடன் குரு.பழ.மாதேசு ,குருவரெட்டியூர்

Sunday, October 23, 2011

ஔவையார் அருளிய விநாயகர் அகவலும் ,அதன் புராணக்கதையும்


கயிலாயத்தில் சிவன் சந்நதியில் ஆதியுலா அரங்கேற்றம் செய்வதற்காக நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் ரதத்தில் கிளம்புகிறார் . நாயன் மார்களில் ஒருவரான சேரமாநாயனாரும் அயினாவரம் எனும் பட்டத்து யானையில் கிளம்புகிறார் .பாதி வழி சென்றதும் ஔவையாரை கூட்டி வர மறந்து விட்டோமே என வருந்தினார் . அப்போது ஔவையார் விநாயகருக்கு பூஜை செய்து கொண்டிருந்த ஔவைக்கும் அட நாமும் கயிலாயம் செல்லாமல் விநாயகருக்கு பூஜை செய்து கொண்டிருக்கிறோமே என்ற எண்ணம் உதித்தது.


பூஜையை பாதியில் நிறுத்த முடியாதே என எண்ணி விநாயகப் பெருமானை வேண்டினார் . விநாயகப் பெருமான் உடன் தோன்றி "ஔவையே.. ! பூஜையை முழுமையாக செய்து , எமக்காக பாடல் ஒன்றைப் பாடு நான் உன்னை கயிலாயம் செல்ல ஆவன செய்கிறேன் ". என்றாராம் . உடனே ஔவையார் துரிதமாக பூஜை செய்து "விநாயகர் அகவல்" என்ற பதிகத்தை இயற்றி பாடினார் .

விரைந்து பூஜையை முடித்தார் . உடனே அங்கு தோன்றிய விநாயகப் பெருமான் யானை உருவமெடுத்து,துதிக்கையால் ஔவையை எடுத்து கயிலாயம் தூக்கிச் சென்று விரைவாக விட்டாராம் . பின்னர் வந்து சேர்ந்த சேரமா நாயனார் எப்படி எனக்கு முன்பே கயிலாயம் வந்தீர்கள். என ஆச்சர்யப்பட்டு கேட்க அதற்கொரு பாடல் பாடினார் .

கட்டளைக்கழித்துறை

மதுரமொழி நல்லுமையாள் புதல்வன் மலர்பதத்தை
முதிர நினைய வல்லார்க் கரிதோ முகிழ்போன் முழங்கி
யதிரநடந் திடும் யானையுந் தேமருதன் பின்வருங்
குதிரையுங் காதங் கிழவியங்காதங் குலமன்னனேஎனப்பாடி தாம் வந்த விதத்தை விவரித்தார் .
"சீதங்களம்பச் செந்தாமரைப்பூவும்" எனத்தொடங்கும் விநாயகர் அகவல் பாடலை நாம் நற்காரியங்கள், செயல்களை துவங்கும் போது பாடினால் , பாராயணம் செய்தால் தடையில்லாமல் நம் வாழ்வில் நம்மை முன்னேற வைக்கும் என்பது உறுதி. இது நமக்காக ஔவையார் அருளிய அருள் வாக்காகும்.

ஆகவே "சீதங்களம்பச் செந்தாமரைப்பூவும்" எனத்தொடங்கும் விநாயகர் அகவலை பாடுங்கள் . செய்யும் செயலை தடையில்லாமல் இனிதே தொடங்குங்கள் . விநாயகர் அகவல் பாடல் படிக்க இதே வலைப்பக்கத்தில் உள்ள " ஆலய தரிசனம் " எனும் தலைப்பில் உள்ள இடுகையில் உள்ள விநாயகர் அகவலை படியுங்கள் .

நட்புடன் குரு.பழ.மாதேசு ,குருவரெட்டியூர்

Thursday, October 20, 2011

நமது மண்ணில் வளரும் மரங்கள்


மரம் வளர்க்கவேண்டும் என விரும்புவோம்.. !
ஏதேனும் சமுக சேவை செய்ய வேண்டுமென விரும்பி மரம் நட்டு விட்டு வருவோம் .
சில இடங்களில் நாம் நட்ட மரம் நட்ட நிலையிலேயே இருக்கும். அதற்கு காரணம் அறியாமல் குழம்புவோம் . விவசாயத்திற்கும் இது பொருந்தும் .

மரம் வளராமைக்கு காரணம் மண்ணின் தன்மை அறியாமல் நாம் நடுவதே ஆகும் . சரி எந்த மண்ணில் எந்த மரத்தை நட்டால் பலன் தரும் அல்லது வளரும் என அறிந்து கொள்ளவே இந்தப்பதிவு.

ஓடை புறம்போக்குகளில் வளரும் மரங்கள் : பனை,யூகலிப்டஸ் .புங்கன் ,பீமரம்,

வறட்சிபகுதிகளில் வளரும்மரங்கள் :சீதா.பனை,வேம்பு, குடைவேல் மரம்,கருவேல் , சீமை கருவேல் ,
சதுப்பு நிலங்களில் வளரும் மரங்கள் : நாவல் ,யூகலிப்டஸ் ,பூவரசு

ஏரிகளில் வளரும் மரங்கள் : கருவேல் ,காட்டு மூங்கில்

ஆழமில்லாத மண்ணில் வளரும் மரங்கள் : வாதநாராயணன் ,ஆச்சா. வாகை ,சீதா.

வேம்பு, வெள்வேல் ,கருவேல் ,குடைவேல் , சீமைக்கருவேல்

சரளை மண்ணில் வளரும் மரங்கள் : நாவல் ,ஆச்சா, கொன்னை மூங்கில், முந்திரி
செம்மண்ணில் வளரும் மரங்கள் : இலவம் ,கல்வேல் , பூவரசு சந்தனம் ,நெல்லி,
சவுக்கு, தேக்கு, புளி,

செஞ்சரளை மண்ணுக்கு: : முந்திரி மலைவேம்பு, சில்வர் ஓக் .பைன்

கரிசல் மண்ணுக்கு : வேம்பு ,இலுப்பை ,வனத்தேக்கு , புளி,புங்கன் ,நாவல் ,இலந்தை

,வேம்பு களிமண்ணில் வளரும் மரங்கள்: கரிமருது ,வேம்பு ,வாகை ,கருவேல்

ஆற்றோர மணல் நிலத்தில் வளரும் மரங்கள் : சவுக்கு ,பெருமூங்கில் ,இலுப்பை , நாவல்

கடலோர மணல் நிலத்தில் வளரும் மரங்கள் : தூங்குமூஞ்சி ,பனை,பெருமூங்கில், பூவரசு, சவுக்கு,
குளக்கரை ஏரிக்கரைகளில் வளரும் மரங்கள் : நாவல், புளி, இலுப்பை, மருது ,அரசு ,ஆல் ,மா

உவர்மண்ணில் வளரும் மரங்கள் : புங்கன் ,வாகை ,கொடுக்காய் புளி ,வேம்பு,சவுக்கு ,

களர் மண்ணுக்கு :சூபாபுல் , வேம்பு, கருவேல் , இலுப்பை, யூகலிப்டஷ் போன்றவையாகும் .

நீங்களும் மண்ணுக்கேற்ற மரங்களை நடுங்கள் ,

நம்முன்னோர்கள் முழுமையாக விட்டுச் சென்ற இயற்கையை பாதுகாப்போம்.
நாளும் நல்ல காற்றை சுவாசிப்போம் .

நட்புடன் குரு.பழ.மாதேசு

Thursday, October 13, 2011

பூலோகம் வந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (ஆன்மீகக் கதை )


ஒரு நாள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகம் வந்து மானிடர்களை பார்த்து விட்டு செல்லலாம் என எண்ணி நகர்வீதி உலா வந்தாராம்,
சாதாரண மனிதர் உருவில் வந்த ஸ்ரீ கிருஷ்ணரை அடையாளம் கண்டு கொண்ட பக்தர் ஒருவர் அப்பனே ! "பூலோகத்தில் வந்த உங்களை சந்தித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி "! என்றார் . அதற்கு பரவாயில்லை சாதாரண மனித உருவில் வந்தாலும் கண்டு கொண்டாய், சரி நான் பூலோகத்தில் சில மனிதர்களை சந்திக்க வேண்டி உள்ளது . என்னுடன் வாருங்கள் என அழைத்துச் சென்றார் .

பக்கதரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழைப்புக்காக உடன் சென்றார் . சிறிது தூரம் சென்றதும் " பக்தா, எனக்கு தண்ணீர் தாகமாக உள்ளது. இந்த செல்வந்தர் வீட்டில் தண்ணீர் வாங்கி வா என கட்டளையிட்டார் . பக்தரும் மறுப்பேதும் சொல்லாமல் அந்த செல்வந்தர் வீட்டு கதவை தட்டினார் .

வெளியே வந்த செல்வந்தரிடம் பக்தன் "பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வந்திருக்கிறார் உங்கள் வீட்டில் ஒரு சொம்பில் தண்ணீர் வாங்கி வரச்சொன்னார் எனச்சொல்ல அந்த செல்வந்தரோ " யாராக இருந்தாலும் தண்ணீர் தர முடியாது. அப்படி கொடுத்தால் எங்கள் வீட்டில் செல்வம் தங்காது . தண்ணீர் இல்லை என்று சொல்லி விடு என திருப்பி அனுப்பினார் .

பக்தன் ஏமாற்றத்தோடு திரும்பி வந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தண்ணீர் தர முடியாது என அலட்சியமாக சொல்லி விட்டார் எனச் சொல்ல பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சிரித்தாவாறு " இந்த செல்வந்தனுக்கு மேலும் பொன்னும் பொருளும் வந்து சேரட்டும் எனச் சொல்லி விட்டு, ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் நடக்க ஆரம்பித்தார் . பக்தரும் குழம்பியவாறு அவர் பின்னே நடக்கலானார் .

அடுத்து அவர்கள் சென்றது ஓர் தனிக்குடிசை வீடு . அங்கு வறுமைகுடி கொண்டிருந்தது. அங்கு குழந்தைகள்,கணவர் ,தாய், தந்தையர் இல்லாமல் அனாதையாக ஒர் வயதான பெண்மணி மட்டும் வசித்து வந்தார் .ஒரே வயதான மாடு வளர்த்து பால் விற்று அந்த பணத்தில் தம் சுய தேவைகளை பூர்த்தி செய்து வந்தார். ஆனால் ஸ்ரீகிருஷ்ணர் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர்.

அந்த பெண்மணி வீட்டின் முன்பு நின்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் "இந்த வயதான பெண்மணி வீட்டில் தண்ணீர் வாங்கி வா என பக்தரிடம் சொல்ல " சரி என்றவாறு வயதான பெண்மணியிடம் சென்ற பக்தர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உங்கள் வீட்டின் முன்பு வந்து நிற்கின்றார் . தண்ணீர் தாகமாக உள்ளதாம் , தண்ணீர் கொடுங்கள் என்றதும் .

அந்த வயதான பெண்மணி "நான் அனு தினமும் தொழும் எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணரே வந்து இருக்கிறாரா ? என மிக்க மகிழ்ச்சியுடன் ஒர் பாத்திரத்தை சுத்தம் செய்து அதில் சுத்தமான நீர் கொண்டு சென்று ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து வணங்கி நின்றார் . தண்ணீர் பருகியவுடன் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்த பிரமிப்பில் நிற்க பகவான் சிரித்தவாறு போய் வருகிறேன் எனச் சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தார் .

கொஞ்சம் தூரம் நடந்து சென்றதும் அந்த வயதான பெண்மணி வைத்திருந்த மாட்டை பார்த்து ஸ்ரீ கிருஷ்ணர் " இந்த பசுமாடு இறந்து போகட்டும் " எனச்சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் . ஸ்ரீ கிருஷ்ணருடன் வந்த பக்தனுக்கோ குழம்பிய வாறு கிருஷ்ணரிடம் ஓர் கேள்வி கேட்டான் " பகவானே நான் குழப்பமாக உள்ளேன் .

முதலில் ஓர் செல்வந்தர் வீட்டிற்கு சென்றோம் . அவர் தண்ணீர் இல்லை என்றார் . அவருக்கு மேலும் செல்வம் சேரட்டும் என்றீர்கள் , இரண்டாவதாக ஒர் வயதான பெண்மணி தண்ணீர் தந்து தாகம் தீர்க்க உதவினார் . அவருக்கு மாடு செத்துப்போகட்டும் என்கிறீர்கள் . கஷ்டப்படுகிறவர்களுக்கு சாபமும் , செல்வச் செழிப்போடு இருப்பவனுக்கு வரமும் தந்துள்ளீர்களே ? இதுதான் இறைவன் தீர்ப்பா? என கேட்க


பகவான் கிருஷ்ணர் சொன்னார்

(இனி உள்ள வரிகள் முக்கிய மானவை கவனமாக படியுங்கள் )


" பக்தா உனக்கு புரியம்படி சொல்கிறேன் கேள் என்றவாறு " எவன் ஒருவன் அளவுக்கதிகமாக பொன்னையும் பொருளையும் தேடி அலைகிறானோ அவன் நிம்மதியை இழக்கிறான் . அதனால்தான் அவனுக்கு மேலும் பொன்னும் பொருளும் சேரட்டும் என சாபமிட்டேன் . அதை நீ வரமென நினைத்துக்கொண்டாய் !

இரண்டாவதாக அனாதையாக இருந்த வயதான பெண்மணி என்னுடைய தீவிர பக்தை . அவளுக்கு இந்த பூலோகத்தில் இருக்கும் ஒரே பிடிப்பு இந்த வயதான பசு மாடுதான் . அதுவும் இறந்து விட்டாள் . இந்த பெண்மணியும் இறந்துவிடுவாள் . அவளுக்கு மேலோகத்தில் என்னை அனு தினமும் வழிபாடு செய்ததற்காவும் ,நல்ல உள்ளத்திற்காகவும் சொர்க்கத்தை தயார் செய்து வைத்திருக்கிறேன் . அவள் மேலோகத்தில் சந்தோஷமாய் காத்துக்கொள்வேன் என்றவாறு கூறி நான் வந்த வேளை முடிந்தது. சென்று வருகிறேன் எனச்சொல்லி அந்த பக்தனை ஆசிர்வதித்து மாயமாய் மறைந்து போனார் .

பக்தனும் பல வாழ்வியல் சூட்சமங்களை அறிந்தவனாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சென்ற திசையை நோக்கி கை கூப்பி தொழுதார் .

( இந்த ஆன்மீகக்கதை என் நன்பர் வெற்றி வேலின் தாத்தா சொன்னது ,
பிடிச்சிருந்தா .,குற்றம் குறை இருந்தா கருத்துரையிடலாம்)

நட்புடன் குரு.பழ.மாதேசு

Wednesday, October 12, 2011

ஆலய‌த‌ரிச‌ன‌ம்

ஈரோடு மாவட்ட கோவில்கள் ;

ஆலய தரிசனம் ;


மகாசக்தி திருக்கோவில், சித்தர்காடு, ஆதிரெட்டியூர் ,அந்தியூர் பவானி வட்டம் ,(mahasakthi thirukovil,sittharkadu, ahadireddiyur, anthiyur near , bhavani taluk )

அமைவிடம் ; அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் வழியில் 5 கி.மீ தொலைவில் உள்ளது. கொல்லபாளையம் ஏரி வழியாக செல்லவும்.


கோவில் உருவான வரலாறு ;ஒரு ஏழ்மை குடும்பத்தில் பிறந்த அந்த பையன் ஆடு மேய்த்துக் கொண்டும் தனக்கு சொந்தமான காட்டில் தன் 18 வது வயதின் தை மாதத்தில் பெண் பணியாளர்களுடன் கொள்ளு அறுவடை செய்து கொண்டு இருக்கும் போது அப்பது தமக்கு சொந்தமான இடத்தில் முட்புதர்கள்


,பழமையான மரங்கள் அடங்கிய பாறை அருகில் சத்தம் கேட்க அங்கே வந்த அந்த பையன் பார்த்தபோது அங்கே தமக்கு சொந்தமான புதரின் அருகே உள்ள பாழியில்
(பாறையில் இயல்பாக தண்ணீர் தேங்கும் அமைப்பு . போட்டோ பாருங்க)
யாரோ ஒரு பெரியவர் பித்தன் போன்ற ஒருவர் குளித்து விட்டு நிற்க யாராக இருக்கும் என யோசித்தவாறு அந்தப்பையன் விழிக்கசாப்பிட்டாயா..? என வினவி புதரை காட்டி இந்த "புதரில் பாம்பு இருக்கு தெரியுமா,..?
எனக்கேட்டு "போ" என அந்த பெரியவர் சொல்ல அந்தப்புதரில் இருந்து பாம்பு செல்லக்கூடிய சப்தம் உணர்ந்த அந்தப்பையன் அதிசயித்து நிற்க அப்போது அப்பெரியவர் போன்ற சித்தர் உருவம் கொண்ட அவர்


"இந்த இடத்தில் பறி எனச் சொல்ல அந்தப்பையனும் தன் அரிவாளால் மறுப்பு ஏதும் சொல்லாமல் தானும்

குனிந்தவாறு மெல்ல பறிக்க பின்னால் இருந்த பாழியில் இருந்து செம்மண் கலந்த பானையில் நீரை கலந்தவாறு தன்மேல் ஊற்ற திடுக்கிட்ட அந்தப் பையனிடம் இவ்விடத்தில்

"ஞான சித்தரும்,மகா சக்தியும் சிவனும் ஆட்சி செய்கிறார்கள் பூஜை செய்யப்பா"

...! எனக்கூற அந்தப்பையன் ஓடிச்சென்று பாழியில் தன் மேல் ஒட்டிய சேறை நீக்க குளித்து விட்டு வர அந்தப் பெரியவரை காணவில்லே,


சுற்றிலும் பார்த்து விட்டு அங்கே தன் பனைமரத்தில் மேல் இருந்த பனை தொழிலாளர்களிடமும், அங்கே இருந்த பெண்களிடமும் கேட்க அந்தப் பெரியவர் எங்கே சென்றார் என கூறிவிட்டனர்.


3 வருடம் கழித்து; அந்த சம்பவம் மனதை வருட ஒருநாள் தன் வயலின் அதே இடத்தில் தன் மதிய உணவை முடித்து தன் டிபன் பாக்ஸை மறந்த விட்டு வந்தவர் அடிக்கடி அவ்விடத்திற்கு செல்ல பையனக்கு மன நிலை சரியில்லை என கோவில்கள் .,மருத்துவமனை, போய் பார்த்தும் சரியாகமல்


அவரின் 22 வது வயதில் கோபியில் உள்ள சன்யாசியிடம் கூட்டிச்செல்ல இந்தப் பையன் நல்ல முறையில் உள்ளான் எனவும் இவர் காட்டில் ஒரு கோவில் உள்ளது அதற்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றி பூஜை வெள்ளிக் கிழமை அன்று செய்யுங்கள் எனச்சொல்ல கூட்டி வந்த அந்த பையன் இஷ்டம் போல பூஜை செய்ய சொன்னார்கள்.


அவ்விடம் பூஜை செய்ய நன்கு சுத்தம் செய்ய சுயம்பு லிங்கமாக சிவ லிங்கம் அங்கே தரிசனம் தருகிறது. தொடர்ந்து பூஜை நடை பெறுகிறது. அந்தப்பையன் தான் தற்போது பூசாரியாக ,ஞான சித்தர் அருள் பெற்றவராக பூஜை செய்து வருகின்றார் ,


அவ்விடத்தில் இடப் பற்றாக்குறையினால் மகா சக்திக்கு கோவில் தனி சன்னதியாக எழுப்பபட்டு திருப்பணிகள் நடை பெற்று வருகிறது.

ஆன்மீகப் பெரியோர்கள் ஆலோசனைப்படி மகாசக்தி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை வெள்ளி, அம்மாவசை,பெளர்ணமி நாட்களில் நடைபெறுகிறது.


இங்கு உள்ள சிலைகள் 1. மகாசக்தி சிலை சுதகையால் ஆனது,துவாரபாலகர்கள் நீலி,காளி 2. மகாசக்தி தனிபீடம் 3,துர்க்கை,பத்திரகாளி 4. சிவ லிங்க சுயம்பு சிலை (கோவில் வரலாறை சொல்லும் அமைதியான இடம் ) இங்கே மரங்களுக்கிடயே தியானம் செய்ய அமைதி யுடன் காணப்படுகிறது,


தரிசன நன்மைகள் 1. குழந்தை வரம். திருமணத்தடை நீங்கப் பெறுவதாக சொல்கிறார்கள்.


எம் அனுபவத்தில்; இங்கே அமைதி ஏற்படுவதை உணர்கிறேன்,


கோவில் சுவாமிகள் பற்றி;


முன்பு கதையில் அந்தப்பையன் தான் தற்போது வளர்ந்து 40 வயதை கடந்தவராக மாதப்பன், என்கிற முருகேச சுவாமிகள் ஆவார். அவர் மற்றும் புகைப்படங்கள் பாருங்கள்,நேரில் சென்று மகாசக்தியை யும் சுயம்பு சிவலிங்கத்தையும் பாருங்கள்.


உங்கள் மனம் அமைதி பெற வாழ்த்துக்கள் உங்கள்களின் ஆழமான கருத்துரைகளை எதிர்பார்க்கின்றேன்.

எம் இணையத்தை விஜயம் செய்தமைக்கு நன்றிகள் பல

கோட்டை முனியப்ப சாமி ஆலயம்

பெருந்துறை ஈரோடு மாவட்டம் (Kottai muniyappasamy temple, perundurai erode d.t) திருக்கோவில் அமைவிடம்:பெருந்துறையில் இருந்து கோவை செல்லும் பெருந்துறை பஸ் நிலையம் அருகில். ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து 20கி.மீலும் பவானியில் இருந்து 30கி.மீலும் கோவில் உள்ளது.

மூலவர்: முனியப்ப சாமி.

வரலாறு:

திருக்கோவில் கீழ் பகுதியில் இடப்பகுதியில் விநாயகப்பெருமானை தரிசனம் செய்து வலப்பகுதியில் கருப்பராயரை தரிசனம் செய்து 25 படிக்கட்டுகளை ஏறி, (அக்காலத்தில் இந்த இடம் கோட்டையாக இருந்ததாம்.


அக்காலத்தில் விஜயநகரப் பேரரசு விஜயபுரி தற்போது விஜயமங்கலம் 10கி.மீ உள்ளது ) கோவில் உட்பிரகாரம் சென்று இடப்பக்கம் திரும்பினால் 3 முனியப்ப சாமிகள் பிரமாண்டமாய் வரவேற்க உற்றுப்பார்த்தால் பயமாய் நம்மை வரவேற்கிறார்கள்


அவர்களை தரிசனம் செய்து கோவிலை வலம் வந்தால் மூலவர் கோட்டை முனியப்பரை தரிசனம் செய்யலாம். மூலவர் குடமுழுக்கு செய்த மனதுக்கு அமைதி அளிக்கிறார்.


பழைய கோவில் மூலவர் கற்சிலையை பஸ்நிலையம் எதிரில் உள்ள கிணற்றில் பழங்காலத்தில் இருந்த எடுத்து வந்ததாகவும் அப்போது அக் கிணற்றில் அருகே அருள் வாக்கு சொல்லி வந்ததாகவும் அப்போது அருள் வந்த ஒருவர் அக்கிணற்றில் குதித்து ஒரு சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்ததாகவும் செவிவழிச்செய்திகள் கூறுகின்றன.விழாக்காலம்: வருடத்தோறும் ஐப்பசி முதல் வாரத்தில்.

எம் அனுபவம் ; இங்கே சுற்றிப்பார்த்தில் பழங்காலங்கால கோவில் உணர்வும் மன அமைதியும் தென்படுகிறது.


சேலம், ஈரோட்டில்இருந்து கோவை செல்லும் போது

பெருந்துறை பஸ் நிலையம் அருகில் உள்ள இக்கோவிலை தரிசனம் செய்து

இக்கோவில் பற்றிய உங்கள் அனுபவங்களை

எமக்கு கருத்துரை இடுங்கள், நன்றி.

: அருள்மிகு பாலமலை சித்தேஸ்வர மலை.
கொளத்தூர், மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம். செல்லும் வழி: 1. மேட்டூரில் இருந்து கண்ணாமூச்சீ சென்று அங்கிருந்து மலை ஏறவேண்டும்.


வழி : 2. மேட்டூரில் இருந்து பவானி செல்லும் வழியில் நெரிச்சிப் பேட்டையில் இறங்கி அங்கிருந்து மலை ஏற வேண்டும்

வழி:3. பவானில் இருந்து குருவரெட்டியூர் வழியில் ஊமாரெடியூரில் இறங்கி செல்லலாம்.

சிறப்பான வழி :4 பவானியில் இருந்து குருவரெட்டியூர் பஸ் ( B5 , B10 ஜெயகிருஷ்ணா, முருகன்) ஏறி குருவரெட்டியூர் வந்தடந்து 2 கி.மீ கரடிப்பட்டியூர் (அ ) கொளத்தூர் வழியில் வலது பக்கம் மலை அடிவாரம் சென்று வினாயகரை தரிசனம் செய்து மலை ஏற வேண்டும்.


முக்கியமாக கவனிக்க வேண்டியது வேண்டியது:

1. மலைப்பாதைக்கு பஸ் வசதி கிடையாது, நடந்து தான் செல்ல வேண்டும்..

ஏற வேண்டிய மலைகள் 7 மலைகள்...

கொண்டு செல்ல வேண்டியது : டார்ச் லைட், கம்பளி.,

3 வேளை உணவு, தண்ணீர், அவசியம் ..

சிறப்புபலன்கள்:


1.சித்தேஸ்வரர் தரிசனம்
2.இயற்கை யான மலைப்பாதை

3.மலைவாழ் மக்களின் பலா, கொய்யா ,மாதுளை, நெல்லி பெறலாம்
4. சுத்தமான காற்று..

ஓய்வெடுக்க இடங்கள் :

வெற்றிலைப்பாறை, தும்பம்பதி . பெரியகுளம்,

மேல்மலை அடிவார விநாயகர் கோவில்.

அன்பான உங்களுக்கு :மலைப்பாதை 10 முதல் 15 கி.மீ அல்லது 7 மலைகள் இருக்கும், நல்ல உடற் தகுதி உடையவர்கள் மட்டும் செல்லாம் ..

செல்ல வேண்டிய மாதங்கள் : புரட்டாசி , சித்திரை (எல்லா சனிக்கிழமைகளும் ) மக்கள் கூட்டம் இருக்கும் மற்ற நாட்களில் செல்ல வேண்டாம்..

மலையில் 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மருத்துவ வசதி கிடையாது..! மற்றபடி விபரங்களுக்கு எமக்கு மெயில் செய்யுங்கள்.

சித்தேஸ்வரர் அருள் பெற்று வாழ்வாங்கு வாழ

இறை துணை வேண்டி குரு.பழ. மாதேசு,
குருவரெட்டியூர்


எமக்கு தெரித்த சிவாலய ஆலோசனைகள்

1.சிவாலயம் மற்றும் எவ்வாலயம் செல்லும் போதும் முதலில் முழுமுதற்கடவுள்
விநாயகரையும் பின் நந்தீஷ்வரரை வணங்கி விட்டே செல்ல வேண்டும்

2. சிவனுக்கு உகந்தது வில்வம் திங்கட்கிழமை. பிரதோஷ நாட்கள்

3. ஏதேனும் சிவநாமம் உச்சரிப்பது(ஓம் சிவாய நமஹ, ஓம் நமச்சிவாய ) அல்லது தேவரம்

திருவாசக பாடல் பாடுவது சிறப்பு

4.விநாயகருக்கு பிடித்து எருக்கன்., அருகம்பூ மாலை

5. வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை,மஞ்சள் ஆடை, முல்லை
மலர். குருவை நேருக்கு நேராக நின்று கும்பிடவும்

6 .செவ்வாய் கிழமை முருகருக்கு நெய் தீபம் செவ்வரளி

7. துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை எலுமிச்சை தீபம்

8. சனிஷ்வரர்க்கு சனிக்கிழமை .எள்.எள்தீபம். எள்முடிச்சு நல்லெண்ணெய் ,பக்க வாட்டில்
நின்றவாறு கும்பிட வேண்டும் என்பர் சிலர். கருங்குவளை பூ உகந்தது


9. இறைவனை நன்கு கைகளை மேல் உயர்த்தியே வணங்க வேண்டும்

10. கோவில் வலம் வந்த பின் கொடிமரத்தின் முன் நெடுசாண்கிடையாக விழுந்து வணங்கினால்
நம் ஊழ்வினைகள் தீர்ந்து நல்வினைகள் உருவாகும்.

நன்றி மேலும் தகவல்கள் ஞாபகம் வரும் போது இப்பகுதி நீட்டிக்கப்படும்,

ஆன்மீக நன்பர்களுக்கு இப்பகுதியில் தவறுகள் இருப்பின்
மன்னித்து சுட்டிக்காட்டவும்.
நன்றி


ஆலய தரிசனம்:

சோழீஸ்வரர் திருக்கோவில் பெருந்துறை ஈரோடு மாவட்டம் SOLIESWARAR temple perundurai erode district

திருக்கோவில் பெயர்:

அருள்மிகு சோழீஸ்வரர் மூலவர்: சிவன் அம்பாள் :வேதநாயகி

அமைவிடம் :

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பெருந்துறை 20கி.மீ பயணம் செய்து பெருந்துறை புதிய பஸ் நிலையத்தில் இருந்து 100மீட்டர் தொலைவில்.

திருக்கோவில் சிறப்பு:

அழகான உருவமாய் நகரின் மத்தியப் பகுதியில் உள்ள சோழீஸ்வரர் ஆலயத்தின் முன் பகுதியில் நம்மை வரவேற்பது கொடிமரம் இங்கே நின்று சிவ நினைப்பில் உள்ளே செல்ல அரசமரத்தின் கீழே அழகிய உருவில் விநாயகர் உடன் ராகு கேது களை தரிசித்து உள்நுழை வாயிலில் சென்றால் அங்கே நந்தீஸ்வரர் தரிசனம் செய்து மூலவர் தரிசனம் செய்ய உள்ளே சென்றால் அங்கே சோழீஸ்வரர் தரிசனம் அருமையாகவும் நல் சிவ தரிசனமும் பெற்ற உணர்வு நமக்கு கிடைக்கின்றது.

பின்னர் இடப்பக்கம் திரும்பினால் நால்வரையும் தரிசனம் செய்து அருகே வேதநாயகி அம்மன் சன்னதியில் வேதநாயகி அழகாகவும் அன்பாகவும் நமக்கு தரிசனம் தருகிறார்.

இடப்பக்க பின்புறம் வரசித்தி விநாயகரும் அருகே பழைய கோவிலில் இருந்த லிங்கமும் அருகே தட்சிணாமூர்த்தி சன்னதியில் நேராய் நின்று தரிசித்து


கோவில் இடப்பக்கம் சன்டிகேஸ்வரர் அருகே துர்க்கை ,முருகர் வள்ளி., தெய்வானை ,ஐய்யப்பன் ,பின்னர் சனிஷ்வரர் சன்னதியில் தரிசனம் செய்து காலபைரவர் கும்பிட்டு நவகிரகங்களை சுற்றி சந்திர சூரியர்களை வணங்கி வந்தால் நாம் முதலில் தரிசித்த நந்தீஷ்வரர் பின் வந்து நின்று தூரத்தில் உள்ள மூலவரை மறுபடி வணங்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி நம் வேண்டுதல்களை நியாபகபடுத்தி வேண்டுகையில் சோழீஸ்வரர் தரிசனம் செய்த திருப்தி நமக்கு நன்றாய் கிடைக்கிறது .
உப தகவல்: சிதிலமடைந்து இருந்த இக்கோவில் மக்களின் பேருதவியாலும் .சிவனடியார்களாலும்,

பெருந்துறை வேதநாயகி அம்மன் நற்பணி மன்றத்தாலும் ஒரு கோடி ரூபாய் செலவில் கடந்த சில வருடங்களுக்க முன் புதிப்பிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு; முடிந்தால் ஒரு முறை வந்து
சிவனருள் பெற்றுச் செல்லுங்கள்.

ஓம் நமச்சிவாய நமஹ்விநாயகர் அகவல் ;

இயற்றியது அவ்வையார் (தொடங்கும் செயல் வெற்றி பெற இப்பதிகத்தை ஒரு முறை விநாயகர் ஆலயத்தில் படித்து விட்டு தொடங்குங்கள் உங்கள் காரியத்தில் வெற்றி கிடைக்கும்)'சீதக் களம்பச் செந்தா மரைப்பூம்
பாதச்சிலம்பு பலவிசைப் பாட
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிரும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும்
திரண்ட முப்பரிநூல் திரளொழி மார்பும்

சொற்பதங் கடந்த துரிதமெய் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரு மூஷிக வாகன
இப்பொழு தென்னை ஆட்கொள்ள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயப்பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைத் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென துளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திரம் இது பொருளென

வாடா வகைதான் வந்தெனக் கருளிக்
கோட யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணை இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங் கருத்தினை அறிவித்து
இருவின தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்குந் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் மறுத்தே

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத் தங்குச நிலையும்
பேரா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் கழுமுனைக் கபாலமுங் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவி லுணர்த்திக்

குண்டலி யதற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலா லெழுப்புங் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பயும் காட்டி

சணமுக தூலமுஞ் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக் கருளிப் புரியட்ட
காயம் புலப்பட எனககுத் தெரிஎட்டு நிலையுங்
கெரிசனப் படுத்திக் கருத்தினிற் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி இனிதெனக்கருளி
என்னை அறிவித் தெனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கு மனமு மில்லா மனோலயந்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி யிரண்டுங் கொன்றிட மென்ன
அருள் தரும் ஆனந்தத் தழுத்தியென் செவியில்
எல்லையில்லா ஆனந்தம் அளித்து

அல்லல் களைந்தே அருள் வழிக்காட்டிச்
சத்தத்தி னுள்ளே சதாசிவங் காட்டிச்
சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி
அணுவிற் கணுவா யப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமு நீறும் விளக்க நிறுத்திக்
கூடுமெயத்தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சுக் கரத்தினரும் பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே....

விநாயக அகவல் முற்றிற்று...
பதிகம் பற்றி; விநாயகருக்காக அவ்வையார் அருளிய
இப்பதிகம் மிகவும் பிரசித்தி பெற்றது..

பலன்; நாம் செய்யும் பல செயல்கள் இடையூருகள் ஏற்படுவது இயல்பு
ஆனால் தொடங்கும் செயல் இனிதே நடைபெற
இப்பதிகத்தை விநாயகர் கோவில் அல்லது விநாயகர் படம் முன்பு விளக்கேற்றி படியுங்கள் தொடங்கும்
உங்கள் நற் செயல்கள் வெற்றிபெற என் வாழ்த்துக்கள் .
இப்பதிகத்தின் கதை

பின்நாளிழ் வெளியிடப்படும்.

மங்களங்களை அள்ளித்தரும் ஸ்ரீ மங்களகிரி பெருமாள் திருக்கோவில், சூரியம்பாளையம் கிராமம் ,ஈரோடு வட்டம்ஸ்ரீ பெருமாள் துதி :


ராகம் :நீலாம்புரி


தாளம் : சுத்தாங்கம்


பச்சைமா மலைபோல் மேனி,
பவளவாய் கமலச்செங்கண் ,
அச்சுதா! அமரர் ஏறே; ஆயர் தம்,
கொழுந்தே !என்னும் ,
இச்சுவை தவிரயான் போய் ,
இந்திரலோகம் ஆளும் ,
அச்சுவை பெறினும் வேண்டேன்,
அரங்கமா நகர் உளானே.

ஸ்ரீ மங்களகிரி பெருமாள் திருக்கோவில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய வைணவத்திருத்தலங்களில் ஒன்றாகும்.

ஸ்ரீ மங்களகிரி பெருமாள் திருக்கோவில் மலைமேல் அமர்ந்த அழகிய ஸ்தலமாகும்


மூலவர் : ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீமங்களகிரி பெருமாள்செல்லும் வழி :

ஈரோட்டிலிருந்து பவானி செல்லும் (அக்ரஹாரம் வழி) வழியாக சுமார் 8 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. பெருமாள் மலை பஸ் நிறுத்ததில் அமைந்துள்ளது.

அமைவிடம் :

ஈரோடு வட்டம் சூரியம் பாளையம் கிராமத்தில் இறைவன் பெயரான "பெருமாள் மலை" என்னுமிடத்தில் அமைந்துள்ளது. கொங்கு நாட்டின் வற்றாத ஜீவநதியாம் காவேரி நதிக்கு தென்பக்கமாக அமைத்துள்ள மிகப்பெரிய பாறையால் அமர்ந்த அற்புதத் திருத்தலமாகும்.

புரட்டாசி மாதத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளிலும் பெரும் திருவிழாவாக ஸ்ரீ மங்களகிரி பெருமாளை கொண்டாடுகின்றனர் .

விஷேச நாட்கள் :

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை ஸ்ரீமங்களகிரி பெருமாள் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பெளர்ணமி பூஜைகள் நடைபெறும் .

புரட்டாசி மாதத்தில் ஸ்ரீமங்களகிரி பெருமாளை தரிசனம் செய்ய மலை ஏறி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.

700 வருட சரித்திரம் கொண்டவர் ஸ்ரீ மங்களகிரி பெருமாள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக இந்து அறநிலைய துறையால் அழகாக பராமரிக்கப்பட்டு வரும் திருக்கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

கடந்த 9 ஆண்டுகளாக சிறப்பாக இறைவழிபாடு செய்யவும் அன்னதானம் ,போன்ற பல உதவிகள் செய்யும் விழாக்குழுவினர் மற்றும் பூசாரிகளை பாராட்டியாக வேண்டும்.

மலை என்று சொன்னாலும் மங்களகிரி என்பது சிறிய பாறை அமைப்பால் ஆன மலைக்குன்றுதான். அழகாக படி அமைத்துள்ளார்கள். எல்லா வயதினரும் தரிசிக்க ஏற்ற மலை .

ஏதேனும் ஓர் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் குடும்பத்துடன் வந்து ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீ மங்களகிரி பெருமானை வணங்கி

உங்கள் வாழ்வில் பல மங்களங்கள் உண்டாகவேண்டுமென விரும்பும்

அன்பன் குரு.பழ.மாதேசு

Sunday, October 9, 2011

இயற்கையின் அழகில் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை
மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகான மலைத்தொடரில் அமைந்துள்ள வனப்பகுதிகளில் அந்தியூர் வனப்பகுதியாக ஒன்றாகும். வரட்டுப்பள்ளம் அணை ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் வழியில் 10 கி.மீட்டரில் இடப்பக்கம் ஒரு கி.மீட்டர் சென்றால் அணையை பார்வையிடலாம்.


சாப்பிடவோ,தண்ணீரோ அணையில் கிடைக்காதென்பதால் வரும் போது வாங்கிக்கொண்டு வருவது நல்லது. வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கம் 28.1 .1980 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.


அழகிய முகப்பில் சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க பெரிய நீர்பரப்பையும் , தூரத்தில் நீண்டு வளர்ந்து நிற்கின்ற மூங்கில் மரங்கள்,தூரத்தில் தெரியும் அணையின் ஒரங்களில் வளரும் புற்களை சாப்பிட வரும் பசுமாடுகள்,என பல அழகு காட்சிகள் அருமையானது.

அணையின் மேல் முகப்பு இரும்பு கம்பியால் தடுக்கப்பட்டுள்ளது. அணையின் மேல் இருக்கும் தார்சாலையில் நடந்துதான் செல்ல அனுமதிக்கப்படுகிறது. சுமார் 2 கி.மீட்டர் தூரமுள்ள அணையின் மேற்பரப்பில் இயற்கை சூழலில் நடக்க அழகாக இருக்கிறது.


வரட்டுப்பள்ளம் அணையின் மத்திய பகுதியில் பாசனத்திற்காக திறக்கப்படும் மதகு உள்ளது . அதைத்தாண்டி நடக்கலாம் யானைகள் அடிக்கடி பயணிக்கும் பாதை என்பதால் எச்சரிக்கை அவசியம்.நாங்கள் செல்லும் போது சிறிய மழை பெய்து வரவேற்றது.


அணையின் உயரம் மொத்தம் 46 அடி என்றும் தண்ணீரின் கொள்ளவு 33 அடி என்றும் கேள்விப்பட்டேன் . அணையின் பரப்பளவாக சுமார் 3000 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கின்றது.

அணையின் மேல் பகுதியில் ஸ்ரீகோட்டை மலை திருக்கோவில் இருக்கிறது. இங்கு பழங்காலத்து சுவடுகள் இருப்பதாக சொல்கிறார்கள் .மாலை நேரமானதால் செல்லமுடியவில்லை. யானைகள் நடமாட்டமுள்ள பகுதிகளாதலால் கோட்டை மலை ஆண்டவர் கோவிலுக்கு இந்த வழியாக செல்வது பாதகாப்பாக இருக்காது.


அணையின் முகப்பில் வீரப்பன் வாழ்ந்த காலத்தில் அதிரடிப்படை முகாம் இருந்துள்ளது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை யினர் கவனமாக வரட்டுப்பள்ளம் அணையை பாதுகாத்து வருகின்றனர். இங்கு சிறிய அளவில் ஸ்ரீ கருங்காளி அம்மன் திருக்கோவில் உள்ளது.


வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் ,நீர்காகம் ,சில வெளிநாட்டுப்பறவைகள் உடும்பு,மான்கள் இவைகளை மட்டுமே நாங்கள் செல்லும் போது காண முடிந்தது. ஆனால் இங்கு யானைகள் ,சிறுத்தைகள் போன்ற விலங்குகள் பார்த்துள்ளதாக சொல்கிறார்கள் .

அணையின் மேற்பகுதியில் இருந்து பார்த்தால் ஓர் கோடு போட்டதைப் போல ஒரே நேர் சாலையாக பல மலைகளில் செல்கிற பர்கூர் சாலை அழகான ஒன்றாகும். ஒருநாள் சுற்றுலாவுக்கு தகுந்த இடமாக தேர்வு செய்யலாம்.


பெரிய எதிர்பார்ப்புடன் வராமல் இயற்கையை ரசிக்கும் எண்ணமிருந்தால் வந்து ரசிக்க அழகான இடமாகும். மனதை இதமாக்கும் அற்புத இடம்,


வந்து பார்த்துவிட்டு எழுதுங்கள் .

நட்புடன்

குரு.பழ.மாதேசு

Monday, October 3, 2011

பாலமலை எனும் சொர்க்கபூமி
சேலம் மாவட்டம் கொளத்தூர்க்கு அருகில் பாலமலை உள்ளது. புகழ்பெற்ற பாலமலை ஸ்ரீ சித்தேஷ்வரர் இங்குதான் அமைந்துள்ளது. பாலமலையில் வாழும் மக்கள் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள் .

பல கிராமங்களில் பாலமலையில் மக்கள் வாழ்கிறார்கள்.மின்சார வசதி இல்லாமல் வாழும் இவர்களுக்கு சோலார் மின் விளக்கு வசதியில்தான் வாழ்க்கை நகருகிறது.

பாலமலை என அழைக்கப்படும் சித்தேஸ்வரமலையில் காணப்படும் ஊர்கள் தும்மம்பதி.,அணைக்காடு,பெரியகுளம்,ஈச்சங்காடு,நத்தக்காடு,நாகம்பதி, துவரங்காடு,கெம்மம்பட்டி,ராமன்பட்டி ,புள்ளம்பட்டி, நமன்காடு,கருகாமரத்தூக்காடு,தலைக்காடு,சாத்தன மடுவு,

எருக்களாங்காடு, சிங்காரதோப்பு, சோத்தாங்காடு,இடைமலைக்காடூ.பத்திரமடுவு, பெரியணக்காடு. ஆகிய ஊர்களில் மக்கள் அடிப்படை வசதிகளுக்கு சிரமப்பட்டு வாழ்ந்து வருகின்றனர் .

கல்விக்காக பள்ளிக்கூடம் பெரியகுளம் பகுதியில் இருந்தாலும் பாலமலை வாழ் மக்கள் குழந்தைகள் கல்வி தேடி குருவரெட்டியூர், சென்னம்பட்டி,கொளத்தூர், சேலம் பகுதிகளுக்கு படிக்கச்செல்கிறார்கள். பாலமலை வாழ் மக்களின் ஒரே நம்பிக்கை தற்போது அரசு அனுமதியுடன் சாலை உருவாக்கி கொண்டிருப்பதுதான் .

100 நாள் வேலைத்திட்டத்தில் தங்களுக்காக தாங்களே சாலை அமைத்து வருகிறார்கள் .சாலை உருவானால் பாலமலை சித்தேஸ்வரர் திருக்கோவில் செல்ல new சாலை உருவாகிவிடும் . பல மூலிகைகளும் உயர்ந்து வளர்ந்த மரங்களும், சுனைகளும் அழகானதாகும் .பாலமலையின் அடர்ந்த வனப்பகுதியாக சிங்காரத்தோப்பு அமைந்துள்ளத
ஸ்ரீ சித்தேஸ்வரமலை கீழ் பகுதியில் அமைந்த வனமாகும் .இங்கு கரடி. குரங்கு,மான்கள்,காட்டுப்பூனைகள் ,முயல்,காட்டுப்பன்றிகள் வாழ்கின்றன. பயப்படும்படியான விலங்குகள் எதுவும் இல்லை.

உரிக்கொடி போன்ற அபூர்வ மூலிகைகள் இருப்பிடமாக திகழ்கிறது.இயற்கை அழகு சூழ்ந்த பாலமலையை இரண்டுநாள் சுற்றுப்பயணமாக தேர்வு செய்யலாம்


. இயற்கையான பாலமலையில் கொய்யா,மாதுளை, பாலாபழம் ,சீதாப்பழம்,நகப்பழம் ,என பலவகையான பழங்கள் கிடைக்கிறது.


ஒரு முறை வந்து சுற்றிப்பார்த்து விட்டு எழுதுங்கள்..

Sunday, October 2, 2011

அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில், பாலமலை,. கொளத்தூர் , சேலம் மாவட்டம் Arulmigu palamalai sri sidheswaran temple,kolathur,mettur taluk


பாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில்

palamalai sri sidheswara temple; kolathur,

mettur taluk salem district

இயற்கையின் அழகில் நம்மை மயக்கும் ஓர் அற்புத மலைக்கோவிலாகும் .

மூலவர் :- ஸ்ரீ சித்தேஷ்வரர்

அமைப்பு :-சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் கொளத்தூரில் இருந்து தொடங்கும்
பாலமலை ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர்
30கி.மீட்டர் வரையிலும் குருவரெட்டியூரில் இருந்து ஊமாரெட்டியூர்
நெரிஞ்சிப்பேட்டை வழியாக சென்று மேட்டூர் வரை 30கி.மீட்டர்
என பாலமலையின் எல்லைப்பகுதியாக அடந்த வனப்பகுதியாகவும்,

மேற்குத்தொடர்ச்சி மலையின் தனித்து விடப்பட்ட
7 மலைகள் அமைந்த தனிமலையாகவும் அமைந்துள்ளது.
மலையின் சுற்றளவு சுமாராக 80கி.மீட்டர் இருக்கும் .
உயரம் சுமார் 4000அடி முதல் 5000 அடி இருக்கும் ,

பாலமலை சித்தேஸ்வர மலை சேலம்.ஈரோடுமாவட்ட எல்லையில்
இருக்கின்ற ஒர் அழகிய மலையாகும்.
பாலமலை யின் 7 வது மலையின் உச்சியில்
ஸ்ரீ சித்தேஷ்வரர்க்கு அழகான திருக்கோவிலை உருவாக்கி இருக்கிறார்கள்.


திருக்கோவில் உட்பிரகாரத்தில் மூலராக சித்தேஸ்வரரும் உடன் ஸ்ரீவிஷ்ணுவும் ,ஸ்ரீமாதேஷ்வரர் அமர்ந்து வரும் பக்தர்கள் துபர் தீர்க்கின்றனர். திருக்கோவில் பிரசாதமாக திருநீரும் அழகிய மலைப்பூக்களையும் தருகிறார்கள் .
ஏழாவது மலையின் உச்சியில் சதுர வடிவில் திருக்கோவிலை
தரிசனம் செய்ய பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக
பாதுகாப்பாக திருக்கோவில் அமைந்திருக்கிறது.

திருக்கோவில் ஒருநிலைக் கோபுரமாகவும் வடக்கு நோக்கி அமைந்துள்ளது.
ஸ்ரீ சித்தேஷ்வரர் எதிரே நந்தீஸ்வரர் சிலை அழகானது.
ஸ்ரீசித்தேஸ்வரர் எதிரே உள்ள ஸ்ரீதிருக்கொடி அம்மன் ,
தேள்சாமி, ஸ்ரீஆஞ்சநேயர் சிலை, சிறு நந்திகளின் சிலைகள்
பக்தர்களால் வழங்கப்பெற்ற வேல்களும் அழகானதாகும்.

திருக்கோவில் தோன்றிய வரலாறு :-பழங்காலத்தில் உணவுக்காக கிழங்கு பறிக்க சென்ற மலைவாழ் மக்கள் தற்போது ஸ்ரீசித்தேஸ்வரர் அமைந்துள்ள இடத்தில் கடப்பாறையால் குத்தும்போது
அங்கிருந்த சித்தேஷ்வரர் சுயம்பு மூர்த்தியின்
சிறிய லிங்க வடிவத்தின் மேல் பட்டு பால் வந்ததாகவும் பதற்றப்பட்டு ,
பின்னர் அந்த இடத்தை சுத்தம் செய்து பார்த்த போது அங்கே
தற்போதுள்ள ஸ்ரீ சித்தேஷ்வரர் சிலை இருந்ததாகவும் அன்றிலிருந்து
பாலமலைவாழ் மக்களால் விரும்பி வணங்கப்படும் தெய்வமாக
ஸ்ரீசித்தேஸ்வரர் உருவானதாக செவி வழிச்செய்திகள் இயம்புகின்றன.


திருக்கோவிலுக்கு செல்லும் வழிகள் :


1. மேட்டூரில் இருந்து அம்மாபேட்டை செல்லும் வழியில் நெரிஞ்சிப்பேட்டையில் இறங்கி (15 கி.மீட்டர் ) செல்வது

2. மேட்டூரில் இருந்து அம்மாபேட்டையில் இறங்கி (20கி.மீட்டர்) அங்கிருந்து ஊமாரெட்டியூர் வந்து அங்கிருந்து மலைப்பாதையை அடைந்து செல்வது.

3.பாலமலையின் மறுபக்கமான மேட்டூரில் இருந்நு கொளத்தூர் கண்ணாமூச்சியை அடைந்து அங்கிருந்து மலையேறுவது.

4.எளிமையான பாதுகாப்பான வழியாக அடிவாரம் வரை பஸ் வசதி உடைய வழியான பவானி வட்டம் குருவரெட்டியூர்- 638504வழியைப்பற்றி பார்ப்போம் .


பவானியில் இருந்து 30கி.மீட்டர் தூரத்திலுள்ள குருவரெட்டியூர் என்ற ஊரில் இருந்து சுமார் 1 கி.மீட்டர் தூரத்தில் பாலமலை சித்தேஷ்வரமலை அமைந்துள்ளது.அந்தியூரில் இருந்து 25 கி.மீட்டர் பயணித்தாலும் குருவரெட்டியூரை அடையலாம்.

பவானி யில் இருந்து B10,B5,ஜெயகிருஷ்ணா பஸ்களில் வரலாம்.அந்தியூரிலிருந்து A5,மாதேஷ்வரா. பஸ்களில் குருவரெட்டியூரை அடைந்து மலைப்பாதையை அடையலாம். குருவரெட்டியூர் பாலமலை அடிவாரத்தில் இருந்து ஸ்ரீசித்தேஸ்வரர் திருக்கோவிலை அடைய சுமார் 15 கி.மீட்டர் கரடு முரடான மலைப்பாதையில் நடந்து பயணிக்கவேண்டும்.

ஏழு மலைகள் அடங்கிய மலை தொகுதியான பாலமலையின் கடைசி முடிவில் ஸ்ரீசித்தேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது .

முதல் மலையின் முடிவில் வெற்றிலைப்பாறை எனும் ஒய்வெடுக்கும் இடமும், இரண்டாவது மலை யில் தும்மம்பொதி என்ற மலைவாழ் மக்கள் வாழும் ஊரும் உள்ளது. இங்கு புரட்டாசி மாதத்தில் வரும்போது டீக்கடைகள் அமைத்து வரும் பக்தர்களுக்கு கொடுக்கப்படும் . மலையில் விளைந்த கொய்யா,விளாம்பழம் இங்கு கிடைக்கும்.


அடுத்ததாகாக நாம் வருவது பெரியகுளம் முக்கியமான இடமாகும் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மொட்டை அடித்து இங்குள்ள பெரிய குளத்தில் நீரில் குளித்தும் ,சுடுதண்ணீரில் குளிக்கும் இடமாகவும். மலைவாழ் மக்களின் கடைகளும்,கொய்யா, மாதுளை ,நெல்லி விற்பனைக்கடைகள் உள்ளன.

வறடிக்கல் :

பெரிய குளத்தில் உள்ள இந்த கல்லை தூக்கி போட்டால் திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம் நடக்கும் என்கிறாகர்கள்.வீரமாக பல இளைஞர்கள் வறடிக்கல்கல்லை தூக்கிப்போட்டு விளையாடுகிறார்கள்.

தேரோடு வீதி :

அடுத்த மலையில் நாம் காண்பது பூசாரியூர், அடிமலை விநாயகர் கோவில்வீதி என அழைக்கப்படுகிறது. இங்கு விநாயகப்பெருமான் அழகிய உருவில் அமர்ந்துள்ளார் . கடைசி மலையின் துவக்கத்தில் உள்ள விநாயகப்பெருமானை வணங்கிவிட்டு அமரலாம்.சுற்றிலும் நீண்ட பெரிய மரங்கள்,நகப்பழ மரங்கள் என அடர்தியாக இருக்க 200மீட்டர் சுற்றளவில் பக்தர்களுக்காக இளைப்பாற நல்ல அமைதியான இடம். இதில் இருந்து ஒரு மலை செங்குத்தாக சென்றால் ஸ்ரீ சித்தேஷ்வரர் திருக்கோவிலை அடையலாம்.


திருக்கோவில் திறப்பது :

சனிக்கிழமை மட்டும் வார பூஜை

வருட பூஜையாக : புரட்டாசி மாதத்தின் எல்லா சனிக்கிழமைகளிலும் விஷேசமாக திறக்கப்படும். குருவரெட்டியூர் வழியாக பக்தர்கள் கூட்டம் புரட்டாசி 3,4வது வாரங்களில் அதிகளவில் இருக்கும்.லட்சக்கணக்காண பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் தரிசனம் செய்வார்கள்.

அடுத்து சித்திரை மாதத்தில் ஊமாரெட்டியூர் வழியாக பக்தர்கள் ஸ்ரீசித்தேஷ்வரரை தரிசிக்க செல்வபலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியன :

திருக்கோவில் வரும்பக்தர்கள் கம்பளி ,டார்ச்லைட், 3 வேளை உணவு ,தண்ணீர் அவசியம் கொண்டு வரவும். மலைப்பாதைக்கு பஸ்வசதி கிடையாது ஏழு மலைகளும் கரடுமுரடானவை. புரட்டாசி மாதம் தவிர மற்ற நாட்களில் சென்றால் நீங்கள் மட்டும் தான் தனியாக செல்லவேண்டி இருக்கும்.

புரட்டாசி மாதத்தில் ஏதேனும் ஓர் சனிக்கிழமை நாளில்
பாலமலை சித்தேஷ்வரரை வந்து வணங்கி விட்டு நலம் பெறுங்கள்.
http://www.youtube.com/watch?v=xjAhpRZpTak