Friday, July 26, 2013

ஸ்ரீ காசி விஷ்வநாதர் ஸ்ரீ லட்சுமி நாராயணசாமி. ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில்கள் ,கொமராபாளையம் ,திருச்செங்கோடு வட்டம்

திருச்செங்கோடு வட்டத்தில் கொமராபாளையம் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள கொமராபாளையத்தில் பார்க்க வேண்டிய ஆலயங்களில் ஸ்ரீ லட்சுமி நாராயணசாமி ,காசி விசுவேரசாமி, ஆஞ்சநேயர் திருக்கோவில் விஷேசமானது ,


கொமராபாளையம் பஸ் நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் யார்
கேட்டாலும் சொல்லக்கூடிய தூரத்தில் காவிரியன்னையின் மடியில் பவானிக்கு கிழக்கே அமைந்த அற்புத திருக்கோவிலாகும் , திருக்கோவில் அமைப்பு மூன்று சன்னதிகள் அமைந்த திருக்கோவிலாகும் , திருக்கோவில் கிழக்கு நோக்கி அமையப்பெற்றுள்ளது .

 திருக்கோவில் முகப்பிலே ஸ்ரீ லட்சுமி நாராயணசாமி
சன்னதி முதலாக அமையப்பெற்றுள்ளது . ஸ்ரீ லட்சுமி நாராயணர் வணங்கி பின்இரண்டாவதாக ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதியை வணங்கிட செல்கிறோம் .

நாமக்கல்லில் இருப்பதைப்போன்ற பெரிய ஆஞ்சநேயர் சன்னதி கண்டு வியப்பாக இருக்கிறது .வணங்கிய நிலை ஆஞ்சநேயர் கண்டு வணங்கி நிற்க துன்பங்களை இன்பங்களாக மாற்றும் அனுமன் பிரமிக்கும் விதத்திலமர்ந்து ஆச்சர்யம் தருகிறார் .


மூன்றாவதாக ஸ்ரீ காசி விஷ்வேஸ்வரர் சன்னதியில் சிறிய லிங்கம் அமைதியான சன்னதி , சுற்றிலும் வன்னி ,வில்வம் ,இலந்தையென பல ஆன்மீக மரங்களுடன் கோவிலைச்சுற்றி வருகையில் மனம் அமைதியடைகிறது , இங்கே திருமாலும்,சிவனும் , ஸ்ரீ அனுமனும் காவிரி ஆற்றங்கரையில் ஒரத்தில் அமர்ந்திருப்பதால் பழங்கால ஆலயமாக கருதப்படுகிறது ,

 கொமராபாளையத்தில்இருப்பவர்களெனில் கண்டிப்பாக வணங்க வேண்டிய ஆலயமாகும் . சனிக்கிழமைநாளில் ஸ்ரீ அனுமனுக்கு விஷேசபூஜை நடைபெறுகிறது . திருக்கோவில் 6 முதல்11 வரையிலும் மாலை 4முதல் 8 வரையிலும் திறந்திருக்கும் , வாய்பிருப்பின்
இறையருள் பெற்றுச்செல்லுங்கள்.

 நன்றி .

Thursday, July 25, 2013

திருபுவனம் ஸ்ரீ கம்பகரேஷ்வரர் திருக்கோவில்

வேதத் திலுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு ,
போதந் தருவது நீரு புன்மை தவிர்ப்பது நீறு,
ஓதத் தகுவது நீரு உண்மையி லுள்ளது நீரு ,
 சீதப்புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே ,

                                                                                                                 திருஞான சம்பந்தர்


எங்கும் நீங்கமற நிறைந்திருக்கிற சிவபெருமான் பல அற்புத திருத்தலங்களில் வீற்றிருக்கிறார் . அவ்வகையில் புகழ் பெற்ற ஸ்ரீ கம்பகரேஸ்வர்திருக்கோவில் சிறப்புடையதாகும்..

 மூலவர் :ஸ்ரீ கம்பகரேஸ்வரர்

 அம்பிகை :

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி (தர்மஷம்வர்த்தினி)

ஸ்தல அமைவிடம் :

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருவிடைமருதூர் இரயில்
நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் திருபுவனம் அமைந்துள்ளது. சோழ நாட்டில் சோழ மன்னர்களால் கட்டப்பெற்ற திருக்கோவில் ஆகும் ,திருபுவன வீரபுரம் என்பதே பழங்காலப்பெயராகும் .

 திருக்கோவிலமைப்பு :

கிழக்கு நோக்கிய சிவாலயத்தில் முதல்கோபுரமாகிய திரு தோரணவாயில் கண்டுபின் திருமாளிகை திருவாயில் நுழைந்தும் ,பின் மூன்றாம் வாயிலான
அர்த்தமான திருவாயில் கடந்து செல்கிறோம் இது ஓர் விஷேச அமைப்பாகும், இதைகடந்தே மூலவரை தரிசிக்கிறோம் .

 மூலவரின் சிறப்புகள் :

ஸ்ரீகம்பகஷ்வரருக்கு நடுக்கம் தீர்த்த பெருமான், திருப்புவன ஈச்சரமுடையாக
தேவர் என்கிற மற்றொரு திருநாமம் உண்டு . தேவர்கள் ,பிரகலாதன் , பெருமாள்ஆகியோரின் கம்பத்தை ( பயம் அச்சம் ) நீக்கியதால் ஸ்ரீ கம்பகேஷ்வரர் எனஅழைக்கபடுகிறார் .

 தீர்த்தங்கள் 7 அமைந்துள்ளது

ஸ்தல விருட்ஷம் :வில்வம்

 வழிபட்டோர்கள் :

வருணன் , இலட்சுமி, விஷ்ணு , சித்ரதன் .நாரதர்
,வரகுணன் , இராஜராஜ சோழன் ஆகியோராவர்கள் .

பூஜைகள்;

 5 காலபூஜைகள்
நடைபெறுகிறது .

 காலம் ;

கி.பி 1900 துவக்கத்தில் 3ஆம் குலோத்துங்க சோழன்
வம்ஷ வழியினரால் துவக்கம் செய்யப்பட்ட திருக்கோவிலாகும் .

புராணம் :

இரணியன் என்ற அசுரன் பல்வகை வரங்கள் பெற்று யாராலும் சாகா வரம்
பெற்று வாழ்ந்து வந்தான் , அவனுக்கு பிரகலாதன் என்ற மகன் பிறந்தான் அவன் ஓம் நமோ நாராயண என்கிற மந்திரத்தை உச்சரித்து வர இரணியன் கோபமுற்று தம்மை வணங்கும் படி கர்வம் கொண்டு பிரகலாதனை அச்சுறுத்த பிரகலாதன்தந்தைக்கு பயப்படாமல் நாரயணரை உச்சரித்து வந்தான் .

கடுங்கோபமுற்ற இரணியன் பிரகலாதனிடம் நீ வணங்கும் நாராயணர் எங்குள்ளார் என செருக்குடன் கேட்க தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பாரென பிரகலாதன் பதிலளிக்க  உடனே அங்கிருந்த தூணை உதைத்த இரணியனை திருமால் நரசிம்மராக தோன்றி இரணியனை கொன்று இரத்தம் குடித்து இரணியனை கொன்றார் .

 இரணியன் இரத்தம் திருமாலின் உடம்பினுள் சென்றதால் திருமால் மதிமயங்கி உலகை அழிக்கத்தொடங்க தேவர்கள் ஓடி சிவனிடம் தஞ்சமடைய சிவன் சரபப்பறவை வடிவமாக்கி நரசிம்மரான பெருமாளை நோக்கி விரைந்தார் . தன்மீதுசரபப்பறவையின் நிழல் பட்டதும் நரசிம்மர் இயல்பு நிலையடைந்ததாக வரலாறு .


தம் தவறை உணர்ந்து திருமால் தேவர்கள் சிவனைப்பாடி அருள்பெற்றனர் ,
தங்களுக்கு விளைந்த கம்பத்தை (அச்சம் நடுக்கம் ) நீக்கியதால்
இச்சிவனுக்கு கம்பகரேஷ்வரர் நடுக்கம் தீர்த்த பெருமான்
என்றழைக்கபடுகிறார் .


திருவிடை மருதூர் செல்லும் போது
அருகிலுள்ள திருபுவனநாதரை வணங்கி விட்டு வாருங்கள் , எதற்கெடுத்தாலும் பயப்படுகிற சிலர் திருபுவன நாதரை வணங்குவது மிகச்சிறப்பு , நடுக்கம்தீர்த்த பெருமானை வணங்கி அச்சமில்லா வாழ்விற்கு அஸ்திரமிடுங்கள் .

 ஓம் சிவ சிவ ஓம்

Sunday, July 21, 2013

ஸ்ரீ வெக்காளியம்மன் திருக்கோவில் ,துறையூர், திருச்சி

திருச்சி மாநகரில் உள்ள பல திருக்கோவில்களில் விஷேசமான திருக்கோவிலாக இருந்தாலும் அம்பிகை வழிபாட்டுக்குரிய பழமையான திருக்கோவிலாக ஸ்ரீவெக்காளியம்மன் திருக்கோவில் பழமையும் புராணத்தொடர்பும் கொண்டது .


செல்லும் வழி :

 திருச்சி நகரின் மேற்குப்பகுதியில் உறையூர் என்ற பழமை
வாய்ந்த பகுதியாகும் , திருச்சியில் இருந்து 3கி.மீ தொலைவிற்குள்ளாக
நாச்சியார் கோவில் என்ற பஸ் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து மேற்கே
500மீட்டர் தொலைவில் ஸ்ரீ வெக்காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது


உறையூர் :

 பழங்காலச்சோழர்களின் தலைநகராக விளங்கிய துறையூரில்
அருள்பாலிக்கும் அம்பிகையாவார் . கி.பி 130 களிலேயே உறையூரின் பெருமையை யவனமுனிவரால் சோழர்கள் தலைநகராக குறிப்பிட்டுள்ளதை வைத்தை பழமையும் தொன்மையும் அறியலாம் .

 வாசபுரி உறந்தை.வாரணம் ,முக்கீஷ்வரம் எனபழங்காலத்தில் உறையூர் அழைக்கப்பட்டது. உறையூரில் புகழ்பெற்ற நாச்சியார் திருக்கோவில் 108 வைணவத்திருத்தலங்களில் ஒன்று அதை முந்தைய பகிர்வில்படிக்கவும் .


 திருக்கோவில் வந்தவுடன் தெற்கு வாயிலாக உள்ளே நுழைந்தவுடன்
நாம் காண்பது வல்லப கணபதியாவார் அவரை வணங்கி பின் மயூரமுருகர் வள்ளிதெய்வானை தரிசித்து பின் காத்தவராயர் மதுரைவீரன் ,பெரியண்ணன் சன்னதிகளை தரிசனம் செய்து பின் தனிச்சன்னதியில் உள்ள பொங்கு சனிஷ்வரரை வணங்கி நவகிரகங்கள் தொழுது நீண்ட பிரகாரத்தில் மூலவராக அம்பிகை ஸ்ரீவெக்காளியம்மன் அருள்பாலிக்கிறார் ,

இறைவி காக்கும் கடவுளாக மங்களகரமாக விளங்குகிறார் .நாங்கள் செல்லும்போது தங்கரதத்தில் ஸ்ரீ வெக்காளி அம்மன் தரிசனம் கிடைக்கப்பெற்றது.

அம்பிகைக்கு தங்க தேர் உள்ள நான் பார்த்த திருக்கோவில் வெக்காளியம்மன் மட்டுமே, இறை கருணையால் நாங்கள் சென்ற நேரம்அம்பிகை தங்கத்தேரில் பவனி வந்தது எங்கள் பாக்கியமேவாகும்.

 அம்பிகைக்கு முன் சூலங்கள் ,இறை வேண்டுதலுக்காக பக்தர் வேண்டி மாலையாக மடித்து கட்டப்பட்ட சீட்டுகளை கண்டு வியப்புற்றேன் .

 அம்பிகையும் சிறப்புகளும் :

வடக்கு பார்த்த அம்பிகை ஸ்ரீ வெக்காளி அம்மனாகும் .வலது காலை மடித்து
இடது காலை ஊன்றி இருப்பது சுகாசனம் என்றும் இவ்வாறுள்ள அம்பிகை
மங்களங்கள் பலவற்றை வாழ்வில் ஏற்படுத்துவார் ,ஆகவே நன்றாக வணங்குகள் என விளக்கினார். கருணைமிகு கண்களால் சிவந்தமுகத்தால் அம்பிகை கண்டு வழிபட்டோர்க்கு தீவினைகள் களைந்து நல்வினைகள் பிறக்கமென்பதில் ஐயமில்லை.


விஷேசநாட்கள் :

பெளர்ணமி மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
நடைபெறுகிறது ஒவ்வொரு மாதத்திற்கேற்றார் போல சிறப்பு அபிஷேக வழிபாடுகள்நடைபெறுகிறது. கட்டணம் செலுத்தும் பக்தர்களுக்கு வெள்ளி காலை 10.15 முதல்11 வரை தங்ககவச வழிபாடு விஷேசமாக நடைபெறுகிறது

 . பூஜை நேரங்கள் :


திருக்கோவில் தினமும் காலை 5.15 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9.00மணிக்கு
சாத்தப்படுகிறது. முழு பகல் நேரத்திலும் கோவில் எப்போதும்
திறக்கப்பட்டிருக்கும் .

அபிஷேகம் இரு நேரங்கள் காலை 5.30 மற்றும்
மதியம் 12 மணிக்கும் நடை பெறும் . ஆறுகால பூஜை விஷேசமாக செய்யப்படுகிறது


 திருக்கோவில் தொலைபேசி எண் :0431 - 2761869, 2767110

 முடிவுரை :

எங்கும் சக்தி தெய்வமாக காக்கும் கடவுளாக விளங்கும் ஸ்ரீ வெக்காளியம்மன்
பழங்கால சோழர்கள் காலத்தியது. பல காலமாற்றங்களால் திருக்கோவில்
புதுப்பிக்கப்பட்டு இருப்பினும் அன்னையின் சக்தி அளப்பரியது . வாய்ப்பு
அமையும் போது ஸ்ரீ வெட்காளியம்மனை தரிசித்து வாருங்கள் ,நலங்கள் பலவும்கூடும் .

நன்றி

Saturday, July 20, 2013

அருள்மிகு அகிலாண்டிஷ்வரி உடனமர் ஸ்ரீ ஜம்புகேஷ்வரர் திருக்கோவில் ,திருவானைக்காவல் ,திருச்சி

''சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல் பந்தர் செய்து,
உலந்தவன் இறந்த போதேகோச்செங்கண்ணுமாக ,
கலந்த நீர் காவிரிசூழ் சோணாடு சோழர்தங்கள் ,
குலந்தனிற்பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே''.

                                                                                                                    -திருநாவுக்கரசர்

 தமிழகத்தின் பஞ்ச பூதத் ஸ்தலங்களில் நீர்த்ஸ்தலமாக போற்றப்படுகின்ற ஸ்தலமாகதிருவானைக்காவல் ஸ்ரீ ஜம்புகேஷ்வரர் திருக்கோவிலாகும் .

 இறைவன்-சம்புகேஸ்வரர்

அம்பாள் - ஸ்ரீ அகிலாண்டீஷ்வரி

 அமைவிடம் -
திருச்சிமாவட்டம் ஸ்ரீ ரங்கம் வட்டம் ஸ்ரீரங்கத்தில்இருந்து
திருவானைக்காவல் சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

ஷ்தலமரம் : வெண்நாவல் மரம்

 பழமை -

தேவாரப் புகழ் பெற்ற சுமார் 2500 ஆண்டுகள் வரலாற்றுப்
பெருமை கொண்ட கோச்செங்கோட்சோழனால் கட்டப்பெற்ற நீண்டபெரிய மதிற்சுவர்கொண்ட அழகிய திருத்தலமாகும் .

தீர்த்தங்கள் - நவ (9) தீர்த்தங்கள் பாடல்

பாடியோர்கள் -

சமயக்குரவர்கள் அப்பர் ,சுந்தரர் ,திருஞானசம்பந்தர் ,
மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் பாடிய அற்புத ஸ்தலம்.அவர்களின்றி
காளமேகப்புலவர் .தாயுமானவர்.கச்சிய்யப்ப முனிவர் ,அருணகிரிநாதர் .
ஆகியோரால் பாடல் பெற்ற பதியாகும் ,

வணங்கியோர் -

நந்தி,சம்புமுனிவர்,அகிலாண்டீஷ்வரி . பிரம்மா ,இராமபிரான் ,அருணகிரிநாதர் .ஆகிய எண்ணற்ற
பெருயோர்கள் வணங்கிய ஸ்தலமாகும் ,

 பூஜைநேரங்கள் :

5காலபூஜையாகும் ,

 காலைஉசத்காலபூஜை 6.30 முதல் 7.30 வரை,
காலசந்தி 8. 00 முதல் 9.00 வரை
உச்சிகாலபூஜை 11.00 முதல் 12. 00வரை
 சாயரட்சைபூஜை 05. 00முதல் 05.45வரை
அர்த்தசாம பூஜை -09. 00 0930க்குள்ளாக
நடைபெறுகிறது.
 முக்கிய திருவிழா நாட்களில் வெள்ளி ஞாயிறுகளில் நடை திறந்தே இருக்கிறது.

புராணம் :

பழங்காலத்தில் யானை ஒன்று காட்டில் வசித்து வந்தபோது
காட்டில் சிவலிங்கம் ஒன்றைக்கண்டது. யானை அவ்விடமே தங்கி காவிரி நீரால் சிவலிங்கத்தை பூஜித்து வந்தது . அப்போது வெண்ணாவல் மரத்தில் சிலந்தி ஒன்று வசித்து வந்தது . மரத்தில் இருந்து குப்பைகளும் தூசிகளும் லிங்கம் மேல் விழாமல் வலைபின்னி சிவவழிபாடு செய்து வந்தது .

அடுத்த நாள் யானைவந்தது. சிவலிங்கம் மேல் சிலந்தி வலையா என பிய்த்து எறிந்தது . யானை சென்ற பின் வந்த சிலந்தி கோபம் கொண்டு மறுபடி சிலந்திவலை கட்டி பூஜை செய்து கொண்டிருக்க மறுநாள் வந்த யானையும் சிலந்தியும் கோபம் கொள்ள சிலந்தி துதிக்கை வழியாக தலை உச்சியில் சென்று கடிக்க யானை இறந்தது.துதிக்கையிலிருந்து வெளிவரமுடியாமல் சிலந்தியும் இறந்தது.

 அப்போது காட்சி கொடுத்த சிவபெருமான் தமக்கு பூஜை செய்தபடியால் யானைக்கு சிவலோகத்தில் பூத கணங்களுக்கு தலைமையாக நியமித்து அருள் வழங்கினார் ,சிலந்தி சோழமன்னராக பிறக்க அருள் செய்தார் என்பது புராணம் கூறும் உண்மையாகும் .

 அன்றுமுதல் இத் திருத்தலம் "திருவானைக்கா "என்றும்"ஆனைக்கா " என்றும் பெயர் பெற்று சிறப்பு பெற்றது. நால்வர் மட்டுமன்றிஅருணகிரி நாதராலும் பாடல்பெற்ற ஸ்தலமாகும் .

 முடிவுரை :

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் முக்கியமான சிவஸ்தலமாக வணங்கப்படுகிற ஸ்ரீஜம்புகேஷ்வரர் ஸ்ரீ அகிலாண்டிஸ்வரி திருக்கோவில் வந்து அருள்பெறுங்கள் .


திருக்கோவில் நீண்ட மதிற்சுவரும் சிறிய சிவலிங்க அமைப்பும் குனிந்து
செல்லக்கூடிய அழகையும் காணுதல் சிறப்பு . திருச்சியில் பார்க்கவேண்டிய
அருகாமையில் உள்ள சிவஸ்தலம் ,

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவபெருமான் உங்கள் வாழ்விலும் மாற்றங்கள் உண்டாக்கவேண்டி இதைப்பாராயணம்
செய்கிற அனைவர்க்கும் சிவனருள் கிட்ட வேண்டி விடைபெறுகிறேன் .

நன்றி

Friday, July 5, 2013

ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ,குமார வயலூர் ,ஸ்ரீ ரங்கம் வட்டம் ,திருச்சி

ஸ்ரீ ஆதிநாயகி உடனமர் ஆதிநாதர் திருக்கோவில் ,

                                வயலூர், திருச்சிஅமைப்பு : 


திருச்சியில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் வயலூர் என
அழைக்கப்படுகிற குமரன் குடிகொண்டு அருள்வதால் குமாரவயலூர் எனவும்
சிறப்பிக்கப்படுகிற சுற்றிலும் வயல் சூழ்ந்த ஓர் அழகிய அமைப்பில் ஸ்ரீ
சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

 இங்கே மூலவராக தாயார் ஸ்ரீஆதிநாயகி உடன் தகப்பனார் ஸ்ரீ ஆதிநாதராக அருள்பாலிக்க பெருமை சேர்க்கும் விதமாக வள்ளி ,தெய்வானை உடனுறை ஸ்ரீ சுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார் . திருக்கோவில் ஸ்தலமரமாக வன்னி மரம் விளங்குகிறது.


தீர்த்தம் :


சக்தி தீர்த்தம் இத் தீர்த்தம் முருகப்பெருமான் தன் வேலால்
உருவாக்கியதாக புராணச்செய்தி உரைக்கிறது. சக்தி தீர்த்தம் திருக்கோவில்
முன்பாக குளத்தில் பொங்கி வழிகிறது.

 திருக்கோவில் சிறப்பு : 


 அருணகிருநாதருக்கு ஸ்ரீ முருகப்பெருமான் திருவண்ணாமலையில் தடுத்தாட்கொண்டு வயலூருக்கு வா என அழைத்து வயலூருக்கு வந்த அருணகிரி நாதருக்கு காட்சி தந்து அவரின் நாக்கில் "ஓம் " என்னும் பிரணவ மந்திரத்தை எழுதி திருப்புகழ் பாட முதல் அடியாக அருளிய ஸ்தலமாக போற்றப்படுகிறது .


முருகப்பெருமான் தம்மை உலகிற்கு வெளிப்படுத்திக்கொண்ட ஸ்தலமாக
போற்றப்படுகிறது. ஆக ஞானம் வளர இங்கே வணங்குவது சிறப்பு ,
திருக்கோவிலில் திருமணம் செய்வது மிக சிறப்புடையாக குறிப்பிடுகிறார்கள்.ஸ்ரீ ஆதிநாயகி இங்கே வடக்குமுகமாக அருள்பாலிப்பதால் விஷேசமாகும் .


திருக்கோவில் வணங்கியோர்கள் : 


அக்கினி தேவன் , அருணகிரி நாதர் ,
கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஆகியோராவர்.

 திருக்கோவில் பூஜைகள்:


 6 கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது.காலை 06.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையிலும் , மதியம் 3.30முதல் இரவு 09.00 மணி வரையிலும்
திருக்கோவில் திறந்திருக்கும் . திருக்கோவில் காலம் சோழர்கள் கால
கல்வெட்டை சார்ந்ததாகும் .


பழங்காலத்தில் சோழ அரசர்கள் வயலூரை முகாமிட்டிருந்த போது தாகம் காரணமாக கரும்பை உடைக்க அது மூன்றாக பிளந்து இரத்தம் வர அங்கே சுத்தம் செய்து தோண்டிய போது அங்கே சுயம்பு லிங்கமாக ஆதிநாதர் வெளிப்பட அச்சோழ மன்னரால் திருக்கோவில் எழுப்பப் பட்டது என்பது வரலாறாகும்.பொய்யாக்கணபதி என்ற தனிச்சன்னதி வணங்கத்தக்கது .

 விசேச நாட்கள் :

வைகாசி விசாகம் , கிருத்திகை ,சஷ்டி, பிரதோஷ நாட்கள் ஆகியனவாகும் .


முடிவரை :


 குன்றில்லாத இடத்தில் அமையாத முருகர் கோவில் என்றாலும் கூட
இங்கே மூலவராக ஆதிநாதர் இருக்க முருகப்பெருமான் ஸ்ரீ அருணகிரி
நாதர்க்கு காட்சி கொடுத்ததால் பல சிறப்புகள் பெற்று விளங்குகிறார் .


முருகப்பெருமானே காட்சி தந்த ஸ்தலம் , அழகில் முருகர் நம்மை அன்பு
செலுத்துகிறார் . திருச்சி சென்றால் மறக்காமல் சென்று வாருங்கள் .
வயலூர் முருகர் வளங்கள் பல சேர்ப்பார் . நன்றி

Thursday, July 4, 2013

ஸ்ரீ மைவிழியம்மை உடனமர் உஜ்ஜீவநாதர் திருக்கோவில் , உய்ய கொண்டான் மலை , கற்குடி ,திருச்சி

அமைப்பு : 


 திருச்சியில் இருந்து மேற்கே 5 கி.மீ தொலைவில் வயலூர்
செல்லும் ரோட்டில் உய்யகொண்டான் மலை என்னும் அழகிய 50 அடிக்குன்றில் கற்குடியில் என்ற இடத்தில் ஸ்ரீ உஜ்ஜீவநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது


மூலவர் : 


உஜ்ஜீவநாதர் ,

உச்சிநாதர் ,கற்பக நாதர் , முக்தீசர் என
அழைக்கப்படுகிறார் .

மூலவர் சுயம்பு லிங்கம் . 


 இறைவி :


பாலம்பிகை , மைவிழியம்மை காவிரியின் தென்கரை சோழநாட்டில் அமைந்த 4வதுசிவஷ்தலமாகும் . அழகிய கற்குன்றில் சிவன் குடியிருப்பதால் கற்குடி எனஅழைக்கப்படுகிறது .

 ஸ்தல விஷேசம் : 


 என்றும் 16 ஆக வாழமார்க்கண்டேயருக்கு அருள்புரிந்த சிவஸ்தலம் ,ஆக இத்தலத்தில் மார்க்கண்டேயரை காப்பாற்ற உறுதி அளித்து சிவன் காட்சி தந்த ஸ்தலமாகும் .நந்திவர்ம பல்லவமன்னரால் கட்டப்பெற்ற திருக்கோவில் ஆதலால் இவ்வூர் பழங்காலத்தில் நந்தி வர்ம மங்கலம் என பெயர் பெற்றது.

 பாடல் பாடியோர் :


அப்பர் .சுந்தர் ,சம்பந்தர் ஆகியோர் பாடல் பெற்ற சிவஷ்தலமாகும் .
அருணகிரிநாதர் இங்குள்ள ஸ்ரீ முருகப்பெருமானை பாடியுள்ளார் .

 தீர்த்தம்: 


பொன்னொளி ஓடை ,நாற்கோண தீர்த்தமாகும் .

 ஸ்தலமரம் : 


 வில்வம் .

வழிப்பட்டோர் :


 உபமன்யு முனிவர்,நாரதர் ,கரண் ,மார்க்கண்டேயர் ஆகியோராவர். 18 ஆம் நூற்றாண்டில் திருக்கோவில் கோட்டை யாக இருந்ததாம் .


திருக்கோவில் காலை 06.00 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணி வரையிலும் திருக்கோவில் திறந்திருக்கும் . மற்றோர்சிவலிங்கமாக இடர்காத்தார் உடன் அஞ்சானாட்சி அம்மன் அருள்பாலிக்கிறார் .


முடிவுரை : 


ஸ்ரீ உய்யகொண்டான் திருமலை திருச்சியில் இருந்து 5 கி.மீ
தொலைவில் அமைந்த அற்புத சிவஸ்தலமாகும் . அழகிய குன்றில் ஏறி உள்ளே அழகியஅமைப்பில் பழங்காலத்தில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட திருக்கோவில் .நிறைய வில்வமரங்கள் சூழ திருக்கோவில் அமைந்துள்ளது .

 தேவாரப்பாடல் பெற்றஅழகிய ஆலயம் . பார்க்கவேண்டிய அற்புத திருக்கோவில் . அதீத சக்திகள்கொண்ட ஆலயம் . வாய்ப்பு கிடைக்கும் போது தரிசித்து வாருங்கள். 5கி.மீதொலைவிற்குள்ளாக வயலூர் ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது .


வாய்ப்பு கிடைப்பின் வந்து ஆழ்ந்து வணங்குங்கள். எல்லா வளமும் நலமும்
கிட்டும் . நன்றி

Monday, July 1, 2013

ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் ,உறையூர் திருச்சி

                                   "திசுளாபுரவல்லியே நம ஓம் "


 ஸ்ரீ ரங்கம் அண்மையில் பயணித்து வந்த போது 108 வைணவத்திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்
திருக்கோவில் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து 2 கி.மீ
தொலைவில் அமைந்துள்ளது .இது ஸ்ரீ அரங்கநாதசுவாமி  தேவஷ்தானத்திற்குட்பட்டது .

 திரு உறையூர் கோழியூர் எனவும் நிகளாபுரி
எனவும் அழைக்கப்படுகிறது. நந்த கோழ மகாராஜாவுக்கு குழந்தைபேறு
இல்லாக்குறை நீக்கி இலட்சுமி கமலமலரில் அவதரித்து இங்கே உறைந்த
காரணத்தால் இவ்வூர் திரு உறையூர் என்றும் உறந்தை என்றும்
அழைக்கப்படுகிறது .


 பெருமாள் இங்கே அழகிய மணவாளப்பெருமானாக நின்றநிலையில் அருள்புரிகிறார் .


 தாயார் மூலவராக வாஸல லட்சுமியாகவும்உத்சவராக கமலவல்லி உறையூர் வல்லி எனவும் அழைக்கப்படுகிறார் . நந்த
சோழர் உறையூர் கமலவல்லி நாச்சியாரை பெருமாளுக்கு திருமணம் செய்து
வைக்கிறார் . திருக்கோவில் ஸ்ரீ ரங்கம் பார்த்த நிலையில் வடக்குதிசையில்
அமைந்துள்ளது .

கல்யாண விமானத்தில் அருள் புரிய இங்குள்ள தீர்த்தம் கல்யாண தீர்த்தம் கமலபுஷ்கரணி என்றும் அழைக்கப்படுகிறது . காவேரி நதி ,
இதன் தீர்த்தமேயாகும் . திருக்கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது .


சிறப்பு :

திருப்பாணாழ்வார் அவதரித்த ஸ்தலம் . திருமங்கையாழ்வாரால்
மங்களாசாசனம் செய்து வைக்கப்பட்ட ஸ்தலம் . கார்த்திகை மாதம் 10நாட்கள்
ரோகிணி நட்சத்திர உற்சவம் சிறப்பாக நடைபெறும் .

 திருக்கோவில் காலை 6.45
முதல் 12.00  வரையிலும் ,
மாலை 05.00முதல்
 இரவு 0800

முடிவுரை :

 ஸ்ரீ ரங்கம் ஆன்மீக சுற்றுலா சுற்றுலா செல்பவர்கள் 108 வைணவத்திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீ கமலவல்லி நாச்சியாரை வணங்குங்கள் . மங்கலங்கள் உங்கள்வீட்டிற்கு வர அழகிய மணவாளப்பெருமானை வணங்கி வாருங்கள் . நல்லது பலவும்
உங்கள் வாழ்வில் கிட்டும் .நன்றி