Wednesday, May 16, 2012

ஸ்ரீமுருகரின் ஆறாம் படைவீடு பழமுதிர்ச்சோலை தரிசனம்



பழமுதிர்ச்சோலையில் அருள்பாலிக்கும்

ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில்



பழமுதிர்சோலையின் முருகரை வணங்க துதி :

"எழுமுதி ரைப்புனத்து இறைவி முன்புதன்
கிழமுதிர் இளநலங் கிடைப்ப முன்னவன்
மழமுதிர களிறென வருதல் வேண்டிய
பழமுதிர் சோலையம் பகவற் போற்றுவாம் ."

அமைவிடம் :

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அழகர் கோயில் நடுமலையில் பழமுதிர் சோலை அமைந்துள்ளது. மதுரையின் சிறப்புகளில் ஒன்றாக விளங்கும் பழமுதிர்சோலை அறுபடைவீடுகளில் ஆறாவது படை வீடாகும் .

முதல் படைவீடான திருப்பரங்குன்றம் மதுரையில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது இது முருகரின் முதல் படை வீடாகும் .முருகப்பெருமானின் இருபடை வீடுகளை தன்னகத்தே கொண்டுள்ள மதுரை ஒர் அற்புத ஆன்மீக நகராகும் .

மூலவர் :

ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர்

ஸ்தல விருட்சம் : நாவல் மரம்

ஔவைக்கு ஸ்ரீ முருகர் காட்சி தந்து நாவற்பழம் கொடுத்த இடம் . இது ஐப்பசிமாதத்தில் மட்டுமே பழம் பழுக்கும் .மற்ற நாவல் மரங்கள் ஆடி ஆவணிமாதத்தில் மட்டும் பழம் பழுக்கும்

தீர்த்தம் :

நூபுர கங்கை தீர்த்தம்

திருக்கோவில் சுற்றியுள்ள சன்னதிகள் :


முழுமுதற் கடவுளாம் அருள்மிகு வித்தக விநாயகர் தரிசனம் செய்து பின் மூலவரான வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர் தரிசித்து ஸ்ரீ ஆதிவேல் உற்சவர் வணங்கி பின் ஸ்ரீ நாவல் மரத்தடி விநாயகரை பார்த்து வரலாம் .

பழமுதிர் சோலை செல்லும் வழிகள் பஸ் வசதிகள் :

மதுரையில் இருந்து அழகர் கோவில் 20 கி.மீட்டர் தொலைவில் கடந்து அழகர்மலை அடிவாரத்தில் இருந்து திருக்கோவில் நிர்வாகத்தால் இயக்கப்படும் சிற்றுந்தின் மூலம் 20நிமிட பயணத்தில் பழமுதிர்ச்சோலையை அடையலாம் .

மதுரையில் இருந்து அழகர்மலை செல்ல காலை 05.00மணியில் இருந்து இரவு 10.00 மணிவரைகள் பஸ்கள் உண்டு. அழகர் மலையில் இருந்து பழமுதிர்சோலை செல்ல திருக்கோவில் நிர்வாகத்தின் பஸ் காலை 06 .00மணி முதல் மாலை05.00மணி வரை பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பூஜை முறைகள் :

மூன்றுகாலப்பூஜைகள் பழமுதிர்ச்சோலையில் நடைபெறுகிறது.
காலை அபிஷேகபூஜை 09.00 மணிக்கும்
உச்சிகால பூஜை 12.00மணிக்கும்
மாலை அபிஷேகபூஜை 05.00மணிக்கும் நடைபெறுகிறது.
திருக்கோவில் காலை 0600மணிமுதல் மாலை
0600மணி வரை திறந்தே இருக்கும் .

பழமுதிர்ச்சோலையின் சிறப்புகள் :

அழகர்மலையின் அடிவாரத்தில் காக்கும் கடவுள் ஸ்ரீ திருமாலின் வைணவத் திருக்கோவில் அமைந்துள்ளது. மலையின் மேலே பழமுதிர்சோலையில் ஸ்ரீ முருகர் (சைவம் )குடிகொண்டுள்ளார் .

சைவ,வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஸ்தலம் . மாமனாகிய திருமாலும் மருமகனாகிய ஸ்ரீமுருகரும் இணைந்த ஸ்தலம் . பழமுதிர்சோலை வருபவர்கள் அழகர் மலையில் திருமாலை வணங்கி விட்டு பின்னர் பழமுதிர்ச்சோலை வருவதே சிறப்பாகும் .

ஆறாம் படை வீடு ,மாட்டுக்கார சிறுவனாக வந்து அவ்வையார்க்கு நாவல் பழம் கொடுத்து காட்சி தந்த ஸ்தலம் . பாடல் பெற்ற ஸ்தலம் .அழகிய கண்ணனும் அழகன் முருகனும் ஆட்சி செய்வதாலேயே இது அழகர் மலையானது. கந்தபுராணம் இயற்றிய கச்சியப்பர் வியந்து பாடிய ஸ்தலம் .

அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற ஸ்தலம் , திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் போற்றிப்புகழ்ந்த அழகு மிகு மலையில் அமைந்துள்ள அற்புத ஸ்தலமே பழமுதிர்சோலையாகும் .

ஸ்தலத்தின் வேறுபெயர்கள் :

சோலைமலை, பழமுதிர்ச்சோலை, குலகிரி,குலமலை, விருஷபகிரி,

முடிவுரை :

பழமுதிர் சோலை வருகின்றவர்கள் நூபுரகங்கை தீர்த்தத்தில் குளித்து மாற்றிக்கொள்ள ஏதுவாக மாற்றுத்துணிகளுடன் வந்தால் நூபுரகங்கையில் குளித்து விட்டு ஸ்ரீ முருகப்பெருமானை 500மீட்டர் நடந்து வந்து ஸ்ரீ பழமுதிர்ச்சோலையில் முருகப்பெருமானை வணங்கலாம் .

நூபுரு கங்கை தீர்த்தம் பற்றி நிறைய தகவல்கள் அடுத்த பதிவில்

வாழ்நாளில் ஒரு முறையேனும் ஆறாம்படை வீடான பழமுதிர்ச்சோலயில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முருகரை வணங்கி செல்லுங்கள் .

கருத்துரையிடுங்கள் நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...