Saturday, September 24, 2011

அருள்மிகு மீனாட்சி உடனமர் சொக்கநாதர் ஆலயம் ,சொக்கநாத மலையூர் ,வெள்ளித்திருப்பூர், பவானி வட்டம்



அருள்மிகு மீனாட்சி உடனமர் சொக்கநாதர் ஆலயம்,


சொக்கநாத மலையூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ள மலைக்கோவிலாகும், ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் வழியில் சொக்கநாத மலையூர் என்னும் ஊரில் அமைந்திருக்கும் அழகிய திருக்கோவிலாகும் .சொக்கநாத மலையூரில் இருந்து சுமார் 1 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இத்திருக்கோவில் நந்தவனம் போல அழகிய தோற்றத்தில் அமைந்திருக்கிறது.

பழங்கால அரசமரங்கள் புளிய மரங்கள் என மரங்களின் வயதை யோசித்துப்பார்த்தாலே சுமார் 200 வருட பாரம்பரியம் புரியும் . சொக்கநாதர் மலையின் அடிவாரத்தில் உள்ள அரசமரத்தினடி விநாயகர் தரிசனம் செய்து மலையின் படிகள் ஏற ஆரம்பித்தால் அடிவார லிங்கத்தை தரிசனம் செய்யலாம். பழங்காலத்தில் அழகாய் செதுக்கிய படிக்கட்டுகள் இதமானவை. 50வது படிக்கட்டு அருகில் பெரிய தாமரைக்குளம் அமைந்துள்ளது. அதன் மேலே நடந்து சென்றால் அழகிய கற்களால் ஆன கொடிமரத்தை வணங்கி திருக்கோவிலை அடையலாம். சுமார் 200படிக்கட்டுகள் இருக்கும் .

திருக்கோவில் மலையே ஓர் பெரிய பாறையின் உச்சியில் அமைந்துள்ளது போன்ற உணர்வு நமக்கு . திருக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. திருக்கோவில் உள்ளே நுழையும் முன் பிரமாண்ட நந்தியும் உள்முகப்பில் சிறிய நந்தியும் கடந்து சென்றால் இடப்புறம் உள்ள கணபதியாரை வணங்கி மூலரான சொக்கநாதரை லிங்க வடிவில் தரிசனம் செய்யலாம்.அருகில் மீனாட்சி அம்மன் அழகுடன் காட்சி அளிக்க அருகே உள்ள பிரகாரத்தில் அமைந்திருக்கும் முருகர் சன்னதி பார்க்க தூண்டுவதாக அமைந்துள்ளது.



பழங்காலத்தில் சந்தனம் அரைக்கும் கட்டையில் சந்தனம் தருகிறார்கள் இதமான குளிர்ச்சியுடன் திருக்கோவிலில் பிரசாதமாக தரப்படும் சந்தனமும்,திருநீரும் "சிவாய நமஹ " எனச்சொல்லி இட்டுக்கொள்ளலாம். திருக்கோவில் வெளிப்பிரகாரத்தில் ஆஞ்சனேயர் சன்னதி,ஜயப்பர் சன்னதி, சூரிய மூர்த்தி,பின்புறம் விநாயகப்பெருமான் , குருபகவான், அண்ணாமலையார், சண்டிகேஸ்வரர் , நவகிரகங்கள் ,மஹீஸ்வர வர்த்தினி, விஷ்ணுதுர்க்கை ,கஜலட்சுமி சிலைகள் என திருக்கோவில் சுற்றி அமைந்துள்ள சிலைகள் அழகானவையாகும். மூன்று நிலைக்கோபுரங்களுடன் அமைதியான இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ள சொக்கநாதர் மலை பல சூட்சமங்களுடன் அமைந்துள்ளது,


திருக்கோவிலின் பழங்காலத்தை அறிய முடியவில்லை எனினும் முதல் திருப்பணி கி.பி 1920 ஆம் ஆண்டில் நடைபெற்றுள்ளதாகவும் ,சொக்கநாத மலையை அமைத்த பெரியவர் இங்கேயே வாழ்ந்து ஜீவசமாதி அடைந்ததாகவும் செவிவழிச்செய்திகள் தெரிவிக்கின்றன. பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகிறது. இயற்கை சூழலில் அமைந்த மீனாட்சி உடனமர் சொக்கநாதர் ஆலயம் பார்க்கவேண்டிய ஆலமாகும்.

பழங்காலத்தில் உருவான சிவத்தலமான சொக்கநாதரை வணங்கி வாழ்வில் நலங்கள் பெற்றிடுங்கள் .வாழ்க வளமுடன் .கருத்துரைகள் எதிர்பார்க்கப்படுகிறது.

நட்புடன் குரு.பழ.மாதேசு. குருவரெட்டியூர்

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...