Wednesday, March 11, 2020

வெள்ளியங்கிரி மலை தரிசனம்

வெள்ளியங்கிரி மலை பயணம் நீண்ட நாள் ஆவல் .நாம் பார்த்திராத இந்த மலையை சென்று ,பார்த்திட வேண்டும் என கடந்த மகா சிவராத்திரி 2020 அன்று கோயம்புத்தூர் சென்றேன் .
தென் கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை  கோயம்புத்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது.  கோயம்புத்தூர் காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து பூண்டி மலையடிவாரத்திலுள்ள இடத்திற்கு சென்றால் அங்கிருந்து மலை ஏற ஆரம்பிக்கலாம்.

அருகில் ஈசா யோகா மையம் உள்ளது. பூண்டி மலை அடிவாரத்திலுள்ள பூண்டி விநாயகர் வெள்ளிங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்பாள்,  ஆகிய சன்னதிகள் கிழக்கு நோக்கி அழகாக அமைந்துள்ளது.சுமார் ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலைப்பாதையில் நடந்தே செல்ல வேண்டிய மலைக்கோயில் ஆகும்,
இதன் உயரம் சுமார் 6000 அடி ஆகும்.இப்பாதையில் செல்லும் இடத்தில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனைகைதட்டி சுனை சீதை வனம் அர்ஜுனன் வில்,பீமன் களி உருண்டை,ஆண்டி சுனை  திருநீர்மலை, ஒட்டன் சமாதிஆகிய பகுதிகளை கடந்து செல்ல வேண்டும் , மாசி மகா சிவராத்திரி யிலிருந்து சித்ரா பௌர்ணமி வரை இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
நண்பர் ஒருவருடன் சிவராத்திரி பயணத்தை ஆரம்பித்தேன்,பூண்டி மலை அடிவார விநாயகர் தரிசனம் முடித்து ஆரம்பத்திலேயே வனத்துறையின் சோதனைச் சாவடி உள்ளது, மலை மேலே ஏறும்போது தீப்பெட்டி சிகரெட் எரியும் பொருட்கள் பயன்படுத்த மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அனுமதிக்கப்படுவதில்லை,பின்பு மலை ஏறினால் முதல் இரண்டு மலைகள் கல் படிக்கட்டுகளாக பயணிக்கிறது,
மிகுந்த சவால் விடும் அளவு செங்குத்தான பயணம்,இடையில் எலுமிச்சை உப்பு கலந்த பழச்சாறு ஆங்காங்கே விற்கிறார்கள். அதையும் கடந்து பயணித்து கொண்டே இருந்தால், இடையில் குளித்து விட்டு பயணிக்க அழகிய ஓடை உள்ளது, அங்குள்ள கோவிலை தரிசனம் செய்து பின் பயணித்தால் திருநீர்மலை வருகிறது,  அங்கு சில இடங்களை தோண்டி வைத்துள்ளார்கள்,அதில் சுத்தமான வெள்ளை நிறமுடைய திருநீர் மாதிரியான மண் கிடைக்கிறது.
மதியம் இரண்டரை மணிக்கு ஆரம்பித்த பயணம் மாலை 6 மணியளவில் திருநீர்மலையில் ஒரு சுக்கு காப்பி கடையில் ஒரு சுக்கு காப்பியும், தேன் மிட்டாய் வாங்கி சாப்பிட்டு பயணித்தோம், இரவு 8 மணி வரையில் நடந்து கோவிலை அடைந்தோம், முதல் நான்கு மலையில் வேர்த்துப் போன உடம்பு கடைசி மூன்று மலை வெகுவாக குளிரத் தொடங்கியது இரவு  எட்டு மணிக்கு சுமார் ஆறு மணி நேர பயணத்திற்கு பின் ஏழாவது மலையான வெள்ளிங்கிரியை அடைந்தோம், நாங்கள் சென்ற நேரத்தில் அதிக கூட்டமில்லை, சுவாமி சுயம்புலிங்கமாக சிறிய லிங்கமாக காட்சி அளிக்கிறார்,


அருமையானதொரு தரிசனம் , மிக நீண்ட நாளைய ஆசை இந்த சிவதரிசனம் செய்ய வேண்டும் என்று , அது நிறைவும் செய்தாகிவிட்டது,உங்களுக்கு 45 வயதுக்குள்  இருந்தால் ,மலையேற்றத்தில் ஆர்வமாக இருந்தால், சிவ வழிபாட்டில் ஆர்வமாக இருந்தால் கண்டிப்பாக வாழ்நாளில் ஒரு தடவையேனும் தரிசிக்க வேண்டிய ஆலயம், செல்லும் போது மறவாமல் 2 லிட்டர் தண்ணீர்,மூன்று வேளை உணவு,குளிருக்கு ஏதாவது ஒரு போர்வை ,  குளுக்கோஸ், டார்ச் லைட் மற்றும்சிற் சில உணவு வகைகளை எடுத்துச் செல்வது இந்த பயணத்திற்கு நல்லது,  இந்தக் கோவிலில் மகா சிவராத்திரியும் சித்திரா பௌர்ணமியும் மிக விசேஷமாகும் அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளிங்கிரி வந்து தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.  வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் மிகுந்த கவனத்துடன் நடக்க வேண்டிய மலை, ரத்த அழுத்தம் இதய பலவீனமானவர்கள், இந்த மலை ஏற முடியாது, 10 வயதிற்கு மேலும் 40 வயதிற்கு கீழும் உள்ள பெண்கள் இந்தக் கோயிலுக்குச் செல்ல அனுமதி இல்லை ,










வெள்ளிமலை, ரசதகிரி,தென் கைலாயம்,பூலோகத்தின் கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த வெள்ளியங்கிரி மலையை வாழ்நாளில் ஒரு முறையேனும் இரண்டு நாள் பயணமாக சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்,அற்புதமான ஒரு ஸ்தலம் , வாய்ப்பு கிடைத்தால் வணங்கிவிட்டு எழுதுங்கள், ஓம் சிவசிவ ஓம் - நன்றி அடுத்த பதிவில் சந்திப்போம், குரு.பழ.மாதேசு, குருவரெட்டியூர்-638504 www.kavithaimathesu.blogspot.com 

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...