Tuesday, July 31, 2012

மழைவேண்டி யாகமும் கர்நாடகாவை குளிரவைத்த மழையும்



ஆன்மீக ஆச்சர்யம்

எப்போதும் இல்லாத அளவில் 2012 வருடத்தில் மழை இல்லாமல் கர்நாடக மாநிலம் கடும் வறட்சி ஏற்பட்டது .

கர்நாடகா அரசு ஏறத்தாழ 150 தாலுக்காக்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதி என அறிவித்தது . பின் சுதாரித்துக்கொண்ட கர்நாடக அரசு தனது இந்து அறநிலையத்துறை யத்தின் வசம் சுமார் 18 கோடி ரூபாயை மழைக்காக யாகம் செய்யுமாறு உத்திரவிட்டது .

அதன்படி கர்நாடகா இந்து அறநிலையத்துறை அமைச்சர் சீனிவாசஸ் பூஜாரி கர்நாடகா முழுவதும் உள்ள 34000 திருக்கோவில்களும் தலா 5000 காசோலை அளித்து , நடத்த வேண்டிய பூஜை முறைகளுடன் நடத்த உத்திரவு பிறப்பித்தார் .

கடந்த ஜீலை 27 ஆம் நாள் பூஜை ஆரம்பிக்கப்பட்டது . கர்நாடகவின் அனைத்து திருக்கோவில்களிலும் நிகழ்த்தப்பெற்ற பூஜையின் விளைவாக அந்த இரண்டு நாட்களிலும் மழை கொட்டி தீர்த்தது.

குறிப்பாக தென்கர்நாடகம் ,பெங்களூர் ,சிமோகா ,சிங்மங்களூர் ஆகிய பகுதிகளில் மழையின் கடுமையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . ரயில் போக்குவரத்து சேவை அன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மழைக்காக யாகமா என கேலி செய்த எதிர்கட்சிகள் மழை பெய்ததும் ஆச்சர்யப்பட்டார்களாம் . இறை வழிபாட்டின் உண்மையை உணர்ந்த கர்நாடக அரசே முனைப்பாக மழை வேண்டி யாகம் செய்தது வியப்பான ஒன்றாகும் .

இறை வழிபாடு வேண்டுவோர்க்கு வேண்டுவன கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது . தமிழகத்திலும் பழங்கால மன்னர்களும் மழை இல்லாமல் மக்கள் துன்பப்பட்ட போது மழை வேண்டி யாகம் செய்து மழையை வரவழைத்தாக நான் கேள்விப்பட்டதுண்டு.

ஆயிரமாயிரம் அறிவியல் முன்னேற்றங்கள் வந்தாலும் "அவனின்றி அணுவும் அசையாது"

இப்பதிவுவை எழுதவும் மற்றும்

உடனடியாக செய்தியை வெளியிட்ட
தினமலர் நாளிதளுக்கு நம் வலைப்பூவின் சார்பாக நன்றிகளாயிரம் .

Tuesday, July 17, 2012

மனிதரும் கடவுளாகலாம் ( சரண்யா )




மனிதரும் கடவுளாகலாம் [சரண்யா]

சென்ற வாரம் கோவை ஈரோடு மாவட்டச் செய்திகளில் வலம் வந்த முக்கியமானவர் .

கடந்த ஜீன் 30 2012 அன்று கோவையில் இருந்து கருத்தரங்கு ஒன்றுக்காக சாலினா,சரண்யா, ,விமல் , உட்பட 6 பேர் சேலம் சென்று கருத்தரங்கு முடித்து விட்டு

சேலத்திலிருந்து கோவை நான்கு வழிச்சாலையில் காரில் பயணித்து இரவு 9 மணிக்கு வந்தபோது கோவையில் இருந்து சித்தோடுக்கு ஒரு லாரி திடிரென குறுக்கே வர காரும் லாரியும் எதிர்பாரத விதமாக மோதிக்கொண்டன..

காரில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள் . ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சாலினா என்பவரும் இறந்து விட


சரண்யா மேல் சிகிச்சைக்காக கோவையில் ஓர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களுக்கு பிறகு சரண்யாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் சரண்யாவின் அப்பாவிடம் தெரிவிக்கவும் இடிந்து போன சரண்யாவின் அப்பா மணியன் தனது மகளின் உடல் உள்ளுருப்பகளை தானமாக தர ஒப்புதல் தந்தார் .

அதன்படி பல்வேறு மருத்துவ மனைகளிகளில் இருந்து வந்த மருத்துவர்களிடம் சரண்யாவின் உடல் உள்ளுருப்புகளை தரப்பட்டது .இதனால் 7 நோயாளிகளுக்கு புதுவாழ்வு கிடைத்தது.


சரண்யா பற்றி :

கோவை ரத்தினபுரியை சேர்ந்த சரண்யா B.E எலக்ரிக்கல் முடித்து 93 சதவீத மதிப்பெண் பெற்று கடைசியாக நடந்த தேர்வில் தேர்வானவர்.பள்ளி கல்லூரி நாட்களில் சமுக சேவையில் விருப்பமுடையவர் .

சரண்யாவின் சமுக சேவை எண்ணம் போல வே அவர் உள்ளுருப்பு தானத்தால் "இறந்த சரண்யாவின் ஆத்மா சாந்தியடைந்தது. சிறிய வயதில் இருந்து அவருடன் ஒன்றாக படித்த சாலினா என்ற தோழி இதே விபத்தில் இறந்து விட்டார் .

மலர்கள் சில காலையில் பூத்து
மாலையில் காய்ந்து
போகும்.... .!

சரண்யா போன்ற
பூக்கள்
இருந்தாலும்
உதிர்ந்தாலும்
காலமெல்லாம் அதன் வாசம்
நம்முடன் -எப்போதும்
கலந்திருக்கும்.

முடிவுரை:

உடல் உள்ளுருப்பு தானம் செய்து மறைந்த சரண்யாவிற்கும்
அதே விபத்தில் இறந்த மற்ற நான்கு ஆன்மாக்கள்
சாந்தி அடைய இறை துணை வேண்டுகிறேன் .

Friday, July 13, 2012

விண்ணப்பித்து விட்டீர்களா? கிராம நிர்வாக அலுவலர் தேர்வு 2012_13 க்கான அறிவிப்பை வெளியிட்டது TNPSC


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு 2012 _13 க்கான அறிவிப்பை கடந்த 9.7.12 அன்று வெளியிட்டது. இதன்படி 1870 கிராம நிர்வாக அலுவலர்களை தேர்வு செய்கிறது.

விண்ணப்பங்கள் அனுப்ப 10.8.12 கடைசி தேதியாகும் .
வங்கி அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் கட்ட கடைசி நாள் 14.08.12
தேர்வு நடைபெறும் நாள் 30.09.12 காலை 10மணிமுதல் மதியம் 1 மணி வரையாகும் .

21 வயது முடிந்த 40வயதிற்குட்பட்ட 10ஆம் வகுப்பு படித்த தமிழ்நாட்டை சேர்ந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம் . பொது அறிவு பொதுதமிழ் ஆகியவற்றில் 200வினாக்களுக்கு 300மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் .

விண்ணப்பதாரர்கள் 10.7.12 செய்தித்தாள்களை பார்த்தோ அல்லது

www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net

ஆகிய இணையங்களில் விபரங்களை பார்த்து விண்ணப்பிக்கவும்

முடிவுரை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மேற்கண்ட முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் .
உங்கள் நன்பர்களுக்கு இந்த தகவல் பயன்படும் ஆகவே அனைவருக்கும் பகிருங்கள் .
நம் வலைப்பூவைப் பார்த்து விண்ணப்பித்து தேர்வு எழுதும்

அனைவருக்கும் ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்

குருவரெட்டியூர் ஸ்ரீ கக்குவாய் மாரியம்மன் முதலாம் ஆண்டு நிறைவு விழா


SRI kakuvai mariamman temple function -2012 GURUVAREDDIYUR


ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர்
அருள்மிகு கக்குவாய் மாரியம்மன் கும்பாபிஷேகம்
சென்ற வருடம் நடந்து முடிந்தது .

அதைத்தொடர்ந்து முதலாம் ஆண்டு நிறைவு விழா நந்தன வருடம்

ஆனி மாதம் 26 ஆம் நாள் 10.7.2012 செவ்வாய் கிழமை நிறைவு பெற்று அதிகாலை 5 மணிக்கு காவிரி ஆறு சென்று தீர்த்தம் கொண்டு வந்து காலை 11மணிக்கு யாக வேள்வியுடன் அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெற்றது.

குமாரபாளையம் தவத்திரு அங்கப்பன் சுவாமிகள் அவர்களால் யாக வேள்விகள் செய்யப்பட்டு சிறப்பான அலங்கார பூஜை நடைபெற்றது.

மதியம் 2 மணிக்கு சிறப்பான அன்னதானம் இடப்பட்டு நிறைவு பெற்றது.


குருவரெட்டியூர் பகுதி மக்கள் பலரும் ஆன்மீக அன்பர்களும்
கலந்து கொண்டு ஸ்ரீ கக்குவாய் மாரியம்மன் அருள் பெற்றுச்சென்றனர் .

Saturday, July 7, 2012

திருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசனம்




திருப்பங்கள் தரும் திருப்பதி நடைப்பயணம்


கடந்த ஒருமாதங்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆசைப்பட்டு திருப்பதி கிளம்பினோம் . 12 வருடங்கள் கழித்து திருப்பதியை பார்க்க விரும்பி எங்கள் கிராமத்தில் இருந்து ஈரோடு ரயில் நிலையம் அடைந்து காட்பாடி ரயில் நிலையம் அடைந்து அங்கிருந்து திருப்பதி ரயில் நிலையம் அடைந்தோம் .


நண்பர் கூறியபடி நடைபாதையாக சென்றால் ஏழுமலையானை எளிதாக தரிசனம் செய்யலாம் என கூற ஓர் ஆட்டோவில் மலைப்பாதை அடிவாரத்தை அடைந்தோம் .

அங்கிருந்து மலையைப்பார்த்தால் மிகப்பெரிய பாறை செந்நிறத்தில் வித்தியாசமாக தெரிகிறது. எளிதான நடைப்பயணம் தான் என ஆரம்பத்தில் சொன்னார்கள் அடிவாரத்திலுள்ள படிகளில் கற்பூரம் கொளுத்தி அங்குள்ள சன்னதியில் வழிபட்டு முதற்படிக்கட்டில் காலடி வைத்தால் வருணபகவான் மழையை பொழிய ஆக அருமையான குளிர்ச்சி திருப்பதி ஏழுமலையான் நாம் வருவதை அறிந்திருப்பார் போலும் சந்தோஷமாக இருந்தது.

படிக்கட்டுகளில் சந்தனம் ,குங்குமம்,மஞ்சள் என பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க படிக்கட்டில் தடவி கற்பூரம் கொளுத்தி "கோவிந்தா "என பக்தி மயமானது படிக்கட்டுகள் . மழை நீரில் முன்பே படிக்கட்டில் இடப்பட்ட சந்தனமும் ,குங்குமம் ,மஞ்சள் ஆகியவை நம் கால்களை சிவப்பு கலராக்கியது.

தொடர்ந்து பயணத்தை ஆரம்பிக்க ஆங்காங்கே பக்தர்கள் தங்கள் உடற்கடன்களை முடித்துக்கொள்ள பளிச் கழிவறைகள் , இருக்கின்றன. படிக்கட்டை அவ்வப்போது சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்கள் என எங்கும் சுத்தம்.

மாலை 4.00 மணிக்கு துவங்கிய நம் பயணம் நடந்து கொண்டே இருந்தோம் . 6. 00 மணியளவில் திருப்பதி தேவஸ்தானத்தால் நமது போட்டோ எடுக்கப்பட்டு தரிசன நேரம் இரவு 12 மணி எனக்குறித்து நடைபாதைபக்தர் எனக்குறித்து அனுப்புகிறார்கள் . ஆங்காங்கே பாதுகாப்பிற்கு ஆந்திர காவலர்கள் இருக்கிறார்கள் .

அங்கிருந்து பல படிக்கட்டுகள் ஏறி ஒரு மணி நேரம் பயணித்தால் நம் போட்டோ அடையாள அட்டையில் ஒரு சீல் வைத்து தருகிறார்கள் .செல்லும் வழிகளில் ஆங்காங்கே ஆழ்வார்கள் சன்னதி சிலைகள் நிறுவி அழகுபடித்தி இருக்கிறார்கள்.ஆங்காங்கே கடைகள் படிக்கட்டுகளில் இருக்கின்றன.

இடையில் ஓர் பெரிய பூங்காவில் நிறைய மான்கள் இயற்கையாக வளர்க்கப்படுகிறது.முகம் மட்டுமே கருப்பாக காணப்படும் ஒருவகை குரங்கு காணப்படுகிறது.சற்று தூரம் பயணித்தால் பெரிய அனுமன் சன்னதி யை காணலாம் .

தொடர்ந்த நம் பயணத்தில் இடையே பர்ஸ் மிஸ் பண்ணிவிட்டேன் என குடும்பத்துடன் காசு கேட்கும் ஏமாற்றுப்பேர்வழிகள் உள்ளார்கள் உஷார். ஏழுமலை கொண்ட அடுக்கில் நீண்டு கொண்டே செல்கிற நம் மலைப்பாதை காணற்கறியது. ஒருவழியாக ஓட்டமும் நடையுமாக 6 மணி நேர நடைப்பயணத்திற்குப் பின் திருமலையை அடைந்தோம் .

இரவு 10 மணிக்கு திருமலைக்கு வந்தோம் . எங்கு பார்த்தாலும் மக்கள் மொட்டைத்தலையில் சுற்றுகிறார்கள் . நன்பரின் திருமலை வேண்டுதலின் படி மொட்டையை போட்டுவிட்டு தரிசனத்திற்காக ஒடிக்கொண்டே இருந்தோம்.இரவு 12 மணிக்கு வரிசையில் பட்டியில் அடைக்காமல் விட்டார்கள் .

கியு போய்கொண்டே இருந்தது லட்டு டோக்கன் கொடுத்தார்கள் பின் இராஜ கோபுரம் வணங்கி பக்தர்கள் வெள்ளத்தில் தங்கத்தகடுகளால் வேயப்பட்ட கூறைகள் அழகானது .


சரியாக இரவு ஒருமணிக்கு ஸ்ரீ வெங்கடேசப் பெருமானின் தரிசனம் கிட்டியது. சரியாக 1 நிமிடம் மட்டுமே ஸ்ரீஏழுமலையானை பார்க்க முடிந்தது. பிரகாசமனம் முகம் .தக தக வென உடல் அருமையான தரிசனம் .

வைணவத் திருத்தலங்களில் ஓர் சிறப்பான ஸ்தலமாகும் . தினமும் நம்மைபோல லட்சக்கணக்காண மக்கள் தரிசனம் செய்ய வேண்டி உள்ளதால் நாமும் ஸ்ரீ பெருமாளை வணங்கியதும் அடுத்தவர்களுக்கு வழிவிடுவதே முறை.

நீண்ட விடுமுறைக்கு பின் திருப்பதி திருமலையின் ஏழுமலையானை நிறைவான தரிசனம் செய்து வந்தோம் .

திருமலையில் ஏழுமலையான் குறித்த சில விபரங்கள் :

மூலவர் :ஸ்ரீ வெங்கடேசப்பெருமாள்

வேறுபெயர்கள் : திருவேங்கடம், ஏழுமலையான் ,

சிறப்புகள் : பழங்காலத்தில் கி.மு 500 முதல் 300 வரையிலான காலத்திய வரலாறு தமிழ் நூல்களான சிலப்பதிகாரம் மணிமேகலையில் திருவேங்கடம் என சிறப்பாக திருப்பதி அழைக்கபடுகிறது.

வைணவ திவ்யதேஷங்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக திருப்பதி போற்றப்படுகிறது.

அமைப்பு :
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம்

பன்னாட்டு விமான நிலையம் :சென்னை

பிரசாதமாக காப்புரிமை பெற்ற லட்டு வழங்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையானுக்கு வருடம் முழுவதும் பச்சைக்கற்பூர அபிஷேகம் நடைபெறுகிறது.

முடிவுரை :

திருப்பதி மலையில் காணப்படுகிற சிலாதாரா எனப்படுகிற பாறைகள் 250 கோடி ஆண்டுகள் முந்தையது என ஆய்வில் கூறியுள்ளனர் .
ஒரு பக்கத்தில் அடுக்க முடியாத சூட்சம சக்தியான
ஸ்ரீ வெங்கடேசப்பெருமானது அற்புதங்கள் ஏராளம் .
பகிர்ந்தவனும் பகிர்ந்ததும் சிறிய அளவே .நன்றி

Sunday, June 17, 2012

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில். கல்வடங்கம். சங்ககிரி வட்டம்





கல்வடங்கம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி

SRI ANGALAPARAMESWARI TEMPLE, KALVADANGAM


அமைவிடம் :

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்தில் அமைந்துள்ள பழங்கால திருக்கோவில்களில் ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவில் ஒன்றாகும். எடப்பாடியில் இருந்து 11 கி.மீட்டர் தொலைவில் திருக்கோவிலைக் காணலாம் கொமராபாளைத்தில் இருந்து எடப்பாடி செல்லும் வழியில் திருக்கோவில் அமைந்துள்ளது.

மூலவர் :

ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவில் திருக்கோவில் முகப்பில் பழங்கால தேர் நிற்க ரசித்து முன்னே சென்றால் பிரமாண்டமான ராஜ கோபுரம் தரிசித்து உட்பிரகாரம் சென்று நீண்ட கொடிமரம் அதைதொடர்ந்து காவல் தெய்வங்கள் வணங்கி உள்ளே சென்றால் மூலவர் ஸ்ரீ அங்காள பரமேஷ்வரியை வணங்கலாம் .

அழகிய அம்சங்கள் பொருந்தி பலர் வாழ்வில் ஏற்றம் அளித்த அழகிய அம்மன் . மூலவர் அருகில் பழங்காலத்தில் இருந்து காணப்படும் பாம்பு புற்று உள்ளது. திருக்கோவில் ஷ்தல மரமாக வில்வம் அமைந்துள்ளது. அருகே பிரமாண்ட அரசமரம் அமைந்துள்ளது.

இப்பகுதி மக்களால் விரும்பி வணங்குகின்ற பழங்காலத்திய காண வேண்டிய சக்தியான அம்மனாகும் ,வெள்ளிக்கிழமை, அமாவசை நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது.

முடிவுரை:

காண வேண்டிய தரிசிக்க வேண்டிய ஆலயங்களில்

கல்வடங்கம் ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவிலும் ஒன்றாகும் .

Sunday, June 10, 2012

நட்பே நலமா.!


பிரியமிகு நட்பே.. !!

ஆயிரமாயிரம் சோதனைகள்
கடந்து வந்திருக்கும்
நம் நட்பு...!

உனக்கு கணவனும்
எனக்கு மனைவியுமாய்
வந்து நாம் விரும்பிய
வாழ்வை மலர வைத்திருக்கலாம் ..!

பதினாறு பக்கங்களாக
நட்பை பலமாக்கிய
நம் கடிதங்களின்
நட்பை யாரும்
புரியாமலிருக்கலாம் .,!

காலம் ,
நேரமின்மை
உன் குழந்தைகளால்
நம் நட்பை வளப்படுத்த
முடியாமையால் தவறிப் போயிருக்கலாம் .!

இழந்த போன நட்பே.. !
எனக்காக நீ
அனுப்ப வேண்டியது
மடல் மட்டுமல்ல ..!
நீ மறந்த நம் நட்பின்
பசுமையான
நினைவுகளையும் தான் ..!

Friday, June 8, 2012

சொல்லி விடு


அன்பே ... !
இப்போது எனக்காக
சொல்ல வில்லை
என்றாலும் கூட
பராவாயில்லை...!
உனக்காக கடைசி
இதயம் சாகும்
போதாவது சொல்லி விடு...!
உன் காதலை...!

Friday, June 1, 2012

அன்னதானம்



பல்வகையான தானங்கள் நம் முன்னோர்கள் இயம்பி விட்டுச்சென்றுள்ளார்கள் . அதில் முதன்மையானது அன்னதானம் . உயிர்கள் வாழ அடிப்படையானது உணவு.உயிர் உணவை ஆதாரமாகக்கொண்டது. ஆக உணவு கொடுத்தவன் உயிர் கொடுத்ததற்கு ஒப்பானவன் ஆகிறான் .

ஒருவன் தன் உயர்வுக்கு எப்போதும் அன்னத்தை தாணமாக கொடுத்தல் வேண்டும் . அப்போதே சராசரி மனிதரிடத்தில் இருந்து வேறுபட்டு உயர்ந்த மதிப்புமிக்க மனிதனாகிறான் .

சரி அன்னதானம் செய்பும் முடிவிற்கு வந்தாயிற்று அதற்கு எந்த திருக்கோவிலில் அன்னதானம் இட்டால் உயர்வான பலன் கிட்டுமென பலங்கால நூல்கள் என்ன சொல்கின்றது.

அன்னதானத்தால் உயர்வான பலன் கிட்ட :

பிற திருக்கோவில்களில் லட்சம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் காசியில் ஒருவருக்கு அன்னதானம் செய்த பலனும் ,

புண்ணிய பூமியான காசியில் ஒருகோடி பேருக்கு அன்னதானம் இட்ட பலன் திருவண்ணாமலையில் ஒருவர்க்கு இட்டதற்கு சமமாகும் . திருவண்ணாமலையில் செய்யும் அன்னதானத்திற்கு சமமான பலன் இல்லை. அதிலும் துவாதசி திதியில் அன்னதானம் செய்வது மிக விஷேசமாகும் என சிவமகாபுராணம் உண்மையாகும் .

வேறுவகை அன்னதானங்கள் : எறும்புகளுக்கு அரிசி கோலத்தால் கோலமிட்டு உணவிடுவது. பசுக்களுக்கு அகத்திக்கீரை,புல்,பழம் கொடுப்பதால் பல தோஷங்கள் நிவர்த்தியாகிறதாம் .

முடிவுரை :

அருணாசல மகா சிவபுராணம் உணர்த்துகிற துவாதசி நாளில் முடிந்தவரையில் யாரேனும் ஒருவருக்காவது திருவண்ணாமலையில் அன்னதானம் செய்து சொர்க்கத்தில் இடம் பிடிப்போம். அப்படி முடியாதபோது நமது ஊர்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள் ,கும்பாபிஷேகங்களில் அன்னத்தை தானமாக கொடுப்போம் .

போதும் போதும் என மனிதனை மன நிறைவு செய்வது அன்னதானம் மட்டும் தானே.. ! நன்றி

சித்தர்கள் சொல்லிச்சென்ற தத்துவங்கள்


சித்தர்கள் தங்கள் வைத்திய முறைக்காகவும் யோக நெறிக்காகவும் 96 தத்துவங்களை அறிந்து பயன்படுத்தி வந்துள்ளனர். அவற்றில் சிலவற்றை நாம் அறிந்திருந்தாலும் சில அடிப்படை விஷயங்கள் அறிந்திராமல் உள்ளதால் அறிந்து கொள்ள வேண்டி பதிவிட்டுள்ளேன் .



அறிவு 1 - கருத்துச்செயல்பாடு

வினைகள் 2- நல்வினை,தீவினை

முக்குற்றங்கள் 3- வாதம் பித்தம் ,சிலேத்துமம்

குணம் 3-சாத்வீகம் ,தாமஷம்,ராட்ஷசம்

ஈடணை 3-தாரேட்சணை,புத்ரேட்சணை,விரேட்சணை

மலம் 3-ஆணவம் ,கன்மம் ,மாயை


மண்டலம் 3- சூரியன் ,சந்திரன், அக்னி

கரணம் 4- மனம் ,புத்தி, சித்தம் ,அகங்காரம்

பூதம் 5-மண் ,நீர் ,நெருப்பு,காற்று ஆகாயம்

பொறி 5- மெய்,வாய் ,கண்,மூக்கு செவி

புலன் 5- வாய்,கால் ,கை,குதம் ,குறி

கண்மேந்திரியம்
5- வாக்கு,பாணி,பாதம் ,பாயு ,உபஸ்தம்

ஞானேந்திரியம் 5- உணர்வு,அறிவு,வெபம் ,தாக்கம் ,மெய்

ஆசையம் 5-மலம், விந்து,சிறுநீர்,சத்து,உணவு ஆகிய ஐந்தும் தங்கும் இடங்கள்

கோசம் 5-ஆகாரமையம் ,விஞ்ஞானமையம் ,மனோமயம் ,பிராணமயம் ஆனந்தமயம்

அவஸ்தை 5-சொப்பணம்,சுக்கிரம் ,கமுத்தி,துரியம் ,துரியாநிதம்

ஆதாரங்கள் 6-மூலாதாரம் ,சுவாதிட்டானம்,மணிபூரகம் ,
அனாகதம் ,விசுத்தி,ஆன்ஞேயம்

இராகம் 8- காமம் ,குரோதம் ,லோபம் ,மதம் ,
மோகம் ,ஆச்சர்யம் ,இடும்பை,பொறாமை

நாடி 10-இடகலை,பிங்கலை.கழுமுனை, கண்டம் ,
அட்சி,கந்தாரி,சுத்தி, அலம்புடை,சங்கினி,குரு

வாயு 10- பிராணன் ,அபானன் ,வியானன் ,உதானன் ,சமானன் ,
நாகன் ,கூர்மன்,கிரிகரன் ,தேவதத்தன் ,தனஞ்செயன்

Saturday, May 19, 2012

திருமுருகர் அவதரித்த வைகாசி விசாக நட்சத்திர வழிபாடு


தமிழ்கடவுள் முருகப்பெருமான் இந்துக்களால் விரும்பி வணங்கப்படுகிற கடவுள் . இறைவழிபாட்டில் முக்கிய விஷேச நாட்களை தேர்ந்தெடுத்து அந்த திதி ,நாட்கள் ,நட்சத்திரங்கள் , ஓரைகளை கணக்கிட்டு வணங்கினால் கண்டிப்பாக பலன் நிச்சயம் . அவ்வாறு முருப்பெருமானுக்கு தைப்பூசம் ,மாசிமகம் ,பங்குனி உத்திரம் , ஆடிப்பூரம் , இப்படி வருகின்ற நட்சத்திர நாட்களில் வைகாசி விசாகம் மிக முக்கியமாக முருகர் வழிபாட்டிற்கு உரிய நாளாகும் .

2012 ஆண்டிற்கான வைகாசி விசாக நாள் வரும் 03.06.2012 வைகாசிமாதம் 21 நாள் ஞாயிற்றுக்கிழமை நாளில் வருகிறது. அன்றைய தினம் உங்களுக்கு அருகில் உள்ள ஏதேனும் ஓர் திருமுருகர் ஆலயத்தில் வழிபாடு செய்வதின் மூலம் வளர்ச்சிகள் கைகூடும் .



வீட்டில் வணங்குவது எப்படி :


அன்றைய தினம் வீட்டை சுத்தம் செய்து சாணத்தால் மெழுகி விரதமிருந்து வீட்டில் பூஜையறையில் உள்ள முருகப்பெருமான் படத்தை சுத்தம் செய்து வைத்து

5 முக விளக்கில்
5 வித எண்ணெய் ஊற்றி
5 வித பூக்கள் ஒருசேரகட்டி
5 விதமான பழங்கள் வாங்கி வைத்து நைவேத்தியமாக்கி'
முருகருக்கு பிடித்த கந்தரப்பத்தை செய்து படைத்து

முருகருக்கு பிடித்த மாம்பழத்தையும் படைத்து அருகே முழுமுதற்கடவுளான விநாயகருக்கு கற்பூர தீபாராதனை காட்டி பின் முருகப்பெருமானுக்கு தீபம் காட்டி கந்தர்சஷ்டி கவசம் ,கந்தர் அநுபூதி, கந்த குரு கவசம் பாடி ,கேட்டு ,படித்து வழிபட தமிழ் கடவுள் முருகர் நம் வீட்டில் வந்து இறங்கி நம்மைக்காப்பது கண்கூடு.

பின் ஏதேனும் ஓர் முருகரின் ஆலயம் சென்று வழிபாடு செய்து வசதியிருப்பின் பக்தர்கள் தாகம் தீர்க்க மோர் ,தண்ணீர் ,தானமாக தர நம் குலம் தழைத்து மேலோங்கும் என்பது பெரியோர்கள் வாக்கு .அன்றைய தினம் திருமுருகர் ஆலயத்தில் செல்லும்போது செந்நிற மலர்கள் , நெய் (விளக்கேற்ற) அபிஷேகப்பொருட்களுடன் செல்வது சிறப்பு.'

ஜோதிடத்தில் பூமிகாரகன் எனச்சொல்லப்படுகிற செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான் ஆவார் . எனவே வீடுகட்ட ,இடம் வாங்க ,நிலம் வாங்க செந்நிற பொருட்கள் வாங்குவோர் விற்போர் , ரியல் எஸ்டேட் போன்ற தொழில் செய்பவர்கள் அதிகாரத்திற்குரிய வேலைக்கு செல்ல வேண்டி விரும்புபவர்கள் ஆகியோர் முருகரை வழிபட்டால் மேன்மேலும் வளர்ச்சி கூடும் .

முடிவுரை :

திருமுருகரை முறையாக வழிபாடு செய்ய வழிவகுக்கவே இந்தப்பதிவு. வசதியில்லை என்னால் படைக்க இயலாது என்று எண்ணுபவர்கள் ஏதேனும் ஓர் முருகர் ஆலயம் சென்று வழிபடுங்கள் .ஏனெனில் இறைவன் நீங்கள் திருக்கோவில் வரவேண்டும் என்பதையே விரும்புகிறார் . நன்றி

Wednesday, May 16, 2012

பழமுதிர்சோலையின் அழகிய நூபுரகங்கை தீர்த்தம்



நூபுரகங்கை தீர்த்தம் :


மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அழகர் மலையில் முருகரின் ஆறாம் படை வீடான பழமுதிர்சோலையும் ஒன்று .பழமுதிர்ச்சோலைக்கு வரும் பக்தர்கள் குளிக்க இயற்கையாகவே முருகப்பெருமானால் உருவாக்கப்பெற்ற கங்கையாக நூபுரகங்கை தீர்த்தம் விளங்குகிறது.

வருடம் முழுவதும் மூலிகைகள் கலந்து வரும் நூபுரகங்கை தீர்த்ததில் நீராடுவதால் பல தோஷங்கள் நிவர்த்தியாகி நம் உடல் புனிதத்துவம் பெற்று ஆரோக்கியமாவது உறுதி. திருக்கோவில் ஊழியர்களால் வரிசையாக டிக்கெட் கொடுக்கப்பட்டு வாளியில் விரும்பும் அளவிற்கு ஊற்றுகிறார்கள் . மிகுந்த சுவையுடைய நூபுர கங்கை தீர்த்தத்தை பலர் வீட்டிற்கு எடுத்துச்செல்கிறார்கள் .

அருணகிரி நாதர்பாடல் :

சோலைமலை என அழைக்கப்படும் பழமுதிர்ச்சோலையில் இருந்து சுமார் 500அடி தூரத்தில் இருக்கும் நூபுரகங்கை தீர்த்தத்தை அருணகிரிநாதர் தமது சோலைமலை திருப்புகழில்

" ஆயிர முகங்கன் கொண்ட நூபுர மிரங்கு கங்கை"

என்று வர்ணிக்கிறார் .இதன் பொருள் ஆயிரம் முகங்கள் கொண்ட நூபுரம் இறங்கும் கங்கை எனலாம் . பாட்டுச்சித்தர் ஸ்ரீ முருகப்பெருமானின் பூரண அருட்கடாச்சம் பெற்ற ஸ்ரீ அருணகிரி நாதரே சொன்ன பிறகு அதன் மகத்துவத்தை நாம் உணரவேண்டும் .

மிகவும் பழமை பொருந்திய நூபுரகங்கைக்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. நூபுரகங்கை தீர்த்தத்தில் பல நோய் தீர்க்கும் காரணிகள் மூலிகைகள் உள்ளதாக சொல்கிறார்கள் . இரும்புச்சத்தும் ,கால்சிய சத்தும் ,தாமிரசத்துக்கள் அடங்கியுள்ளதாக பலர் கருத்து . எங்கிருந்து தொடங்குகிறது என்பதே தெரியாமல் நூபுரகங்கையில் குளித்து விட்டு வந்தோம் .எமக்கு உண்மையாகவே புத்துணர்ச்சி கிடைத்ததால்தான் இந்தப்பதிவு.

நாங்கள் நன்பர்களுடன் சென்றபோது பழமுதிர்சோலையில் இறங்கி சற்றுதூரம் சென்றதும் சிறு சிறுகடைகள் சுமார் 100படிகட்டுகள் ஏறிச்சென்றால் இரண்டு விதமான டிக்கட் விற்கிறார்கள் . அதில் ஸ்பெசல் கியூவில் சென்றால் நன்றாக 15 வாளி வரை ஊற்றுகிறார்கள். நன்றாக குளிக்கலாம் . அற்புதமான இடம் .

ஸ்ரீராக்கியம்மன் சன்னதி:

ஸ்ரீ ராக்கியம்மன் சன்னதி நூபுரகங்கை தீர்த்தம் அருகில் உள்ள காக்கும் கடவுளாகும் .அம்பாளின் திருவுருவம் போல இருக்கும் சன்னதியில் தரிசித்து விட்டு சற்றே பள்ளத்தில் உள்ள நூபுரகங்கை தீர்த்தத்தை எட்டிப்பார்த்துவிட்டு அருகேயுள்ள பழமுதிர்சோலை ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணியரை வணங்கி விட்டு வந்தோம் .

முடிவுரை: பழமுதிர்சோலை பற்றிய முந்திய பதிவில் எப்படி பழமுதிர்சொலை செல்வது என அறிந்து கொள்ளவும் .அழகர்மலையும் ,பழமுதிர்சோலையும் நூபுரகங்கை தீர்த்தமும் மதுரை மக்களுக்கு கிடைத்த பொக்கிசங்கள் நன்றி.

ஸ்ரீமுருகரின் ஆறாம் படைவீடு பழமுதிர்ச்சோலை தரிசனம்



பழமுதிர்ச்சோலையில் அருள்பாலிக்கும்

ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில்



பழமுதிர்சோலையின் முருகரை வணங்க துதி :

"எழுமுதி ரைப்புனத்து இறைவி முன்புதன்
கிழமுதிர் இளநலங் கிடைப்ப முன்னவன்
மழமுதிர களிறென வருதல் வேண்டிய
பழமுதிர் சோலையம் பகவற் போற்றுவாம் ."

அமைவிடம் :

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அழகர் கோயில் நடுமலையில் பழமுதிர் சோலை அமைந்துள்ளது. மதுரையின் சிறப்புகளில் ஒன்றாக விளங்கும் பழமுதிர்சோலை அறுபடைவீடுகளில் ஆறாவது படை வீடாகும் .

முதல் படைவீடான திருப்பரங்குன்றம் மதுரையில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது இது முருகரின் முதல் படை வீடாகும் .முருகப்பெருமானின் இருபடை வீடுகளை தன்னகத்தே கொண்டுள்ள மதுரை ஒர் அற்புத ஆன்மீக நகராகும் .

மூலவர் :

ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர்

ஸ்தல விருட்சம் : நாவல் மரம்

ஔவைக்கு ஸ்ரீ முருகர் காட்சி தந்து நாவற்பழம் கொடுத்த இடம் . இது ஐப்பசிமாதத்தில் மட்டுமே பழம் பழுக்கும் .மற்ற நாவல் மரங்கள் ஆடி ஆவணிமாதத்தில் மட்டும் பழம் பழுக்கும்

தீர்த்தம் :

நூபுர கங்கை தீர்த்தம்

திருக்கோவில் சுற்றியுள்ள சன்னதிகள் :


முழுமுதற் கடவுளாம் அருள்மிகு வித்தக விநாயகர் தரிசனம் செய்து பின் மூலவரான வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர் தரிசித்து ஸ்ரீ ஆதிவேல் உற்சவர் வணங்கி பின் ஸ்ரீ நாவல் மரத்தடி விநாயகரை பார்த்து வரலாம் .

பழமுதிர் சோலை செல்லும் வழிகள் பஸ் வசதிகள் :

மதுரையில் இருந்து அழகர் கோவில் 20 கி.மீட்டர் தொலைவில் கடந்து அழகர்மலை அடிவாரத்தில் இருந்து திருக்கோவில் நிர்வாகத்தால் இயக்கப்படும் சிற்றுந்தின் மூலம் 20நிமிட பயணத்தில் பழமுதிர்ச்சோலையை அடையலாம் .

மதுரையில் இருந்து அழகர்மலை செல்ல காலை 05.00மணியில் இருந்து இரவு 10.00 மணிவரைகள் பஸ்கள் உண்டு. அழகர் மலையில் இருந்து பழமுதிர்சோலை செல்ல திருக்கோவில் நிர்வாகத்தின் பஸ் காலை 06 .00மணி முதல் மாலை05.00மணி வரை பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பூஜை முறைகள் :

மூன்றுகாலப்பூஜைகள் பழமுதிர்ச்சோலையில் நடைபெறுகிறது.
காலை அபிஷேகபூஜை 09.00 மணிக்கும்
உச்சிகால பூஜை 12.00மணிக்கும்
மாலை அபிஷேகபூஜை 05.00மணிக்கும் நடைபெறுகிறது.
திருக்கோவில் காலை 0600மணிமுதல் மாலை
0600மணி வரை திறந்தே இருக்கும் .

பழமுதிர்ச்சோலையின் சிறப்புகள் :

அழகர்மலையின் அடிவாரத்தில் காக்கும் கடவுள் ஸ்ரீ திருமாலின் வைணவத் திருக்கோவில் அமைந்துள்ளது. மலையின் மேலே பழமுதிர்சோலையில் ஸ்ரீ முருகர் (சைவம் )குடிகொண்டுள்ளார் .

சைவ,வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஸ்தலம் . மாமனாகிய திருமாலும் மருமகனாகிய ஸ்ரீமுருகரும் இணைந்த ஸ்தலம் . பழமுதிர்சோலை வருபவர்கள் அழகர் மலையில் திருமாலை வணங்கி விட்டு பின்னர் பழமுதிர்ச்சோலை வருவதே சிறப்பாகும் .

ஆறாம் படை வீடு ,மாட்டுக்கார சிறுவனாக வந்து அவ்வையார்க்கு நாவல் பழம் கொடுத்து காட்சி தந்த ஸ்தலம் . பாடல் பெற்ற ஸ்தலம் .அழகிய கண்ணனும் அழகன் முருகனும் ஆட்சி செய்வதாலேயே இது அழகர் மலையானது. கந்தபுராணம் இயற்றிய கச்சியப்பர் வியந்து பாடிய ஸ்தலம் .

அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற ஸ்தலம் , திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் போற்றிப்புகழ்ந்த அழகு மிகு மலையில் அமைந்துள்ள அற்புத ஸ்தலமே பழமுதிர்சோலையாகும் .

ஸ்தலத்தின் வேறுபெயர்கள் :

சோலைமலை, பழமுதிர்ச்சோலை, குலகிரி,குலமலை, விருஷபகிரி,

முடிவுரை :

பழமுதிர் சோலை வருகின்றவர்கள் நூபுரகங்கை தீர்த்தத்தில் குளித்து மாற்றிக்கொள்ள ஏதுவாக மாற்றுத்துணிகளுடன் வந்தால் நூபுரகங்கையில் குளித்து விட்டு ஸ்ரீ முருகப்பெருமானை 500மீட்டர் நடந்து வந்து ஸ்ரீ பழமுதிர்ச்சோலையில் முருகப்பெருமானை வணங்கலாம் .

நூபுரு கங்கை தீர்த்தம் பற்றி நிறைய தகவல்கள் அடுத்த பதிவில்

வாழ்நாளில் ஒரு முறையேனும் ஆறாம்படை வீடான பழமுதிர்ச்சோலயில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முருகரை வணங்கி செல்லுங்கள் .

கருத்துரையிடுங்கள் நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...