Tuesday, March 5, 2013

மங்கலங்கள் உண்டாக்கும் மகாசிவராத்திரி வழிபாடு 10.3.13

மாசிமாதம் என்றாலே சிவராத்திரி சைவ பெருமக்களால் விரும்பி
வணங்கப்படுகின்ற வழிபாடாகும் . சற்றே பின் நோக்கி புராணத்திற்கு
செல்வோம் .

 பார்வதி ஒரு முறை சிவனின் கண்களை விளையாட்டாக தம்
திருக்கரங்களால் மறைக்க உலகமே இருண்டு விட சிவன் தன் நெற்றிக் கண்ணை திறந்து உலகத்திற்கே ஒளி கொடுத்த இனிய நாளே மகா சிவராத்திரியாகும் .

ஒவ்வொரு மாதத்திலும் சிவராத்திரிகள் வந்தாலும் மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.

 அன்றைய தினம் சிவனை மனதில் வைத்து தியானித்தால் நம் துன்பங்கள் தூர ஓடிவிடுமென்பது உறுதி. அந்த வகையில் வருகிற 10.03.2013 ஆம் தேதி வருகிற ஞாயிற்றுக்கிழமை நாளில் வருகிறது.

 இந்த இனிய நாளில்  விரதமிருந்து அன்றைய இரவில் கண்விழித்து சிவாலயங்களில் இறைவனுக்காக நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்து கொள்வோர்க்கு தரித்திரம் நீங்கி செல்வவளம் மங்கலம் உண்டாகும்.

 மாசி மாதத்தில் வருகிற மகா சிவராத்திரியில் சிவனை வணங்குவது வருடம் முழுவதும் சிவ வழிபாடு செய்வதற்கு நிகரானதாக கருதப்படுகிறது.

 சிவராத்திரி விரதமென்பது மாலை 6.00மணிமுதல் அடுத்த நாள்
காலை 6.00மணி வரை சிவாலயத்தில் நடைபெறும் 4 கால பூஜையில் கலந்து கொண்டு "ஓம்நமச்சிவாய" எனும் பஞ்சாட்சர மந்திரத்தை தியானித்து விரதமிருப்பதே ஆகும் .,,,

 சிவராத்திரியில் மிக விஷேசமான நேரமாக இரவு 11.30 மணி முதல்
நள்ளிரவு 1.00 மணி வரை லிங்கோத்பவர் காலமாகும் . நம்மிடம் பணம்
இல்லையே அன்னதானம் செய்ய முடியவில்லையே என்றெல்லாம் கவலைப்படாதீர்கள் .


10 ரூபாயில் வாங்கி அன்றைய தினம் அளிக்கிற வில்வத்திலும் ,1 லிட்டர்
பசும்பால் அபிஷேகத்திலேயே சிவபெருமான் மிகுந்த திருப்தி கொள்வார் .அவர்  நம்மிடம் எதிர்பார்ப்பது பணத்தை அல்ல.

 ஆழ்ந்த பக்தியை மட்டுமே .

முடிவுரை :

 இன்றைய நாட்களில் மக்கள் பக்தியுடன் மட்டுமே கலிகாலத்தை
கடத்தியாக வேண்டுமென்பது வாரியார் பெருமானின் வாக்கு . ஆன்மீக வழிபாடுகள் எல்லோர்க்கும் வர எங்கும் அமைதி நீடிக்கும் .

 ஆதலால் ஆழ்ந்த சிவபக்தியை
மேற்கொள்வோம் . மறவாது 10.3.13 ஏதேனும் ஓர் சிவாலயத்தில்
சிவபெருமானுடன் கலந்திருப்போம் .
'' ஓம் நமச்சிவாய"

 பதிவின் நீளம் கருதி முடிக்கிறேன் நன்றி.

Monday, March 4, 2013

பர்வதமலை ஸ்ரீ மல்கார்ஜீனேஷ்வரர் தரிசனம் பாகம் 3

ஓர் வழியாக பர்வத மலையுச்சியை அடைந்தோம் . முகப்பில் ஸ்ரீ மகான் மௌனயோகி விட்டோபானந்தா சிவகுகை அன்னதானமடம் அமைந்துள்ளது. திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக திருக்கோவில் அருகே இடிதாங்கி அமைக்கப்பட்டுள்ளது.

 மூன்று சன்னதிகள் கொண்ட திருக்கோவிலின் முதல் சன்னதியில் ஸ்ரீ விநாயகர் ,ஸ்ரீவள்ளி தெய்வானை உடனமர் முருகப்பெருமான்  உள்ளனர் . இரண்டாவது சன்னதியில் ஸ்ரீமல்லிகார்ஜீனர் சிறிய லிங்க வடிவில் அழகே காட்சி அளிக்கிறார் .

பர்வதமலையின் சிறப்பே இங்கு வரும் பக்தர்கள் தாங்களே ஸ்ரீ மல்லிகார்ஜீனருக்கு அபிஷேகம் செய்யலாம் .பூஜை செய்யலாம்
என்பதால் பக்தர்கள் பெரும் மகிழ்வுடன் இங்கு வந்து இறைவனை தொட்டு
வணங்குகிறார்கள் .

கயிலாயத்தில் இருந்து சிவன் திருவண்ணாமலையில் இறங்க
முதல் அடியை பர்வத மலையில் வைக்க பர்வதமலை சிவனைத்தாங்காது கீழே இறங்க அடித்த அடியை திருவண்ணாமலையில் வைத்ததாக புராணம் இயம்புகிறது.

அதனால் இப்பதி தென் கயிலாயம் என போற்றப்படுகிறது. மூன்றாவதாக பிரம்மராம்பிகைஅம்பாள் சன்னதியாகும் . அம்பிகை அழகே உருக்கொண்டு காட்சி அளிக்கிறார் . இங்கு பூஜை செய்ய யாரும் இல்லை .

ஆதலால் நாமே பூஜிக்கலாம் . பர்வதமலை
செல்பவர்கள் செல்பவர்கள் கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள் : 2 வேளை உணவு பாக்கெட் ,போதிய அளவு தண்ணீர் .குளுக்கோஸ் , இரவு தங்க வேண்டி இருப்பின்போர்வை, பூஜைக்கு தேவையான பொருட்கள் போதுமானதாகும் .

 இங்கு கொடியவிலங்குகள் ஏதும் இல்லை .தூரத்தில் இருந்து பார்த்தால் நந்தி
படுத்திருப்பதை போலவும் அதன் கொம்புகளுக்கு இடையில் திருக்கோவில்
அமைந்திருப்பதைப் போல பர்வதமலை அமைந்துள்ளது.

 காஞ்சி மகான் ஒருமுறை பர்வத மலை தரிசிக்கவந்த மலையே சிவனாக இருப்பதால் பர்வதமலை ஏறாமல் மலையை
சுற்றி வந்து வணங்கியதாக வரலாறு.பூண்டிமகான் தரிசித்த இடம் பர்வதமலை


சித்தர்கள் :

பல சித்தர்கள் வாழ்ந்து வரும் அற்புத சிவதலமாக பர்வதமலை
விளங்குகிறது. மானிட உருவிலும் பல பக்தர்களுக்கு ஆசிகள்
வழங்கியுள்ளார்கள் .

 நமது நன்பர் தேன் பூச்சிகள் வடிவிலும் , பருந்து
வடிவிலும் , ஏதேனும் சிறிய மிருகங்கள் வடிவிலும் , பைரவர் வடிவிலும்
காட்சி அளிப்பதாக கூற ஆச்சர்யப்பட்டு மேலே செல்ல வண்டுகளின் ரீங்காரம் நம்மை தொடர்ந்து வருகிறது.

மலை உச்சியில் பைரவர் அம்சமான நாய் மற்றும்
பருந்து ரீங்காரத்தையும் தரிசித்தோம் . மதியம் 12 மணிக்கு உச்சிகால
பூஜைக்கு வில்வத்தால் அர்சித்து ஸ்ரீ மல்லிகார்ஜீனரை தரிசித்து வரும்
வழியெல்லாம் சித்தர்களை மேற்கண்ட உருவில் கண்ட திருப்தியுடன் கீழே
இறங்கினாம் .

எளிதான மலை காலை 9 மணிக்கு துவங்கி 12 மணிக்கு தரிசித்து
மாலை 4மணி அளவில் பர்வதமலை கடலாடி அடிவாரத்தை அடைந்தோம் . யாரோ வைத்த காட்டுத்தீ மெளன குரு ஆசிரமம் எதிரே உள்ள மலையின் துவக்கத்தில் எரிந்து கொண்டிருக்க பயணம் சற்றே வித்தியாசமாக முடிந்தது.

முடிவுரை:

சிவனையும் சித்தர்கள் பற்றிய தேடல் இருப்பவர்கள் பெளர்ணமி ,அமாவசை, பிரதோஷ நாட்களில் ஸ்ரீ மல்கார்ஜீனரை வந்து வணங்குங்கள் . தேடலுடன் செல்பவர்கள்  கூட்டமில்லாத நாட்களில் பகலில் செல்வது நலம் .

பிடிக்கொரு லிங்கமாக கருதப்படும் பர்வதமலை பல சூட்சமங்கள் கொண்டது. ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள் . திருவல்லிக்கேணி சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் பர்வதமலையில் திருப்பணிகள் நடைபெறுகிறது. வாழ்த்துக்கள்


அடிவாரத்தில் இருந்து 1 செங்கல் சுமந்து கோவில் திருப்பணிக்கு உதவலாம்
.திருக்கோவில் கமிட்டியிடம் நம்மால் இயன்ற பொருளுதவி செய்து இறையருள் செய்யுங்கள். உடலில் தெம்பு உள்ளபோதே பர்வதமலை செல்லுங்கள் .

திருவண்ணாமலை பேளூர் தென்மாதிமங்கலம் வழியாக சென்று பர்வதமலை ஸ்ரீபிரம்மராம்பிகை உடனமர் மல்லிகார்ஜீர்னர் வந்து தரிசித்து நலமும் வளமும் பெறுங்கள்.நன்றி

Sunday, March 3, 2013

பர்வதமலை தரிசனம் பாகம் 2

ஸ்ரீ பிரம்மராம்பிகை உடனமர் மல்லிகார்ஜீனர் திருக்கோவில் பருவதமலை
அமைப்பை முந்தைய பதிவில் பார்த்தோம் . சென்ற வாரம் பர்வதமலை செல்லாம் என நன்பர்களுடன் திருவண்ணாமலை சென்று ஸ்ரீ அருணாசலேஷ்வரரை தரிசனம் செய்ய,,

 சனிபிரதோஷமான 23.2.13 மாலையில் 5.30 மணிக்கு உள்ளே சென்று நந்தீசர் அபிஷேகம் பார்த்து வழிபட்டு அருணாசலேஷ்வரரை சிறப்பு தரிசனம் செய்ய சென்று சிவநாமம் சொல்லிய படியே 2 வருடம் கழித்து சிவபெருமானை தரிசிக்க ஆசைப்பட்டு மூலஷ்தானத்தை அடைந்து நிற்க,,

 எதிரே யாரோ முக்கியஸ்தர்  வர நான் என் நண்பர் குழுவுடன் நேராக அருணாசலீஷ்வரர் முன்பு சில நிமிடங்கள் நிற்க வைத்து தரிசனம் காட்டினார் .நீண்ட நாட்களுக்கு பின் பெரும் மனநிறைவுடன்விடுதி வந்து சேர்ந்தோம்.


இரவு பர்வதமலை பற்றி அறியாத மூவரும் எப்படி
செல்வதென யோசித்துக்கொண்டிருக்க அங்கே நன்பர் வாங்கி வந்த ஆன்மீக இதழில்  பர்வதமலை பற்றி கட்டுரையை படிக்க அடுத்த நாள் காலை திருவண்ணாமலையில்  இருந்து பர்வதமலை பயணத்தை கிளப்பினோம்

 சரியான வழிகாட்டுதல் அறியாததால் செங்கம் பஸ் ஏறி ஓர் வழியாக கடலாடி வந்து சேர்ந்தோம். இந்த வழியாக நடந்து பர்வதமலை அடிவாரத்தை அடைந்தோம் . இங்கே மெளன குரு  ஆசிரமம் அமைந்துள்ளது.

இங்கே குளிக்க சிறிய அளவில் குளியறை ஒன்று
உண்டு.நாங்கள் சென்றபோது மலை ஏற உதவியாக கஞ்சி ஊற்றினார்கள். அடுத்து பயணத்தை தொடர்ந்தோம் . மலையின் தொடக்கத்தில் இந்த வழியாக சென்றால் 7  கி.மீ பயணித்தால் உச்சியில் மல்லிகார்ஜீனரை தரிசிக்கலாம் என ஒரு பெண்மணி  சொன்னார் .

 பர்வதமலையில் புற்றுமண் அதிகமாக உள்ளது. கடலாடி வழியாக   சென்றால் பல பாம்பு புற்றுகளை காணலாம் . தூரத்தில் மலையுச்சியை   பார்த்தவாறே சென்றோம் . ஆங்காங்கே மஞ்சள் நிறத்தில்
பூத்துக்குழுங்குகின்ற மலர்கள் நீலப்புல்கள் என காட்சி அளித்தன.

இங்கு
விஷேச மூலிகைகள் இருக்கிறதாக நன்பர் சொன்னார் . ஆங்காங்கே சிறிய கடைகள்பணியாரக்கடைகள் மட்டுமே உண்டு.சற்று தூரம் நடந்தால் தென் மாதிமங்கலம்  இணையும் வழி வருகிறது. இரு வழியில் செல்பவர்களும் இங்கே இணைந்து சென்றால்  கடைசிமலையை அடைந்துவிடலாம் .


 செங்குத்தான பர்வதமலையின் கடைசிமலையில்
கடப்பாறைப்படி இதில் கடப்பாறையை பாறையில் துளையிட்டு இறுக்கி

இருக்கிறார்கள் .

அதைத் தொடர்ந்து தண்டவாளப்படி ஏணிப்படி ஆகாயப்படி என  திரிலிங்கான மலைப்பாதையில் கீழே பார்த்தால் தலை சுற்றும் சற்றே
சிரமமானதே என்றாலும் மலைகள் ஏறி பழக்கமுள்ளதால் எளிதாகவே இருந்தது.அடிவாரத்திலிருந்து 3மணி நேரத்தில் திருக்கோவிலை அடைந்தோம் .

வயதானவர்கள்
பெண்கள் குழந்தைகளுடன் 4மணி நேரத்தில் கடக்கலாம் . பெளர்ணமி இரவுகளில் கூட்டமான நாட்களில் 5 மணி நேரம் கூட ஆகுமாம் . தென்கயிலாயம் ,திரிசூலகிரி நவிரமலை என பர்வதமலைக்கு வேறுபெயர்களுண்டு.

வழியில் கல்லால்ஆன குன்று, பாறை இடுக்கில் கிணறு, அண்ணாமலையார் பாதம் என பார்க்கவேண்டிய இடங்கள் நிறைய உள்ளன.

அடுத்த பாகம் 3 ஆம் பதிவில் பர்வதமலை தரிசனம் தொடரும்