Sunday, August 19, 2012

ஸ்ரீ அபிராம வள்ளி உடனமர் ஸ்ரீ அமிர்த கடேஷ்வரர் திருக்கோவில் .திருக்கடவூர் .


ஸ்ரீ அபிராமியம்பிகை உடனமர் ஸ்ரீ அமிர்த கடேஸ்வரர்
திருக்கடவூர்
விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன ,
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப் ,
பழிக்கே சுழன்றும்வெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக் ,
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடுஎன்ன கூட்டினியே.

அபிராமி அந்தாதி (பாடல்79) அபிராமி பட்டர்

திருக்கோவில் மூலவர் :

ஸ்ரீ அமிர்தகடேஷ்வரர், என்றும்
அமுதகடோற்பவர் ,அமுதகடேசர் ,கடவூர் வீரட்டேஸ்வரர் என பல திருநாமங்கள் உண்டு.


அம்பாள் :
ஸ்ரீ அபிராமி அம்பிகை ஸ்தலம் சரஸ்வதி தேவி அபிராமியை
பூஜித்து அருள் பெற்ற ஸ்தலம் ஆகும்

அமைவிடம் :
நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் திருக்கடவூர் அமைந்துள்ளது. சீர்காழி,பொறையாறு ,மயிலாடுதுறைக்கு பஸ் வசதி உண்டு. வில்வ வனம், பிஞ்சில வனம் என திருக்கடவூர் வேறு பெயர்களும் உண்டு.

ஞான உபதேசம் பெற விரும்பிய பிரம்மன் சிவபெருமானை வணங்கி நின்ற போது சிவன் ஓர் வில்வ விதையினை பிரம்மனிடம் கொடுத்து இது இட்ட இடத்தில் எங்கு முளைக்கிறதோ அங்கு தங்கி என்னை வழிபடுங்கள் எனக்கட்டளையிட திருக்கடவூரில் வில்வ விதையை இட்ட போதே அது குறித்தகாலத்தில் முளைக்க மனம் முருகி பிரம்மன் தங்கி வழிபட்டு ஞான உபதேசம் பெற்ற இடமாகும் .

முதலில் திருக்கடவூர் ஸ்தலத்திற்கு வில்வவனம் என்றும் ஸ்ரீ வில்வனேஷ்வரர் என்றும் அழைத்ததாக புராணங்கள் இயம்புகின்றன.

கடவூர் பெயர்காரணம் :

தேவர்களும் அசுரகர் அமுதத்திற்காக கடைலைக்கடையும் போது உண்டான அமுதத்தை கடத்தில் அடைத்து நீராடச்சென்று திரும்பிய போது அது சுயம்பு மூர்த்தியாக சிவலிங்கமாக இருக்க கண்டனர் . கடத்தில் இருந்த அமிர்தமே லிங்கமானதால் அமிர்தகடேசர் அமுதலிங்கம் என அழைக்கப்பட்டதாகவும் , கடத்தில் உண்டானதால் கடவூர் எனவும் ஆதியில் அழைக்கப்பட்டும் பின் திருக்கடவூர் ,திருகடையூர் என பெயர் மாறியதாம் .

பிஞ்சிலம் என்றால் சாதி மல்லிக்கொடியாகும் .இதுவே இங்கு ஸ்தல விருட்சமாகும் .ஆண்டு முழுவதும் பூக்கும் சாதிமல்லியை சுவாமிக்கு அலங்காரம் செய்ய மட்டுமே பயன்படுகிறது.

திருக்கோவிலில் கள்ளவாரணப்பிள்ளையார் வணங்குதல் சிறப்பு . தேவர்கள் அமிதம் சிவலிங்கமாய் சுயம்பு மூர்த்தியாய் நிற்க கண்டு அதிசயித்து நிற்க ஸ்ரீ கள்ளவாரணப்பிள்ளையாரை வணங்கி அமுதம் பெற்று தேவர்கள் அருந்தியது புராண வரலாறு

. ஸ்தலத்தின் சிறப்புகள் :

அப்பர் ,சுந்தரர் ,திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம் .
குங்கிலியக்கலயர் ,காரிநாயனார் போன்ற அடியார்கள் தொண்டாற்றி முக்தி பெற்ற ஸ்தலம். பட்டரால் அபிராமி அந்தாதியை பாடிய போது அபிராமி அம்பாள் அமாவசையை பெளர்ணமியாக்கி அற்புதம் நிகழ்த்திய ஸ்தலம் .

பாற்கடலை கடைந்து எடுத்த அமுதக்குடமே அமிர்தகடேசராக சுயம்பு மூர்த்தியாக விளங்கும் ஷ்தலமாகும் . மார்கண்டேயர் அமிர்தலிங்கத்தினை வணங்கி காலனை வென்ற ஸ்தலமாகும் .இப்படி பல அற்புதங்களை பெருமானும் அம்பாளும் நிகழ்திய ஸ்தலமாகும் .

தீர்த்தங்கள் :

அமிர்தபுஷ்கரணி ,காலதீர்த்தம் , மார்க்கண்டேய தீர்த்தம்

ஸ்தலமரம் : வில்வமரம் ,சாதிமல்லிக்கொடி எனப்படும் பிஞ்சிலம் பூஜைகள் :ஆறுகாலப்பூஜைகள் நடைபெறுகிறது.

திருவிழா:

சித்திரைமாத பிரமோற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. கி.பி 600 ன் காலத்தில் இருந்து கல்வெட்டுக்கள் காணப்பெறுகிறது. கொழும்பு அரசனால் திருக்கடவூர் கோவில் கட்டப்பட்டதாக வரலாறாகும் .

முடிவுரை :
அண்மையில் கும்பகோணம் சென்று நாங்கள் தரிசித்த ஸ்ரீ அமிர்தகடேஷ்வரும் அன்னை அபிராமியும் வியக்க வைத்தனர் . கூட்டம் நிரம்பி வழிகின்றது. பல சிறப்புகளை உடைய திருக்கோவில் குடும்பத்துடன் வந்து தரிசியுங்கள் .

வரலாற்றுச்சிறப்பு மிக்க ஸ்ரீ அமிர்த கடேஸ்வரரையும்,அன்னை அபிராமியையும் தரிசியுங்கள். நல்லன எல்லாம் அருளும் அன்னை அவள் . தீமைகள் நெருங்காதிருக்க அவ்வப்போது மனதால் நினையுங்கள் .

"முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே " என அபிராமி பட்டர் மொழிந்த கருத்துக்கள் புலப்படும். கட்டயாகமாக தரிசிக்க வேண்டிய அழகான ஸ்தலம் . நன்றி