Saturday, July 7, 2012

திருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசனம்
திருப்பங்கள் தரும் திருப்பதி நடைப்பயணம்


கடந்த ஒருமாதங்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆசைப்பட்டு திருப்பதி கிளம்பினோம் . 12 வருடங்கள் கழித்து திருப்பதியை பார்க்க விரும்பி எங்கள் கிராமத்தில் இருந்து ஈரோடு ரயில் நிலையம் அடைந்து காட்பாடி ரயில் நிலையம் அடைந்து அங்கிருந்து திருப்பதி ரயில் நிலையம் அடைந்தோம் .


நண்பர் கூறியபடி நடைபாதையாக சென்றால் ஏழுமலையானை எளிதாக தரிசனம் செய்யலாம் என கூற ஓர் ஆட்டோவில் மலைப்பாதை அடிவாரத்தை அடைந்தோம் .

அங்கிருந்து மலையைப்பார்த்தால் மிகப்பெரிய பாறை செந்நிறத்தில் வித்தியாசமாக தெரிகிறது. எளிதான நடைப்பயணம் தான் என ஆரம்பத்தில் சொன்னார்கள் அடிவாரத்திலுள்ள படிகளில் கற்பூரம் கொளுத்தி அங்குள்ள சன்னதியில் வழிபட்டு முதற்படிக்கட்டில் காலடி வைத்தால் வருணபகவான் மழையை பொழிய ஆக அருமையான குளிர்ச்சி திருப்பதி ஏழுமலையான் நாம் வருவதை அறிந்திருப்பார் போலும் சந்தோஷமாக இருந்தது.

படிக்கட்டுகளில் சந்தனம் ,குங்குமம்,மஞ்சள் என பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க படிக்கட்டில் தடவி கற்பூரம் கொளுத்தி "கோவிந்தா "என பக்தி மயமானது படிக்கட்டுகள் . மழை நீரில் முன்பே படிக்கட்டில் இடப்பட்ட சந்தனமும் ,குங்குமம் ,மஞ்சள் ஆகியவை நம் கால்களை சிவப்பு கலராக்கியது.

தொடர்ந்து பயணத்தை ஆரம்பிக்க ஆங்காங்கே பக்தர்கள் தங்கள் உடற்கடன்களை முடித்துக்கொள்ள பளிச் கழிவறைகள் , இருக்கின்றன. படிக்கட்டை அவ்வப்போது சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்கள் என எங்கும் சுத்தம்.

மாலை 4.00 மணிக்கு துவங்கிய நம் பயணம் நடந்து கொண்டே இருந்தோம் . 6. 00 மணியளவில் திருப்பதி தேவஸ்தானத்தால் நமது போட்டோ எடுக்கப்பட்டு தரிசன நேரம் இரவு 12 மணி எனக்குறித்து நடைபாதைபக்தர் எனக்குறித்து அனுப்புகிறார்கள் . ஆங்காங்கே பாதுகாப்பிற்கு ஆந்திர காவலர்கள் இருக்கிறார்கள் .

அங்கிருந்து பல படிக்கட்டுகள் ஏறி ஒரு மணி நேரம் பயணித்தால் நம் போட்டோ அடையாள அட்டையில் ஒரு சீல் வைத்து தருகிறார்கள் .செல்லும் வழிகளில் ஆங்காங்கே ஆழ்வார்கள் சன்னதி சிலைகள் நிறுவி அழகுபடித்தி இருக்கிறார்கள்.ஆங்காங்கே கடைகள் படிக்கட்டுகளில் இருக்கின்றன.

இடையில் ஓர் பெரிய பூங்காவில் நிறைய மான்கள் இயற்கையாக வளர்க்கப்படுகிறது.முகம் மட்டுமே கருப்பாக காணப்படும் ஒருவகை குரங்கு காணப்படுகிறது.சற்று தூரம் பயணித்தால் பெரிய அனுமன் சன்னதி யை காணலாம் .

தொடர்ந்த நம் பயணத்தில் இடையே பர்ஸ் மிஸ் பண்ணிவிட்டேன் என குடும்பத்துடன் காசு கேட்கும் ஏமாற்றுப்பேர்வழிகள் உள்ளார்கள் உஷார். ஏழுமலை கொண்ட அடுக்கில் நீண்டு கொண்டே செல்கிற நம் மலைப்பாதை காணற்கறியது. ஒருவழியாக ஓட்டமும் நடையுமாக 6 மணி நேர நடைப்பயணத்திற்குப் பின் திருமலையை அடைந்தோம் .

இரவு 10 மணிக்கு திருமலைக்கு வந்தோம் . எங்கு பார்த்தாலும் மக்கள் மொட்டைத்தலையில் சுற்றுகிறார்கள் . நன்பரின் திருமலை வேண்டுதலின் படி மொட்டையை போட்டுவிட்டு தரிசனத்திற்காக ஒடிக்கொண்டே இருந்தோம்.இரவு 12 மணிக்கு வரிசையில் பட்டியில் அடைக்காமல் விட்டார்கள் .

கியு போய்கொண்டே இருந்தது லட்டு டோக்கன் கொடுத்தார்கள் பின் இராஜ கோபுரம் வணங்கி பக்தர்கள் வெள்ளத்தில் தங்கத்தகடுகளால் வேயப்பட்ட கூறைகள் அழகானது .


சரியாக இரவு ஒருமணிக்கு ஸ்ரீ வெங்கடேசப் பெருமானின் தரிசனம் கிட்டியது. சரியாக 1 நிமிடம் மட்டுமே ஸ்ரீஏழுமலையானை பார்க்க முடிந்தது. பிரகாசமனம் முகம் .தக தக வென உடல் அருமையான தரிசனம் .

வைணவத் திருத்தலங்களில் ஓர் சிறப்பான ஸ்தலமாகும் . தினமும் நம்மைபோல லட்சக்கணக்காண மக்கள் தரிசனம் செய்ய வேண்டி உள்ளதால் நாமும் ஸ்ரீ பெருமாளை வணங்கியதும் அடுத்தவர்களுக்கு வழிவிடுவதே முறை.

நீண்ட விடுமுறைக்கு பின் திருப்பதி திருமலையின் ஏழுமலையானை நிறைவான தரிசனம் செய்து வந்தோம் .

திருமலையில் ஏழுமலையான் குறித்த சில விபரங்கள் :

மூலவர் :ஸ்ரீ வெங்கடேசப்பெருமாள்

வேறுபெயர்கள் : திருவேங்கடம், ஏழுமலையான் ,

சிறப்புகள் : பழங்காலத்தில் கி.மு 500 முதல் 300 வரையிலான காலத்திய வரலாறு தமிழ் நூல்களான சிலப்பதிகாரம் மணிமேகலையில் திருவேங்கடம் என சிறப்பாக திருப்பதி அழைக்கபடுகிறது.

வைணவ திவ்யதேஷங்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக திருப்பதி போற்றப்படுகிறது.

அமைப்பு :
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம்

பன்னாட்டு விமான நிலையம் :சென்னை

பிரசாதமாக காப்புரிமை பெற்ற லட்டு வழங்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையானுக்கு வருடம் முழுவதும் பச்சைக்கற்பூர அபிஷேகம் நடைபெறுகிறது.

முடிவுரை :

திருப்பதி மலையில் காணப்படுகிற சிலாதாரா எனப்படுகிற பாறைகள் 250 கோடி ஆண்டுகள் முந்தையது என ஆய்வில் கூறியுள்ளனர் .
ஒரு பக்கத்தில் அடுக்க முடியாத சூட்சம சக்தியான
ஸ்ரீ வெங்கடேசப்பெருமானது அற்புதங்கள் ஏராளம் .
பகிர்ந்தவனும் பகிர்ந்ததும் சிறிய அளவே .நன்றி