Sunday, April 29, 2012

குருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா 18.4.12கடந்த 18.4.2012 அன்று நமது குருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா அழகாக தொடங்கியது. 26.2.1913ல் துவங்கிய துவக்கப்பள்ளி 100வது ஆண்டை துவங்கியது மகிழ்வான ஒன்றாகும் .

இந்த விழாவினை சிறப்பிக்க கல்வித்துறை அலுவலர்கள் ,கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள் ,பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் .தன்னார்வலர்கள் பெற்றோர்கள் ஊர்பொதுமக்கள் கலந்து கொள்ள 18.4.12 புதன்கிழமை காலை 09.00 மணிக்கு தமிழ்தாய் வாழ்த்து முழங்க கொடியேற்றி துவங்கியது.

தாயகம் சிவ.சிவலிங்கம் கொடியேற்றி தலைமை தாங்கினார் . நூற்றாண்டு விழா வளைவை dr.ஜீவானந்தம் பசுமை இயக்கம் திறந்து வைக்க வாழ்த்துரை பல ஊர்பெரியோர்கள் வழங்க இனிதே நடைபெற்றது.

மாலை 3.00மணிக்கு குருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய தலைவி திருமதி என் .நீலாதேவி நடராஜன் அவர்கள் தலைமை தாங்க விழா இனிதே தொடர்ந்து நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று அழகாக நூற்றாண்டு விழாவை சிறப்பித்து நடத்திய இரா .வெங்கடாலசலம் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் நல் விதமாக நடத்திமுடித்தது பாரட்டுக்குரியது.


பழங்காலத்தில் பள்ளிக்காக தானமாக இடம் வழங்கிய G.G குருமூர்த்தி EX M.L.A அவர்கள் நினைவாக நூற்றாண்டு விழா வளைவுத்தூண் அவர்கள் புதல்வர்கள் உருவாக்கப்பெற்றது. மாலை 6.00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நம் பள்ளி குழந்தைகள் பலர் அழகாக கிராமிய நடனம் நடைபெற்றது.


பலர் வாழ்வில் ஏற்றங்களை ஏற்படுத்திய பள்ளி . இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்து பல சாதனைகள் படைக்கட்டும் . மறுபடி பள்ளிப்பருவத்திற்கு சென்று வந்து உணர்வை ஏற்படுத்தியது.

Wednesday, April 25, 2012

உனக்காக காத்திருக்கிறேன்ப்ரியமானவளே...!

உன்னை ஒரே
ஒரு நாள்
பார்த்து விட்டு
விலகி வந்தாலும்
உன் நினைவுகளில்
நகராது நிற்கிறது ... ?
என் நாட்கள் ...!

நீயே ஓவியமாகஅன்பே...
நீ வரைந்த
ஓவியங்களை ரசித்து
விட்டு திரும்புகையில்
என்னுடேனேயே வருகிறது...!
ஓவியத்தின் அழகும்
எனக்குள்ளே ஓவியமாய்
இருக்கிற
உன் நினைவுகளும் ..!

Monday, April 23, 2012

நாகதோஷம் போக்கி நல்வாழ்வளிக்கும் நாகமலை பயணக்கட்டுரை

நாகமலை

SRI NAGAMALAI ,MATHESWARA HILLS; KARNATAKA STATE

நாகமலை என்பது சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து மாதேஷ்வரமலை சென்றால் கர்நாடக மாநிலம் அடைந்து ஸ்ரீ மாதேஸ்வரரை தரிசனம் செய்து அங்கிருந்து நாகமலைக்கு செல்ல வேண்டும் எனக்கேட்டால் சொல்வார்கள் .

ஸ்ரீ மாதேஷ்வரமலையில் இருந்து 14 கி.மீ தூரத்தில் நாகமலை அமையப்பெற்றுள்ளது. 7 கி.மீட்டர் மாதேஷ்வரமலையில் இருந்து ஜீப் பயணம் கரடுமுரடான திகில் பயணத்துடன் செங்குத்தான செம்மண் மலைபாதைகளில் நம் பயணம் தொடர்ந்தது.

அங்கே சிறிய ஊரை அடைந்தோம் . இங்கிருந்து நாகமலைக்கு 6 கி.மீட்டர் மலையில் நடந்து செல்ல வேண்டும். ஜீப்பீல் மாதேஷ்வர மலையில் இருந்து நபர் ஒருவருக்கு ரூ 35 கொடுத்தால் 7 கி.மீட்டர் மலைப்பாதையில் கடந்து ஓர் கிராமத்தில் இறக்கி விடுகிறார்கள் . மலைக்கிராமமான இங்கு ஏழ்மைகள் தவழ குழந்தைகள் விளையாடுகிறது. சிறிய பள்ளிக்கூடமும் டீக்கடைகளும் இங்கு உண்டு .

நடக்க ஆரம்பித்தால் வளைந்து செல்லும் சாலைகள் நடக்க இந்த கிராமம் தாண்டினால் சமப்பகுதி வருகிறது.யானைகள் உலவும் இடமாகவும் கடக்கும் வழிகள் இருப்பதால் கவனமாக செல்லவும் . மலைகள் ஏற ஆரம்பித்தால் சிறியதும் பெரியதுமாக 7 மலைகள் ஏற வேண்டும் .எளிதான மலைதான் 4 மணி நேரத்தில் எளிதாக அடைந்து விடலாம் .

வயதானவர்கள் கூட மலை ஏறலாம் . 7மலை என்று சொன்னாலும் கூட 3 மலைகள் தான் கடப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது.

நாகமலை அடிவாரம் இண்டிக நத்தம் :

ஓர் வழியாக பயணித்து நாகமலை அடிவாரத்தில் இண்டிக நத்தம் என்ற ஊரை அடைந்தோம் . பக்தர்கள் பயன்படுத்த இரண்டு கிணறுகள் , ஓர் உணவுக்கடை , மற்றும் சில டீக்கடைகள் இங்கு உள்ளன. இங்கு குளிப்பவர்கள் கிணற்று நீரை வாளியில் இழுத்து பயண்படுத்திக்கொள்ளலாம் .

அடிவார விநாகர் திருக்கோவில் வணங்கி ,அருகில் உள்ள சனீஷ்வரர் தனிச்சன்னதியை வணங்கி சற்றே மேலே சென்றால் சிறிய மலையின் உச்சியில் நாகமலை அமைந்துள்ளது.

மூலவர் :

லிங்க உருவில் அமைந்துள்ள மாதேஸ்வரர் ஆவார். 7தலை கொண்ட தலைநாகமாக அமைந்துள்ளது. இயல்பாக லிங்கம் சுயம்பு மூர்த்தியாக விளங்குகிறார் . .மாதேஷ்வரர் தற்போதுள்ள ஸ்ரீ மலைமாதேஸ்வரர் நடுமலைக்கு வருவதற்கு முன் நாகமலையில் சஞ்சாரம் செய்ததாக வரலாறு.

இங்கு லிங்க உருவில் நாகேஷ்வரராக காட்சி அளிக்கிறார் . நாகமலைக்குன்றின் வலப்பக்கம் சிறிய குகை உள்ளது. அதில் பக்தர்கள் பசும்பால் இட அது நீலநிறமாக மாறும் ஆச்சர்யம் காணலாம் . நாகமே சிவனைக்காக்கின்ற அமைப்பும் வித்தியாசமானதாகும் .

நாகமலை பெயர் காரணமும் அதிசயமும் :

திருக்கோவில் அமைவிடத்தின் பின்புறம் மிகப்பெரிய லிங்க உருவில் பாறையும் அதன் பின்னால் நாகப்பாம்பு உருவில் அந்த லிங்கத்தை பாதுகாப்பதுபோல் படம் எடுத்த நிலையில் பெரிய பாறையும் மிகப்பெரிய ஆச்சர்யம் அளிக்கிறது. போட்டோவை இணைத்துள்ளேன் பாருங்கள் .

திருக்கோவில் காலம் :

சுமார் 800முதல் 1000ஆண்டுகாலமாக இங்குள்ள மலைவாழ்மக்களான லிங்காயத்துகளால் பத்து தலைமுறைகளாக பூஜை செய்து வருவதாக செவிவழிச்செய்திகளாகும் . சான்றுகள் இல்லா விட்டாலும் மிகப்பழமை கொண்ட மலையாகும் . இங்குதான் ஸ்ரீமாதேஷ்வரர் புலியின் மீதேறி வலம் வந்தாராம் .நாக சர்ப்பம் இன்னும் இந்த நாகமலையில் ஏராளமாக வாழ்வதாகவும் பக்தர்கள் நம்பிக்கை

ஸ்தலமரம் :

பயிரன் மரம் மூலவர் எதிரே அமைந்துள்ளது . அருகே முகப்பில் விநாகர் அமைந்துள்ளார் .

பூஜைநாட்கள் :

எல்லா விஷேச நாட்களிலும் கூட்டம் இருந்தாலும் அமாவசை அன்று கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஸ்ரீ மாதேஸ்வரர் :

முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவனிடம் அசுரர்களை அழிக்க வேண்டியதாகவும் பின் ஸ்ரீ சைலத்தில் உத்திரராஜம்மா ,சந்திரசேகரமூர்த்திக்கு மகனாக ஸ்ரீ மாதேஸ்வரர் பிறந்து 16 வயதில் சிவாம்சம் பொருந்திய சித்தராக சாமியாக சிவனாக வணங்கப்படுகிற பல அற்புதங்களை காண்பித்தவர் .

புலி மேல் வலம் வந்து மகிமாசுரன் சிரவணா போன்ற அசுரர்கள் அழிக்க வந்த சிவனாக வழங்கப்படுகிறவர் . நாகமலையை சுற்றி பல மலைகள் அரணாக காக்கின்றன . இங்கு எல்லாம் ஸ்ரீ மாதேஸ்வரர் வலம் வந்ததால் பக்தர்கள் செருப்பில்லாமல் மலை ஏறுகிறார்கள் . அசுரர்களை அழித்த இடம் சித்தூர் மட்டமாகும் .

நாகமலை சுற்றியுள்ள மலைகள் :

மயில் மலை, தேவுமலை ,ஆதி மாதேஷ்வரமலை ,கோடுகல் மாதேஷ்வரமலை, ஆணைத்தலை திம்பம் , தப்பசரைபெட்டா, குஞ்சுமலை, கத்திரி மலை , குருகஞ்சிமலை, சங்குமலை,தேன்மலை என நாகமலையை சுற்றிலும் மிகப்பிரமாண்ட மலைகள் அமைந்துள்ளன.

எல்லா மலைகளிலும் ஸ்ரீ மாதேஸ்வரர் சஞ்சாரம் செய்தாலும் நாகமலையில் வலம் வந்து கடைசியாக தற்போது அமைந்துள்ள நடுமலையில் மலை மாதேஸ்வரர் வந்து புற்றுக்கண்ணில் ஐக்கியமாகி வரும் பக்தர்களுக்காக சுயம்பு லிங்கமாக அமைந்து அருளாட்சி புரிகிறார் .

பக்தர்கள் :

20 வருடமாக அமாவசை தொடர்ந்து வரும் பக்தர்கள் ஏராளம் . வீடு, திருமணம், குழந்தைவரம் .போன்ற சுப நிகழ்வு பிரார்த்தனைகள் இங்கு எளிதாக நிறைவேறுகிறது. ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஜாதக தடை உள்ளவர்கள் கண்டிப்பாக தரிசனம் செய்யதால் பலன் நிச்சயம் .

பெங்களூர் பக்தர் ஒருவர் தன் மகன் வேலைக்காக வேண்டி வேலை கிடைத்தும் கோபிநத்தத்தில் இருந்து மின்சார வசதியை நாகமலைக்கு கொண்டு வந்து தன்பங்காக திருக்கோவிலை ஒளிர விட்டுள்ளார். '

முடிவுரை :

சுயம்பு மூர்த்தியாய் சிவலிங்கம் நாகமலையில் சிவனைக்காக்கிற அதிசயம் காண ஓர் முறை செல்லுங்கள் . பல தடைகளை தாண்டியே எம்மால் செல்ல முடிந்தது ." அவனவன் பால் அவன் தாள் வணங்கி" என்னும் இறை கூற்றிற்கு ஏற்ப இறைவன் அழைத்தால் மட்டுமே செல்லக்கூடிய திருக்கோவில் .

வாய்ப்பு கிடைத்தால் ஒர்முறை வந்து தரிசித்து விட்டு செல்லுங்கள் . இதைப்படிக்கிற உங்களுக்கும் வாழ்வில் மாற்றங்களும் ஏற்றங்களும் வர ஸ்ரீ நாகமலை ஆண்டவரை வேண்டுகிறேன் .

ஓம் சிவாய நமஹ.

ஆயிரம் ஆண்டுகள் கடந்த ஈரோடு ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவில்ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவில் ஈரோடு
SRI MAGIMALEESWARAR TMPLE ERODE


அமைப்பு:

ஈரோடு மாவட்டத்தில் பல சிவாலயங்கள் இருக்கப்பெற்றாலும் 1000ஆண்டுகள் தாண்டி கம்பீரமாக இருக்கும் சிவாலயங்கள் சிலதே. அதில் ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவிலும் ஒன்று. திருக்கோவில் ஈரோடு நகரில் பன்னீர் செல்வம் பூங்கா அருகில் டி.வீ.எஸ் வீதியில் அமைந்துள்ளது. ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சிவாலயமாகும் .

திருக்கோவில் சிறப்புகள் :

பெரும்பாலான சிவாலயங்கள் கிழக்கு நோக்கி இருக்க ஸ்ரீமகிமாலிஷ்வரர் மேற்கு நோக்கி அமைந்துள்ளார் .முதல் கொங்கு சோழனால் கட்டப்பெற்ற திருக்கோவில் .

மூலவர் அமைப்பு :

ஸ்ரீமகிமாலீஷ்வரர் சிவலிங்கமாக 2மீட்டர் அகலமும் ஒரு மீட்டர் உயரமும் கொண்டவராக அமைந்துள்ளார் . மூலவர் வெளியே எடுக்கமுடியாத படி மூலவரின் வாசற்படிகள் அமைந்துள்ளது வித்தியாசமானது.

ஸ்தலமரம் :

வில்வமரம் பழங்காலத்தில் திருக்கோவில் அமைந்துள்ள இடம் வில்வ மரங்கள் சூழ்ந்து வில்வ வனமாக அமைந்திருந்து. ஆயிரம் வருடம் கழித்து ஈரோடு நகரின் பெருக்கத்தால் தற்போது காணாமல் போய் ஸ்தலமரமாக ஒரு வில்வம் மட்டும் அமைந்துள்ளது.


திருக்கோவில் காலமும் பெயர் விளக்கமும் :

கி.பி 942 முதல் கி.பி 980 வரை ஈரோடு மண்ணை ஆட்சி செய்த முதல் கொங்கு நாட்டின் சோழ மன்னன் மகிமாலயன் என்பவரால் கட்டப்பெற்றதாக வரலாறுப்பதிவாகும் . திருக்கோவில் ஸ்தலபுராணமும் இதே கருத்தை இயம்ப மன்னர் மகிமாலயனால் தோற்றுவிக்கபட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட ஈஸ்வரர் என்பதால் தனது பெயராலேயே ஸ்ரீமகிமாலீஸ்வரர் திருக்கோவில் என அழைக்கப்பட்டதாக கருதலாம் . இயல்பாக சிவபக்தி கொண்ட மகிமாலயனுக்கு பரகேசரி கோநாட்டான் வீரசோழ பெருமான் அடிகள் என அழைக்கப்பட்டார் .

மாற்றுக்கருத்துடைய சிலர் ராவணனின் முன்னோர்களான மாலி ,சுமாலி ,மகிமாலி ஆகியோர்கள் கட்டியதாகவும் ஸ்தல புராணக்கருத்துக்கள் கருத்துக்கள் உலவுகின்றது .இது ஆய்வுக்குரிய ஒன்றாகும் .

திருக்கோவில் அம்பாள் ஸ்ரீ மங்களாம்பிகை சன்னதி வலப்புறத்தில் உள்ளது. அம்பாள் அழகு சிலை வியக்கும் வண்ணம் அழகாக அமையப்பெற்றுள்ளது. பழங்கால வில்வமரம் கோபுரங்களின் அழகும் வியக்கவைக்கின்றன.

முடிவரை :
கி.பி 980 ல் கட்டப்பெற்ற ஸ்ரீ மகிமாலீஸ்வரர் திருக்கோவிலுக்கு தற்போது 1032 வருடங்கள் தாண்டி கோடிக்கணக்காணக்கான மக்கள் வணங்கி ஈரோடு மாநகரின் நடுவில் அமைந்த பழங்காலத்திய ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவில் வந்து வணங்கி சிவபெருமானின் பரிபூரண அருள் பெறுங்கள் .

Thursday, April 12, 2012

sri sokkanatchi amman temple.guruvareddiyur
ஸ்ரீ சொக்கநாச்சி அம்மன் திருக்கோவில் குருவரெட்டியூர்


திருக்கோவில் அமைவிடம் :

பாலமலையின் சாரலில் அமைந்துள்ள இலிப்பிலி ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூரில் இருந்து கோனார் பாளையம் செல்லும் வழியில் 3 கி.மீ சென்று ஆலமரத்துக்காடு என்ற ஊரின் அருகே அமைந்துள்ளது .

பழங்காலத்தில் குருவரெட்டியூர் மக்களின் கிராம தேவதையாக வணங்கப்படுகிற திருக்கோவிலாகும் .பழங்காலத்தில் திருக்கோவிலைக் காக்கும் ஆண்பெண் மினிகளை குருவரெட்டியூரில் இருந்து மண்ணால் ஆன மினிகள் சிலைகளை பூஜை செய்து நடக்க வைத்து திருக்கோவிலுக்கு கூட்டிச்சென்றதாக வரலாறு.

மூலவர் :

ஸ்ரீ சொக்கநாச்சி அம்மன் சுயம்பு மூர்த்தி உருவ அமைப்பில்லாத சிலையாக விளங்குகின்றது. முன்புறம் விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. திருக்கோவில் சுற்றி இரண்டு பெரிய ஆலமரங்கள் அருகே கரடிப்பட்டியூர் ஏரியின் பள்ளம் செல்கிறது. திருக்கோவில் பல காலமாக பராமரிப்பின்றி இருந்தது.

தற்போது ஆன்மீகப்பெரியோர்களின் முயற்சியால் திருக்கோவில் குண்டத்துடன் பூச்சாட்டு விழா துவங்க உள்ளது. பல கோவில்கள் சென்று எழுதினாலும் சிறிய
வயதில் இங்குள்ள ஆலமரத்தில் தூரிகை ஆடி விளையாடிய நாட்கள் மறக்க முடியாததாகும் .

ஸ்ரீ சொக்கநாச்சி அம்மன் திருக்கோவில் விழா ஆரம்பித்த பின் குருவரெட்டியூர் ஊர் மாரியம்மன் ஸ்ரீ சக்தி மாரியம்மன் பூச்சாட்டு விழா துவங்கும் .

நம் பகுதி வாழ் மக்கள் ஸ்ரீ சொக்கநாச்சி அம்மன் அருள்பெற அன்புடன் அழைக்கிறேன் .

Saturday, April 7, 2012

சிவனையும் சித்தர்களையும் தேடி சிவபயணம்
சதுரகிரியில் சித்தர்கள் பலரும் ஸ்ரீ சுந்தரமகாலிங்கத்தையும் ,ஸ்ரீ சந்தன மகாலிங்கத்தையும் தரிசித்தும் வரும் பக்தர்கள் சிலருக்கு காட்சி கொடுப்பதாகவும் நம்பப்படுவதால் சதுரகிரியை நோக்கி பக்தர்களும் அடியார்களும் பெளர்ணமி நாட்களில் வழிபடுகிறனர் .

சித்தர்களை சந்திக்கும் ஆசையிலும் ஸ்ரீ சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்கும் ஆசையிலும் நாமும் பயணத்தை தொடர்ந்தோம் . சதுரகிரியின் மலைப்பகுதியில் நடுப்பகுதியில் நாவல் ஊற்று கடந்து செல்ககையில் காவி உடையணிந்த வயதான பெண்மணியாரை சந்தித்தோம் .தனியாக நடந்து வந்த அவரை வணங்க அவர் "சிவாய நமஹ " பஞ்சாட்சர மந்திரத்தை உதிர்த்து ஆசிர்வதித்து கடந்து சென்றார் .

அவர் முகம் ஒளிரும் வண்ணமாக இருக்க சித்தரை கண்டு விட்டோம் என மனம் மகிழ்ந்தது. அடிமலையில் கிளம்பும் மலையில் பாதி தூரம் வரை இடப்பக்கம் சர சர வென சிறிய சப்தம் எங்களுடனேயே வந்தது மேலும் ஆச்சர்யம் கொள்ளச்செய்தது. ஸ்ரீ சுந்தர மகாலிங்கத்தை தரிசனம் செய்து திரும்புகையில் எதிரே காவியுடையில் திருநீரு கொடுத்து வாழ்த்தினார் .

ஆங்காங்கே சில நறுமணங்கள் நம்மிடையே வந்து செல்கின்றன.

பைரவர் :

சதுரகிரி வரும் பக்தர்களுக்கு வழி மறந்து வேறு எங்கும் சென்று விடாமல் இருக்க சித்தர்கள் சூட்சம உருவில் பைரவராக( நாய்) கூடவே வருகிறார் . நாங்கள் இறங்கி வரும்போது பாதி வழியில் எங்கு இருந்து வந்ததோ எங்களுடன் கூடவே பாதுகாப்பாக வந்து மறைந்து சென்றது . இரவில் தனியாக செல்கிற பக்தர்களுக்கு துணையாக வருகின்ற பைரவர்கள் மிகுந்த ஆச்சர்யம் தருகிறார்கள் .

பசுக்கள் :

வேண்டுதலுக்காக விடப்பட்ட பசுக்கள் இங்கு ஆங்காங்கே தென்படுகின்றது . ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதியில் பூஜையின் போது பசுக்கள் நந்தீசராக பக்தர்களுடன் வந்து வழிபாடு செய்வது ஆச்சர்யமாகும் . நான் கண்ட சதுரகிரி பெளர்ணமி அம்மாவசை நாட்களில் அல்ல .

ஓர் மத்திம நாட்களில் தான் சதுரகிரியை உணர முடியும் . சதுரகிரி முதல் முறையாக செல்ல விரும்பும் பக்தர்கள் விஷேச நாட்கள் தவிர்த்து பிரதோஷ நாட்களில் தரிசனம் செய்யும் வண்ணம் சென்றால் நிறைய அனுபவங்களை உணரமுடியும் .

மரங்கள் :

செடிகளில் மலர்களை பார்ப்பது இயல்பு . மரங்களில் மலர்கள் பூப்பது ஆச்சர்யமாகுமாகும் .நான் சென்றபோது சிவப்பு,மஞ்சள் இளஞ்சிவப்பில் மரங்களில் பூக்களைக்கண்டோம் .

மூலிகைகள் :

இங்கு பல்வேறு மூலிகைகள் இருப்பதை உணரலாம் .கருநெல்லி போன்ற எங்கும் கிடைக்காத மூலிகைகள் இருப்பதாக சொன்னாலும் நாம் காட்டுக்குள் மிருகங்கள் இருப்பதால் செல்லகூடாது . சில மூலிகைகளையும் குங்கிலிய பிசினால் ஆன சாம்பிராணி தூள்கள் இங்குள்ள கடைகளில் விற்கிறார்கள் . மற்ற நாட்களில் சதுரகிரி வரும் பக்தர்கள் பூமாலைகள் , வில்வம் ,மற்றும் மலைக்கு மேலே வரும் வரை உணவு , குளுக்கோஷ் , கொண்டு வரவும் .

எல்லாநாட்களிலும் அன்னதானம் இட்டாலும் மலை ஏறும் வரை நீண்ட தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் ஒரு வேளை உணவு கொண்டு வருதல் நலம் . இப்படி பல்வேறு ஆச்சர்யங்களை சுமந்து வரும் சதுரகிரியை சென்று மக்கள் கூட்டம் இல்லாத அமைதியான நாளில் வணங்கி சிவன் சித்தர்கள் ஆசி பெற்று உங்கள் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட வாழ்த்துகிறேன்.

சதுரகிரியில் என் தேடல் பயணம் முடிவுறவில்லை. இன்னும் எழுதப்படாத இடங்கள் ,கதைகள் நிறைய உள்ளன. சதுரகிரியின் தேடல் தற்காலிகமாக இப்பதிவில் முற்றுப்பெற்றாலும் கூட மறுபடியும் தேடல் தொடரும் .

ஸ்ரீசந்தனமகாலிங்க தரிசனம் .சதுரகிரிஸ்ரீ சந்தன மகாலிங்கம் சன்னதிசதுரகிரி சித்தர்களால் வணங்கப்படுகிற வாழ்கிற சதுரகியில் வலப்புறம் ஸ்ரீ சுந்தரமகாலிங்கமும் இடப்புறம் செல்லும் மலையில் ஸ்ரீ சந்தனமகாலிங்கமும் சன்னதியும் உள்ளது. ஸ்ரீ சந்தன மகாலிங்கம் செல்லும் பாதையில் பெரிய ஓடை ஓடுகிறது.பக்தர்கள் செல்ல வசதியாக பாலம் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.

இங்குள்ள மூன்று சிவலிங்கங்களும் கிழக்கு பார்த்து அமர்ந்திருக்க ஸ்ரீ சந்தன மகாலிங்கமும் கிழக்கு பார்த்த நிலையில் லிங்க உருவில் தனி சன்னதியாக அமர்ந்து பக்தர்கள் குறை போக்குகிறார் . ஸ்ரீ சந்தனமகாலிங்கம் சன்னதிக்கு அருகே ஆகாய கங்கை தீர்த்தம் மலைமீது இருந்து வருவது சிறப்பாகும் .

ஆகாயகங்கை தீர்த்தம் கோடை காலங்களில் தீர்த்தம் வருவதில்லை. ஸ்ரீ சந்தனமகாலிங்கம் சன்னதியில் சந்தனம் மணக்கிறக்கிறது. பக்தர்கள் திருக்கோவில் சுற்றிலும் சந்தனதை கரைத்து படிக்கட்டுகளில் தடவுகிறார்கள் .

அருகில் அம்பாள் ஸ்ரீ சந்தனமகாதேவியார் சன்னதியும் , ஸ்ரீ சந்தனமுருகர் சன்னதியும் பார்த்து பரவசமடைய வேண்டியவையாகும் . 18 சித்தர்களுக்கும் சிலை பிரதிஸ்டை செய்து அழகான தனிச்சன்னதியாக அமைந்து உள்ளது.

சதுரகிரி பூஜை நேரங்கள்

காலை 06.00மணிக்கும்
பகல் 12.00மணிக்கும் 04.00மணிக்கும்
மாலை 06. 00மணிக்கும் நடைபெறுகிறது.

உணவு :

காலை மதியம் இரவு எல்லா நாட்களிலும் சிறப்பான அன்னதானத்தை ஸ்ரீ காளிமுத்து சுவாமிகள் அன்னதான மடத்தில் வரும் பக்தர்களுக்கு இலவசமாக நிறைவாக சுவையாக பாராட்டும்படி செய்து தருகிறார்கள் . அகத்தியர் மடம் என அழைக்கப்படும் அன்னதானமடம் ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதியில் இருந்து படிக்கட்டில் கீழே வரும் வழியில் அமைந்துள்ளது.

ஆனந்த வள்ளி மடம் தங்கும் வசதி:

ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறமுள்ள ஆனந்தவள்ளிமடம் சுமார் 200பக்தர்கள் தங்கும் அளவில் அமைந்துள்ளது . இரவு பயமில்லாமல் இங்கு உறங்கலாம் . போர்வை ,பெட்சிட் கொண்டு செல்வது நலம் .

சதுரகிரி எப்போது செல்லலாம் : பெளர்ணமி அமாவசை நாட்களில் அதிக கூட்டம் வருகிறது. மற்ற நாட்களில் செல்வதே சிறப்பு .சிவபெருமானையும் சித்தர்களையும் தரிசிக்க விழாக்காலங்கள் அல்லாத நாட்களில் தான் அமைதியாக தரிசிக்கமுடியும் . பெளர்ணமி இரவில் சித்தர்கள் வலம் வருவதாக நம்பினாலும் கூட மற்ற நாட்களில் தான் பக்தர்கள் பலர் சித்தர்களை கண்டதாக சொல்கிறார்கள் .

விலங்குகள் பற்றிய பயப்படத்தேவையில்லை. வெயில் காலங்களில் நீர் பற்றாக்குறைக்கு யானைகள் எப்போதாவது வருமாம் .மற்றபடி எங்கள் கண்களில் எந்த மிருகமும் தென்படவில்லை.ஸ்ரீ சந்தனமகாலிங்கம் சன்னதியை தரிசித்து விட்டு அடுத்த சதுரகிரியில் நான் கண்ட சித்தர் ,

மற்றும் அனுபவங்களை அடுத்த பதிவில் காண்போம் .ஸ்ரீ சந்தன மகாலிங்கத்தை தரிசனம் செய்து பேரருள் பெறுக நன்றி

Thursday, April 5, 2012

சதுரகிரியில் அருளாட்சி புரியும் ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதி


ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதி


சதுரகிரியில் அமைந்துள்ள மூலவர் சன்னதியாகும் . திருக்கோவில் பகுதியில் வலப்புறம் திரும்பி திருக்கோவில் முகப்பில் உள்ள ஸ்ரீ சுந்தர மூர்த்தி சுவாமிகளை வணங்கி பின் நாம் காண வேண்டிய சன்னதி ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் ஆகும் .

நீண்டு வளர்ந்த தென்னை மரங்களுக்கிடையில் எதிரே உயரமான மலை ஆரம்பிக்குமிடமும் சிறிய ஓடையும் எதிரே ஒட நந்தீசரை வணங்கி உள்ளே சென்றால் ஸ்ரீ சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்கலாம் .

சதுரகிரியின் சுயம்பு மூர்த்தியான பெருமான் இடப்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்க சிவலிங்கமாக சிவபெருமான் வரும் பக்தர்களை கவருகிறார் . முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அருகே அமர்ந்துள்ளார் .

திருக்கோவில் அலங்காரமும் மணமும் சுகந்தம் தரும் வாசனையும் இறைவன் இங்கே அருள்பாலிப்பதை இயம்புவதாக அமைந்துள்ளது .பூஜை நேரத்திற்கு சரியாக இங்கே நேர்த்திக்கடனாக விடப்பட்ட பசுக்கள் மக்களோடு மக்களாக கலந்து ஸ்ரீ சுந்தரமகாலிங்கத்தை தரிசிப்பது ஆச்சர்யங்களில் ஒன்றாகும் .

வரும் பக்தர்களிடம் அன்பாக பழகுகின்ற பசுக்களை பக்தர்கள் நந்தீசர் பசுவாக நேரில் தரிசனம் செய்வதை கண்டு பழங்கள் உணவாக தருகிறார்கள் . சதுர கிரி சித்தர்கள் பலர் வந்து ஸ்ரீ சுந்தர மகாலிங்கத்த தரிசிப்பதாக ஐதீகம் .

திருக்கோவில் அமைதியான சூழலில் காணப்படுகிது.வாழ்நாளில் ஒரு முறையேனும் சதுரகிரி வந்து ஸ்ரீ சுந்தரமகாலிங்கத்தை வந்து வணங்குங்கள் .

மிக மேன்மையான சதுரகிரியில் அருள்பாலிக்கும்
ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் உங்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவார் .
நன்றி

ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமி சன்னதியும் சதுரகிரியின் அமைப்பும்அருள்மிகு சதுரகிரி சுந்தரமூர்த்தி


சுவாமி சன்னதியில் லிங்க வடிவில் திருக்கோவில் முகப்பிலேயே அமர்ந்திருக்கிறார் . இங்குள்ள மூன்று சிவலிங்கங்களில் முதல் பூஜையாக ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிக்கு நடைபெறுகிறது. சன்னதிக்கு உட்புறமாக சிறிய விநாயகர் சன்னதி அமைந்துள்ளது . தினசரி நான்கு கால பூஜை நடைபெறுகிறது.


சுற்றிலும் மலை சூழ்ந்திருக்க இயற்கை எழிலில் சிவபெருமானை தரிசிப்பதே பெறும் பேறாகும் . இரவு 12 மணிக்கு மேல் சித்தர்கள் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளை வந்து வணங்குவதாக ஐதீகம் .

சதுரகிரியின் அமைப்பு :

சதுரம் என்றால் நான்பக்கமும் சமமாக கொண்டுள்ள எனவும் கிரி என்றால் மலை எனவும் பொருள் கொள்ளலாம் . மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சர்வே எண் 517 ன் படி சதுரகிரி திருக்கோவிலுக்கு 64 ஏக்கர் ஸ்ரீ சுந்தரமகாலிங்க சாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்டதாகும் .

திருக்கோவில் தற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பக்தர்கள் யானை ,சிறுத்தை,கரடி போன்ற மிருகங்கள் இருப்பதாக கூறப்படுவதால் திருக்கோவில் வளாகம் தவிர இரவு நேரங்களில் வெளியே காட்டுக்குள் செல்வது ஆபத்தாகும் .

ஸ்ரீ சதுரகிரி சுந்தரமூர்த்தி சுவாமிகளை தரிசனம் செய்த பின் அடுத்த பதிவில் ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதியை தரிசிக்கலாம் .

Monday, April 2, 2012

சதுரகிரி பயணம்
ஈரோட்டில் துவங்கிய சதுரகிரி திருக்கோவில் பயணம் 31.3.12 :


சதுரகிரியை இணைய உலகமும் ஆன்மீக அன்பர்களும் சிவனடியார்களும் கொண்டாட எமது இரண்டு நன்பர்களுடன் பயணத்தை தொடர்ந்தோம் . ஈரோட்டில் இருந்து மதுரைக்கு செல்ல 5 மணி நேரப்பயணமும் பஸ் கட்டணம் 120 ரூபாய் ஆகின்றது.

மதுரையில் இருந்து சுமார் 80 கி.மீட்டர் தொலைவில் சதுரகிரி அடிவாரம் உள்ளது. ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இறங்கி பின் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் சென்று அங்கிருந்து ராஜபாளையம் செல்லும் வழியில் கிருஷ்ணன் கோவில் பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து வத்திராயிருப்பு சென்று பின் தாணிப்பாறை என்னும் சதுரகிரி அடிவாரத்தை அடையவேண்டும் .

ஈரோட்டில் இருந்து பஸ் மற்றும் போக்குவரத்துச்செலவாக ரூ 400 ஆகிறது . செல்லும் வழியில் அடிவாரத்தில் கஞ்சிமடம் போன்ற மடங்கள் உள்ளன. நீண்ட தூரப்பயணம் செல்லும் சதுரகிரி பக்தர்கள் குளிக்க ஏதுவாக அடிவாரத்தில் பெரிய தொட்டி உள்ளது . சிறிய டீக்கடைகள் , கேசட்கடைகள் , என 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இங்குள்ள தாணிப்பாறை அடிவாரத்தில் அம்மாவசை பெளர்ணமி நாட்கள் அல்லாத நாட்களில் உணவு விடுதிகள் கிடையாது. திருக்கோவில் சன்னதியில் மூன்று வேளை உணவையும் இலவசமாக தருகிறார்கள் . பயணத்தை துவங்கிய நமக்கு பல ஆச்சர்யங்களை ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் தரப்போகிறார் என அப்போது நமக்கு தெரியாது.

சதுரகிரி பல சித்தர்கள் ,முனிவர்கள் ,யோகிகள் வாழ்வதாலும் மலையே சிவனாக வணங்குவதாலும் செருப்பில்லாமல் பயணத்தை ஆரம்பிப்பது நல்லதாம் . முதலில் சற்று தூரம் நடந்தவுடன் பிரமாண்ட பாறகளுடன் அடிவாரங்களும் நீர் ஊற்றுகளும் தென்பட ஆச்சர்யப்பட்டு எட்டிப்பார்க்க பழங்கால ஆமைகள் கரையில் விளையாடி எங்களைக்கண்டதும் குளத்திற்குள் தங்களை மறைத்துக்கொண்டது.

பின் ஆச்சர்யத்துடன் சற்று தூரம் நடக்க முதலில் ஸ்ரீ ஆசிர்வாத விநாயகரை வணங்கி சற்று தூரம் நடந்தால் இடப்புறம் ஸ்ரீ தங்க காளியம்மன் திருக்கோவில் தரிசனம் செய்து நடந்து செல்கிறோம் . பின் ஆங்காங்கே உட்கார்ந்து நடக்க காவல் தெய்வமான ஸ்ரீகருப்பசாமி பேச்சியம்மன் சன்னதியில் வணங்கி பின் சற்று தூரத்தில் குதிரை ஊற்று சிறிய தண்ணீர் குளங்களை கொண்டது. பின் சற்று தூரம் நடந்தால் கோணத்தலைவாசல் வருகிறது.

அதைக்கடந்து காராம் பசு தீர்த்தம் கண்டு நகர்ந்து சென்றால் இரட்டை லிங்கசாமி திருக்கோவில் .இங்கு இரட்டை லிங்கங்கள் அழகாய அமைக்கப்பட்ட சிறிய சன்னதியாகும். சதுரகிரி செல்லும் வழியில் பார்க்க வேண்டிய சன்னதியாகும் . அடுத்து நாம் காணப்போவது சின்னப்பசுக்கிடையாகும் .இங்குள்ள இயற்கை சூழல்களை ரசித்து சென்றால் நாவல் ஊற்றைக்காணலாம் .

நாவல் ஊற்று :

சதரகிரியில் பல திர்த்தங்கள் இருந்தாலும் நாவல் ஊற்று விஷேசமானது. இங்குள்ள தீர்த்தம் குடித்தால் சர்க்கரை நோய் உட்பட கொடிய நோய்கள் குணமாவதாக வரலாறு. இங்குள்ள தண்ணீர் மிகச்சுத்தமாக சுவையாக உள்ளது.

அடுத்து சில அடி தூரம் நடந்தால் தேனி,கம்பம் செல்லும் பாதை பிரிகிறது. அதைக்கடந்தால் பச்சரிசி பாறை வித விதமான குறிப்பாக சிவப்பு நிறங்களில் காணப்படுகிறது. அடுத்து வனத்தைக்காக்கும் வன பத்ரகாளி அம்மன் சன்னதி வருகின்றது.

அடுத்து நாம் காண்பது பெரிய பசுக்கிடை அதைத்தாண்டி சென்றால் சதுரகிரியின் ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதி அருகில் வந்து விட்டோம் என்பதை உணர்த்தும் விதமாக திருக்கோவில் முகப்பின் காவல் தெய்வமான பிலாவடிக் கருப்பசாமி திருக்கோவில் வருகிறது .

இங்கு பக்தர்கள் குளித்து விட்டு பிலாவடிக்கருப்ப சாமியை வணங்கி விட்டு ஸ்ரீ சுந்தரமகாலிங்கத்தை தரிசனம் செய்ய பக்தர்கள் செல்கிறார்கள் . அடிவாரத்தில் இருந்து சுமார் 4 முதல் 5 மணி நேரத்தில் திருக்கோவிலை அடையலாம் .

எல்லா வயதினரும் செல்லலாம் . ஸ்ரீ சுந்தரமகாலிங்க தரிசனம் பற்றிய இடுகை அடுத்த பதிவில் காணவும் .